கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் கார் பார்க் செய்ய முடியாமல் அவஸ்தைப் பட்டிருக்கிறீர்களா?

தப்பித் தவறி பஸ் ஸ்டாண்டுக்குள் காரோடு நுழைந்து விட்டீர்களானால் உங்களுக்கு அன்று சத்திய சோதனை தான்! குறைந்த பட்சம் 2 மணி நேரங்களாவது ஆகும் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேற...
கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் கார் பார்க் செய்ய முடியாமல் அவஸ்தைப் பட்டிருக்கிறீர்களா?

கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் கார்களுக்கு எனத் தனியாக பார்கிங் வசதி இல்லை. டூ வீலர்களுக்கு பார்கிங் வசதி உண்டு ஆனால் அதில் 200 டூவீலர்களை மட்டுமே நிறுத்திக் கொள்ள முடியும். இதனால் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டைப் பொறுத்தவரை பீக் ஹவர்கள் எனக் கருதப் படும் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரையிலும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் பிதுங்கி வழியும் போது தப்பித் தவறி காரில் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தவர்கள் கதி அதோ கதி. அம்மாதிரியான நேரங்களில் குடும்பத்தினரையோ, உறவினர்களையோ பஸ் ஏற்றி விட தப்பித் தவறி பஸ் ஸ்டாண்டுக்குள் காரோடு நுழைந்து விட்டீர்களானால் உங்களுக்கு அன்று சத்திய சோதனை தான்! குறைந்த பட்சம் 2 மணி நேரங்களாவது ஆகும் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேற... சென்னை நகருக்குள் வர வர மிக மிக இடைஞ்சலான இடங்களில் ஒன்றாக மாறி வருகிறது கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்றால் அது மிகையில்லை.

2003 ஆம் வருடம் சென்னை மவுண்ட் ரோடில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் புழக்கத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டதால் எக்மோரில் இருந்து கோயம்பேடுக்கு இடம் பெயர்ந்தது ஆம்னி பஸ்களுக்கான பஸ் ஸ்டாண்டு. அது இயங்கத் தொடங்கிய காலத்தில் சென்னையில் இத்தனை ஆம்னி பஸ்கள் பயன்பாட்டில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆம்னி பஸ்களின் பெருக்கத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படுகிறது. 2003 ஆம் ஆண்டில் 4 ஏக்கரில் உருவானது கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு. இன்று அது 6 ஏக்கர்களுக்கு விரிவுபடுத்தப் பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் கார் பார்கிங், டூ வீலர் பார்கிங் விசயங்களில் போதுமான இட வசதி இல்லை எனும் குறை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

சொந்தக் கார், தனியார் கேப் சர்வீஸ்கள், ஆட்டோக்களில் பேருந்துக்குள் நுழைபவர்கள் திரும்பிச் செல்வதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க எண்ணி பஸ் ஸ்டாண்டு நுழைவாயிலிலேயே பயணிகள் இறங்கிக் கொண்டு தங்கள் லக்கேஜ்களை சுமந்தவாறு நடந்து பேருந்தைத் தேடிச் செல்ல வேண்டியதாகி விடுகிறது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களோடு பயணிப்பவர்களின் நிலை மிகவும் கஷ்டமானது. அவர்களால் நுழைவாயில் தொடங்கி தங்களது லக்கேஜைத் தாங்களே சுமந்து வருவது என்பது முடியாத காரியம். அவர்களுக்கு துணைக்கு வருவோருக்கும் கூட காரை பார்க் செய்ய வசதி இல்லாத காரணத்தால் பஸ் ஸ்டாண்டுக்குள் பெரிய திண்டாட்டமாகி விடுகிறது. 

ஆரம்பத்தில் கோயம்பேடு பகுதியில் இத்தனை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லை. மவுண்ட் ரோடு பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்டு இங்கு மாற்றம் பெறும் போது முன் திட்டமிடுதல் சரியாக இல்லாததால் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைக் கண்டுணர்ந்து பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆரம்பத்தில் கார் பார்கிங் வசதிகளோடு தான் பஸ் ஸ்டாண்டு வரைபடம் உருவாக்கப்பட்டது. ஆனால் கார் பார்கிங்குக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையே உண்டு ஜீரணித்து விட்டது. அதன் விளைவே இன்றைய கார் பார்கிங் இல்லாத ஆம்னி பஸ் ஸ்டாண்டு. இப்போது ஆம்னி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கவே இடம் போதவில்லை என்ற குறை நிலவுகிறது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை மும்மடங்காகி இருக்கிறது.

CMDA அதிகாரிகளுக்கு இதைப் பற்றிய ஞானம் இல்லாமல் இல்லை, 6 ஏக்கர்களாக இருக்கும் பஸ் ஸ்டாண்டு 9 ஏக்கர்களாக விஸ்தீரணம் பெறத் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் ஆலோசித்து வைத்திருக்கிறார்கள். ஆம்னி பஸ் ஸ்டாண்டின் அருகில் இருக்கும் காலி இடம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முதல் தளம் மற்றும் பேஸ்மெண்ட் பார்க்கிங் வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிக்கப்பட இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த திட்டம் இதுவரையிலும் தொடங்கிய இடத்திலேயே தான் நிற்கிறது எனவும் துரித கதியில் வேலைகள் தொடங்கி நடக்க அரசு உத்தரவு தேவை எனவும் அதற்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

கூடுவாஞ்சேரி அருகிலிருக்கும் கேளம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களின் இயக்கத்துக்காக பிரத்யேக இட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு, அங்கிருந்தும் குறிப்பிடத் தக்க அளவில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப் படுவதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com