உண்மையான காங்கிரஸ்வாதி வ.உ.சி.யின் அரசியல் பயணம்

வ.உ.சிதம்பரனார் பொதுவாழ்வில் இறங்கும்போதே சாதி வெறி இல்லாதவராய், பஞ்சமர் நலம் நாடுபவராய்,

வ.உ.சிதம்பரனார் பொதுவாழ்வில் இறங்கும்போதே சாதி வெறி இல்லாதவராய், பஞ்சமர் நலம் நாடுபவராய், மாதர் நலம் பேணுபவராய் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவராய் இருந்தவர். எனினும், அரசியல் போராட்டமே அவர் நெஞ்சில் ஓங்கி எழுந்திருந்தது. அதில் அவர் தன்னையே அர்ப்பணித்தார்.

வ.உ.சி., நூறு ஆண்டுகளுக்கு முன்பே சுதேசிக் கப்பல் கம்பெனி ஆரம்பித்து, சுதேசியத்தில் இந்தியாவுக்கே முன்னோடி அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர். சுதந்திரப் போருக்கு வக்கீல்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தவரை மட்டுமல்லாமல், ஆலைத் தொழிலாளர்கள் போன்ற அடித்தட்டு மக்களையும் திரட்டினார்.

வ.உ.சி., திலகரால் அரசியலுக்கு வந்தவர். அவர் 1898-லேயே இந்திய தேசிய காங்கிரசில் தீவிர உறுப்பினராக இருந்தார். 1885-ல் ஏற்படுத்தப்பட்ட காங்கிரஸ் மகா சபைக்கு அடுத்த 13 ஆண்டுகளில் தென் கோடி இந்தியாவில் ஓட்டப்பிடாரத்தில் கிளை ஏற்படுத்தி, தமிழகத்தின் மூத்த காங்கிரஸ்காரராகத் திகழ்ந்தார்.

வ.உ.சி., ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகாசபைக்கு பிரதிநிதியாக சென்றுவந்தார். அந்நாளில் காங்கிரஸில் பாமரர்களின் ஆதிக்கம் வலுக்கவில்லை. பணக்காரர்களும் வக்கில்களுமே அம்மகாசபை நடத்தி வந்தனர். அவர்களிலும் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒன்று மிதவாதம், மற்றொன்று தேசியவாதம். வ.உ.சி., தேசியவாதிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸில் மிதவாதிகளே மிகுந்திருந்தனர். இவர்கள் ஆண்டுதோறும் காங்கிரஸ் சபையைக் கூட்டி பிரிட்டிஷ் அரசரை வாழ்த்தியபின், அழகான தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் சரமாரியாகப் பேசுவதும் தவிர, செயலில் எதுவும் செய்து காட்டத் துணிவுகொண்டவர்களாக இல்லை.

மண்டையம் ஸ்ரீனிவாஸாச்சாரியார், 'இந்தியா' இதழை நடத்திய திருமலாச்சாரியாரின் இளைய சகோதரர். பாரதியாரின் நண்பர். அவர் கூறுகிறார், “ஒருநாள் பாரதியார் திடீரென்று எங்கள் வீட்டுக்கு வந்து, ‘நீங்கள் சுதேசிகளென்று பெருமை கொள்கிறீர்களே, இங்கு ஒருவர் சுதேசி விஷயத்தில் நம்மை எல்லாம் மீறியிருக்கிறார் வந்து பாருங்கள்' என்றார். குதிரை வண்டியில் நாங்கள் எல்லோரும் சென்றோம். அங்கு ஒரு வீட்டின் முற்பகுதி அறையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிரில் மேஜை மேல் உள்ளூரில் செய்த கரடு முரடான காகிதம்; உள்நாட்டு மைக்கூடு, வாத்திறகு எழுது கோல் இவற்றை நாங்கள் கண்டு புன்சிரிப்போடு உள் நுழைந்தோம். அங்கிருந்தவரும் சிரித்துக்கொண்டே பாரதியாரை வரவேற்றார். அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

பாரதியார், ‘நம்மிடம் எவ்வளவோ ஆங்கில சாமான்கள் இருக்கின்றன. இவர் பாருங்கள் எல்லாவற்றையும் விட்டெறிந்து குறையின்றி வாழ்கிறார். நம் நாட்டு சாமான்களை உபயோகப்படுத்தினால்தான் நாம் உய்வோம்' என்றார்.

‘நம் நாட்டுத் தொழிலை வளர்ப்பதோடு மாத்திரம் நான் நிற்கவில்லை. அவற்றை புற நாடுகளிலும் பரப்ப உத்தேசம் கொண்டிருக்கிறேன். அதற்கு முதலடியாக கப்பல் கம்பெனி ஒன்று ஸ்தாபிக்க எண்ணங்கொண்டிருக்கிறேன்' என்றார். நாங்கள் எவ்வளவுதான் சுதேச அவா கொண்டவர்களானாலும், நம்மால் திறமையுடன் ஒரு பெருங்காரியத்தை நடத்தமுடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தோம். ஆனால், சிதம்பரம் பிள்ளை அதைச் சொல்லும்பொழுது, அதற்கு அவர் தகுந்த மனிதர் என்ற எண்ணம் மாத்திரம் உண்டாயிற்று.

மிதவாதிகள் எல்லாம் நல்ல தேசபக்தர்களே ஆனாலும், அவர்கள் முயற்சியெல்லாம் சர்க்கார் அருளைப் பெறுவதையே தம் பெருநோக்காகக் கொண்டிருந்தன. பொதுஜனங்களிடையே ஒற்றுமையுண்டாக்கி, அதனால் ஏற்படும் வலிமைதான் நம் நோக்கத்தை ஈடேற்றும் என்பது தேசியவாதிகளின் கருத்து. ஜன சமூகம் ஒரே குரலாய் தேசியவாதிகளை ஆமோதிக்கத் தொடங்கியது. பாலகங்காதர திலகர் இதற்குத் தலைவர். இப்பெருமான் முயற்சியால், ஆங்காங்கு தேசியக் கட்சியினர் ஒன்று கூடி உழைக்கலானார்கள். தமிழ்நாட்டில் பாரதியாரும் சிதம்பரம் பிள்ளையும் கிளர்ந்தெழுந்தனர்.

