மன்னார்குடி டு போயஸ் கார்டன் அடுத்து ஸ்டெரெயிட்டா கோட்டை தானே!

ஆக மொத்தத்தில் மக்கள் செல்வாக்காவது... மண்ணாங்கட்டியாவது, அது எதுவுமில்லாமலும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகக் கூடிய எல்லா வாய்ப்புகளையும் சசிகலா ஏற்படுத்திக் கொண்டு விட்டார்
மன்னார்குடி டு போயஸ் கார்டன் அடுத்து ஸ்டெரெயிட்டா கோட்டை தானே!

அதிமுக என்பது ஏழை, எளியவர்கள் தமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற அடிப்படை நம்பிக்கையின் பாலும், தனது திரைப்படப் புகழ் மீதான அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் பாலும் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. எம்.ஜி.ஆரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கு இருந்த அதே விதமான நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அவரை விட அதிகமாகவே இருந்தது. 80 களில் பாமர மக்களிடையே எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு இது வரை வேறு எந்த அரசியல் தலைவர்களாலுமே கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக வலுவானதாக இருந்தது. அன்று தொடங்கிய அந்த செல்வாக்கின் ஆயுள் இன்றும் கூட தமிழகம் முழுதும் பேருந்து நுழையாத ஊர்களிலும் தழைத்தோங்கி நீடிக்கிறது. அந்த செல்வாக்கை ஜெ அறுவடை செய்தார். இனி அடுத்து சசிகலா அறுவடை செய்யப் போகிறாரா? என்பது தான் இப்போதைய கேள்வி! 

வி.கே.சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரது ஒப்புதலுடனும் டிசம்பர் 29, வியாழக்கிழமையான இன்று காலை 10 மணிக்கு முன்னதாகவே, கழகத்தினரின் ஒருமித்த ஒற்றுமை உணர்வின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் ஆகி விட்டார். இந்த அறிவிப்பு வரும் வரையிலுமே மக்களிடையே சசிகலாவின் நேரடி அரசியல் பிரவேசம் குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்தன. சில அரசியல் விமரிசகர்கள், மற்றும் பத்திரிகையாளர்களது குறிப்புரைகள் ஒரு வேளை அவர் சோனியா போல திரைமறைவில் ஆளலாம் என்பதாக இருந்தது. ஆனால் இத்தனை நாள் காத்திருந்தேன் இல்லையா? இனிமேல் ‘ஸ்டெரெயிட்டாக ஹீரோ ரோல் தான்’ என்பதாக ஜெ இல்லாத வெற்றிட அனுகூலத்தில் சசிகலா எளிதாக கட்சியின் பொதுச்செயலர் ஆகி விட்டார். நடப்பது அதிமுக ஆட்சி என்பதால் அடுத்ததாக வெகு எளிதில் அவர் முதல்வராகவும் ஆகலாம். 

ஆனால் அவரது அரசியல் வெற்றி என்பது பொதுமக்கள் கண்ணோட்டத்தில் எப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறது? சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கு இருந்த அதே மக்கள் செல்வாக்கு இருக்கிறதா ?  என்ற கேள்விகள்;

எந்த எதிர்ப்புகளும் இல்லாமல் அல்லது எதிர்ப்பென்ற பெயரில் எழுந்த சிறு சிறு சலசலப்புகளும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட, இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலராலும் ஊதி அணைக்கப் பட்டு, இவர் தான் தலைமை தாங்க வேண்டும் என வேண்டி விரும்பி தலைமைக்கான நாற்காலியில் சசிகலா அமர வைக்கப்படும் இந்த நேரத்தில் எல்லோரது மனதிலும் எழுந்து மறைகிறது. இதற்காக தனியார் கல்லூரி மூலமாக கருத்துகணிப்பு சர்வே எடுத்து தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இப்போது திருமதி.சசிகலாவுக்கு இல்லை. ஏனென்றால் நடந்து கொண்டிருப்பது அவர்களது ஆட்சி! தமிழக மக்கள் முழுதாக 4 1/2 வருடங்களுக்கு தங்களது பொன்னான வாக்குகளை  ஜெயலலிதாவை நம்பி அடமானம் வைத்து விட்டார்கள். அதனால் தமிழக அரசியல் களத்தில் இன்னும் 4 ஆண்டுகளுக்கு எந்த விதமான புரட்சியும் நடந்து விடும் வாய்ப்புகள் அரிது. அதனால் சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆகக்கூடிய வாய்ப்பானது இன்றைய தேதிக்குத் தவிர்க்க முடியாத வகையில், காலத்தின் கட்டாயங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல;

மாண்பு மிகு அம்மா வழியில் அம்மாவின் தோழியான மாண்பு மிகு சின்னம்மா அவர்கள் கழகத்தை கட்டிக் காக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக இன்றைய மாண்பு மிகு தமிழக முதல்வர் தொலைக்காட்சி செய்திகளில் காலை முதலே சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் ஆர். கே நகர் மற்றும் ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏக்களை இழந்து வாடும் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப் படலாம், அதில் மாண்பு மிகு சின்னம்மா வேட்பாளராக்கப் படலாம். அவருக்கு வேறு யாரும் வியூகம் வகுக்க வேண்டியதில்லை, சின்னம்மா நிச்சயம் தன்னைத் தானே ஜெயிக்க வைத்துக் கொள்வார். பிறகென்ன? இன்றைய மாண்பு மிகு முதல்வர் இதே பவ்யத்துடன் கவர்னரிடம் ராஜினாமாக் கடிதம் கொடுக்கும் காட்சி அரங்கேறும். மாண்பு மிகு அம்மா மனசாட்சியின் படி சின்னம்மா தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுக்கும் காட்சியை இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும், வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் வாயடைத்துப் போய் தனியார் தொலைக்காட்சிகளில் கண்டு களிப்போம். இடையில் இந்த அத்தனை மாண்பு மிகுக்களையும் ஓட்டுப் போட்டு உருவாக்கி கோட்டைகளுக்கு அனுப்பிய அப்பாவித் தொண்டர்களோ செய்வதற்கு ஏதுமின்றி, அரை பிளேட் பிரியாணியை சாப்பிட்டு, அம்மா வாட்டர் பாக்கெட்டில் வாய் கொப்பளித்து விட்டு, உடலை நெட்டை விட்டுத் தூங்க இடமிருக்கிறதா என்று தேடிக் கொண்டிருப்பார்களாய் இருக்கும்!

ஆக மொத்தத்தில் மக்கள் செல்வாக்காவது... மண்ணாங்கட்டியாவது, அது எதுவுமில்லாமலும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகக் கூடிய எல்லா வாய்ப்புகளையும் சசிகலா ஏற்படுத்திக் கொண்டு விட்டார் என்பதற்கான அத்தாட்சிகள் தான், ஒவ்வொன்றாக இப்போது நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
 

Image courtsy: NDTV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com