கேட்டதைக் கொடுப்பவன் ஸ்ரீ கிருஷ்ணன்! துவாரகாதீசன்! 

கேட்டதைக் கொடுப்பவனும் , கீதையின் நாயகனுமான ஸ்ரீ கிருஷ்ணன், ஆட்சி செய்து
 கேட்டதைக் கொடுப்பவன் ஸ்ரீ கிருஷ்ணன்! துவாரகாதீசன்! 

கேட்டதைக் கொடுப்பவனும் , கீதையின் நாயகனுமான ஸ்ரீ கிருஷ்ணன், ஆட்சி செய்து வந்த இடம்தான், ஏழு மோட்சபுரிகளில் ஒன்றான துவாரகை  என்னும் க்ஷேத்திரம் .

தன்னுடைய  பனிரெண்டாவது வயதிற்குள் , ஸ்ரீ கிருஷ்ணர், தன் மாமாவான கம்சனை வதம் செய்தார். அதனால் கோபமுற்ற கம்சனின் மாமனாரான ஜராசந்தன், ஸ்ரீ கிருஷ்ணரின் மேல் பதினேழு   முறை போர் தொடுத்தான்.

ஜராசந்தனிடம் இருந்து யாதவ குலத்தினையும், தன்னை அடைக்கலமாக அண்டி வந்தவர்களையும் காக்க,  ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணம் கொண்டார். அதனால்,  ‘குசஸ்தலம் "என்னும்  ஒரு நிலப்பகுதியை , ஸ்ரீ பலராமர் [ அவருடைய  மாமனார் கொடுத்தது ] கொடுத்தார்.அந்த நிலப்பகுதி போதுமானதாக இல்லாததால்,  சமுத்திர  ராஜன் , தன்னுடைய நீர்ப்பகுதியைக் கொஞ்சம் கொடுத்தார்.

அவற்றைக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர், தன்னுடைய தலை நகரத்தையும், தன்னுடைய மாளிகையையும் அமைத்துக் கொண்டார்.

ஜராசந்தனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் என்ன சம்பந்தம்? ஜராசந்தன் ஏன் பகவானுடன் போர் புரிய வேண்டும்? 

அதற்கு ஒரு பின்னணி இருக்குமல்லவா?

வடமதுரையின் அரசன் உக்கிரசேனனின் மகளான தேவகியை ஸ்ரீ வசுதேவர்  மணந்ததும், தேவகியின் சகோதரனான கம்சன் , புது மணத்தம்பதிகளை தேரில் கூட்டிச்செல்லும் பொழுது, தேவகியின் எட்டாவது குழந்தையினால் தான், கம்சனின் மரணம் நிகழும் என்று அசரீரி ஒலித்ததும், அதனால்,  வாசுதேவரையும் , தேவகியையும் சிறையில் கம்சன் அடைத்ததும் எல்லோருமே அறிந்த தகவல்தான்.

தேவகியின் எட்டாவது , பாலகன் தான் கோகுலத்தில் வளரும் கண்ணன் என்பதை அறிந்த கம்சன், ஸ்ரீ கிருஷ்ணரை அழிக்க, பல அரக்கர்,அரக்கியரை ஏவியதும், பல்வேறு தந்திரங்களை கடைப்பிடித்து, தோல்வியைத் தழுவியதும் கூட எல்லோரும் அறிந்த கதைதான். 

கடைசியில், ஸ்ரீ கிருஷ்ண பகவான், தன்னுடைய சக்ராயுதத்தால், கம்சனை வதம் செய்து, சிறையில் இருந்த தன்னுடைய தாய், தந்தை மற்றும் தன்னுடைய பாட்டனார்  ஆன உக்கிரசேனனையும் விடுவித்தார்.

இந்த இடத்தில் தான் ஜராசந்தனைப் பற்றிய  தகவலை அறிந்து கொள்ள வேண்டும்.

மகத நாட்டினை, பிருகத்ரதன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அவனுக்கு இரண்டு மனைவிகள்  இருந்தும் ,குழந்தை பாக்கியம் மட்டும்  இல்லாமல் இருந்தது.

