உச்ச நீதிமன்றத்துக்கு கட்டுப்படாதவர்கள் உமாபாரதிக்கு கட்டுப்படுவார்களா?

காவிரிப் பிரச்னையில் அரசியல் சட்டத்தையோ, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையோ நடைமுறைப்படுத்தாமல் காலில் போட்டு மிதித்து மனசாட்சிக்கு
உச்ச நீதிமன்றத்துக்கு கட்டுப்படாதவர்கள் உமாபாரதிக்கு கட்டுப்படுவார்களா?

காவிரிப் பிரச்னையில் அரசியல் சட்டத்தையோ, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையோ நடைமுறைப்படுத்தாமல் காலில் போட்டு மிதித்து மனசாட்சிக்கு விரோதமாகவே நடந்து வருகிறது கர்நாடகா. இந்நிலையில், காவிரி பிரச்னையில் சில நாள்களுக்கு முன்பு கர்நாடக அரசுக்கு முற்றிலும் ஆதரவான ஒரு கருத்தை தெரிவித்த உமாபாரதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்குமா? வாய்ப்பில்லை என்பது தமிழக விவசாயிகள், அரசியல்வாதிகள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. அப்படியே நியாயமான பேச்சுவார்த்தை நடைபெற்று தீர்வு தெரிவித்தாலும், உச்ச நீதிமன்றத்திற்கே கட்டுப்படாதவர்கள் உமாபாரதிக்குக் கட்டுப்படுவார்களா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கர்நாடக மாநிலம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட மத்திய அரசு, காவிரி பிரச்னையில் சில நாள்களுக்கு முன்பு கர்நாடக அரசுக்கு முற்றிலும் ஆதரவான ஒரு கருத்தை தெரிவித்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கு தில்லியில் கர்நாடக, தமிழக அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், இவை தமிழகத்துக்குப் பெருங்கேடாகத்தான் முடியும் என்பது தமிழக விவசாயிகள், அரசியல்வாதிகள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம், இரு மாநில முதல்வர்கள், அரசு நிர்வாகத் தலைவர்கள் அடுத்த 2 நாள்களில் சந்தித்துப் பேசுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பேச்சு வார்த்தைக்கு 2 நாட்களில் ஏற்பாடு செய்வதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் உறுதியளித்தார்.

இதையடுத்து, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு தில்லியில் உள்ள ஷ்ராம் சக்தி பவனில் கர்நாடக, தமிழக அமைச்சர்கள் மற்றும் இரு மாநிலங்களின்  பொதுப்பணித்துறை தலைமைச் செயலர்களின் கூட்டத்தை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி இன்று வியாழக்கிழமை கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொள்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடுதகளை செய்துவந்தது. இதனால் கர்நாடகாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. எனவேதான் அந்த மாநிலத்தின் போராட்டங்கள் வெடித்தன. எனவே, பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்கலாம் என கர்நாடக அரசும் அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பேச ஆரம்பித்தனர்.

பேச்சுவார்த்தை என்பது கர்நாடகாவுக்கு நலன் பயக்குமே தவிர, தமிழகத்துக்கு அதனால் பலன் இல்லை என்பதால், மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் விலகியே இருந்தது தமிழக அரசு. ஆனால் கர்நாடக எம்.பிக்களோ, மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

உமாபாரதியை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா நேரில் சந்தித்து ஆலோசித்து வந்தார். மறுநாளே கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மூத்த அமைச்சர்கள் உமாபாரதியை தில்லியில் சந்தித்து பேசி வந்தனர். உமாபாரதி, கர்நாடகாவின் பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளால் சன்னியாசம் பெறப்பட்டவர். எனவே, அம்மாநிலம் மீது அவருக்கும் பாசம் அதிகம்.

கர்நாடக அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர், உமாபாரதியை கர்நாடகத் தாய் என்றே பாசமாக அழைக்கிறார்கள். மேகதாது பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்களில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பகிரங்கமாக கருத்து கூறியவர் உமாபாரதி. காவிரி பிரச்னையில் சில நாள்களுக்கு முன்பு கர்நாடக அரசுக்கு முற்றிலும் ஆதரவான ஒரு கருத்தை தெரிவித்தவரின் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் தமிழகத்துக்கு பின்னடைவாகவும் பாரபட்சமாக நிலையும்தான் அமையும். அது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதில் எந்தவித  ஐயமில்லை.

காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத்தான் உச்ச நீதிமன்றம் வாயிலாக பெற நினைக்கிறது தமிழகம். கர்நாடக மாநிலம் அரசியல் சட்டத்தையோ, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையோ நடைமுறைப்படுத்தாமல் காலில் போட்டு மிதித்துவிட்டு, தற்போதும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைப்பது மட்டும்தான் ஒரே தீர்வு ஆகும். இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தெளிவாகத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான கடமைதான் கர்நாடகத்துக்கு உண்டே தவிர, இதில் பேச்சுவார்த்தைக்கு என்ன அவசியம் உள்ளது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகா இறங்கி வந்தால் அந்த மாநில மக்களின் கோபத்திற்கு, தமிழகம் இறங்கி வந்தால் இம்மாநில மக்களின் கோபத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் ஆட்பட நேரிடும். ஏனெனில் காவிரி பிரச்னை என்பது கெளரவ பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே பேச்சுவார்த்தையில் யார் நியாயம் பேசினாலும் எடுபடப் போவதில்லை. மனசாட்சிக்கு விரோதமாகவே கர்நாடகா முடிவெடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலாண்மை வாரியமே தீர்வு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், உச்ச நீதிமன்றம் என எந்த மத்தியஸ்தமும் இன்றி, அவரவருக்கு உரிய பங்கு தண்ணீர் அவரவர்களுக்கு செல்லும். இதை செயல்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை உடனே அமைக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலுவான உத்தரவை பிறப்பித்தாலே போதும் என்று தமிழக விவசாயிகள், அரசியல்வாதிகள், நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com