தீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்!

தீபாவளி. இந்தப் பெயரில் பண்டிகையைச் சொல்வது எப்போது என்று தெரியவில்லை
தீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்!

இருளை அகற்றி அருளைத் தரும் தீபாவளி திருநாள்

தீபாவளி. இந்தப் பெயரில் பண்டிகையைச் சொல்வது எப்போது என்று தெரியவில்லை. ஆனால், புராணக் காலத்திலிருந்தே, தீபாவளி குறித்த கதைகள் அமைந்திருக்கின்றன. துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் குறித்தும் அப்போது வருகிற இந்த தீபாவளித் திருநாள் விரதங்கள் பற்றியும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு அரிய விஷயங்களை எடுத்துரைக்கின்றன ஞானநூல்கள்!

இதோ... தீபாவளி விரதம் தொடர்பான புராணக் கதை ஒன்று!

அவர் பெயர் தீர்க்கதமஸ். மகா முனிவர். அந்த வனத்தில் ஒரு சோலைவனம் இருந்தது. அந்த சோலையின் நடுவே சின்னஞ்சிறிய ஆஸ்ரமம் அமைத்து, காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் பூஜை செய்து, கடும் தவம் மேற்கொண்டு வந்தார்.

முனிவரின் பூஜைக்கு மனைவி மக்களும் சீடர் பெருமக்களும் உறுதுணையாக இருந்தார்கள். பூஜைக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பூக்கள் பறித்து எடுத்து வந்தார்கள். கனிகளைப் பறித்து நைவேத்தியத்துக்கு வழங்கினார்கள்.

ஒருநாள்... சர்வ வரங்களையும் ஞானத்தையும் பெற்ற சனாதன முனிவர் அந்த ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவரைக் கண்டு பதறியடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார் தீர்க்கதமஸ் முனிவர். மனைவி மக்களுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். சனாதன முனிவருக்கு பாதபூஜை செய்தார். வரவேற்றார். ஆசனத்தில் அமரச் செய்து, மீண்டும் நமஸ்கரித்தார்.

அவருக்கு குரு மரியாதைகள் செய்து, உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பிறகு, சனாதன முனிவர் அனைவரையும் எதிரே அமரச் சொல்லி, போதனைகள் வழங்கினார்.

தீர்க்கதமஸ். மனதில் உள்ள துன்ப இருளை அகற்றுவதற்குப் பிரயத்தனப்படுவதே மனிதப் பிறப்பின் விருப்பம். அதேபோல், வாழ்வில் இன்ப ஒளியேற்றும் நிகழ்வு வராதா எனும் ஏக்கமும் எல்லோருக்கும் உண்டு. இருளை அகற்றவும் ஒளியைப் பெருக்கவுமாக விரதம் ஒன்று உண்டு.

அதைக் கடைப்பிடித்தால் நடப்பது எல்லாம் நன்மையாகவே திகழும்! கேட்டவை எல்லாம் இனிதே கிடைத்தே தீரும். குருவருளும் இறையருளும் கிடைக்கப் பெற்று, நிம்மதியும் ஆனந்தமுமாக வாழலாம்!

இந்த விரதம் மிகவும் எளிமையானது. அதேநேரம் மிகமிக வலிமையானது. அற்புதமான இந்த விரதத்தை சொல்லித் தருகிறேன் கேள்.

துலா மாதம் (ஐப்பசி) தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்யுங்கள். சிவனாரையும் நந்தி தேவரையும் உரிய மலர்களால் அலங்கரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே, எம தீபம் ஏற்றி எமதருமனையும் வழிபடுங்கள். இதனால் நம் வாழ்க்கை மலரும். முன்னோர்கள் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். அப்படிச் செல்லும் முன்னோரின் ஆசி, பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இனிதே வாழலாம்!’’ என அருளினார் சனாதன முனிவர்.

அவர் மேலும் தொடர்ந்தார்... ‘மறுநாள் நரக சதுர்த்தி (தீபாவளித் திருநாள்). அன்று உஷத் காலத்தில் அதாவது சூரியோதயத்துக்கு முன்னதாக, விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் (எள் நெய்) தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். இந்த நரக சதுர்த்தி (தீபாவளி) அன்று உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் சஞ்சரிப்பதாக ஐதீகம்!  எனவே இந்த நாள், மிகவும் புனிதமானதாக, சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. எனவே இந்த நாளில் செய்யும் விரதமும் பூஜையும் பல மடங்கு பலன்களை நமக்குத் தந்தருளும்!

இந்தப் புனிதமான நாளில், எண்ணெயில் திருமகள் வீற்றிருக்கிறாள். அரப்புப் பொடியில் கலைமகள் குடியிருக்கிறாள். சந்தனத்தில் நிலமகள் கலந்திருக்கிறாள். குங்குமத்தில் ஸ்ரீகௌரி கோலோச்சுகிறாள். மலர்களில் தேவதைகளும் நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள். புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் தீபத்தில் சிவபெருமானும் உறைந்து, அருள் பாலிக்கிறார்கள் என்கிறார்கள் ஞானிகள்’’ என்று எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.

அதுவே தீபாவளித் திருநாள் என இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே, அற்புதமான இந்த நன்னாளில், எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்வோம். இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய்வோம்.

முறையே கடைப்பிடித்து, இந்த நன்னாளைக் கொண்டாடினால், வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறலாம்! தடைகள் யாவும் விலகும்.  நற்கதி உண்டாகும்.

தீபாவளி எனும் உன்னதமான பண்டிகையை, உரிய விரதங்களை அனுஷ்டித்து, ஆத்மார்த்தமாகக் கொண்டாடுவோம். ஆனந்தமாய் வாழ்வோம்!

தீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்!

பிருங்கி முனிவர் மிகுந்த சிவபக்தர். சதாசர்வ காலமும் சிவலிங்க பூஜை செய்து வருவதில் அலாதி ஆனந்தம் அவருக்கு! தன் கணவரை இப்படி நெக்குருகி பூஜித்து வருகிறார்களே என்று ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், ‘சக்தியாகிய நம்மை வழிபடவில்லையே முனிவர்’ என வருந்தினாள் பார்வதிதேவி.

சிவம் வேறு சக்தி வேறு அல்ல என்பதை உலகத்தாருக்கு உணர்த்த விரும்பினார். பூவுலகுக்கு வந்தாள். கௌதம மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கௌதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கௌதம மகரிஷி.

சக்திதேவியும், கர்ம சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்தாள். நித்திய அனுஷ்டானமாக அந்த பூஜையைச் செய்தாள். பூஜையிலேயே லயித்தாள். இதில் மகிழ்ந்த சிவபெருமான், பூவுலகுக்கு வந்து அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார்.  அத்துடன், தன் திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார்.

உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது. இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள்.

கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரி குளக்கரைகளிலும்- ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்!

விரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும்.  14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவ வழிபாடு மேற்கொள்ளவேண்டும்.

21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும்.

கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக இனிதே வாழலாம்!

தீபாவளித் திருநாளில், லக்ஷ்மிகுபேர பூஜை..!

தீபாவளித் திருநாளில்... ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் கை நிறைய ஐந்து ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது ஐதீகம். நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்!

குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார். சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது! தீபாவளி நன்னாளில், இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி குபேரரை வணங்கி வழிபட்டால், இன்னும் இன்னுமாக வளமுடன் வாழலாம்!

- வி.ராம்ஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com