இந்தியாவில் ஏ.ஓ. ஹ்யூம் காங்கிரசை ஆரம்பித்ததாகக் கூறினாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பாதுகாப்பாகவும் மக்களின் கொந்தளிப்பையும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சக்திகளையும் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகவும் பயன்பட வேண்டும் என்ற அரசாங்கக் கொள்கையின் நேர் முயற்சியாலும் ஆதரவாலும் உருவாக்கப்பட்டதே காங்கிரஸ் ஆகும். காங்கிரசின் பணியைப் பற்றி ஹ்யூமின் கருத்து: "நாம் செய்கையாலேயே தோற்றுவிக்கப்பட்ட ஒரு சேஃப்டி வால்வ் மிக அவசரமாய் தேவைப்பட்டது. நம் காங்கிரஸ் இயக்கத்தைவிடப் பயன்தரத்தக்க ஒரு சேஃப்டி வால்வை உருவாக்க முடியவில்லை".

“ஆங்கிலேயரின் விசுவாசிகளைத் தீவிரவாதிகளிடமிருந்து பிரித்து அரசுக்கு ஆதரவான ஓர் அடிப்படையை காங்கிரஸ் ஸ்தாபனத்தின் வாயிலாக உருவாக்க வேண்டும் என்பதே டப்பர் பிரபுவின் நோக்கம்” என்று "தேசியக் காங்கிரசின் தோற்றம்" என்ற நூலில் ரஜினிபாமிதத் கூறுகிறார்.

வருஷத்துக்கு ஒருமுறை கூடுவதும், இங்கிலாந்து அரசரை வாழ்த்திப் பாடுவதும், சர்க்காருக்கு மனு அனுப்புவதற்குத் தீர்மானம் இயற்றுவதுமே வெகு காலம் வரை மிதவாதிகள் செய்துவந்த காரியம். அவர்கள் இந்நாட்டு விடுதலையைப் பற்றித் தங்கள் கற்பனையில்கூட கண்டாரில்லை. அக்காலத்தில் தேசப்பணியில் ஈடுபட்டவர்கள் இரு பிரிவினராக நின்றனர். பாலகங்காதர திலகர், விபின் சந்திர பாலர், அரவிந்த கோஷ் முதலியோர் ‘தேசியவாதிகள்' எனப்பட்டார்கள். அவர்கள் ஆங்கிலேயர்களைத் தீவிரமாக எதிர்த்து, ‘ஆங்கிலத் தொடர்பற்ற அரசுரிமையே வேண்டும்; அதுவும் உடனே வேண்டும்' என்று ஆரவாரித்தனர். மிதவாதிகள் ‘ஆங்கிலத் தொடர்பற்ற அரசுரிமையா அதுவும் உடனடியாகவா' என்று அலறினர் என்று "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற நூலில் பேராசிரியர் சிவ. இராமச்சந்திரன் கூறுகிறார்.

1905-ம் ஆண்டு காங்கிரஸ் மகாநாடு பனாரஸில் கூடியபோது, அவ்வருஷம் இந்தியா வரும் இங்கிலாந்து இளவரசருக்கு நல்வரவு பத்திரம் அளிப்பதைப் பற்றிப் பேசலானார்கள். பாலகங்காதர திலகர் இதை எதிர்த்து ‘நமக்கு ஒரு நன்மையும் செய்யாத சர்க்காரின் இளவரசன் வரவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?' என்று இடித்துக் கூறினார். மிதவாதத் தலைவர்களுக்கு இப்பேச்சு பெரும் அச்சத்தை உண்டாக்கிவிட்டது.

பால கங்காதர திலகர் தமது "கேசரி" பத்திரிகை மூலமாகப் பொதுஜனங்களைத் தட்டி எழுப்ப ஆரம்பித்தார். திலகர், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற பெருங்குரல் ஒலிக்கவே, மிதவாதிகள் பெருங்கிழவரான தாதாபாய் நௌரோஜியைத் தலைவராக நியமித்தால் யாரும் குறுக்கிட மாட்டார்கள் என்று அவரையே வேண்டிக்கொண்டார்கள். இங்கிலாந்தில் இருந்த தாதாபாய் நௌரோஜி, இவ்வேண்டுகோளுக்கு இணங்கி தமது சொற்பொழிவை இங்கிலாந்திலேயே அச்சிட்டு காங்கிரஸ் கூடும் தினத்துக்கு சிறிது காலம் முன்பு இந்தியா வந்து சேர்ந்தார். அவர் சொற்பொழிவில், "சுயராஜ்யம்" என்ற சொல் காணப்படவே, மிதவாதிகள் பயந்து அச்சொல்லை நீக்கிவிடும்படி வேண்டினார்கள். அதற்கு தாதாபாய் நௌரோஜி இணங்கவில்லை. அவர் வாயில் இருந்து வெளிவந்த அச்சொல் இன்று "சுயராஜ்யம் எமது பிறப்புரிமை" என்று திலகரின் உறுதிமொழியாக நாட்டில் பரவி நிற்கிறது.

1906 டிசம்பர் இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மகாநாட்டுக்கு வ.உ.சி. செல்லவில்லை. வக்கீல் வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் மிதவாத கோஷ்டியாரும், பாரதியார் தலைமையில் அமிதவாத கோஷ்டியாரும் மாநாட்டுக்குச் சென்றார்கள். இம்மாநாட்டில் ‘உள்நாட்டுத் தொழில்களுக்கு ஊக்கம் தர வெளிநாட்டுப் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டும்' என்று விபின் சந்திர பாலர் பலமாக வாதிட்டார். அப்போது வி. கிருஷ்ணசாமி ஐயர் "வெளிநாட்டுப் பொருள்களை பகிஷ்கரிப்பதை உங்கள் வங்க மாகாணத்தோடு வைத்துக்கொள்ளுங்கள். சென்னை மாகாணத்தில் ஒருவர்கூட அதைச் செய்யமாட்டார்" என்றார்.

