மொபைல் ஃபோன் ஹேக்கர்களின் அட்டூழியம்!

உங்களுடைய மொபைல் ஃபோனை பொது இடங்களில் பயன்படுத்தும் போது கவனத்துடன்
மொபைல் ஃபோன் ஹேக்கர்களின் அட்டூழியம்!

உங்களுடைய மொபைல் ஃபோனை பொது இடங்களில் பயன்படுத்தும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக பின் நம்பரை பொதுவெளிகளில் பயன்படுத்தும் போது அக்கம் பக்கம் பார்த்து செயல்படுங்கள். காரணம் நீங்கள் பின் நம்பரை உள்ளீடு செய்யும் போது அதை ஹேக்கர்கள் பார்த்துவிட்டால் மிக எளிதாக உங்களை கண்காணிக்கத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் ஃபோனில் உள்ள வங்கி பரிமாற்றங்கள் முதல் மிகவும் பெர்சனல் தகவல்கள் வரை எல்லாவற்றையும் நுட்பமாக அவர்களின் விரல் நுனிக்கு மிக எளிதாக கடத்திவிடுவார்கள். சைபர் க்ரைம்கள் மிகுந்துள்ள மெய்நிகர் உலகின் தற்போதைய நிலை இதுதான்.

ஹேக்கர்கள் வேறு யாருமில்லை தொழில்நுட்பம் தெரிந்த திருடர்கள். அவர்களின் இலக்கு சுலபமாக திறக்க முடிகிற கதவுகள் தான். எனவே நம்முடைய மொபைல் ஃபோன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை எந்த அளவுக்கு கவனமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

நம்மை கண்காணிக்கும் ஹேக்கர்கள் நம் சார்ந்த தகவல்களைப் பெற புதிய வழிமுறைகளை கடைபிடிக்கிறார்கள். மிகவும் புத்திசாலித்தனமாக செயல்புரியும் அவர்களது நூதன வழிமுறைகளில் ஒன்றுதான் மொபைல் ஃபோன் மூலமாக நம்முடைய தகவல்களை திருடுவது. நாம் எதார்த்தமாக மொபைல் பின் நம்பரை டைப் செய்யும் போதோ, அல்லது ஸ்வைப் செய்யும் முறையை வைத்தோ அவர்கள் நாம் என்ன நம்பர்களை அல்லது பேட்டர்னை பயன்படுத்துகிறோம் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.

நாம் ஃபோனை பயன்படுத்துகையில் நம்முடைய நடவடிக்கைகளை உற்று நோக்கும் ஹேக்கர்கள் நம்முடைய பின் நம்பரை முதல் முயற்சியில் 70 சதவிகிதம் ஊகித்துவிடுகின்றனர். அடுத்தடுத்து முயற்சி செய்து கிட்டத்தட்ட ஐந்தாம் தடவை அவர்கள் 100 சதவிகிதம் நம்முடைய நம்பரை மிகச் சரியாக உள்ளீடு செய்துவிடுகிறார்கள்.

25 விதமான சென்ஸார்களைப் பயன்படுத்தி நம்முடைய வங்கிக் கணக்குகள், இமெயில் என எல்லா தகவல்களையும் திருடிவிடுகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள் நியூகாஸில் பல்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

மால்வேர் சாஃப்ட்வேர்களை ஸ்மார்ட்ஃபோனில் டவுன்லோட் செய்வதன் மூலம் சுலபமாக ஹேக் செய்கிறார்கள். அதன்பின் ஃபோனில் உள்ள தகவல்களை அதனுள் இருக்கும் சென்ஸார்கள் மூலம் திரட்டுகிறார்கள்.

பாஸ்வேர்டுகள் பொருத்தவரையில் நாம் அடிக்கடி ஒரே விதமான நம்பர்களை தான் மாற்றி பயன்படுத்துவோம், பேட்டர்ன்களிலும் ஒரே விதமாகவே நம் விரல்கள் கோடு போடும். பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களில் ஆக்ஸிலோமீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அது நம்முடைய சின்னஞ்சிறிய செய்கைகளை கூட ரொட்டோஷன் சென்ஸார்கள் மூலம் பதிவு செய்துவிடும். அதை ஹேக்கர்கள் முதலில் சோதித்துவிடுவார்கள்.

ஃபிட்னெஸ் கருவிகளை ஹேக் செய்வோர் அக்கருவியின் உரிமையாளர் எங்கே இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களை வரை உடனடியாகப் பெற முடியும்.

நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மர்யம் மெஹ்ரின்ஸாட் கூறுகையில், ‘பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்ஸ் மற்றும் இது போன்ற கருவிகள் தற்போது பலவிதமான சென்ஸார்களுடன் தயாரிக்கப்படுகின்றன. மொபைல் ஆப்ஸ் அல்லது இணையதளங்கள் நம்முடைய ஃபோனை முற்றிலும் ஊடுருவ (ஆக்ஸஸ் செய்ய) உத்தரவு கேட்பதில்லை. ஆனால் விஷமத்தனமான ஹேக்கர்களின் சாஃப்ட்வேர்கள் இதைத்தான் முதலில் கேட்கும். நம்முடைய ஃபோனில் உள்ள நுட்பமான சென்ஸார்களில் பதிந்துள்ள டேட்டாக்களை அவை கவர்ந்துவிடும். நம்மைப் பற்றிய சகலவிதமான தகவல்களையும் அவ்வழியே ஹேக்கர்களை எளிதில் சென்றடைந்துவிடும். நம்முடைய கால் டைமிங், டச் ஃபோன் பயன்பாட்டுச் செயல்கள், பின் நம்பர்கள் உள்ளீடு மற்றும் பாஸ்வேர்டுகளை எல்லாம் ஹேக்கர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஹேக்கர்கள் நாம் பயன்படுத்தும் இணையதளங்களை தொடருவார்கள். ஒரு டாப்பை (Tab) நாம் திறந்து பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களின் மால்வேர் சாஃப்ட்வேரின் மூலம் இன்னொரு டேப்பை உருவாக்கி விடுவார்கள். நம்முடைய ஃபோன் லாக்கில் இருந்தாலும் ஹேக்கர்களால் நம் ஃபோனை ஆக்ஸஸ் செய்ய முடியும்.

ஒவ்வொருவரும் பேட்டர்ன்களை உருவாக்கும் போது க்ளிக் செய்தும், ஸ்க்ரால் செய்தும், மொபைலை தட்டியும் பிடித்தும் என ஏதோவொரு செயலைச் செய்கிறோம். அவை நுட்பமாக பதிவாகிறது. ஹேக்கர்கள் நாம் என்ன டைப் செய்தோம் என்று சாமர்த்தியமாக கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

இந்த ஆய்வு அறிக்கையை இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டியில் இன்று ஆய்வுக் குழு வெளியிடுகிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து ஆய்வாளர்கள் கூகுள் மற்றும் கம்பெனிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆனால் பிரச்னைக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

டாக்டர் மர்யம் கூறுகையில், மொபைல் பயனாளர்கள்தான் தற்போது இந்தப் பிரச்னையை கவனமாக கையாளவேண்டும். ஆப்களை டவுன்லோடு செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும், முக்கியமாக பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றி விட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com