‘சோ’ வைத் தெரியாதா?!

ஜெயலலிதா முதன் முதலில் தமிழக ஆட்சிக் கட்டிலில் ஏறிய சமயம் அவர் மீது சோ வுக்கு மிகுந்த கோபமும், மன வருத்தமும் இருந்தது. அவையெல்லாமும் ‘துக்ளக்’கில் கேலிச் சித்திரங்களாகவும் கேள்வி, பதில்களாகவுமாயின.
‘சோ’ வைத் தெரியாதா?!

நேற்று விடிந்ததும் நியூஸ் பார்க்கலாம் என்று சேனல்களைத் திருப்பினால் மூத்த பத்திரிகையாளர் சோ காலமானார்’ என்று ஃபிளாஸ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. ச்சே இந்த வருடத்தின் பல நாட்களில் விடிந்து எழுந்தால் இதென்ன இப்படி மனதை துணுக்குறச் செய்யும் மரணச் செய்திகளையே கேட்க வேண்டியதாகி விடுகிறதே என்று விசனமாயிருந்தாலும் நினைவுகள் சடக்கென்று இருபது வருடங்கள் பின்னோக்கி ஓடின. எனது பள்ளிக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த சமூக அறிவியல் ஆசிரியர் ‘சோ’ வின் தீவிர ரசிகர். குடிமையியலில் தேர்தல் குறித்த பாடம் நடத்தும் போது ‘சோ’ வின் 'ஜனதா நகர் காலனி' நாடகம் பார்க்கச் சொல்லி எங்களையெல்லாம் அப்போது ஊக்குவித்தவர் அவர் தான்.

முதலில் சோ நாடகம் என்றதும்; 'சோ' வா யார் சார் சோ?

என்று நாங்களெல்லாம் ஒரே கோரஸாக அவரிடம் உரக்கக் கேட்ட சத்தம் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. 'சோ' வைப் பற்றி எங்கிருந்து ஆரம்பிப்பது என ஒரு கணம் யோசித்தவர் பிறகு இப்படித் தொடங்கினார்.

'சோ' வைத் தெரியாதா? 'சோ' யாருன்னு தெரியாதா? என்று குரல் மாற்றி, மாற்றி சிரித்தவாறு, பல மாடுலேஷன்களில் எங்களிடம்  கேள்வி கேட்டு விட்டு பிறகு அந்த நாடகம் பற்றி சின்னதாக அறிமுகம் தந்து எங்களை வாரா வாரம் சோவின் நாடகம் பார்க்க வைத்தார். பாடத்தோடு சேர்த்து அந்த நாடகம் சார்ந்தும் வகுப்பில் கேள்விகள் எல்லாம் கூட கேட்பார். அந்த நாடகத்திலிருந்து எப்போதும் எங்கள் நினைவை விட்டகலாத ஒரு உரையாடல் பகுதி இது;

கதைப்படி ஜனதா நகர் காலனியில்  ‘குடியிருப்போர் அசோஸியேசன்’ சார்பாக தேர்தல் நடத்தலாம் என்று முடிவெடுத்திருப்பார்கள்; அப்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் இது; 

பாகவதர்: “என்னக் கேட்டா இந்த எலெக்ஸனே வேண்டாம்னு தான் எனக்குத் தோணறது”
காலனி வாசி: “என்ன...என்ன சொல்றாரு இவரு?”
பாகவதர்: “ஏன்னா நம்ம காலனில தகராறுன்னு ஒண்ணு கிடையாதே!”
சோ: “அதுக்காக தான் எலெக்சன் நடத்தப் போறோம். அப்புறம் தகராறு இல்லைங்கற குறையே உங்களுக்குத் தீர்ந்து போயிடும்”
காலனி வாசி: எப்பிடி?
சோ: “எலக்சன் வச்சா தகராறு வரும். அந்தத் தகராறைத் தீர்த்து வைக்க ஒரு தலைவர் தேவை, அந்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு எலக்சன் தேவை. அதனால தான் எலக்சன் நடத்தப் போறோம்.என்ன புரியறதா?”
கம்பர் ஜெயராமன்: சுப்புணி தயவு பண்ணி எந்த விசயத்தையும் நீ விளக்கமா சொல்லாத! ஒரே கன்ஃபியூஸனா இருக்கு!
சோ: டாக்டர் சார் உங்களுக்குக் குழப்பமா?! கன்ஃபியூஸனா?! ஒரு இழவும் புரியலயா! கரெக்ட்டா எலக்ஸன்ல ஓட்டுப் போடற மூடுக்கு வந்துட்டேள் நீங்க!