சென்னை மாகாணப் பிரதிநிதிகளின் தனிக்கூட்டம் நடந்தபோது பாரதியார் அங்கே தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார். பின்னர் இந்தியா பத்திரிக்கையில் "தூத்துக்குடி ஜனங்கள் அந்நிய சரக்கை முற்றாக விலக்கி வருகிறார்கள். இப்படி இருக்கும்பொழுது சென்னைவாசிகள் ஒருவராயினும் முடியாதென்று மொத்தமாய்க் கூறுவதற்கு நியாயம் என்ன?" என்று எழுதினார். சென்னை ஜன சங்கத்தின் கிளை ஒன்று தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் "அடியில் கையொப்பமிட்ட நான் அந்நிய ஆடைகளை, சர்க்கரையை, எனாமல் பூச்சுள்ள பாத்திரங்கள் மற்றும் அந்நிய பொருட்களை முடிந்த அளவு முற்றிலுமாகப் பகிஷ்கரிப்பேன் என்று பற்றுறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கடுத்த வருஷமாகிய 1907-ல் மிதவாதிகள், தேசியவாதிகளைக் காங்கிரசிலிருந்து ஒழித்துவிடுவதென நிச்சயித்து பல மாதங்கள் முன்னிருந்தே உழைக்கலானார்கள். அவ்வருஷம் காங்கிரஸ் கூட்டம் கூட வேண்டிய இடமாகிய நாக்பூரில் திலகருக்கு செல்வாக்கு அதிகம் என பயந்து, தம் சொற்படி நடக்கும் தலைவர்கள் உள்ள இடமான சூரத் நகரில் காங்கிரசை கூட்ட நிச்சயித்தார்கள். திலகர் இதற்கு சிறிதும் பயப்படாது, சில மாதங்களுக்கு முன்பே அங்கு சென்று தமது கொள்கையைப் பொதுஜனங்களுக்கு விளக்கலானார். இவ்வளவு தன்னல மறுப்போடு செய்யும் சொற்பொழிவுகளைக் கேட்க அங்குள்ள ஜனங்கள் ஆவலோடு கூட்டம் கூட்டமாகக் குழுமினர்.

அவ்வருஷம் டிசம்பர் மாதத்தில் சூரத்தில் நடப்பதாயிருந்த இந்தியன் நேஷனல் காங்கிரஸ் மகாசபைக்கு, சிறந்த தேசத்தொண்டு புரிந்ததன் காரணமாகத் தேசம் விட்டுக் கடத்தப்பட்டு, அப்போது விடுதலை அடைந்திருந்த ஸ்ரீ லாலா லஜபதி ராயை தலைவராக்க வேண்டுமென்று பாரதியார் நினைத்தார். உடனே வ.உ.சி. சென்னைக்கு சென்று, பாரதியார் முதலிய தேசபக்தர்களோடு ஆலோசித்து ஸ்ரீ பால கங்காதர திலகரையும் ஸ்ரீ அரவிந்த கோஷையும் அவர்கள் கொள்கைக்கு இணங்கச் செய்ய கடிதங்கள் போன்ற நீண்ட தந்திகள் கொடுத்தார். சில மிதவாதிகளைத் தவிர, மிதவாதிகளும் அமிதவாதிகளும் தேசாபிமானிகளும் ஸ்ரீ லாலா லஜபதி ராயை தலைவராக்க வேண்டுமென்று பத்திரிகைகளில் எழுதி தங்கள் அபிப்ராயத்தை வெளியிட்டார்கள்.

சென்னையிலிருந்து 100 பிரதிநிதிகளுக்குக் குறையாமல் சூரத்துக்குக் அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று பாரதியார் சொன்னார். அவர்களில் பணம் இல்லாதவர்களுக்கு சூரத் போய் வருவதற்குரிய செலவு தொகையில் ஒரு பாதியை மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியும் மற்றொரு பாதியை வ.உ.சி.யும் கொடுப்பதென்று முடிவு செய்துகொண்டார்கள்.

காங்கிரஸ் பிரசிடென்டாக வந்திருந்த ஸ்ரீ ராஷ்பிஹாரி கோஷ் எழுதிக் கொண்டுவந்திருந்த தமது தலைவர் உரையில், ‘அமிதவாதிகள்' என்று சொல்லப்பட்ட தேசியவாதிகளாகிய திலகர், அரவிந்தர், பாரதியார் குழாத்தினரைப் பற்றி இழிவாகச் சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை அப்பிரசுரத்திலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று ராஷ்பிஹாரிக்கு திலகரும், அரவிந்தரும் சொல்லியனுப்பியபோதும் அவர் மறுத்துவிட்டார்.

திலகருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசமொன்றை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியமாயிருக்கிறது, திலகர் எந்தக் காரியத்தைச் செய்ய விரும்பினாலும் அந்தக் காரியத்தைப் பற்றி முதலில் தம்முடைய சிஷ்யர்களைக் கலந்து ஆலோசனை செய்வார். தமது அபிப்ராயமும் அவர்கள் அபிப்ராயமும் மாறுபடுமாயின் தமது அபிப்ராயத்துக்கு அனுசரணையான விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி வாதிப்பார். தமது அபிப்ராயம் நிராகரிக்கபடுமாயின் தமது சிஷ்யர்கள் அபிப்ராயப்படியே முடிவு செய்வித்து, அதனையே தாம் முன்னின்று செய்வார். ஏனைய தலைவர்களோ தங்கள் சிஷ்யர்களுடைய அபிப்ராயங்களை சிறிதும் பொருட்படுத்தாது தமது அபிப்ராயப்படியே காரியங்களைச் செய்வார்கள்.

பாரதியார் முதலியோரின் விருப்பமான ஸ்ரீ லாலா லஜபதி ராயை தலைவராக்க வேண்டுமென்ற பிரேரணையை திலகரே முன்னின்று செய்ய வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

ராஷ்பிஹாரி கோஷைத் தலைவராக்க வேண்டுமென்ற பிரேரணை எழுப்பப்பட்டவுடன் திலகர் மேடைக்குச் சென்று அப்பிரேரணையை எதிர்ப்பதாகச் சொன்னார். திலகர் பலமுறை பேச முயற்சித்தும் முடியவில்லை. அவர் ஒரு சிங்கம்போல் மேடையில் நின்றார். அச்சமயத்தில், மேடையில் இருந்த மிதவாதிகள் பலர் தமது நாற்காலிகளைத் தம்தம் தலைக்கு மேலே தூக்கித் திலகர் மேலே எறிய முயற்சித்தனர். முன்வரிசையில் இருந்த ஸ்ரீ கப்பர்தேயும், பாரதியார் முதலிய சென்னை மாகாணப் பிரதிநிதிகளும் ஒரே பாய்ச்சலாய் மேடையின் மேல் பாய்ந்து திலகரைச் சுற்றி வட்டமாக நின்று திலகர் மேல் எறியப்பட்ட நாற்காலிகளைத் தம் கைகளால் தடுத்து பக்கத்தே தள்ளிக்கொண்டிருந்தார்கள். அப்பிரதிநிதிகளை முன்னரே மாநாட்டுப் பந்தலில் ஒளிந்திருந்த குண்டர்கள் தடிக்கம்புகளால் அடித்துக் கீழே சாய்த்தார்கள்.

