ராவணனைக் கொன்றது ராமனா? சீதையா? கிளம்பப் போகிறதா புது சர்ச்சை!

லோக மாதா என நம்பப்படும் சீதை குறித்த பொது ஜன நோக்கு மாறுகிறதோ இல்லையோ? எழுத்தாளரின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் ராவணனைக் கொன்றது சீதையா? ராமனா? என்ற அரைகுறை புரிதலின் அடிப்படையில் புது சர்ச்சைகள் 
ராவணனைக் கொன்றது ராமனா? சீதையா? கிளம்பப் போகிறதா புது சர்ச்சை!

எழுத்தாளர் அமிஷ் திரிபாதி இந்து மதம் சார்ந்த புராணக் கதைகளை மையமாக வைத்து நாவல்கள் எழுதுவதில் கை தேர்ந்தவர். முன்னரே இவரது ஆக்கத்தில் வெளிவந்த சிவா டிரையாலஜி சீரிஸ் நாவல்கள், வாசகர் மற்றும் விமர்சகப் பரப்பில் பரவலான கவனம் பெற்றன. தற்போது சிவா சீரிஸ் நாவல்களை  முடித்து விட்டு, இரண்டாவதாக ராமச்சந்திரா சீரிஸ் நாவல்களைக்
கையிலெடுத்திருக்கிறார் அமிஷ். அந்த வகையில் ராமச்சந்திரா சீரிஸில் அமிஷின் இரண்டாவது நாவலாக வெளிவரவிருப்பது,  ‘சீதா - வாரியர் ஆஃப் மிதிலா’. 

தலைப்பைப் படித்து விட்டு, என்ன? சீதை போர் வீரங்கனையா? என்று யாரும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. 

80 கள் தொட்டு இன்று வரை ராமாயணக் கதைகள் நெடுந்தொடர்கள் ஆக்கப்பட்டாலும் சரி, திரைப்படங்கள் ஆக்கப்பட்டாலும் சரி, சீதை என்பவள் மிகவும் பணிவான பெண், கணவன் மனமறிந்து நடக்கும் மென்மையான பெண், அவன் தீக்குளிக்கச் சொன்னால் உடனே தீயில் இறங்கும் பெண் என்பதாகத் தான் அவளைப் பற்றிய சித்தரிப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. மக்களும் சீதையை மென்மைக்கு மாற்று உருவமாகவே கற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அவள் அப்படியல்ல. கிடைத்துள்ள புராண இதிகாசச் சான்றுகளின் அடிப்படையில் சொல்வதென்றால் சீதை மிக வலிமையான பெண். அவள் மிதிலாவின் இளவரசியாக இருக்கும் போது, மூத்த ராவணனைக் கொல்வதாக வால்மீகி எழுதியதாகக் கூறப்படும் பிறிதொரு ராமாயணக் கதையில் சொல்லப்பட்டுள்ளது. 

நாமறிந்த ராமாயணக் கதையில் ஒரே ஒரு ராவணன் தான். அவன் அரக்கன், அவன் சீதையைக் கவர்ந்து சென்று சிறை வைத்ததால் அவளை மீட்கச் சென்று ஸ்ரீராமன், ராவணனைக் கொன்றதாகத் தான் இதுவரையில் நாமறிந்த ராமாயணக் கதைகள் அனைத்திலும் உள்ளது. நமக்குத் தெரியாத ராமாயணங்களும் இருக்கலாம் எனும் ஐயத்தை எழுப்புகிறது அமிஷ் திரிபாதியின் ‘சீதா - வாரியர் ஆஃப் மிதிலா’

சீதை மூத்த ராவணனைக் கொன்றதாக கதை சென்றால் ராமாயணத்தில் எத்தனை ராவணன்கள் இருந்திருப்பார்கள்? என்ற கேள்வி அடுத்து எழுகிறது. ஏனெனில் நாமறிந்த ராமாயணத்தில் ஒரே ஒரு ராவணன் தானே உண்டு, எனவே இதுவரை நாமறிந்த ராமாயணக் கதைகளையுமே கூட நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது. ஏனெனில் வால்மீகி எழுதிய வடமொழி ராமாயணம் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் போதெல்லாம் அந்தந்த கால கட்டத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மற்றும் வாழ்க்கை முறைகளைப் பொறுத்து சிறிது, சிறிதாக மாற்றம் பெற்றே வந்துள்ளது. எனவே வால்மீகியின் நிஜ ராமாயணத்தில் வரும் சீதை வீரங்கனையாக இருப்பதும், ராவணனுக்கு முந்தைய மூத்த ராவணன் அவளால் கொல்லப் பட்டதும் பலருக்குத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

