ஆன்லைன் ஷாப்பிங்! எளிமைக்காகான ஆஃபர்கள்!

உங்களுக்கு தெரியுமா, பேஸ்ட்டை அளவாக பிதுக்கி பிரஷ்ஷில் போட்டுத் தர மிஷின் இருப்பது?
ஆன்லைன் ஷாப்பிங்! எளிமைக்காகான ஆஃபர்கள்!

உங்களுக்கு தெரியுமா, பேஸ்ட்டை அளவாக பிதுக்கி பிரஷ்ஷில் போட்டுத் தர மிஷின் இருப்பது? விரலை உள்ளே விட்டால் நகத்தை நறுக்கிவிடும் மிஷின்? தண்ணீர் பாட்டிலை சரிக்காமல் டம்ளரில் நிரப்பித்தரும் உபகரணம்? அட.. காது குடைந்து விடும் சாதனம்?  இதுக்கெல்லாம் எவனாவது மிஷின தேடுவானா என்கிறீர்களா? இப்படி நூற்றுக்கணக்கான சாமான்கள் இணையத்தில் விற்பனைக்கு இருக்கின்றன. உங்களை எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கும் போதை உள்ளவர்களாக (விக்கிப்பீடியா பாஷையில் 'ஓனியோமேனியா' ஆசாமி) மாற்றிவிட துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது இணைய வணிகம்.

அம்மா அப்பா தவிர்த்து தற்போது எதையும் இணையம் மூலம் வாங்கி விட முடிகிறது. இணைய வர்த்தகம் நாளுக்கு நாள் மாநகரத்தின் கார்பன் புகை போல் தப்பிக்க முடியாதளவு நம்மை சூழ்ந்துக் கொண்டாலும், எங்கே அதற்கான 'லட்சுமணன் கோடு' வரைவது என்பது இன்னமும் கூட நம் கையில் தான் இருக்கிறது.  

ஆன்லைனில் சாமான்கள் வாங்குவதில் உள்ள மிகப்பெரிய சவால், சமயத்தில் இணையத்தில் பார்த்ததற்கும் கையில் இருப்பதற்குமான ஆறிலிருந்து அறுபது வித்தியாசங்கள் தான். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையெல்லாம் ஓல்ட் ஃபாஷன். பிள்ளையார் ஆர்டர் செய்து குரங்கு டெலிவர் ஆவது தான் இப்பொழுது சரியாக வரும். 

என் தோழிக்கு சகலமும் இணையம் தான். லெங்கிங்ஸ் ஆர்டர் செய்வாள். சாக்ஸ் சைஸில் வந்து சேரும். சரி, எப்போதாவது ஒல்லியானால் போட்டுக்கொள்ளலாம் என்று எடுத்து வைத்துக்கொள்வாள். படுக்கை விரிப்பு கேட்டால் போர்வை வரும். 'இருக்கட்டும், உறவினர் வந்தால் தேவைப்படும்'. கணிணி திரை பேபி பின்க்'காக காட்டிய புடவை கைக்கு வரும்போது மிட்டாய் ரோஸாக மாறியிருக்கும். 'அதனாலென்ன, எனக்கு தான் மிட்டாய் பிடிக்குமே'. இவற்றை கன சிரத்தையாக மாற்ற அல்லது பணத்தை திரும்ப பெற நிறைய பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் இணைய வர்த்தம் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது.

நண்பன் ஒருவன் இருபத்தி நான்கு கடிகாரம் வைத்திருக்கிறான். என்ன லாஜிக்கோ?!  நல்லவேளையாக ஆன்லைனில் காலண்டர் வாங்குவதில்லை. அவனோடு தெருவில் இறங்கினால், 'என்னண்ணே.. இந்த வாரம் எதுவும் வாங்கலையா?' என்று கூரியர் பையன்கள் எப்படியோ சிரிக்காமல் கேட்கிறார்கள்.  ஷாப்பிங் செய்ய இடைஞ்சலாக இருப்பதால் காதலை முறித்துக் கொண்டதாக, வாழ்கைத் துணை விவாகரத்து வரை போனதாக தென்படும் இளைஞர்களின் வலைத்தள பதிவுகள் திகிலூட்டுகின்றன.