“ஸ்ரீ பால கங்காதர திலகரைச் சுற்றி நின்று அவருக்குத் துன்பம் வராமல் பாதுகாத்த வீரர்களில் சென்னைப் பிரதிநிதிகளிலே இரண்டு பேருக்கு பலமான அடிபட்டது. இன்னும் எத்தனையோ பிரதிநிதிகள் பலமான அடியுண்டும் காயப்பட்டும் விழுந்தனர். எத்தனை அடிபட்டபோதிலும் திலகரைக் காக்க வேண்டுமென்று அசையாமல் நின்ற இந்தப் பிரநிதிகளின் திடத்தன்மையை எண்ணும்போது உடல் புல்லரித்து மிகுந்த மகிழ்ச்சியுண்டாகிறது. பஞ்சாப் ரத்தினமாகிய ஸ்ரீ பகத் என்பவர் தமது இரண்டு கைகளே ஆயுதமாகக் கொண்டு போலீசாரின் அடிகளையும் மிதவாதிகள் வீசிய நாற்காலிகளையும் தாங்கிய வீரத்தன்மை சொல்லுந்தரமன்று. மிதவாத கட்சித் தலைவர்கள் கலக மூட்டிவிட்டுப் பின் வழியாகத் தப்பியோடிவிட்டார்கள்.

27-ம் தேதி மாலை எங்கள் கூடாரத்தில் குழப்பமும் பரபரப்பும் மிகுந்திருந்தது. தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை எங்கே என்று ஒரு நண்பர் மகா ஆத்திரத்தோடு வந்து கேட்டார். ‘ஆகா அவரைத் தவற விட்டல்லவோ வந்துவிட்டோம்' என்று வருத்தமடைந்தேன். ஒரு தென்னாட்டு மிதவாதி சில போலீசாரிடம் எங்களைக் காண்பித்து ‘இவர்கள் புதிய கட்சியாளர்கள். இவர்களை அரெஸ்ட் செய்யும்' என்று சொன்னார். ஆதலால் ஒரு வேளை போலீசார் பிடித்துக்கொண்டு போயிருப்பார்களோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. அவர்களை இடத்துக்கு இடம் தேடினேன். பின்னர் அவர்களுக்கு எவ்விதமான சங்கடமும் நேரிடவில்லை என்று ஒருவர் சொன்ன பிறகு மனம் அமைதி அடைந்தது” என்று “எங்கள் காங்கிரஸ் யாத்திரை” என்ற நூலில் பாரதியார் கூறுகிறார்.

மறுநாள் மாலையில் நடந்த தேசியவாதிகளின் மகாநாடு அரவிந்தர் தலைமையில் நடந்தது. வருஷந்தோறும் தேசியவாதிகள் தனி மாநாடு கூடி ஆலோசனை செய்து சுய அரசாட்சி அடைவதற்குரிய வேலைத் திட்டங்களை வகுத்து வருஷம் முழுவதும் வேலை செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டது. அதற்காக ஒவ்வொரு மாகாணத்துக்கும் காரியதரிசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பம்பாய் மாகாணத்துக்கு திலகரும், வங்காள மாகாணத்துக்கு அரவிந்தரும், சென்னை மாகாணத்துக்கு வ.உ.சிதம்பரனாரும் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அறிஞர் விபின் சந்திர பாலர், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவர். வங்க மாகாணத்தின் முடிசூடா மன்னரெனப் புகழ் பெற்றவர். நாவன்மையில் இந்தியா முழுமையும் அந்தக் காலத்தில் அவருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது. கேட்பவர் விரும்பும் வண்ணம் பேசும் வித்தகராய் விளங்கினார். விபின் சந்திர பால் சொற்பொழிவுகளாலும் பாரதியார் பாட்டுகளாலும் சுரக்க ஆரம்பித்த சென்னை மகா ஜனங்களின் உற்சாகம் சென்னையோடு நிற்காமல் பெருவெள்ளமாய் நாடெங்கும் கரை புரண்டோடிற்று. இதன் எதிரொலி தூத்துக்குடியிலும் ஏற்பட்டது. எதையும் திருந்தச் செய்வதே பிள்ளையவர்களின் வழக்கமாதலால் அவர் பாலர் தினம், சுயராஜ்ய தினம் என்று கொண்டாட ஆரம்பித்தார். தூத்துக்குடியில் ஒவ்வொருவரும் அத்தினங்களைக் கொண்டாடினார்கள். வெள்ளையர்களிடம் வேலை செய்து வந்தவர்கள்கூட அவற்றில் ஈடுபடவே, வெள்ளையர் பாடு கஷ்டமாகிவிட்டது.

அந்நிய ஆட்சியினால் விளையும் தீமைகளைப் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி அவர்களைத் தேசாபிமானிகளாகச் செய்யும் நோக்கத்துடன் வ.உ.சி.யின் முயற்சியால் 1908-ம் ஆண்டில் திருநெல்வேலியில் தேசபிமான சங்கம் ஒன்று நிறுவப்பெற்றது. இச்சங்கத்தார் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் கூட்டி சுதேசிப்பற்று, அந்நிய சாமான் விலக்கு, தேசியக் கல்வி ஆகியவற்றின் அவசியத்தை விளக்கிப் பிரசாரம் செய்து வந்தனர். சங்கம் வளர்பிறைபோல் நாளுக்கு நாள் வளர்வதாயிற்று.

