நீண்ட பயணத்துக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்! பயோகாஸ் அதிசயம்!

ஆம்! உண்மைதான் கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள
நீண்ட பயணத்துக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்! பயோகாஸ் அதிசயம்!

ஆம்! உண்மைதான் கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவையில் 17 கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். நீங்கள் 17 கிலோமீட்டர் பயணம் செய்வதற்கான செலவு ஒரு ரூபாய் மட்டும் தானா? எப்படி இது சாத்தியமானது? பசு மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பயோகாஸ் தான் காரணம் என்றால் ஆச்சரியமாக உள்ளதா?

நம் நாட்டில் புனிதமாக போற்றப்படும் பசு மாட்டுக்கு தற்போது இன்னொரு புதிய பயன்பாடு வந்துவிட்டது. மக்களின் பேருந்து பயணத்தை சுலபமாக்க பசுஞ்சாணம் ஒரு புதிய தொழில்நுட்பத்துக்கு வழிவகுத்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனம் இந்த புதுமையான பேருந்தை வடிவமைத்துள்ளது. இந்த பேருந்தை இயக்குவதற்கு எரிபொருள் பசுமாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பயோகாஸ்.

இந்த பேருந்து சேவையின் முதல் பயணம் வெள்ளிக்கிழமை தொடங்கிவிட்டது. கொல்கத்தாவில் வடக்கில் உள்ள உல்தங்காவில் தொடங்கி தென்பகுதியில் உள்ள கரியாவில் முடியும் இதன் பயணம். 17.5 கிலோமீட்டர் தூரமுள்ளது. இதில் பயணிக்க கட்டணம் 1 ரூபாய் மட்டும்தான். மிகவும் குறைந்த கட்டணத்தில் நெடிய தூரத்தை கடக்க முடிவது உண்மை தான். கொல்கத்தாவில் தற்போது 12 லிருந்து 17 கிலோமீட்டர் வரையிலான பேருந்து பயணத்துக்கு 6 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே தூரம் தில்லியில் 5 ரூபாய் என்பது அனைவரும் அறிந்ததே.

பீனிக்ஸ் இந்தியா ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் க்ரூப் எனும் நிறுவனம் தான் முதலில் பசுஞ்சாணத்திலிருந்து பயோகாஸ் எடுத்து அதனை பஸ் போன்ற கன ரக வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார்கள். அசோக் லேலெண்ட் நிறுவனத்திடமிருந்து 54 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்றை 13 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி இந்த பயோகாஸ் பேருந்துப் பயணச் சேவையை தொடங்கிவிட்டனர்.

இதே போன்று 15 பேருந்துகள் வெவ்வேறு வழித்தடங்களில் இந்த வருடத்துக்குள் அறிமுகம் செய்யப்படும். எல்லா பேருந்துக் கட்டணமும் ஒரு ரூபாய் மட்டுமே.

பெங்காலில் உள்ள பிர்பம் எனும் ஊரில்தான் பீனிக்ஸ் நிறுவனத்தின் இந்த பயோகாஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த பயோகாஸ் மிருகங்கள் மற்றும் செடிகளில் கழிவுகளில் காணப்படும் மீத்தேன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த வாயு ஆபத்துக்களற்ற, நிறமற்ற தன்மையுடையது. இதனை வாகனங்களில் எரிவாயுவாக பயன்படுத்துவதுடன், சமையல் மற்றும் மின்சாரத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிர்பம்மில் உள்ள எங்கள் ஃபேக்டரியில் தற்போதைக்கு பசுஞ்சாணத்திலிருந்து பயோகாஸ் தயாரிக்கிறோம். இதை கொல்கத்தாவுக்கு டாங்கர் மூலம் அனுப்புகிறோம் என்றார் பீனிக்ஸ் இந்தியா ரிசர்ஸ் மற்றும் டெவலப்மெண்ட் க்ரூப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோதி பிரகாஷ் தாஸ். விரைவில் இந்தத் பேருந்துத் திட்டம் எல்லா வழித்தடத்திலும் வெற்றிகரமாக செயல்படும் என்று உறுதி அளித்தார். இதற்கான செலவைப் பற்றி அவர் கூறுகையில் ஒரு கிலோ பயோகாஸ் தயாரிக்க 20 ரூபாய் ஆகிறது. ஒரு கிலோ பயோகாஸில் ஒரு பஸ் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடும் என்றார்.

தாவரவியலில் பிஹெச்டி முடித்திருக்கும் தாஸ் கடந்த எட்டு வருடங்களாக பயோ காஸ் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெர்மனியிலிருந்து ஒரு தொழில்நுட்பத்தை இந்த பயோகாஸ் தயாரிப்புப் பணியில் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அது வெற்றிகரமாக நிகழ்ந்துவிட்டால், இந்த திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லலாம் என்று உறுதியாக நம்புகிறார்.

இந்த பேருந்துக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான பணி நியமனம் விரைவில் நடைபெறும். இந்த நிறுவனம் 100 பயோகாஸ் பம்புகளை வெவ்வேறு இடங்களில் அமைக்க முடிவெடுத்துள்ளனர். முதல் பம்ப் உல்தங்காவில் நிறுவப்படும். இந்த பயோகாஸ் குறித்து மேலும் பல திட்டங்கள் கைவசம் உள்ளது, விரைவில் ஒவ்வொன்றாக செயல்படுத்துவோம் என்றார் தாஸ்.

பசுவை தெய்வமாகவே இந்துக்கள் வழிபடுகிறார்கள். பசுமாட்டின் மகத்துவம் 2014-ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் மேலதிக கவனம் பெற்று புனிதச் சின்னமாக கொண்டாடப்படுகிறது. இந்துத்துவ அமைப்புகளும் கடைகளும் பசுமாட்டின் கோமியம், விபூதி போன்றவற்றை விற்பனை செய்துவருகின்றன. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் பலவற்றில் பசு மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுவிட்டதால் அங்கு இறைச்சி வணிகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com