தமிழில் கூட சீதையை மையமாக வைத்து, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘வன தேவியின் மைந்தர்கள்’ எனும் நாவல் சீதையின் போர்க்குணங்களை விளக்க வந்த மிகச் சிறந்த முயற்சி. ஆனால் அந்த நாவலிலும் கூட சீதையின் நியாயங்கள் பேசப்பட்டதே தவிர, அவளுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு அவள் ஒரு பெண் என்பதும் , அதிலும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த தாயொருத்திக்குப் பிறந்து, அரசனுக்கு தத்துக் கொடுக்கப் பட்ட பெண் என்பதால் அப்போது தீவிரமாகப் பின்பற்றப்பட்ட வர்ணாஸ்ரம பாகுபாடுகளைக் காரணம் காட்டி, திட்டமிட்டே துரோகமிழைக்கப் பட்ட பெண் எனும் ரீதியாகத் தான் கதை செல்லும். பெண்ணிய நோக்கில் சீதை குறித்து புதிய தெளிவுகளை உருவாக்கியதில் ராஜம் கிருஷ்ணனின் இந்தப் படைப்புக்கு என்றென்றும் முதலிடம் தரலாம். ஆனால் இதிலும் கூட சீதை வில்லேந்திப் போராடியதாகக் குறிப்புகள் இல்லை.

சரி இனி அமிஷ் தனது புது நாவலான சீதா- வாரியர் ஆஃப் மிதிலா குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...

“சிவா டிரையாலஜி சீரிஸ் நாவல்கள் எழுதும் போது என்னிடம் உரையாடிய ஒரு நபர்; நாம் கடவுளாக வணங்கும் ராமர் குறித்து மிக மோசமாகப் பேசினார். அவருக்கு என்னால் பதில் சொல்ல் முடியும். ஆனால் அது அவருக்கான பதிலாக மட்டுமே இருக்கும் என்பதால், அவரைப் போன்றே அவதூறு பேசும் பலரது கருத்துக்களுக்கு பதில் சொல்லும் முயற்சியாக எனது அடுத்த நாவலுக்கான களம் ராமாயணம் என முடிவு செய்து ராமச்சந்திரா சீரிஸ் நாவல்களை எழுதத் தொடங்கினேன். அந்த வரிசையில் எனது இரண்டாவது நாவல் சீதா - வாரியர் ஆஃப் மிதிலா!

சீதையை நாம் மிகப் பணிவான பெண்ணாகவே கற்பனை செய்து வைத்திருக்கிறோம். அவள் பணிவான பெண் இல்லை. பணிவுக்கு அர்த்தமாக நாம் உருவகப் படுத்திக் கொள்ளும் அப்பாவித் தனமான பெண் இல்லை சீதை. அவள் மிக மிக வலிமையான மன உறுதி கொண்ட பெண். வால்மீகி எழுதியதாக நம்பப்படும் பிறிதொரு ராமாயணக் கதையில், வில்லேந்தி நின்று, மூத்த ராவணர்களில் ஒருவனை கொன்ற போர் வீரங்கனை அவள் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கதைகளை எல்லாம் நான் எனது நாவலுக்காக தேடித் தேடி வாசித்தேன். அதோடு எனது தாத்தா காசியில் சமஸ்கிருதப் பண்டிதராக இருப்பதால் அவரிடமும் நான் சீதை குறித்து பழைய நூல்களில் வெளிவந்த சான்றுகளைப் பெற்றேன். அவையனைத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது சீதைக்கு கிடைத்தை பணிவான பெண்ணுருவம் 80 களின் தொலைக்காட்சி நாடகங்களால் உருவானது என்பது தெளிவு. பண்டைய நூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள சீதையின் உருவகம் வீரம் செறிந்தது. அந்த நோக்கில் சீதை குறித்த தெளிவான பார்வையை உண்டாக்கவே இந்த நாவலை எழுதவிருக்கிறேன். அனேகமாக 2017 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் நாவல் வெளிவரலாம். இப்போதைக்கு தலைப்பை மட்டுமே வெளியிட்டுள்ளேன்” என்கிறார்.

அமிஷ் தனது சீதா- வாரியர் ஆஃப் மிதிலா நாவலின் தலைப்பை வெளியிட தேர்ந்தெடுத்த நபர் யார் தெரியுமோ? ஜவுளித் துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. ஸ்மிருதி அரசியலுக்கு வரும் முன் 80 களில் வெளிவந்த யாஷ் சோப்ராவின் தூர்தர்ஷன் ராமாயண   நெடுந்தொடரில் சீதையாக நடித்தவர் என்பது பலருக்கும் தெரிந்த செய்தியே.

எது எப்படியோ!

லோக மாதா என நம்பப்படும் சீதை குறித்த பொது ஜன நோக்கு மாறுகிறதோ இல்லையோ? எழுத்தாளரின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் ராவணனைக் கொன்றது சீதையா? ராமனா? என்ற அரைகுறை புரிதலின் அடிப்படையில் புது சர்ச்சைகள் வெடிக்காமல் இருந்தால் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com