அஞ்சா நெஞ்சமும் நினைத்த மாத்திரத்திலேயே எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் சுப்ரமண்ய சிவாவிடம் நிரம்பி இருந்தது. சிவா தூத்துக்குடிக்கும் வந்து பல பொதுக்கூட்டங்களில் பேசினார். சிதம்பரனாரும் சிவாவும் பிரியா நட்புக் கொண்டனர். சிதம்பரனார் பேச்சு சூறைக்காற்றுபோல் சுழன்றடிக்கும். சிவாவின் பேச்சில் நெருப்புப் பொறி பறக்கும். மக்களின் மனத்தில் நாட்டுப்பற்று நன்கு சுடர்விடலாயிற்று.

இதனால் தூத்துக்குடி துரையவர்கள் சென்னை சர்க்காருக்கு "சிதம்பரம் பிள்ளையை எப்படியாவது கைது செய்தாலன்றி தமக்கு உய்யும் வழியில்லை" என்று எழுதினார்.

தேசிய மகாநாட்டு காரியதரிசிகளையும் அவர்களது சகாக்களையும் கவர்மென்டார் கவனமாக கண்காணிக்கத் தொடங்கினர். பம்பாய் மாகாணத்தில் திலகர் மீதும், வங்காள மாகாணத்தில் அரவிந்தர் முதலியோர் மீதும், சென்னை மாகாணத்தில் வ.உ.சி. வகையார்கள் மீதும் ராஜதுரோகக் கேஸ்கள் போடப்பட்டன.

பிரிட்டிஷார் 1908-ம் ஆண்டு மார்ச் 12-ம் நாளன்று சிதம்பரம் பிள்ளையையும் சுப்ரமண்ய சிவாவையும் கைது செய்து வழக்குத் தொடங்கினார்கள்.

இந்த வழக்கு விசாரணை விவரங்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளேயன்றி இந்தியாவிலுள்ள பத்திரிகைகளும் விரிவாகப் பிரசுரித்தன. கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "யுகாந்தரம்" என்ற வங்காளிப் பத்திரிகை, விசேஷ பக்கங்களில் கோர்ட்டு நடவடிக்கைகளைப் பிரசுரித்து வந்தது.

நீதிபதி பின்ஹே தீர்ப்பு: வ.உ.சி.க்கு அரச நிந்தனைக் குற்றத்துக்காக இருபது வருடத் தீவாந்தர தண்டனையும், உடந்தையாக இருந்த குற்றத்துக்காக சிவாவுக்கு இருபது வருடத் தீவாந்தர தண்டனையும் விதித்து இரண்டு தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக (நாற்பது வருடம்) அனுபவிக்க வேண்டும். சிவாவுக்கு அரச நிந்தனைக் குற்றத்துக்காக பத்து வருடத் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி பின்ஹே தனது தீர்ப்பில் "பிள்ளை பெரிய ராஜதுரோகி"; அவரது எலும்புக்கூடுகூட ராஜ விசுவாசத்துக்கு விரோதமானது" என்று எழுதினார்.

வ.உ.சி.யின் நாட்டுப்பற்றையும் செயல் திறமையையும் நீதிபதி பின்ஹே தீர்ப்பிலிருந்து நாம் அறியலாம்.

வ.உ.சி. தண்டனை அடைந்த அதே காலத்தில், அவரது அரசியல் குரு லோகமான்ய பால கங்காதர திலகர் தமது "கேசரி" என்னும் பத்திரிகையில் அரசாங்க விரோதமான கட்டுரை எழுதியதற்காக ஆறு ஆண்டு தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டார். குருவும் சீடரும் ஒரே சமயத்தில் சிறை புகுந்தனர்.

தமிழ்நாட்டின் தனிப்பெருந் தலைவரான வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட கொடுந்தண்டனையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் மற்றும் வெள்ளையர் பத்திரிகைகளும் கடுமையாகத் தாக்கி தலையங்கங்கள் எழுதின. வ.உ.சி. கோவை சிறையில் செக்கிழுத்தார். சிறைக் கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். பின் கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

திருநெல்வேலி கலெக்டர் ஆஷை அவர் சப்-கலெக்டராக இருந்தபோது செய்த கொடுமைகளுக்காகவும் கப்பல் கம்பெனி மூடவும் வ.உ.சி. சிறைப்பட காரணமாக இருந்ததற்காகவும் வாஞ்சிநாதன் என்ற "அபிநவ பாரத சங்க"த்தைச் சேர்ந்த வீர இளைஞர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.

வ.உ.சி. சிறையில் இருக்கும்போது நடந்த இந்நிகழ்ச்சி குறித்து சிறையில் இருந்த வ.உ.சி. தனது நண்பர் சி. விஜயராகவாச்சாரியாருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார். "நான் சிறைப்பட்ட பின்னும் என்னைப் பின்பற்றி சுதேசிக் கிளர்ச்சியை அறவழியில் நடத்தி வரும் அன்பர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், எனது கோட்பாட்டுக்கு மாறாக கொலைச் செயல்கள் நடைபெறுவதற்கு வருந்துகிறேன். நாம் போராடுவது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தே ஆகும். ஆங்கில அதிகாரிகளைக் கொலை செய்வதால் அந்நிய ஆட்சி அழிந்துவிடாது".

வ.உ.சி., 1912-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை அடைந்தார்.

1917 பிற்பகுதியில், "சென்னை மாகாண சங்கம்" என்கிற அமைப்பு உருவானது. இதன் கொள்கை "காங்கிரஸ் நோக்கத்துக்கு முரண்படாமல் தென்னாட்டுப் பிராமணரல்லாதவர் நலனை நாடுவது" என்று எழுதியிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.. இச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு 1919 அக்டோபரில் ஈரோட்டில் நடைபெற்றது. இதற்கு வ.உ.சி. சென்றுள்ளார். அப்போதிருந்து வ.உ.சி., திரு.வி.க. முதலியோர் சிநேகிதர்கள் ஆனார்கள் என்று பெரியார் எழுதியுள்ளார்.