யூடியூபில் இந்த நாடகம் குறித்து தேடும் போது லட்டு போல அந்த உரையாடலுக்கான காட்சியே வந்து சிக்கியது; இதோ அதற்கான லிங்க்;

பின்னாட்களில் நாளிதழ்களில் சோ வைப் பற்றி எந்த விசயம் கேள்விப் பட நேர்ந்தாலும் இந்த நாடக உரையாடலும் சேர்ந்தே கவனத்துக்கு வரும் அளவுக்கு இது எங்கள் மூளையில் பதிந்து போனதற்கு எங்களது ஆசிரியரும் ஒரு காரணம்.

தொலைக்காட்சி சேனல்களில் அதிகாலை முதலே சோ வுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் வாழ்த்துகளை பதிவு செய்து கொண்டிருந்ததைப் பார்க்கப் பார்க்க... நேற்று ஜெயலலிதா இறந்த செய்தி அறிந்ததும் எழுந்த துக்கத்துக்கு சற்றும் குறைவின்றி மீண்டும் மனம் துக்கத்தில் ஆழ்ந்தது. சிலரது மறைவு மட்டுமே நினைக்கும் போதெலாம் வருத்தம் தரக்கூடியதாக அமைந்து விடுகிறது. அவர்கள் ஆண், பெண் பேதமின்றி அவர்கள் நாம் வியந்து பார்க்கும் தேர்ந்த அரசியல் தலைவர்களாய் இருக்கலாம், கணம் தோறும் ரசிக்கும் திரை நட்சத்திரங்களாய் இருக்கலாம், உள்ளார்ந்த நட்புணர்வை உண்டாக்கும் இலக்கிய ஆளுமைகளாக இருக்கலாம். ஆச்சரியப்படுத்தும் விதமாக ஜெயித்த தொழிலதிபர்களாய் இருக்கலாம். உலகப் பிரபலங்களாய் இருக்கலாம். யாராக இருந்தாலும் மனதளவில் நம்மை நெருக்கமாக உணரச் செய்பவர்கள் எவராயினும் அவர்களது மரணம் ஏற்படுத்தும் வெற்றிடத்தை வேறு எவரைக் கொண்டும் எப்போதும் நிரப்பி விடவே முடியாது.

இந்த வரிசையில் நேற்றுக் காலை முதலே ‘சோ’வின் மரணம் மிகுந்த துக்கத்தை அளிக்கிறது. இதற்கு முன்பும் இப்படி துக்கத்தை விதைத்துச் சென்ற மரணங்கள் சில உண்டு. இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆர்வத்திற்கேற்ப தமது வாழ்நாளில் ஒருமுறையேனும் இவர்களையெல்லாம் சந்திக்க வேண்டும் என  ஒரு தனி லிஸ்ட் இருக்கலாம்.அப்படியான எனது லிஸ்டில் சோவும் இருந்தார். ஆனால் இன்று அவர் எப்பொழுதுமே நம்மால் மீளப் பார்க்க இயலாத ஒரு இடத்துக்குச் சென்று விட்டார். 

திரைப்படம்:

ஒரு பத்திரிகையாளராக ‘சோ’வை அறிய நேர்ந்தது வெகு பின்னாட்களின் பின்னரே. ஆனால் பத்திரிகைப் பரிச்சயம் இல்லாத மனிதர்கள் பலருக்கும் சோ இப்போதும், எப்போதும் ஒரு நகைச்சுவை நடிகராகவே மனதில் பதிந்து நிற்கிறார். என்ன விதமான நகைச்சுவை அது?! ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்த நகைச்சுவையாகவே இருந்தது. அப்போது நகைச்சுவைக்கென்று ‘டணால்’ தங்க வேலு, வி.கே.ராமசாமி, நாகேஷ், பாலையா, தேங்காய் சீனிவாசன் எனப் பலர் இருந்தார்கள். எல்லோருமே அவரவர் பாணியில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். அத்தனை கூட்டத்திலும் நகைச்சுவைக்காக தனக்கென்று மக்கள் மனதில் தனித்தொரு இடம் பிடிக்க சோவால் முடிந்தது. சோ வின் முழுப் பெயர் தெரியாதவர்கள் இப்போதும் பலர் இருக்கலாம்.

