ஒலிப் பார்வை -பகுதி 1

கலிபோர்னியாவைச் சேர்ந்த அந்தப் பையனின் பெயர் 'பென் அண்டர்வூட்' (Ben Underwood). அப்போது அவனுக்கு வயது ஐந்தாக இருக்கலாம். மிகுந்த துடிதுடிப்புடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஒலிப் பார்வை -பகுதி 1

தினமணி வாசகர்களுக்கு வணக்கம்.

நவீன அறிவியலின் வியப்புகள், உலகின் அரிய விந்தைகள், நம்ப முடியாத மர்மங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு வாரமும் தகவல் வடிவத்தில், 'சும்மா ஒரு தகவலுக்குத்தான்.....!' என்னும் தலைப்பில் , வரும் 21.10.16 (வெள்ளி) முதல் எழுத இருக்கிறேன். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். பிடிக்கும்படி எழுதவேண்டியது என் கடமை.

'சும்மா ஒரு தகவலுக்குத்தான்.....!' தொடரை, பார்வையற்றவர்களுக்கான தினமான இன்று (13.10.2016) ஆரம்பிக்கிறேன். அதனால், பார்வையற்றோர் சம்மந்தமான கட்டுரையுடன் ஆரம்பிக்க விரும்பினேன். கட்டுரை சற்று நீளமானது. அதானால் இரண்டு பகுதிகளாக வெளிவரும். படித்து உங்கள் அபிபிராயத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாசகர்களுக்கு என் வாழ்த்துகள்.

-ராஜ்சிவா-

*****

கலிபோர்னியாவைச் சேர்ந்த அந்தப் பையனின் பெயர் 'பென் அண்டர்வூட்' (Ben Underwood). அப்போது அவனுக்கு வயது ஐந்தாக இருக்கலாம். மிகுந்த துடிதுடிப்புடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். உடன் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அவனது சகோதரர்களும், உறவினர்களும். அவர்களும் சிறுவர்கள்தான். வீட்டினுள்ளே படிகளமைந்த இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு அது. சிறுவர்கள் அனைவரும் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிந்துகொள்ள, பென் அவர்களைத் தேடத் தொடங்கினான். கண்ணாமூச்சி விளையாட்டில் கண்டுபிடிப்பது இப்போது பென்னின் முறை. வீட்டில் வளைந்து வளைந்து மேல் நோக்கிச் செல்லும் படிகளில் தடதடவென இறங்கியும் ஏறியும் ஒவ்வொரு மூலையில் இருந்த சிறுவர்களையும் சில நொடிகளிலேயே பென் கண்டுபிடித்தான். அவன் தங்களைக் கண்டுபிடித்ததும் கவலைப்பட வேண்டிய சிறுவர்கள் அனைவரும் அவனைக் கட்டியணைத்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களுக்கும் ஆச்சரியம். பென்னின் தாயான 'அகுனெட்டா' (Aquanetta) பெருமையுடன் மகனைக் கவனித்துக் கொண்டிருந்தார். கண்களில் துயரமோ, ஆனந்தமோ தெரியவில்லை. கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. "ஒரு சிறுவன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைய என்னதான் இருக்கிறது? எத்தனையோ சிறுவர்கள் இந்த வயதில் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். இதுக்குப் போய் யாரும் பெருமைப்படுவார்களா?" இதைத்தானே நீங்கள் யோசிக்கிறீர்கள். சாதாரணமாக அனைவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால், பென் நீங்கள் நினைப்பது போன்றவன் அல்ல. அவனும் ஒரு சாதனைச் சிறுவன்தான். அவனின் சாதனை என்ன தெரியுமா? பென்னுக்கு இரண்டு கண்களுமே தெரியாது. முழுமையாகப் பார்வையை இழந்தவன்