மன்னன் உபாயம் தேடி அலைந்தான்.

சந்திர கௌசிகர் என்கிற முனிவர், மன்னனின் துயர் தீர்க்க ஒரு மாங்கனியைக் கொடுத்து, மனைவியிடம் கொடுக்கச் சொன்னார்.

மன்னனானவன், அக்கனியை இரண்டாக்கி இரு மனைவியரிடமும் கொடுத்தான்.

இருவருமே கருவுற்றனர். ஆனால் பிரசவத்தில் ஒவ்வொரு அரசிக்கும், பாதி குழந்தைதான் பிறந்தது.

தன்  செயலால் மனம் உடைந்த மன்னன், இரு பாதிகளையும் வெளியே வீசி எறிந்தான்.

அப்பொழுது நர மாமிச   பட்சிணியான , ‘ஜரா ‘என்னும் அரக்கி , மனித வாடையை நுகர்ந்து, அந்த சதைப் பிண்டங்களை உட்கொள்ளும் பொருட்டு அவ்விடம் வந்தாள் . அவளுக்கு அவை மன்னரின் வாரிசாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டது.  அதனால்,அப்பிண்டங்களை கையில் எடுத்தாள்  .

இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்தாள் . ஒன்றாகச் சேர்ந்த பாதி உடல்கள், ஒன்றாகி,  உயிர் பெற்றன.

உயிர் பெற்ற குழந்தையை , மன்னனிடம் கொண்டு சேர்த்தாள் , அவ்வரக்கி.

மிகுந்த சந்தோஷத்துடன் அக்குழந்தையை பெற்றுக்கொண்ட , மன்னன், அக்குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான். [ அரக்கியால் சேர்க்கப் பட்டதால் அப்பெயர்  ]

தனக்கு வாரிசு பிறந்தால், தன்னுடைய புத்திரனுக்கு, எந்தவித ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது என்றும், பிறந்தது போலவே இரடாகக் கிழிக்கப் பட்டுதான் முடிவு வரவேண்டும் என்றும்   வரங்களை  பெற்றிருந்தான்., மகத மன்னன்.,

பின்னாட்களில்,

ஜராசந்தனுக்கு, அஸ்தி,பிராப்தி என்னும் பெயர் கொண்ட இரு மகள்கள் இருந்தனர். அவர்களை , கம்சனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான், ஜராசந்தன்.

ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனை வதம் செய்ததால், தன்னுடைய புத்திரிகள் இருவரும் விதவை ஆகிவிட்டார்கள் என்கிற எண்ணம் ஜராசந்தனை வாட்டி வதைத்தது.

அதனால், பகவானின் மேல் அதீதமான காழ்ப்புணர்ச்சி உண்டானது.  ஸ்ரீ கிருஷ்ணரை  வெறியுடன் பதினேழு முறை படையெடுத்து,வந்தான்.

தன்னுடைய பதினோராவது வயதிலேயே கம்சனை வதம் செய்த பகவானுக்கு ஜராசந்தனை அழிக்க முடியாதா என்ன?

ஜராசந்தனின் விதி, பீமன் மூலமாகத்தான் முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது, கண்ணன் எங்கனம் வதைப்பார்? அதனால் தான் பீமன் நேரிடையாக ஜராசந்தனிடம் மோதாத பதினேழு முறையும், தான் விலகி நின்றார் அனாவசியமாக .போரில் மடியும்   தன்னுடைய யாதவ குல மக்களை காக்கும்  எண்ணத்தில் தான் , ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகை வந்து சேர்ந்தார்.

பதினெட்டாவது முறை படை எடுத்த ஜராசந்தனை , பீமன் இரு பாதியாக கிழித்துக் கொன்றான் என்பது தனி கதை.[ அதுவும் ஜராசந்தன் பெற்ற  வரம் தான். பகவானின் யுக்தியோடு செய்து முடித்தான்.]

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது புரிகிறது அல்லவா?

பீமன், துரியோதனன்,கீசகன், பகாசுரன், ஜராசந்தன் ஆகியவர்கள் ஐவரும் ஒரே நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் ஒவ்வொருவரும்,  ஆயிரம் யானை பலத்திற்கு ஈடானவர்கள்.