பகுத்தறிவு ராமசாமியும் பிராமணீய ராமசாமியும்:

‘சோ’ என்பது அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் இல்லை. ராமாசாமியாக இருந்தவர் பாகீரதன் எழுதிய மேடை நாடகமான ‘தேன்மொழியாள்’க்குப் பின் ‘சோ’ என்றானார். அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘சோ’ பின்நாட்களில் இந்த உலகால் ‘சோ’ என்று மட்டுமே அடையாளம் காணப்பட்டார். பலருக்கும் அவரது இயற்பெயரான ராமசாமி மறந்து விட்டது. அந்த வகையில் நமக்கு முன்பே பரிச்சயமான இன்னொரு மகத்தான ராமசாமியையும் நாம் மறந்து விட வாய்ப்பில்லை. அவரது இயற்பெயரும் கூட பலருக்கு ஞாபமிருக்குமோ என்னவோ? அவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி. இவர் பகுத்தறிவு ராமசாமி, அவர் தமது பிராமணீயப் பண்பாட்டில் ஊறிப் போன ராமசாமி என்றெல்லாம் கூட எங்களது ஆசிரியர் அப்போது சொன்னதாக ஞாபகம்!

80 களில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப நாட்களில் சோ வைப் பற்றி பத்திரிகையாளர் என்ற அளவுக்குப் பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. தூர்தர்ஷனில் ஞாயிறு தோறும் காலையில் மகாபாரதமோ, ராமாயணமோ முடிந்ததும் 1 மணி நேரத்தொடர் நாடகம் ஒன்று ஒளிபரப்புவார்கள். எனது பள்ளிக்காலத்தில் தான் நடித்த திரைப்படங்கள் தாண்டி அப்படி இரு நாடகங்களின் மூலமாகத் தான் ‘சோ’ பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகமானார். அப்போது ‘ஜனதா நகர் காலனி’ மற்றும் ‘சரஸ்வதி சபதம்’ என்று இரண்டு தொடர் நாடகங்கள் ஒளிபரப்பாகின. வாரா வாரம் இரண்டுக்காகவுமே காத்திருந்து பார்த்து ரசித்த நாட்கள் அவை.

ஜனதா நகர் காலனி என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு சின்னஞ்சிறு காலனி வளாகத்தில் அங்கு குடியிருப்பவர்களிடையே நடக்கும் தேர்தல் மற்றும் அதிகார மோகத்தைப் பற்றியது. இதில் ஒரு சின்னக் காலனிக்குள் நிகழும் தேர்தலை வைத்து சோ ஒட்டுமொத்த இந்திய அரசியலையே நையாண்டி செய்திருப்பார். பார்க்கத் தெவிட்டாத நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது. இந்த நாடகத்தில் நடித்த நடிகை  சுகுமாரி சோ ராமாசாமி அவர்களின் நகைச்சுவை நாடகங்களுக்கெல்லாம் ஆதர்ச நடிகை. இவர்களது காம்பினேஷனில் அடுத்து வந்த ‘சரஸ்வதி சபதம்’ உலகின் பல இடங்களில் பல்லாயிரக் கணக்கான முறை மேடை ஏறி இருக்கிறது. மரணத்தில் சுகுமாரி ‘சோ’ வை முந்திக் கொண்டார். ‘சோ’வின் ‘முகமது பின் துக்ளக்’ அன்றைய, இன்றைய, என்றைய அரசியலுக்கும் மிகப் பொருத்தமான நையாண்டி நாடகம். இவையெல்லாம் நாங்கள் பார்த்து ரசித்தவை.

இவற்றோடு இதைப் போல பல்வேறு சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து சுமார் 20 நாடகங்களை சோ இயக்கி தானே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். சோ வின் எல்லா நாடகங்களுமே சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பவை.