பென்னுக்கு இரண்டு வயது இருந்த போது, அவனது கண்களைக் கவனித்த தாயார் அதிர்ச்சியடைந்தார். அவனின் கண்விழி ஒரு மார்பிள் போல மாறியிருந்தது. உடனடியாக டாக்டர்களிடம் சென்று பரிசோதித்தார். அப்போதுதான் அபூர்வமாக வரக்கூடிய கண் புற்றுநோயொன்று பென்னின் விழிகளைத் தாக்கியிருக்கிறது என்பதை அறிந்தார். 'ரெட்டினோப்ளாஸ்டோமா' (Retinoblastoma) என்று சொல்லப்படும் விழித்திரையில் உருவாகும் கொடிய புற்றுநோய் அது. ஒரு மில்லியன் குழந்தைகளில் ஆறுபேருக்கு மட்டும் வரக்கூடிய அபூர்வ நோய் பென்னுக்கும் வந்திருந்தது. கண் விழிகளை நீக்காவிட்டால் மூளை முழுவதும் பரவி மரணத்தைச் சந்திக்க நேரிடும் பயங்கர நோய். சில காலத்துக்குப் பார்வையா? இல்லை உயிருடன் பார்வையில்லாத பிள்ளையா? என்று மருத்துவர்களால் கேட்கப்பட்ட போது, தாய் அகுனெட்டா என்ன முடிவுக்கு வந்திருப்பார் என்று உங்களுக்குத் தெரியும். பென்னின் மூன்றாவது வயதில் அவனின் இரு விழிகளும் நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாகச் செயற்கையாக விழிகள் பொருத்தப்பட்டன. மருத்துவமனையில் தனக்குக் கண்கள் தெரியவில்லையென்று உரக்க அலறினான் பென். பையனின் அலறலில் கலங்கிப் போன தாயார், தானும் இப்போது சோகத்தில் இருப்பது பையனை அவநம்பிக்கைக்கு உள்ளாக்கும் என்பதை அறிந்து, தன் கண்களைத் துடைத்துவிட்டு அவனைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தார். அவர் பென்னுக்கு சொன்ன நம்பிக்கை வாய்ந்த அறிவுரைகள், பென்னின் வாழ்கையையே மாற்றிப் போட்டது.

கண் பார்வையை இழந்த பென்னின் தாயார் அவனது கைகள் இரண்டையும் எடுத்துத் தன் முகத்தில் வைத்து, " இதோ பார் இந்தக் கைகளால் தடவி என் முகத்தை உன்னால் பார்க்க முடிகிறதல்லவா? நான் பேசுவதைக் காதால் கேட்பதால் என்னை உனக்குத் தெரிகிறதல்லவா? ஒருவன் கண்களால் மட்டும் பார்ப்பதில்லை. காது, மூக்கு, கைகள், கால்கள் என அனைத்தாலும் பார்க்கிறான். உன்னாலும் இனி உலகை வேறு விதமாகப் பார்க்க முடியும். கண்கள் இல்லாவிட்டாலென்ன, நீ மற்ற உறுப்புகளால் உலகைப் பார்! உன்னால் முடியும்" என்று அழுதபடி நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தாள். அதுவே பென்னுக்கு வேதமானது. அன்றிலிருந்து புதிய பென் ஒருவன் பிறந்தான். படிப்படியாகப் பென் மற்றவர்கள் போல நடக்கத் தொடங்கினான். விளையாடத் தொடங்கினான். தனது ஏழாவது வயதிலிருந்து பென் உலகையே ஆச்சரியப்படுத்தும் சிறுவனாக மாறினான். போக்குவரத்துகள் நிறைந்த சாலைகளில் சைக்கிளில் வலம் வந்தான். ரோலர் ஸ்கேட்டிங்கில் அபாரத் திறமையுள்ளவனாக விளங்கினான். எதுக்குமே யாருடைய உதவியும் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. இரண்டு கார்களுக்கிடையே அனாயசமாக நுழைந்து வெளியே வருவான் அவன். நண்பர்களுடன் பாஸ்கெட் பால் விளையாடும் போது, கூடைகளில் பந்தை வீசுவதில் பென்னுக்கு நிகர் பென்னாகவே இருந்தான். பார்வையுள்ளவர்களால் கூடச் சாதிக்க முடியாததைப் பார்வை இல்லாமல் சாதித்தான் பென். இதில் உச்சக் கட்டமாக கராட்டேயிலும் பென் சிறந்து விளங்கினான். செயற்கைக் கண்கள் பொருத்தியிருப்பதால், பார்க்கும்போது சாதாரணமான ஒரு பையன் போலவே பென் காட்சியளித்தான். அவனுக்குப் பார்வை கிடையாது என்று சொன்னால், மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். 'இவனுக்குப் பார்வை தெரிகிறது, ஆனால் தெரியாத மாதிரி நடிக்கிறான்' என்றும் சிலர் நினைத்தனர். தன் செயற்கைக் கண்களை வெளியே எடுத்துக் காட்டும் போதுதான் அதிர்ந்து போவார்கள் அவர்கள். இதில் மிகவும் ஆச்சரியமான விசயம் ஒன்று உண்டென்றால், பார்வையிழந்தவர்கள் பயன்படுத்துவது போல, பென் கைத்தடியையோ, கைகளையோ உபயோகிப்பதில்லை. ஆனால் தனக்கு எதிரே என்ன இருக்கிறது. அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. அதன் வடிவம், பருமன் ஆகியவற்றை பென் மிகச்சரியாகத் தெரிந்துகொண்டு நடமாடுவான். உலகிலேயே பார்வையிழந்தவர்களில் முதல்தர சாதனையாளனாக பென் கணிக்கப்பட்டான். சாதனைகள் செய்யும் அதிசய மனிதர்களை ஏனோ இயற்கை அதிக வயதுவரை வைத்திருப்பதில்லை. 2009ம் ஆண்டு தனது பதினாறு வயதில், எந்தப் புற்றுநோயால் தன் இரு விழிகளையும் இழந்தானோ, அதே புற்றுநோய் மீண்டும் தாக்கி இறந்தான் பென் அண்டர்வூட்.