பஞ்சாபில் ராணுவத் தளபதியாக இருந்த டயர், 1918-ல் ப்ரிட்டிஷ் நாடாளுமன்ற ராஜாங்க செயலாளருக்கு அனுப்பிய செய்தி: "தென்னிந்திய பிராமணர்களை இனிமேல் நம்ப முடியாது. திருநெல்வேலிப் பிள்ளைமார்களையும் நம்ப முடியாது. ஆகவே அவர்கள் நெருக்கமாக இருப்பதைத் தடுக்க ஏதாவது செய்யப்பட வேண்டும். நிதானமும், சாத்வீகமும், அமைதியும் நிறைந்த சென்னை மாநிலம், அரசாங்கத்துக்கு எவ்வித தீங்கும் நினைக்காத மிதவாதிகளிடமிருந்து பறிபோகக்கூடாது".

1919-ம் ஆண்டு "மெட்ராஸ் நேஷனலிஸ்டு அசோசியேஷன்" என்ற அமைப்பு ஒன்றை ராஜாஜி துவக்கினார். அந்த அமைப்புக்கு சி.விஜயராகவாச்சாரியாரை தலைவராக பிரேரேபித்து, அதை மக்கள் ஒப்புக்கொண்டவுடன், சி. கஸ்தூரிரங்க ஐயங்காரை உப தலைவராக ராஜாஜி பிரேரேபித்தார். உடனே பெரியார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரையும் பிரேரேபித்து, இரண்டு உப தலைவர் இருக்க வேண்டும் என்று கூறினார். தண்டபாணி பிள்ளை இதை ஆமோதித்தார். கஸ்தூரிரங்க ஐயங்கருக்கு இது பிடிக்கவில்லை. ராஜாஜி ஒரே உப தலைவர் போதும் என்றார். பெரியாரின் விடாப்பிடியான வற்புறுத்தலின் பேரில், வ.உ.சி. மற்றொரு உப தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

1919-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மாநாடு அமிர்தசரசில் கூடியது. பஞ்சாப் படுகொலைக்கு சவாலாக நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள வ.உ.சி.க்குப் பணமில்லை. அப்போது தண்டபாணிப் பிள்ளை தம்மிடம் பெரியார் தமக்கு முதல் வகுப்பு ரயில் டிக்கெட் வாங்கக் கொடுத்த பணத்தில் இரண்டு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கி, வ.உ.சி. காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள உதவினார். ரயில் பூனா சென்றடைந்தபோது, ஒரு பெருங்கூட்டம் மாலை மரியாதைகளுடன் வரவேற்றது. முதல், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்த தலைவர்கள் தங்களுக்குதான் மாலை, மரியாதை என்று தலையை வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்போது, திலகர் நண்பரான சிதம்பரம் பிள்ளை எங்கே என்று தேடி மூன்றாம் வகுப்பில் இருந்த வ.உ.சி.க்கு மாலையிட்டு வணங்கித் தின்பண்டங்கள் தந்து வாழ்த்திச் சென்றது. இதையறிந்த முதல் வகுப்பு பிரயாணிகளுள் ஒருவர், தனது பிரயாணச் சீட்டை வ.உ.சி.க்குக் கொடுத்து முதல் வகுப்பில் பிரயாணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ரயில் பஞ்சாப் செல்லும் வரையிலும் உபசரிப்பு தொடர்ந்தது. வட இந்தியாவில் பேரும் புகழும் பெற்ற முதல் தமிழகத் தலைவர் வ.உ.சி. ஆவார். தமிழக காங்கிரஸ் தலைமை தராத மதிப்பையும் மரியாதையையும் வேறு மாகாணத்தவர்கள் தந்தார்கள்.

1920, ஆகஸ்ட் 1 அன்று, பால கங்காதர திலகர் மறைந்தார். ஆகஸ்ட் 4 அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய வ.உ.சி., "திலகர் ஒத்துழையாமை இயக்கம் மூலம் சுயாட்சி பெற விரும்பவில்லை. தம் கைவசம் உள்ள ஒவ்வொரு சட்ட சம்பந்தமான ஆயுதத்தையும் பயன்படுத்த விரும்பினார்" என்றார். கல்கத்தாவில் 1920 செப்டம்பர் முதல் வாரம் நடைபெற்ற காங்கிரசின் சிறப்பு மாநாட்டுக்கு சென்றார். தமிழகத்தை பொறுத்தவரை ஒத்துழையாமைத் திட்ட எதிர்ப்பாளர்களில் வ.உ.சி. முன்னணியில் இருந்தார்.

இந்த மாநாட்டுக்குச் சென்றுவந்த பிறகு காங்கிரசிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். மிதவாதத்தினால் சுதந்திரம் பெற முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

சிதம்பரனார் கப்பல் வாணிபத்தோடு நில்லாமல், கைத்தொழில்-விவசாய வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார். 1921-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் நாளன்று, சென்னை விவசாய கைத்தொழில் சங்கம் லிமிடட் ஒன்றை சென்னை நகரில் துவக்கிவைத்தார். தொழில் துறையில் அனுபவமுள்ள பலர் அவருக்குத் துணைபுரிந்தனர்.

மற்றும் தரும சங்க நெசவு சாலை, தேசியப் பண்டக சாலை என்ற இரண்டு துணை ஸ்தாபனங்களையும் தூத்துக்குடியில் தோற்றுவித்தார். இந்த ஸ்தாபனங்களுக்கு மக்களிடையே ஆதரவு தேட சுதேசி பிரசார சபை ஒன்றையும் தமிழகத்தின் தலைநகராகிய சென்னையில் நிறுவினார். திரு. வி. சர்க்கரைச் செட்டியார் இச்சபையின் தலைவராக இருந்து சுதேசிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்தார்.

1921-ல் கோயம்புத்தூரில் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்களின் எழுச்சியை ஆதரித்து வ.உ.சி. ஆற்றிய உரைக்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால் சொந்த ஜாமீன் கொடுக்க வேண்டியதாயிற்று. காங்கிரசிலிருந்து வ.உ.சி. விலகியிருந்தாலும், ஆங்கில ஏகாதிபத்திய போரிலிருந்து அவர் விலகவில்லை என்பது தெளிவாகிறது.

