காபிக்கு அடிமையா நீங்கள்?

காலை எழுந்தவுடன் செய்தித்தாளை ஒரு கையிலும், மற்றொரு கையில் சூடான
காபிக்கு அடிமையா நீங்கள்?

காலை எழுந்தவுடன் செய்தித்தாளை ஒரு கையிலும், மற்றொரு கையில் சூடான காபி டம்ளர் என்றுதான் தினமும் என் காலைகள் தொடங்கும். காலை வேளையில் ஒரு வாய் காபி குடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும் நிலை தான் நம்மில் பெரும்பாலோருக்கு. காரணம் காஃபீனின் தன்மை அப்படிப்பட்டது. காபி அல்லது டீ குடித்து உடம்பை பழக்கிவிட்டால் அந்த நேரத்துக்கு கிடைக்காவிட்டால் மனதை பாதித்துவிடும். மனதை மட்டுமா பாதிக்கும் தலைவலி வருவது போல் இருக்கும். அசதியாக இருக்கும். இன்னும் பலருக்கு உடல் நடுக்கம் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

காபி நல்லதா கெட்டதா என்று பல வாதங்கள் இவ்வுலகில் பல இடங்களில் நடந்திருக்கிறது. அது விளைவிக்கும் கேடுகள், அதற்கு இருக்கும் மருத்துவ குணங்கள் என்று பலர் இதில் பிளவுபட்ட கருத்துடனே இருக்கிறார்கள். நீரிழிவு நோய், உடல் தளர்ச்சி போன்றவற்றிற்கு காஃபியைப் போன்ற மருந்தில்லை என்று சிலரும், இதய நோய்கள் புற்று நோய்களுக்கு முக்கிய காரணமே காஃபிதான் என்று சாடுவதற்கு சிலரும் போர்கொடியோடு தயாராக இருக்கிறார்கள்.

 உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஒரு கப் காபியில் 80 – 120 mg கஃபீன் (Caffine) அடங்கியுள்ளது. தேநீரில் 30-65 mg கஃபீன் உள்ளது. கஃபீன் என்ற வேதியப் பொருள் மூளையில் ஆல்பா அலைகளை தாக்கி மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை உடம்பையும் மனத்தையும் உற்சாகப்படுத்தி விழிப்புடன் வைத்திருக்கும். அந்த நான்கு மணி நேரம் முடிந்துவிட்டதும் டீ, காபியை நாடுகிறது மனம்.

கஃபீனுடன், டானின் (Tannin) என்ற வேதியப் பொருள் காபி, டீயில் இருக்கிறது. இந்த டானின் உணவில் உள்ள சத்துக்களை, முக்கியமாக இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உடம்பில் சேரவிடாமல் தடுக்கின்றது. உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் வரை, அல்லது உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவோ டீ, காபி குடிக்கக் கூடாது. ஆனால் நம்மில் எத்தனைப் பேர் சாப்பிட்டதும் டீ, அல்லது காபி என்று நாடுகிறோம். முக்கியமாக ரத்தச்

காபி உங்களை விழிப்புடன் வைக்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது, அதைக் குடித்தவுடன் உங்கள் பயம், கவலைகள் எல்லாம் விலகிவிட்டது போல் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே உங்கள் உடல் ‘இன்னும் கொஞ்சம் காபி வேண்டும்’ என்று அனத்தத் துவங்கிவிடும்.

சோகையில் பாதிக்கப்பட்டவர்கள் டீ, காபியை உட்கொள்ளக் கூடாது. கஃபீன் இதய துடிப்பை அதிகரித்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிப்பதால் இதய நோயாளிகளும் இதை தவிர்ப்பது நல்லது. எலும்புகளில் இருந்து சுண்ணாம்புச் சத்தை வெளியேற்றி எலும்புகளையும் பற்களையும் பலவீனப்படுத்துவதால் நல்ல ஆரோக்கியத்திற்கு இவற்றை தவிர்ப்பது நல்லது.

ஒரு நாளைக்கு இரண்டு கப் (அதாவது ஒரு கப் என்பது 100 ml ) அளவுடன் நிறுத்திவிட்டால் உடல்நலம் கெடாது. இந்த அளவை தாண்டிவிட்டால் நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். குடல்புண், மூட்டு வலி, அதிக உடல் பருமன், இருதய படபடப்பு என்று நோய்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு இரண்டு மாதங்கள் நீங்கள் காபியே அருந்தாமல் ஒதுக்கி வைத்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் காலை எழுந்தவுடன் நல்ல ஸ்ட்ராங்காக ஒரு காபி, அதிகமாக டிகாக்ஷன் சேர்த்து குடித்தீர்கள் என்றால் உங்கள் கைகள் நடுங்குவதை நீங்கள் உணர முடியும். இதுவே ஒரு ஆறு மாத காலம் தொடர்ந்து நீங்கள் காபி அருந்தி வந்தீர்கள், திடீரென்று ஒரு நாள் காபி வேண்டாம் என்று நிறுத்த முயல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அன்று உங்கள் முடிவை ஏற்க முடியாமல் உங்கள் உடல் தவிப்பதையும், மீண்டும் மீண்டும் காபி வேண்டும் என்று அது ஏக்கமாக நச்சரிப்பதையும் நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். அப்படி என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் காபி உங்களுக்கு பாதிப்பு விளைவிக்கிறதுதானே?

காபி வலுக்கட்டாயமாக பருகப்பட வேண்டிய ஒரு பானம் அல்ல. அதன் சுவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, என்றோ ஒரு நாள் ஒரு பெரிய குவளை நிறைய வேண்டுமானலும் குடியுங்கள். அதன் சுவையில் திளைத்திடுங்கள். ஒரு நாள் குடித்தால் பரவாயில்லை. ஆனால் தினம் தினம் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் அது பெரும் பிரச்சனைதான். ஒரு நாள் காபி கிடைக்காவிட்டாலும் அந்த நாளைக் கடக்கவே முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால், நிச்சயமாக நீங்கள் இப்பிரச்சனையை சரி செய்துக் கொள்ளத்தான் வேண்டும்.  

இந்த கஃபீன் கோடைக்காலத்தில் ஈரப்பதத்தை குறைத்து (dehydration) தாகத்தை அதிகரிக்கும். ஒரு முறை ஒரு தோழி என்னிடம் அதிக உடல் எடையை குறைப்பதற்கான ஆலோசனைக்காக வந்தார். அவர் என்னிடம் நான் காலையில் டிபன் கூட சாப்பிடுவதில்லை. வீட்டு வேலைகளை முடித்தபிறகு இரண்டு மணிக்கு சிறிய அலவு சாதம் தான் சாப்பிடுகிறேன். இரவு நேரமும் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி தான். ஏனோ தெரியவில்லை உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அவருடைய மருத்துவ மற்றும் டயட் வரலாற்றினை முழுமையாக எடுத்த பிறகு “நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி அல்லது டீ குடிப்பீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆறு அல்லது ஏழு சிறிய கப் என்று பதிலளித்தார். அந்த ஆறு கப்பில் குறைந்தபட்சம் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பார் என்றும் கூறினார். ஒரு தேக்கரண்டி சர்க்கரை 20 K cal அளிக்கிறது. இப்போது ஆறு தேக்கரண்டிக்கான கணக்கை நீங்களே போடுங்கள். முதலில் இந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு கூறினேன். ஒரே மாதத்தில் இரண்டு கிலோ எடையை குறைத்துவிட்டார் அந்த பெண்மணி.

இந்தப் பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாலுடன் இஞ்சி, அல்லது துளசி சேர்த்து தேநீராக தயாரித்து உண்டால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com