அக்பரின் மனைவி ஜோதாபாய்; ராஜபுத்திர இளவரசியா? போர்த்துகீசியப் பெண்மணியா? புது சர்ச்சை ஆரம்பம்!

அவரது நூலில் சொல்லப்பட்டவாறு, ஜஹாங்கீரின் அம்மாவான ஜோதாபாய், ஒரு இந்து ராஜபுத்திரப் பெண்மணியே அல்ல, அவர் ஒரு போர்த்துகீஸியப் பெண்மணி, அவரது இயற்பெயர் டோனா மரியா மஸ்காரன்சஸ்,
அக்பரின் மனைவி ஜோதாபாய்; ராஜபுத்திர இளவரசியா? போர்த்துகீசியப் பெண்மணியா? புது சர்ச்சை ஆரம்பம்!

தனுஷ் எங்கள் மகன் தான் என்று நீதி கேட்டுப் போராடும் சிவகங்கை தம்பதிகள் குறித்த குழப்பங்களே இன்னும் தீர்ந்தபாடில்லை. நிகழ்காலத்து ஆள்மாறாட்டக் குழப்பங்களுக்கே தீர்வு கிட்டாத நிலையில். திடீரென்று கோவாவிலிருந்து ஒருவர் புறப்பட்டு வந்திருக்கிறார். அக்பரின் மனைவிகளில் ஒருவரும், புகழ் மிக்க ராஜபுத்திர இளவரசியுமான ஜோதாபாய், வரலாற்றிலும், ராஜ புத்திரக் கதைகளிலும் சித்தரிக்கப் பட்டுள்ளவாறு அவர் ஒரு இந்து ராஜபுத்திர வம்சத்துப் பெண் அல்ல, ஜோதாபாய் ஒரு பிறவி போர்த்துகீஸியப் பெண்மணி என்று சான்றுகளைக் காட்டி ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறார். அவரது பெயர் லூயிஸ் டி அஸிஸ் கோரியா. கோவாவைப் பின்புலமாகக் கொண்ட இந்த எழுத்தாளர், தான் எழுதிய “1510 முதல் 1735 வரையிலான போர்த்துகீசியர்களின் இந்திய மற்றும் முகலாயத் தொடர்புகள்” எனும் வரலாற்றும் நூலில் மேற்கண்டவாறு விவாதிக்கிறார்.

அவரது நூலில் சொல்லப்பட்டவாறு, ஜஹாங்கீரின் அம்மாவான ஜோதாபாய், ஒரு இந்து ராஜபுத்திரப் பெண்மணியே அல்ல, அவர் ஒரு போர்த்துகீஸியப் பெண்மணி, அவரது இயற்பெயர் டோனா மரியா மஸ்காரன்சஸ், அரபிக் கடலில், போர்ச்சுகீஸியப் போர்க்கப்பலில் தனது சகோதரியான ஜூலியானாவுடன், டோனா  மரியா பயணம் செய்த போது 1500 ஆம் ஆண்டு வாக்கில் குஜராத் சுல்தானாக இருந்த பகதூர் ஷாவால் கைதியாகக் கைப்பற்றப் பட்டு, இளம் முகலாய மன்னரான அக்பருக்கு வெகுமதியாக அளிக்கப் பட்டார்.

அக்பரை வந்தடைவதற்கு முன்பே டோனாவுக்கு திருமணம் ஆகி இருந்தது. குஜ்ராத் சுல்தானால் வெகுமதியாக அறிவிக்கப்பட்டு அக்பரின் அரசவையில் நிற்கும் போது டோனாவுக்கு வயது 17, அக்பருக்கு அப்போது வயது 18. டோனாவைக் பார்த்த முதல் கணமே, இளம் அக்பருக்கு கண்டதும் காதல்’ பற்றிக் கொண்டது. டோனா அப்போதே மணமானவராக இருந்தாலும், இனிமேல் டோனா எனது அந்தப்புறத்திற்குச் சொந்தமானவர் என்று அறிவித்து விட்டார் அக்பர்” எனவே அன்று முதல் டோனாவும் அவரது சகோதரி ஜுலியானாவும் அக்பரின் சரித்திரப் புகழ் மிக்க, அந்தப்புரப் பிரஜைகள் ஆனார்கள்” என்று நீள்கிறது லூயிஸ் டி கோரியாவின் புத்தகம்.