1934 ஆம் வருடம் அக்டோபர் மாதம் சென்னை மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து மயிலாப்பூர் பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லயோலா கல்லூரியில் பி.யூ.ஸியும் முடித்து, விவேகானந்த கல்லூரியில் இளநிலை அறிவியல் படிப்பை முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டமும் பெற்றார். படிப்பை முடித்து 1957 க்கும் 62 க்கும் இடைப்பட்ட சில வருடங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். அதன் பிறகு டி.டி.கே நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். இதற்கு நடுவில் 20 வயதுக்கு மேலே தான் ‘சோ’ வுக்கு நாடக மோகம் பற்றிக் கொண்டது. நாடகம் தவிர்த்து சுமார் 200 படங்களுக்கும் மேலே நடித்திருக்கிறார். 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். 

அரசியல்:

திரையுலகில் ரஜினிக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்பட்டவர். ஜெயலலிதாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்த போதும் 1996 தேர்தலின் போது மத்தியில் இருந்த பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த்தார். அப்படி  தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த ‘அம்மாவை’ தோற்கடிக்கும் பொருட்டு சோ வின்  கைங்கரியத்தில் உருவானது தான் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுக்க சூப்பர் ஸ்டாரை அப்போது தேர்தல் அரங்கில் பிரசன்னமாக வைத்த பெருமையும் ‘சோ’ வையே சேரும். அந்தத் தேர்தலில் தி.மு.க ஈட்டியது வரலாறு காணாத வெற்றி. அம்மா பர்கூரில் தோற்று அதள பாதாளத்திற்குச் சென்றதும் அப்போது தான் நடந்தது.

அதற்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் தலைவருடன் ‘சோ’ வுக்கு கொள்கை ரீதியாக கருத்து ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் சோ வை மிக ரசிப்பவர் கலைஞர் என அவரது வாயாலேயே சொல்ல வைத்த பெருமையும் சோ வுக்கு உண்டு. இந்த தலைமுறை கண்ட மூன்று தமிழக முதல்வர்களுடனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருங்கிய நட்பு பாராட்டிய சோ வை பலர் பல விசயங்களுக்காக மிகக் கடுமையாக விமரிசித்தாலும் கூட அவர் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த  ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியாகும் அவரது நக்கல், நையாண்டி கலந்த அரசியல் விமரிசனங்களுக்காக அவரை உள்ளூர விரும்பியவர்களே வெகு அதிகம். இவை தவிர வாய்பாய் இந்தியப் பிரதமராயிருந்த காலகட்டத்தில் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும்  பொறுப்பு வகித்தார். 

சோ பெற்ற விருதுகள்:

தனது பத்திரிகையுலகப் பங்களிப்புகளுக்காக 1985 ல் மஹாராணா மேவார் வழங்கிய ஹால்டி காட்டி விருது, 1986 ல் வீரகேசரி விருது, 1994 ல் பகவான் தாஸ் கோயாங்கா விருது, 1998 ல் பாஞ்சஜன்யா பொன்விழா நூற்றாண்டில் வாஜ்பாய் வழஙிய நச்சிகேதாஸ் விருது உள்ளிட்ட முக்கியமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

சோவும் ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள்:

திரை உலகுக்கு அறிமுகமாவதற்கு முன்பாகவே ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக் குழு மூலமாக சோவும், ஜெயலலிதாவும் நன்கு அறிமுகமானவர்களே. ஜெயலலிதா முதன் முதலில் தமிழக ஆட்சிக் கட்டிலில் ஏறிய சமயம் அவர் மீது சோ வுக்கு மிகுந்த கோபமும், மன வருத்தமும் இருந்தது. அவையெல்லாமும் ‘துக்ளக்’கில் கேலிச் சித்திரங்களாகவும் கேள்வி, பதில்களாகவுமாயின. ஆனால்
அதற்குப் பின்னான காலகட்டம் சோ வின் மனதை மாற்றியது. ஜெயலலிதா குறித்த எந்த அம்சம் சோ மனதை மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனால் ‘சோ’ தனது நேர்காணல் ஒன்றில் ‘தான் ஜெயலலிதா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நினைத்துக் கொண்டு தான் அவர் மீது மனஸ்தாபத்தில் இருந்ததாகவும், அவரது ஆட்சியில் நடந்த பெரும்பாலான சட்ட மீறல்களுக்கு அவர் காரணமல்ல அவரைச் சுற்றி இருந்தவர்களே காரணம் என்று அறிந்த பின் அந்த மனஸ்தாபம் மறைந்து விட்டது என்றும் அவரே கூறி இருக்கிறார். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜெயலலிதாவின் உற்ற நண்பராகவே தமிழக அரசியல் களத்தில் சோ அடையாளம் காணப்பட்டார். இந்திய அரசியல் களத்தில் அவர் எப்போதும் பி.ஜே.பி ஆதரவாளராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொண்டிருந்தார்.

