காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த கர்நாடக அரசு மீது 356-வது பிரிவு பாயுமா?

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் தனது உத்தரவை மீறி, வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததாக

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் தனது உத்தரவை மீறி, வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததாக அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவின் கீழ் கர்நாடக அரசை கலைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்யுமா? என அரசியல் நோக்கர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
 
தமிழகத்துக்கு, செப். 21 முதல் 27-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப். 20) உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் தண்ணீரைத் திறந்துவிடாமல் நிறுத்திய கர்நாடக அரசு, சட்டப்பேரவை மற்றும் மேலவையின் சிறப்புப் கூட்டத்தை கூட்டி கர்நாடக அணைகளில் தற்போது இருக்கும் தண்ணீர், பெங்களூர் மற்றும் மைசூரூ நகரக் குடிநீர்த் தேவைக்குதான் போதுமானதாக உள்ளது. எனவே, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடாமல் நிறுத்திய கர்நாடக அரசை கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? கர்நாடக அரசின் முடிவு, நீதிமன்றஅவமதிப்புக்கு உட்பட்டதுதானா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

காவிரி விவகாரத்தில், தொடர்ந்து கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், காவிரி மேற்பார்வைக் குழுவும் உத்தரவுகள் பிறப்பித்து வருகின்றன. இது கர்நாடக அரசுக்கு பெருந்தலைவலியாக உள்ளது. இந்த நிலையில், இப் பிரச்னையை எதாவது ஒரு வகையில் திசைதிருப்ப, என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில், சட்டப்பேரவையின் இரு அவைகளையும் அவசர அவசரமாகக் கூட்டி, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது கர்நாடக அரசு.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அரசு, நாளை பிரச்னை என்று வரும்போது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் அதற்கு எதிராக அம்மாநில அரசாலேயே செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்திலேயே வாதம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதற்காகத்தான் இந்த அவசரக் கூட்டம், உடனடி தீர்மானம் நிறைவேற்றம் என்று கர்நாடக அரசு அதிரடியாக களமிறங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுகிறோம் என்று தெரிந்தேதான் கர்நாடக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன் சட்ட வல்லுநர்களை அரசு நிச்சயம் கலந்தாலோசித்திருக்கும். அவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரிலேயே கர்நாடக அரசு செயல்பட்டிருக்கும். இருந்தாலும், கர்நாடக அரசின் இந்தச் செயல்பாடுகள் சட்டத்துக்கு உட்பட்டதுதானா, அது எந்தவகையில் கர்நாடக அரசைக் காப்பாற்றும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டால் அதற்குப் பதில் அளிக்கவும் கர்நாடக அரசு தயாராகவே இருக்கும்.

அதே நேரத்தில், சட்டப்பேரவையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருதும்பட்சத்தில், அந்தத் தீர்மானத்தை டிஸ்மிஸ் செய்யவும் அதற்கு அதிகாரம் உள்ளது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். கர்நாடக அரசின் தீர்மானமே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், தனது தீர்ப்பே அனைத்திலும் உயர்வானது என்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இப்படி இருக்க, கர்நாடக அரசின் செயல்பாடு உண்மையிலேயே நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டதாக இருந்தால், நிச்சயம் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதில் உச்சபட்சமாக, உத்தரவை மீறிச் செயல்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறி, பிரிவு 356-ன் கீழ் கர்நாடக அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறக்கலாம். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால், மத்திய அரசு அதை செயல்படுத்தியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அதேநேரத்தில், கர்நாடக அரசின் செயல்பாட்டில் அதிருப்தி இருந்தால், மத்திய அரசே தானாக முன்வந்து கர்நாடக அரசுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி, அதன்பிறகு கர்நாடக அரசைக் கலைத்துவிட முடியும்.

மத்திய அரசால் கர்நாடக சட்டப்பேரவை கலைக்கப்பட்டால், அதை எதிர்த்து கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். அப்போது, அரசைக் கலைக்க மத்திய அரசு சொன்ன காரணங்களை அடிப்படையாக வைத்து மத்திய அரசின் நிலையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தவே வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசியலில், அனைத்துக் கட்சிகளும் எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்று பாராமல் ஒற்றுமையாக இருந்து செயல்படுகின்றனர். காவிரி விவகாரத்தை தனிப்பட்ட விஷயமாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த மாநிலப் பிரச்னையாகவே அவர்கள் கருதுகின்றனர். மற்ற விஷயங்களில் முரண்பட்டு நிற்கும் கட்சிகள், காவிரி என்றவுடன் ஒன்றுபட்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது. (இத்தகைய ஒரு செயல்பாடு தமிழக் கட்சிகளிடையே இல்லை என்பது ஒரு வருத்தத்துக்குரிய விஷயமே).

அதற்கு சமீபத்திய உதாரணம்தான், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அவசர அனைத்துக் கட்சிக் கூட்டம். தீர்மானமும் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்வதுடன், பிரச்னைக்குத் தீர்வுகாணக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தையே அமைக்கக்கூடாது என்பதுதான் கர்நாடகத்தின் நிலை. அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரையும் கர்நாடக முதல்வர் பார்த்துப் பேசியிருக்கிறார்.

அவசரத் தீர்மானத்தைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை எதிர்த்து அதே உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு இருக்கிறது. ஆறாயிரம் கன அடி நீருக்காக உச்ச நீதிமன்றத்தையே எதிர்த்து நிற்கும் கர்நாடக அரசு, அடுத்து காவிரி மேலாண்மை வாரியத்துக்காகவும் உச்ச நீதிமன்றத்தை பகையாளிபோல் எதிர்த்து நிற்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஆக, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை மதிக்காதவர்கள் என்ற அவப்பெயர்தான் இப்போது கர்நாடகத்துக்கு. அதே நேரத்தில், கர்நாடக அரசு மனு போட்டாலும், அதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்குமா என்பதும் ஒரு கேள்விக்குறிதான். மோதிப் பார்த்துவிடலாம் என்று சட்ட வல்லுநர்களின் தயவில் உச்ச நீதிமன்றத்தோடு மோதலுக்குத் தயாராகி வரும் கர்நாடக அரசின் சமீபத்திய நடவடிக்கைகள், வருங்காலங்களில் அந்த மாநில நலனுக்கு பெரும் பாதிப்பாக முடியும் என்றே நடுநிலை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

காவிரி விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com