மிகப் பெரிய இணைய நிறுவனத்தின் 'பிக் பில்லியன் டே' மஹாத்மா பிறந்த நாளில் வருகிறது. 'இந்த பூமியால் அனைவர் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும் ஆனால் பேராசைகளை அல்ல' என்றாரே, அதே மஹாத்மா தான். ஏதோ அவர் பிறந்த நாளுக்கு விடுமுறை கிடைப்பதால், ரூபாய் நோட்டில் தென்படுவதால் பெயர் அளவிலாவது தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்கு மேல் அவர் சொல்லிச் சென்றதெல்லாம்  யாருக்கு தெரியும். காந்தி பொன்மொழிகள் போட்ட டீஷர்ட் ஆன்லைனில் கிடைக்கிறதா பார்க்கலாம்.

நீங்கள் யார், ஆணா, பெண்ணா, சராசரியாக இணையத்தில் எத்தனை நேரம் செலவிடுகிறீர்கள், எது மாதிரியான பொருட்கள் உங்களை ஈர்க்கின்றன, சமூக வலைத்ததளங்களில் என்ன பகிர்கிறீர்கள், எதை விரும்பிகிறீர்கள் என பலதும் AdSense, Browser Cookies  போன்ற டெக்னிகல் சமாச்சாரங்களின் துணையோடு கண்காணிக்க படுகிறது. பெற்றவளையும்  விட மேலாக உங்களைப் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, இணையத்தில் நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களுக்கு பிரியமான பொருட்களாக கடைபரப்பப்படுகிறது.

கீதை சொல்லும் ஐம்புலன்களினால் வரும் வாசனைகளில் (ஆசைகள்) இது என்ன வகையோ. எனினும் இதை கடப்பதும் கடினமாகவே இருக்கிறது. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவரி, கேஷ் பேக் என பல கட்டுக்கள் நம் காலை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கின்றன. இனி கடவுள் அவதரித்தால், விழாக்கால தள்ளுபடியில் தடுக்கி விழாமல் கடப்பதே வாழ்வின் அடுத்த படியாக உபதேசித்திருப்பார்.

உங்களுக்கு தினசரி வரும் மின்னஞ்சலில் ‘ஆஃபர்’ மெயில்களே பிரதானமாய் இருக்கிறதென்றால், ஏற்கனவே வீட்டில் இருக்கிற பொருட்களையே மறந்து திரும்ப வாங்குகிறீர்கள் என்றால், கூரியர் கொண்டுவரும் பையன்கள் உங்களை வெளியிடத்தில் பார்த்தால் கூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்றால், நண்பர்கள், உறவுகளோடு செலவிடும் நேரத்தை ஷாப்பிங்கிற்க்கு இடைஞ்சல் என்று நினைப்பீர்களேயானால், எப்போதும் உங்கள் கணிணியில் ஒரு திரை விற்பனை தளத்திற்காக திறந்திருக்கும் என்றால்,ஷாப்பிங் செய்யாவிட்டால் மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால், எதுவும் வாங்காவிட்டாலும் சதா ஆன்லைன் ஷாப்பிங் பற்றின சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால், மென்மையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு வந்திருப்பது அடிக்‌ஷன்! பூசி மெழுகாமல் சொல்வதானால், ‘முத்திடுச்சி’

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் வந்தமர்ந்து, சரி இந்த ஆன்லைன் ஷாப்பிங் போதையை விட்டொழிப்போம் என தோன்ற வைத்தால், கடைப்பிடிக்க சுலபமான பல வழிகள் இருக்கின்றன. கைபேசி என்றால் எல்லா வர்த்தக ஆப்(app) களை அடியோடு தூக்கிவிடுவது, விளம்பர மின்னஞ்சல்களை unsubscribe செய்வது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை புது கோலம் போல பாவித்து, 'லபக்' என்று தாண்டிவிடுவது மற்றும் சிறிது நாட்களுக்கு எது வாங்குவதாகினும் முன்கூட்டியே பட்டியலிட்டு கடைக்கு நேரில் சென்று வாங்குவது. (பொதுவாக கண்டதையும் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள் பெரு வர்த்தக கடைகளை விட சிறிய கடைகளையே நாடுவது நலம்)