சோ வின் அரசியல் நையாண்டிக்கு ஒரு சான்று!

எது எப்படி இருந்தாலும் மறைந்தவர் ஒரு மாமனிதரே! பின் வரும் இளைய தலைமுறையினருக்காக அவர் விட்டுச் சென்ற கேள்விகள் அனேகம். இனி யார் இருக்கிறார்கள் ஆரோக்கியமான அரசியல் நையாண்டி செய்ய? இப்படி ஒரு மனிதரின் மறைவு நிச்சயம் அரசியல்வாதிகளுக்கு இழப்பு தான். இவரது அரசியல் நையாண்டிக்கு மிகச் சிறந்த உதாரணங்கள் பல இருந்தாலும் மிக வினோதமான ஒன்றை இங்கே பகிர்கிறேன். சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த சமயம் மொத்த இந்தியாவும் சஞ்சயின் மரணத்தை தான் பெரிய இழப்பாகக் கருதியது. அவரது மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு நினைவுத் தபால் தலை வெளியிட்டது.  சோ தன் பங்குக்கு சஞ்சயுடன் விமான விபத்தில் இறந்து பெரிதாக கவனம் பெறாமல் புறக்கணிக்கப் பட்ட இன்னொரு இளைஞரின் நினைவாக தபால் தலை வெளியிட்டு அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இந்திய தபால் துறை தவறுதலாக வினியோகிக்கப் பட்டதாகக் கூறி சோ வெளியிட்ட அரசு வெளியிடாத தபால் தலைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது தனிக் கதை;

  • சோ ராமசாமி தமிழ் திரைப்படங்களில் 70, 80 களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்தவர்.
  • பிரபல தமிழக/ இந்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் நல்ல நண்பர்.
  • விமரிசகர்களால் எத்தனை தூரம் இகழப் பட்டாரோ அத்தனை தூரம் விரும்பப்பட்ட நபராகவும் இருந்தவர்.
  • தன்னுடைய விமரிசனங்களில் சமரசம் செய்து கொள்ளாத நபர்.
  • அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.
  • முழு நேரமாக துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
  • அரசியல் கோமாளி என தன்னைப் பிடிக்காத நபர்களால் தூற்றப்பட்டவர்.
  • நெருங்கியவர்களால் குழந்தையுள்ளம் கொண்ட மனிதர் என நினைவு கூறப்படுபவர்.

மொத்தத்தில் சோ வைப் பற்றி  சுருக்கமாகவும், சுலபமாகவும் இப்படிச் சொல்லி மட்டும் முடித்து விட வேண்டாம்;

இதைத் தாண்டி சொல்வதற்கு ஒரே ஒரு விசயம் உண்டிங்கு;

தினமும் எத்தனை மெகா சீரியல்கள் பார்க்கிறோம். அதில் பழி வாங்கும் உணர்வுகளை மட்டுமே மையமாக வைத்து கதை எழுதுவதை ஒழித்துக் கட்டி விட்டு சோ ஸ்டைலில் பள்ளி மாணவர்களுக்கும் அரசியல் ஆர்வம் வரச் செய்யக் கூடிய வகையிலான நாடகங்களை பெருமளவில் கொண்டு வர முயற்சிக்கலாமே! சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து நாடகங்கள் எடுக்கக் கூடாது. அவற்றை வெற்றி பெறச் செய்யக் கூடாது என்று எந்த நிர்பந்தமும் இல்லையே!

சிந்தனையைத் தூண்டிய வகையில்  ‘சோ’ துக்ளக்குக்கு மட்டுமல்ல அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கும் ஆசிரியர் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com