வருமான வரியைக் குறைக்க 9 சேமிப்புத் திட்டங்கள்

வருமான வரியை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ளலாமே என்றுதான்
வருமான வரியைக் குறைக்க 9 சேமிப்புத் திட்டங்கள்

வருமான வரியை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ளலாமே என்றுதான் நாம் அனைவருமே நினைக்கிறோம். வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் அதற்கு ஓரளவு வழி வகுக்கும் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன என்பது ஆறுதலான விஷயம். ரொம்பவும் காலம் தாழ்த்தாமல், முன் கூட்டியே உங்கள் சேமிப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து

இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள்... நிதி ஆண்டின் முடிவில் கணிசமாக உங்கள் வரிச் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

பி.பி.எஃப்.

வருமான வரியைக் குறைப்பதற்குப் பாரம்பரியமாக உள்ள திட்டம். பழைய திட்டம் என்றாலும், ஓய்வு காலத்துக்கு எல்லா பிரிவினருக்கும் ஏற்ற திட்டம் இது. நீண்ட நாள் அடிப்படையிலான திட்டங்களில் பி.பி.எஃப்.-க்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு.

இப்போது ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை இந்தத் திட்டத்தில் சேமிக்கலாம். இதன் முதிர்வுக்குப் பிறகு, முதிர்வுத் தொகைக்கும் சரி,

வட்டிக்கும் சரி - வரிப் பிடித்தம் கிடையாது. முக்கிய தபால் நிலையங்களில்கூட சிக்கலின்றி, எளிமையாகத் தொடங்கலாம்.

ஈ.எல்.எஸ்.எஸ்.

பங்குகளோடு தொடர்புள்ள சேமிப்புத் திட்டம்தான் ஈ.எல்.எஸ்.எஸ். இது பரஸ்பர நிதித் திட்டம். அதே சமயத்தில் வருமான வரியைக் குறைத்துக் கொள்ளவும் இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் சேர்ந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் திரும்பப் பெற முடியாது. இதனை லாக்-இன் காலம் என்று கூறுவார்கள். அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை இந்த வகை திட்டங்களில் முதலீடு செய்யலாம். பல பரஸ்பர நிதித் திட்டங்களில் நடைபெறுவது போலவே இதில் செலுத்தப்படும் தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த முதலீடு ஈட்டும் வருவாயைப் பொருத்தே வட்டி நிர்ணயமாகிறது. எனவே இந்த முதலீடு மூலம் நமக்கு கிடைக்கும் வட்டி என்பது அந்த திட்டத்தின் செயல்பாட்டைப் பொருத்தது. இந்த வகை முதலீட்டின் முதிர்வுத் தொகைக்கு வரி கிடையாது.

வைப்புத் தொகை (ஃபிக்ஸட் டெபாசிட்)

எஃப்.டி., ஃபிக்ஸட் டெபாசிட், வைப்புத் தொகை என அறியப்படும் எளிய வங்கி சேமிப்புத் திட்டமானது என்றைக்குமே மக்களிடையே வரவேற்பை பெற்றதாகும். அரசு வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பணத்தைப் போட்டு வைத்தால் காலாகாலத்துக்கு வட்டி, பாதுகாப்பு என்பது பாரம்பரியமாக உள்ள கண்ணோட்டம். மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கப்படுகிறது என்பது சிறப்பு. ஒரு குறை - முதிர்வுத் தொகையும், வட்டியும் வருமான வரிக்கு உள்பட்டது. ஆனால் சேமிப்பாளர் வருமான வரி வரம்புக்குள் வராவிட்டால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றுவிடலாம்.

சுகன்யா சம்ருத்தி திட்டம்

பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கலாம். பெண் குழந்தையின் சட்டபூர்வமான பாதுகாவலர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். பெண் குழந்தை பிறந்து 10 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கத் தொடங்கலாம். அந்தப் பெண் 21 வயதை அடையும்போது அந்தத் திட்டம் நிறைவடைகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை இதில் சேமிக்க முடியும். இதன் முதிர்வுத் தொகைக்கு வருமான வரிப் பிடித்தம் கிடையாது.

தொழிலாளர் வைப்பு நிதி (இ.பி.எஃப்.)

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். இதில் ஒரு நபரின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும். மேலும் 12 சதவீதத் தொகை நிறுவனத்தின் உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படும். இதன் முதிர்வுத் தொகை மீது எந்த வரிப் பிடித்தமும் செய்யப்படாது.

தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி.)

தபால் நிலையங்களிலிருந்து தேசிய சேமிப்புப் பத்திரங்களைப் பெறலாம். இந்த சேமிப்பு -முதலீட்டு முறையில் 5 ஆண்டுகளுக்கு இதிலிருந்து பணத்தை எடுத்துவிட முடியாது. முதிர்வுத் தொகை வரிக்கு உள்பட்டது.

பங்குகளுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்

சேமிப்பு, முதலீடு, காப்பீடு இணைந்த வித்தியாசமான திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பிரீமியம், காப்பீட்டுக்கான பிரீமியமாகவும், பங்கு முதலீட்டில் செலுத்தும் தொகையாகவும் பிரித்து செலுத்தப்படுகிறது. இதன் கீழான முதிர்வுத் தொகைக்கு வருமான வரிப்பிடித்தம் கிடையாது.

ஆயுள் காப்பீடு

வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள எல்லா சேமிப்புத் திட்டங்களிலும் மிகவும் பிரபலமானது ஆயுள் காப்பீடுதான். ஆயுள் காப்பீடு முதிர்வுத் தொகை மீது எந்த வரி விதிப்பும் கிடையாது. முதிர்வுக் காலத்துக்கு முன்பாகவே பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், வாரிசுதாரருக்கு காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் நிலையிலும் அந்தத் தொகைக்கும் வரி விதிப்பு கிடையாது. சேமிப்புத் திட்டமாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்களிலும் உதவுகிறது ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.

தேசிய பென்ஷன் திட்டம்

வருமான வரியைக் குறைத்துக் கொள்ள, தேசிய பென்ஷன் திட்டம் என்பது கூடுதலாக நமக்கு உள்ள திட்டமாகும். இது நீண்ட கால அடிப்படையில் செயல்படும் திட்டம். ஓய்வு காலத்தில் முதுமைக்காக சேமிக்கும் இந்தத் திட்டத்தில் சேரும் தொகையிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றால் அதற்கு அபராதத் தொகை செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com