கியூட் பாண்டா கிவிசாய்!

தற்போது உலகில் இருக்கும் ஒரே பழுப்பு நிற பாண்டா கரடி க்விசாய் தான்.
கியூட் பாண்டா கிவிசாய்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவர்ந்துள்ளது உலகின் அரிய வகை விலங்கினமான பாண்டா கரடிகள். டிஸ்கவரி சானலில் எப்போதாவது அதனுடைய செயல்களைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு அவற்றின் மீது அன்பு கூடும். ஒன்று பரம சாதுவாக அது பாட்டுக்கு காடு மேடுகளில் திரிந்து கொண்டிருக்கும், அல்லது மூங்கில்களை உடைத்து அருகில் இருக்கும் எதாவது சிறிய மரத்தின் கிளைகளில் வசதியாக அமர்ந்து கொண்டு அந்த மூங்கில்களை ஆர அமர சாப்பிடும். அல்லது சக கரடியுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் போது அதை நாமும் வளர்க்கலாமே என்று ஆசை வரும். ஆனால் பாண்டா கரடிகள் வாழ்வதற்கான தட்ப வெப்ப நிலை நம்மூரில் மட்டும் என்றில்லை சீனாவைத் தவிர உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை. ஆம். சீனாவில் மட்டுமே காணப்படும் இக்கரடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விலங்கின ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பாண்டா கரடிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் குட்டிகள் ஈனும். ஒரு பிரசவத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் மட்டுமே ஈனும். இக்கரடிகள் பிறக்கும் போது 15 செ.மீ நீளமும் 200 கிராம் எடை என அளவில் சிறியதாக இருக்கும். இவற்றின் ஆயுள் காலம் 15 முதல் 20 வருடங்கள் மட்டுமே. இக்கரடிகளின் பிரதான உணவான மூங்கில் காடுகள் தற்போது சீனாவில் போதிய அளவில் இல்லாததால் கரடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாண்டா கரடிகள் பெரும்பாலும் கருப்பு வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் உலகின் ஒரே பழுப்பு நிற பாண்டா கரடி என்ற பெருமையை பெற்றுள்ளது ஒரு பாண்டா. அது மத்திய சீனப் பகுதியில் வாழ்கிறது. அதன் பெயர் கிவிசாய்.

சீன மொழியில் கிவிசாய் என்றால் ஏழாவது மகன் என்று அர்த்தம். கிவிசாய் பிறந்த சில வாரங்களிலேயே பெற்றோர் இதனை தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டன. கறுப்பு வெள்ளை பாண்டாக்களான அவை கிவிசாவின் பிரவுன் நிறத்தால் அதன் மீது பாசம் காட்டவில்லை. அதன் பின்னர் அதை வளர்க்கும் பொறுப்பை வன விலங்குத் துறையினர் எடுத்துக் கொண்டு பாண்டா வேலி எனும் இடத்தில் அதை விட்டுவிட்டனர். சின் என்பவர் பாதுகாவலராய் நியமிக்கப்பட்டார். அவர் அருமையாக கிவிசாயை பராமரித்து வருகிறார். கிவிசாயின் வயது தற்போது ஏழு. தனக்கான இணை இல்லாமல் தனித்து வாழ்கிறது கிவிசாய். 

கிவிசாயின் உணவு தினமும் 20 கிலோகிராம் மூங்கில்கள். கிவிசாயின் பெற்றோர்கள் அதனை சின்ன வயதில் விட்டுப் பிரிந்ததால் தனியனாக வளர்ந்த அது சற்று மந்தமாகவே காணப்படும். அதனால் மற்ற கரடிகள் அதனை விளையாட சேர்த்துக் கொள்வதில்லை. தவிர தங்களை விட ஏதோ ஒருவிதத்தில் கிவிசாய் வித்தியாசமாய் இருப்பதை அவை உணர்ந்துள்ளன போலும். கிவிசாயை தங்கள் அருகே அண்டவிடாமல் தடுக்கும். அதனால் சின் கிவிசாயை அதிக அன்புடன் பாதுகாத்து வருகிறார். 

தற்போது உலகில் இருக்கும் ஒரே பழுப்பு நிற பாண்டா கரடி க்விசாய் தான். உலக அளவில் கண்டறியப்பட்ட ப்ரவுண் நிற பாண்டாவில் க்விசாய் 5-வது பாண்டா. மற்றவைகள் தற்போது உயிருடன் இல்லை. சிறுவயது முதலே க்விசாயை மற்ற கரடிகள் கொடுமைப்படுத்தியுள்ளன. அதன் மூங்கிலை பிடுங்கிக் கொண்டு சாப்பிட விடாமல் தடுத்தன. அதற்கான முதல் காரணம் அதன் நிறம். தவிர மற்ற பாண்டா கரடிகளுடன் ஒப்பிடும் போது, க்விசாய் சற்று மந்தமாக தான் இருக்கும். ஆனால், இதன் க்யூட்னஸ்க்கு வேறு எந்த பாண்டாவும் ஈடாகாது என்கிறார் இதை வளர்ப்பவர் சின். தினசரி 44 பவுண்டு மூங்கில்கள் இதன் உணவு. தற்போது க்விசாய் 220 பவுண்டுடன் ஆரோக்கியமாக உள்ளது. 

இன்று உலகம் முழுவதும் கிவிசாயிக்கு ரசிகர்கள் உள்ளனர். தவிர பொதுவாகவே பாண்டா கரடிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர். ஆனால் அவர்களால் மிருக காட்சி சாலைகளில் மட்டுமே பாண்டா கரடிகளைப் பார்க்க முடியும். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ போன்ற பல நாடுகளின் வனவிலங்கு சரணாலயங்களில் பாண்டா கரடிகள் வளர்க்கப்படுகிறது. சீனாவுக்கு பெரும் விலை கொடுக்கப்பட்டுத் தான் இந்த பாண்டா கரடிகளை வாங்குகின்றனர் பாண்டாவை தங்கள் சரணாலயத்துக்கு அழைத்து வரும் ஆர்வலர்கள். அதனால் பாண்டா கரடிகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சீனாவிடம் உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. உலகில் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் ஆராய்ச்சியாளர்கள் கொண்டாடும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருவதை வருத்தத்துடன் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் கிவிசாய் போன்ற அரிய வகை பாண்டாக்களின் எண்ணிக்கையை எப்படியாவது உயர்த்த வேண்டும் என்றும் சீனாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாண்டா கரடிகள் மற்றும் கிவிசாயிக்காக நாமும் பிரார்த்தனை செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com