அக்பரது காலத்தில் அடக்கி வாசித்த போர்த்துகீசியர்கள் பின்னாட்களில் இந்தியாவில் கோலோச்சும் போது, தங்களது இனத்துப் பெண், ஒரு முகலாய அரசரின் அந்தப்புரப் பாவையாக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதே வேளையில், முகமதிய சமயக் குருமார்களும்,  ஒரு போர்த்துகீசியப் பெண், தங்களது மாமன்னரின் மனைவியாக இருந்து, அவரது பல்வேறு வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தார். என வரலாற்றில் பதிவாவதை விரும்பவில்லை. இப்படித்தான் டோனா எனும் கத்தோலிக்கன் கிறிஸ்தவப் பெண்மணி, ஜோதா அக்பர் எனும் ராஜபுத்திரப் பெண்மணியாக முகமதிய மற்றும் ஆங்கில வரலாற்று ஆசிரியர்களால் அந்நாட்களில் உருமாற்றம் செய்யப்பட்டார்  என லூயிஸ் டி தனது நூலில் கூறுகிறார்.

173 பக்கங்கள் கொண்ட லூயிஸின் இந்தப் புத்தகம் பிராட்வே பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் அவர் தெரிவித்துள்ளபடி, ஜஹாங்கீரின் தாயாக அந்தக் காலத்தில், சுட்டிக்காட்டப்பட்ட மரியம் உல்- ஜமானி என்பவர் டோனா மரியா தானே! தவிர ஜோதா அல்ல! என்கிறார். அப்படி மரியம் உல்- ஜமானி ஜஹாங்கீரின் தாயாக இருந்தால், அவரைப் பற்றிய குறிப்புகள் ஏன் முகலாய ஆவணங்களில் இல்லை? எனும் கேள்விக்கு, திட்டமிட்டு டோனாவின் பெயர் சரித்திர ஆவணங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.

அது மட்டுமல்ல, உண்மையில் ஜோதாபாய் ஒரு ராஜபுத்திர பெண்மணியாக இருந்து, அவர் தான் பட்டத்து இளவரசரான ஜஹாங்கீரின் தாய், எனும் பட்சத்தில், முகலாய, ராஜ புத்திர இணக்கத்தை, உறவை விரும்பிய அந்தக் கால சரித்திர ஆசிரியர்களான அபுல் பஸல், அப்துல் காதர் உள்ளிட்டோரின் நூல்களில் ஏன் ஜோதாபாய் பற்றிய குறிப்புகள் இதுவரை இல்லை?, உண்மையில் புகழ் மிக்க ராஜபுத்திர வம்சத்துப் பெண்ணைப் பற்றி ஒரு வரி கூடவா எழுதத் தோன்றி இருக்காது அவர்களுக்கு? என்று சந்தேகக் கேள்வி எழுப்புகிறார். 

மேலும், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக சரித்திரப் பேராசிரியரான சிரீன் மூஸ்வி, தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் ‘அக்பர் நாமா’ வில் எங்கேயும் ஜோதா பாயைப் பற்றிய குறிப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளமையையும் லூயிஸ் தனது வாதத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். சிரீன் கூற்றுப்படி, அக்பர், ராஜபுத்திர இனக்குழுக்களில் ஒன்றான கச்சாவா இனத்து இளவரசியை மணந்ததாக குறிப்புகள் உள்ளனவே தவிர, அந்த இளவரசியின் பெயரும் கூட ஜோதாபாய் அல்ல! என்று சுட்டிக்காட்டுகிறார்.

இவை மட்டுமல்ல, ஜஹாங்கீரின் ஜெஸூட் கிறிஸ்தவ மிசினரிகளின் மீதான பாசம், அவரது தாய் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளையே அதிகரிக்கிறதே தவிர இந்துப் பெண்ணாக அல்ல என்றும் அந்நூல் விவாதங்களை எழுப்புகிறது.

எது எப்படியோ? சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராய், ஜோதாவாக, நடிக்க ‘ஜோதா அக்பர்’ திரைப்படம் வெளியாகி சில ஆண்டுகள் கடந்து விட்டன. படத்தில் ஜோதா ராஜபுத்திரப் பெண்ணாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும், மாமன்னர் அக்பரிடத்தில், ஜோதாவுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாகவே, இந்துக்கள் புனிதப் பயணம் செல்ல விதிக்கப்பட்டிருந்த வரியை அக்பர் ரத்து செய்தார். என நமது பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் விவரங்கள் சான்றாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் லூயிஸ் விவாதித்தவாறு, ஜோதாபாய் தான் டோனா மரியா என்று ஏற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ நமது வரலாற்று ஆசிரியர்களிடையே தற்போது போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com