பென் ஒரு ஆச்சரியமான இளைஞனாக எப்படி வலம் வந்தான்? பார்வையை இழந்தாலும் அவனால் எப்படிப் பார்க்கக் கூடியதாக இருந்தது? அனைத்தையும் துல்லியமாக பென்னால் எப்படிக் கணிக்க முடிந்தது? கைத்தடியின் உதவிகூட இல்லாமல் அவனுக்குப் பார்ப்பதற்கு உதவி செய்தது எது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்குப் பதில் தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள். ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். 

"Blind as a Bat" என்று ஆங்கிலத்தில் சொற்றொடர் ஒன்று உண்டு. 'பார்க்க முடியாதவர் அல்லது பார்வையற்றவர்' என்பதைக் குறிக்கும் வகையில் இந்தச் சொற்றொடர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தச் சொற்றொடர், மிகவும் தவறான கருத்தைக் கொண்டதாகும். 'பாம்பு பால் குடிக்கும்' என்பதுபோல. மனிதர்களிடையே பரவியிருக்கும் மூடத்தனமான பல கருத்துகளில் இதுவும் ஒன்று. நாம் நினைப்பது போல வௌவால்கள் பார்வையற்றவை அல்ல. உலகிலுள்ள 1100 வகையான வௌவால்களுக்குக் கண்கள் நன்றாகவே தெரியும். ஆனால் இருட்டில் மனிதர்களின் பார்வையைப் போன்ற நிலைதான் வௌவால்களுக்கும். அப்படியென்றால், வௌவால்களுக்கு ஏன் 'கண் தெரியாது' என்ற பெயர் கிடைத்தது? உண்மையைச் சொல்லப் போனால், டால்பின் மற்றும் ஒருவகைத் திமிங்கலம் தவிர்ந்த வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத தனித்திறமையொன்று வௌவாலுக்கு இருக்கிறது. இந்தத் திறமையின் அடிப்படையில்தான், இருட்டில்கூடத் தன் இரையைத் தேடிப்பிடிக்க வௌவால்களால் முடிகிறது. அந்தத் திறமையே வௌவால்களுக்குப் 'பார்வையற்ற உயிரினம்' என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. யாருக்குமே இல்லாமல் வௌவால்களுக்கு மட்டும் இருக்கும் அந்தத் தனித்திறமை என்ன தெரியுமா? 'எக்கோ லொகேசன்' (Echo Location) என்று சொல்லப்படும், எதிரொலி மூலம் இடத்தை அறியும் தன்மை.