1924-ல் மீண்டும் வக்கீலாக கோவில்பட்டியில் பணிபுரிந்தார். சத்தியாகிரகிகளுக்காக ஒரு வக்கீல் என்ற முறையில், நீதிமன்றத்தில் வலுவாக வாதாடினார். காங்கிரஸ்காரர்களின் வழக்கை அக்கறையோடு நடத்தியது மட்டுமல்லாமல், அவை தொடர்பாக வந்திருந்த காமராஜர் உள்ளிட்டவர்களுக்கு வீட்டில் உணவும் வழங்கியிருக்கிறார்.

1927-ம் ஆண்டு சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மகாநாட்டில் தலைமை வகித்தார். காங்கிரஸ் "ஒத்துழையாமை" போன்ற செயல்பாடுகளை கைவிட்டுவிட்ட நிலையில், சேலம் ஜில்லா மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார். அது ஓர் அருமையான கருத்துப் பேழை.

"பசியாலும் அரைவயிற்று கஞ்சியுடனும் வருந்துகின்றவர்களுக்கு அரசாங்கம் செய்யத்தக்கவை இரண்டு. தரிசு நிலங்களை விரைவில் விவசாயத்துக்கு கொண்டுவருவதற்காக ஆங்காங்கே அரசாங்க விவசாயப் பண்ணைகள் ஏற்படுத்தி, வேலையில்லாமல் திண்டாடும் ஜனங்களைக் கொண்டு விவசாயம் செய்வித்து அவர்களுக்கு கூலி கொடுத்தல் ஒன்று; தேசத்தில் எந்தெந்த இடத்தில் எந்தெந்த தொழில் செய்ய வாய்ப்புள்ளதோ அங்கே அரசாங்க தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலையில்லாமல் திண்டாடும் ஜனங்களைக் கொண்டு தொழில் செய்வித்து அவர்களுக்கு கூலி கொடுத்தல் மற்றொன்று" என்று பேசியுள்ளார். அன்றே சகல மனிதர்களின் வறுமையை ஒழிக்க வழி சொன்னார் வ.உ.சி.

இந்த மாநாட்டுக்குப் பிறகு என்ன காரணத்தாலோ அவர் காங்கிரசுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாமலே இருந்துவிட்டார். வ.உ.சி., காங்கிரசை விட்டு விலகிய பின்னரும், திலகர் காட்டிய பாதையிலிருந்து விலகவில்லை. இறுதிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவே இருந்தார்.

மு.சி. வீரபாகு, "அக்காலத்தில் வ.உ.சி.யை பார்க்கப் போகும்போதெல்லாம் 'தம்பி யுத்தம் வருமா? நமக்கு சுயராஜ்ஜியம் எப்போது?' என்று படுத்த படுக்கையில் இருந்துகொண்டு ஆவலுடன் வினவுவார். ‘உலக மகாயுத்தம் வந்து இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டால்தான் நாட்டுக்கு விடுதலை சித்திக்கும்’ என்று உறுதியாக அவர் நம்பினார் என்கிறார். எவ்வளவு தீர்க்க தரிசனம்! 1939-ல் யுத்தம் வந்து 1945-ல் இங்கிலாந்து வெற்றிபெற்றாலும், மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு உலக மகாயுத்தம் ஒரு காரணம். இதைத்தான் வ.உ.சி. எதிர்பார்த்திருந்தார்.

மு.சி. வீரபாகு தொடர்கிறார், "அவரது உடல்நிலை மோசம் என்று கேள்விப்பட்டு பார்க்கச் சென்றேன். 'நான் இனிப் பிழைக்கப் போவதில்லை. எனது கடைசி நாட்களை காங்கிரஸ் காரியாலயத்தில் கழிக்க விரும்புகிறேன்' என்று கேட்டுக்கொண்டார். நான் சும்மா இருந்துவிட்டேன். ஆனால், அவர்களோ மற்றவர்களை அழைத்துக்கொண்டு காங்கிரஸ் காரியாலயத்திற்கே போய்ச் சேர்ந்துவிட்டார்கள்".

17.11.1936, "தினமணி" செய்தி - "தூத்துக்குடி தேசபக்தர் ஸ்ரீ வ.உ. சிதம்பரம் பிள்ளை தேக நிலை வரவர மோசமாகிக்கொண்டே வருகிறது. சென்ற 4 தினங்களுக்கு முன் பாரதியாரின் சுதந்திர உணர்ச்சி ததும்பிய கீதங்களைக் கேட்கப் பிரியப்படுவதாகக் கூறினார்’’.

வ.உ.சி.யின் இறுதி யாத்திரை பற்றி (21.11.36) சுதேசமித்திரன் செய்தி - "அரிய தேசபக்தர் ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை தமது இல்லத்தில் காலமானார். ஸ்ரீமான் பிள்ளையின் பிரேதம் பல நூற்றுக்கணக்கான காங்கிரஸ்வாதிகளும் அபிமானிகளும் மௌனமாகச் சூழ்ந்துவர தேசிய பஜனையுடன் இடுகாட்டுக்குக் கொண்டு போகப்பட்டது".

இதிலிருந்து, உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் வ.உ.சி.யைத் தங்களின் தலைவராகவே கருதியிருந்தார்கள் என்பது புரிகிறது. ஆனால், காங்கிரசின் தலைவர்கள் எவரும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.

பெரியாரின் "குடி அரசு" ஏட்டில், தேச பக்தர் வ.உ.சி.யின் மறைவு பற்றி இரண்டு செய்திகள் வந்தன. நவம்பர் 22 இதழில் வந்த செய்தி -  "தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல், மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை வரியில் முதன்மை இலக்கத்தில் இருந்தவர் நமது சிதம்பரம் ஆவார்”. நவம்பர் 29 இதழில், வ.உ.சி. மறைவு விஷயத்தில் தமிழகப் பத்திரிக்கைகள் நடந்துகொண்ட விதத்தை இடித்துக் காட்டியது. இதே கருத்தையே ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற நூலில் வேறு பதமான வார்த்தைகளில் கூறியுள்ளார்- "செயற்கரிய செய்த அப்பெருந்தலைவர் (வ.உ.சி.) மறைந்தபோது தமிழகப் பத்திரிகைகள் ஒன்றுகூட அனுதாபத் தலையங்கம் எழுதவில்லை. தமிழ்நாடு காங்கிரசின் பேரால் ராஜ்யத்தின் தலைநகரிலே ஒரு அனுதாபக் கூட்டம்கூட நடத்தப்படவில்லை".

