தீபாவளி ஸ்பெஷல் லேகிய அல்வா!

இளம் சூடான பதத்தில் நெய் சேர்த்து, வறுத்து அரைத்த மூலிகைப் பொடிகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொண்டால், தீபாவளி ஸ்பெஷல் லேகிய லட்டு தயார்.
தீபாவளி ஸ்பெஷல் லேகிய அல்வா!

தீபாவளி வருகிறதென்றால் சிகைக்காயுடனான கங்கா ஸ்நானம் முதற்கொண்டு புத்தாடை எடுக்கப் போனால் பஜார் முழுக்க பர்சேஸ் கூட்ட நெரிசல், பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் போய் திரும்பும் இன்பக் கனவை துன்பக் கனவாக்கி விட வாய்ப்புள்ள பயணக் கூட்ட நெரிசல், இத்தனை அலைக்களிப்புகள் இருக்கின்றன யோசிப்பதற்கு இதைத் தாண்டியும் இன்னொரு கவலை உண்டென்றால் அது தீபாவளிப் பட்சணம் சாப்பிட்டு அஜீரணக் கோளாரால் தீபாவளியன்றூம் அதற்கு மறுநாளும் அவஸ்தைப் பட நேரும் அவலத்தை நினைத்தால் ஐயகோ! இந்தத் தீபாவளி ஏன் தான் வருகிறதோ? என்று கூடத் தோன்றி விட வாய்ப்புண்டு, அதாவது அட்லீஸ்ட் அஜீரணக் கோளாறுகளால் அவஸ்தைப் படுகிறவர்களுக்கு மட்டுமேனும் அப்படித் தோன்றுமா இல்லையா என்று அவர்களையே கேட்டுத் தான் பாருங்களேன்! 

சரி கங்கா ஸ்நானத்துக்கான சிகைக்காயில் இருந்து ஒரு வேளை அல்ட்ரா மாடர்ன் ஷாம்புகள் காப்பாற்றக் கூடும். பர்ச்சேஸ் கூட்ட நெரிசலின் அலுப்பை தீபாவளியன்று கண்ணாடி முன் நின்று அழகழகான வண்ண உடைகளில் நம் தோற்றத்தைக் காணும் போது நாமே மறந்து விடுவோம். பயண அலுப்பை சொந்தங்களும், சொந்த ஊரும் மறக்கடிக்கலாம். ஆனால் இந்த தீபாவளிப் பட்சணத்தால் நேரும் அஜீரணக் கோளாறு இருக்கிறது பாருங்கள், இதை மட்டும் நாம் எந்த வகையிலும் சாமான்யமாக எண்ணி அலட்சியப் படுத்தி விடவே முடியாது. இந்த நேரத்தில் தான் மூன்று தலைமுறைப் பாட்டிமார்களும் நம் நினைவில் வந்து வந்து போவார்கள். ஏனெனில் ஒரிஜினல் தீபாவளி லேகியம் செய்ய அவர்களுக்கு மட்டும் தானே தெரியும். அதென்னது அது? ஒரிஜினல் தீபாவளி லேகியம் என்று கேட்பீர்களே! அதற்காக சொர்கத்தில் இருந்து மூன்றாம் தலைமுறைப் பாட்டியைக் கூட்டி வந்து தீபாவளி லேகிய அல்வா செய்யச் சொல்லவா முடியும்?! இனி நாமே தான் அதையெல்லாம் கற்றுக் கொள்ளலாமே! அதிலென்ன கஷ்டம்!   இதோ உங்களுக்காகத் தான் இந்த அசல் தீபாவளி லேகிய ரெஸிப்பி.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை: 11/2 டீஸ்பூன்
பெருங்காயம்: 2 சிட்டிகை
பேரீச்சை: 5 பழம் விதை நீக்கி நன்கு மசித்தது
சித்திரத்தை: 1/2 டீஸ்பூன்
அதிமதுரம்: 1/2 டீஸ்பூன்
இஞ்சி: 1/2 டீஸ்பூன்
திப்பிலி: 1/2 டீஸ்பூன்
சீரகம்: 1 டீஸ்பூன்
வால் மிளகு: 1 டீஸ்பூன்
உப்பு: 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்: 1/4 டீஸ்பூன்
பனை வெல்லம்: மேலே சொல்லப்பட்ட மூலிகைப் பொருட்களின் எடைக்குத் தக்க சரிபாதி அளவுக்கு பனை வெல்லம்
நெய்: 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சித்திரத்தை, அதிமதுரம், திப்பிலி, சீரகம், வால் மிளகு, ஏலக்காய் அனைத்தையும் தனித் தனியாக அது அதற்குத் தக்க சூட்டில் வாசம் வரும் வரையில் வறுத்து ஆற விட வேண்டும். பின்பு பனைவெல்லம் மற்றும் விதை நீக்கி நன்கு மசித்த பேரீச்சம் பழங்கள் இரண்டையும் வெல்லம் முங்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும். கம்பிப் பதம் வந்ததும் பாகை இறக்கி ஆற வைத்து, இளம் சூடான பதத்தில் நெய் சேர்த்து, வறுத்து அரைத்த மூலிகைப் பொடிகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொண்டால், தீபாவளி ஸ்பெஷல் லேகிய அல்வா தயார். இனி தீபாவளிப் பட்சணங்களால் உண்டாகும் அஜீரணக் கோளாறுகளைப் பற்றிய பீதியில்லாமல் இனிப்பு மற்றும் கார வகையறாக்களை பசிக்கு ஒரு வாய், ருசிக்கு ஒரு வாய் என ஒரு கை பார்த்து விடலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com