டால்பின் மீன்கள் கடலடியில் சென்று கொண்டிருக்கும்போது, ஒருவிதமான வினோத ஒலியை எழுப்பிக்கொண்டே செல்கின்றன. அந்த ஒலியைத் தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டிருக்காமல், மிகச்சிறிய நேர இடைவெளிகள் விட்டு, வரிசையாக அடுத்தடுத்து எழுப்பிக் கொண்டு செல்கின்றன. டால்பினால் உருவாகும் அந்த ஒலியானது, நீரினூடாகச் சென்று எதிரேயுள்ள பொருட்களிலோ அல்லது இரைகளிலோ பட்டுத் தெறிப்படைந்து, மீண்டும் டால்பினையே வந்தடையும். தான் எழுப்பிய ஒலியின் அளவு, அது சென்று திரும்பி வந்த நேரம் ஆகியவற்றை மிகத்துல்லியமாகக் கணித்து, எதிரேயுள்ள பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அது என்ன உருவத்தைக் கொண்டிருக்கிறது எனபதையெல்லாம் டால்பின் தெரிந்துகொள்ளும்.

விலங்கினங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஏதாவதொரு விசேசத் தன்மையுடன்தான் இருக்கும். அந்த வகையில், டால்பின்களுக்கு இந்தச் சிறப்பம்சம் அமைந்து இருக்கிறது. எதிரேயிருக்கும் பொருட்களையோ அல்லது இரைகளையோ தான் எழுப்பும் ஒலி தரும் எதிரொலிகள் மூலம், அவை எவ்வளவு தூரத்தில், என்ன வடிவத்தில் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதையே, 'எக்கோ லொகேசன்' என்கிறார்கள்.

டால்பின்களுக்கு இருக்கும் அதே ஆற்றல் வௌவால்களுக்கும் அமைந்திருக்கின்றது. தனது இரையைப் பகல் நேரங்களில் பிடிப்பதைவிட, இரவு நேரங்களில் பிடிப்பதையே வழமையாகக் கொண்டது வௌவால். இருட்டில் அதனால் பார்க்க முடியாததால், டால்பின் பயன்படுத்தும் 'எக்கோ லொகேசன்' முறையைத் தானும் பயன்படுத்தித் துல்லியமாக இரையைக் கவ்வுகிறது வௌவால். அடுத்தடுத்து வரிசையாக ஒலியெழுப்பி, அதன் எதிரொலியைக் கிரகிப்பதன் மூலம், தன் பறத்தலை இரவுகளில் அது இலகுவாக்குகின்றது.

இதை அறிந்துகொண்ட மனிதன், வௌவால்கள் எல்லாமே பார்வையற்றவை என்ற தப்பான முடிவுக்கு வந்திருந்தான். ஆனால், இது தப்பான தகவலாக இருந்தாலும், இதுவே இப்போது மிகமுக்கியமானதொரு கண்டுபிடிப்புக்கு வித்திட்டிருக்கிறது. இப்போது இந்தக் கட்டுரையை எழுதும் நோக்கமும் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்வதுதான். உண்மையில் சொல்லப் போனால், அதை நான் சொல்ல வருவதற்கு முன்னரே, சினிமா என்னும் பலமான ஊடகமொன்றின் மூலம் தமிழர்களுக்கு வேறொருவர் இதைச் சொல்லியிருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் சொல்லப்பட அந்த நிகழ்வு சரியான வகையில் மக்களால் எடுத்துக் கொள்ளப்படவில்லையெனத் தெரிகிறது. அது என்னவென்பதை இப்போது நாம் விளக்கமாகப் பார்க்கலாம்.

(நாளை தொடரும்..)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com