1939-ல், வ.உ.சி.க்கு சிலை வைக்க ம.பொ.சி. பட்ட பாட்டை அவரது நூல் மூலம் அறிகிறோம். "நான் முன் மொழிந்த வ.உ.சி. சிலை நிறுவ ஆதரவு தரும் தீர்மானம் (சென்னை) ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றாலும், அக்கமிட்டியின் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார்" என்கிறார் ம.பொ.சி.. அவரே நிதி திரட்டி முழு உருவச் சிலைக்குப் பணம் சேராததால், முக உருவத்தை மட்டும் சிலையாகச் செய்தார். அதன் திறப்பு விழாவுக்கும் முட்டுக்கட்டைகள் போட்டார் சத்தியமூர்த்தி. ம.பொ.சி. கூறுகிறார், "அப்போது அவர் (சத்தியமூர்த்தி) என் மீது காட்டிய ஆத்திரத்தையோ என் மீது பொழிந்த பழிச்சொற்களையோ நான் இங்கு விளக்க விரும்பவில்லை. என்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரனாகவே முடிவு செய்துகொண்டு, வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சி.க்குக் காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று பழி சுமத்தினார்”.

மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியை இடஒதுக்கீடு கேட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக நீதிக் கட்சிக்காரர்கள் பட்டியலில் சேர்த்தார் சத்தியமூர்த்தி. அந்தப் பழியை நிலை நிறுத்தவும் அவரால் முடியவில்லை. முடிவில், ராயப்பேட்டை காங்கிரஸ் மாளிகையில் வ.உ.சி.யின் சிலை திறக்கப்பட்டது. ஆனால், அதற்கான விழா பொம்மைக் கல்யாணம் போன்று நடத்தப்பெற்றது என்கிறார் ம.பொ.சி. "ஒரு மணி நேரத்தில் விழா முடிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தலைவர்கள் எல்லாம் கட்சி வேறுபாடின்றி அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். தமிழ்ப் பெரியார் திரு.வி. கல்யாண சுந்தரனார், அப்போது இந்து மகாசபையின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த டாக்டர். பி. வரதராஜுலு நாயுடு, கம்யூனிஸ்டான தோழர் எம். சிங்காரவேலு செட்டியார், தொழிற்சங்கத் தலைவர் திரு.வி. சக்கரைச் செட்டியார் ஆகிய முதுபெருந் தலைவர் நால்வரையும் நேரில் சந்தித்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். என் அழைப்புக்கு இணங்கி அவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால், விழாத் தலைவர் (சத்தியமூர்த்தி), அந்தப் பெருந்தலைவர்களுக்கு வ.உ.சி.யை வாயார வாழ்த்திப் பேச வாய்ப்பளிக்கவில்லை".

வ.உ.சி. சிலை திறப்பு விழாவில், தென்னாட்டின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் பங்குகொண்டார் என்பது ஒரு முக்கியமான செய்தி. அவ்வாறே தொழிற்சங்கத் தலைவர் திரு.வி. சக்கரைச் செட்டியார் பங்குகொண்டதும் தமிழகத்தின் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் வ.உ.சி.யைப் பெரிதும் மதித்தார்கள் என்பது உறுதியாகிறது. சத்தியமூர்த்தியைப்போல அவரை "ஜஸ்டிஸ் கட்சிக்காரர்" என்று மதிப்பிடவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் சமூகநீதிப் போராளியாகவும் ஒருங்கே திகழ்ந்தார் வ.உ.சி. என்கிற கணிப்பின் காரணமாகத்தான் இந்த விழாவில் பங்கேற்றிருக்க வேண்டும். அவர்களைப் பேசவிட்டிருந்தால் வ.உ.சி.யின் பெருமை இன்னும் துலக்கமாக அன்று வெளிப்பட்டிருக்கும் என்று “வ.உ.சி. கடைசிக் காலத்தில் தடம் மாறினாரா?” என்ற நூலில் அருணன் கூறுகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீத்தாராமையா (நேதாஜியுடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்) வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில், செளரிசாரா சத்தியாகிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்டோலி வரி கொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளன; ஆனால் சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட இல்லை; ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை என்று தான் எழுதிய "கப்பலோட்டிய தமிழன்" என்ற நூலின் முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சமயம், சிராவயல் ஜீவா ஆசிரமத்துக்கு வ.உ.சி. வருகை தந்தார். அங்கே பெண்களோடு ஆண்களும் ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு அவர் வெகுண்டார். "ஆண்களையும் நூற்கவைக்கும் இந்த ஸ்தாபனம் முட்டாள்தனமானது. வாளேந்த வேண்டிய கரங்கள் ராட்டை சுற்றுவது சகிக்க முடியாதது" என்று அவர் கோபமாகக் கூறினார்.

ஆங்கிலேயர் கம்பெனிக்கு எதிராக இந்தியக் கப்பல் கம்பெனி அமைத்தது, ஆங்கிலேய ஆலைத் தொழிலாளர்களைத் திரட்டியது ஆகியவற்றால் ஆத்திரமுற்ற ஆங்கிலேய அரசு அவரை கைது செய்தது. அவர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி தொழிலாளிகள் செய்த வேலை நிறுத்தமே இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் வேலை நிறுத்தம் ஆகும்.

இந்திய வரலாற்றில் அதுவரை இல்லாதபடி இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டது. சிறையில் செக்கிழுக்க வைத்துக் கொடுமைப்படுத்தினர். சிறைக்குள்ளும் தனது மற்றும் சக கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடினார். காங்கிரசின் "ஒத்துழையாமை" போன்ற செயல்பாடுகளை ஏற்க இயலாமல் காங்கிரசிலிருந்து விலகினார். ஆனால் சுதந்திரப் போராட்ட உணர்விலிருந்து ஒரு நாளும் விலகவில்லை. திலகரின் சீடராகவே கடைசி வரை விளங்கிய வ.உ.சி., இறுதிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவே இருந்தார். மேலும் தன் ஆயுள் வரை காங்கிரஸ்காரராகவே விளங்கினார்.

மரகத மீனாட்சி ராஜா (தொடர்புக்கு 9841789180)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com