இணைய வணிகமே தேவையில்லை என்று சொல்ல வரவில்லை, அப்படி சொல்வதும் அபத்தம். 'பிராண்டட்' பொருட்களை நேரடியாக வாங்குவதால் போலிகளைத் தவிர்க்க முடிகிறது. நல்ல சலுகைகளும் கிடைக்கின்றன. நம்மிடம் இருக்கும் பொருட்களை மறுவிற்பனை செய்ய, ஏலத்தில் விட இணையம் சுலபமான வழி. ஆனால், அதன் மூலம் மி்ச்சமாகும் பணத்தை தண்டமாக வேறு ஒன்று வாங்குவதால் விட்டுவிடுவது தான் இளைய சமுதாயத்தின் பிரச்சனை. சமீபத்தில் சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் சில இளைஞர்கள் கைதானார்கள். அதில் ஒருவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். அச்சம்பவத்தை பற்றி சமூக ஆர்வலர் ஒருவர், ‘குப்பத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் மாநகரத்தின் ஆடம்பரத்தை காண்கிறார்கள். அந்த வாழ்க்கை அவர்களை ஈர்க்கிறது. அப்படி அவர்களுக்கு வாழ வழியில்லாத போது, அது ஆற்றாமையாக மாறி குற்றச்செயல்களில் ஈடுபடவைக்கிறது' என்று பேட்டியளித்திருந்தார்.

ஆடம்பரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சமூக சீர்கேடுகளை விதைத்துக் கொண்டே தான் இருக்கிறது. நமக்கு முந்தையய தலைமுறை வரை, பொருட்களை வாங்குவதற்கு முன், இது இல்லாமல் சமாளிக்க முடியுமா என்று யோசித்தார்கள். நாமோ வாங்கிய பின் அதற்கான பயன்பாட்டை யோசிக்கின்றோம். நம் ஆடைகளினால் அலமாரி நிரம்பி வழியும் போது, தேவைக்கு மீறினதை பகிர்ந்தளிக்கலாம், ஆடைகள் வாங்குவதை நிறுத்தலாம் அல்லது புதிய அலமாரி வாங்கலாம். மூன்றில் எது நம் விருப்பம் என்பதை தீர்மானிக்கும் உரிமை வணிகர்களிடம் இல்லை.

'இன்றைய தேதியின் உலகின் சிறந்த கைபேசி' என்ற ஒன்றை வாங்கினால், அந்த 'சிறந்த' பட்டம் அடுத்த சில வருடங்களில் அதே நிறுவனத்தின் அடுத்த கைபேசி வரவால் பறிக்கப்படுகிறது. சில சமயத்தில் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் நம் கைபேசி மாடல் பழையதாகிவிடுகிறது. உங்கள் 'பழைய' மொபைலை நாங்களே நல்ல விலைக்கு எக்ஸ்சேன்ஜ் செய்துக் கொள்கிறோம். இதோ இதுவே இன்றைய தேதியின் சிறந்த கைப்பேசி என்கிறார்கள். மீண்டும் ஒரு பதற்றமான க்யூ வரிசையில் நம்மை இணைத்துக்கொள்கிறோம்.

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் Minimalist Living என்னும் மிக குறைவான பொருட்களை கொண்டு வாழும் எளிய வாழ்க்கை முறைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 'தன்னிறைவு' மனம் சார்ந்த  விஷயம் என்பது புரிபடாதவரை யார் வேண்டுமானாலும் நம்மை அடிமைப்படுத்தலாம். ஆயினும் ஆடம்பரங்கள் ஒருகட்டத்தில் மனச்சோர்வை தந்து, தீர்வை யோசிக்க வைக்கும். அந்த தீர்வு, எளிமையான வாழ்வு தான் என்பதில் சந்தேகமேயில்லை.

- விக்னா சுரேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com