ஜராசந்தன் , பீமனால் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி.

விதியை யாரால் வெல்ல முடியும்.?

துவாரகாபுரியில், ஸ்ரீ கிருஷ்ணர் சேவை சாதிக்கும் திருக்கோயில், ‘ஜகத் மந்திர்’ என்று அழைக்கப்படுகிறது.

தேவலோக சிற்பியான, விஸ்வகர்மாவால் ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகைக்கு அடித்தளம் போடப்பட்டது என்று கூறப்படுகிறது.

முதன் முதலில் , இக்கோயில் ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப்  பேரனான , ‘வஜ்ரநாபன்’ என்பவனால் கட்டப்பட்டது .

கிருஷ்ணாவதாரம் முடிந்த பின்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால்,துவாரகாபுரி கடலில் மூழ்கிவிட்டது.

தற்சமயம் இருக்கும் இருக்கும் துவாரகாதீசனின் கோயிலானது, 16ஆம் நூற்றாணடில் கட்டப்பட்டது ஆகும்

ஐந்து அடுக்குகளைக் கொண்ட இது திருக்கோயிலுக்கு , ‘ஸ்வர்க்க த்வார்’ வழியாக உள்ளே சென்றுவிட்டு, ‘மோட்ச த்வார் ‘வழியாக வெளியே வர வேண்டும்.

இங்கு, த்வாஜா ரோகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

அவர் அரசாட்சி செய்த காலத்தில், 52 பேர் தலைமை பொறுப்பில் இருந்தார்களாம்.அதனால், முக்கோண வடிவில்,படபடக்கும் 52 கஜ [

சுமார் 47 மீட்டர்] கொடியானது பறக்க விடப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை கொடி  ஏற்றுகிறார்கள். ஒரு முறை ஏற்றிய கொடியை மறுமுறை உபயோகப் படுத்துவது இல்லை.

தினமும், இருவர் படிக்கட்டுகள் வழியாக,  தளத்திலிருந்து, நூற்று இருபது அடி  உயரமுள்ள ஐந்தடுக்கு கோயிலின் உச்சியை அடைந்து கோடியை இறக்கி  ஏற்றுகிறார்கள்.புது கொடி ஏற்றப்பட்ட பிறகு, இதன் பாதி உயரத்தில், சதா ஒளிர்ந்து கொண்டிக்கும் அகல் விளக்கின் சமீபத்திலிருந்து ஒரு தேங்காயை கீழே போட்டு உடைக்கிறார்கள் பக்தர்கள், அதை பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள்.

கொடி ஏற்றத்தை தரிசித்தால், சகல ரோகங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப் படுகிறது.

‘கத்தியாரா’ தீபகற்பத்தில் (இந்தியாவில், குஜராத் மாநிலம்) கோமதி ஆறு அரபிக்  கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் புண்ணிய க்ஷேத்திரம் உள்ளது.

வசிஷ்ட முனிவரின் புதல்வியான, கோமதி, தனக்கு உகந்த மணாளனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முனிவருடன் புறப்பட்டாள்.முனிவரிடம் ஒரு நிபந்தனையைப் போட்டாள் .அதாவது தந்தையைத் தொடர்ந்து வரவிருக்கும் அவளை, முனிவர் திரும்பிப் பார்த்தால், அந்த இடத்திலேயே நிலையாகி விடுவதாகக் கூறியிருந்தாள்  

கோமதியின் கால் சலங்கை ஒலியின் மூலம் அவள், தன்னைத்  தொடர்வதை அறிந்து கொண்ட முனிவர், அந்த ஒலி , துவாரகாபுரியில் நின்று விடவே,  திரும்பிப் பார்த்தார். யுவதியாக இருந்த கோமதி, நீர் நிலையாக அந்த இடத்தையே நிரந்தரம் ஆக்கிக் கொண்டாள் .

ஜெய் ஜெய் துவாரகாதீசா .

கட்டுரை மற்றும் படங்கள் - மாலதி சந்திரசேகரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com