இந்திய மருத்துவமனையில் எடை குறைப்பில் அற்புதம் எதுவும் நிகழவில்லை, எல்லாமே பொய்; உலகின் அதிக எடை கொண்ட பெண்ணின் சகோதரி குற்றச்சாட்டு!

எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் செய்யும் போது நரம்பியல் குறைபாடுகள் வரும் என ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணருக்குத் தெரியாமலா இருக்கும்? அப்படியானால் அந்த மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகள் இருக
இந்திய மருத்துவமனையில் எடை குறைப்பில் அற்புதம் எதுவும் நிகழவில்லை, எல்லாமே பொய்; உலகின் அதிக எடை கொண்ட பெண்ணின் சகோதரி குற்றச்சாட்டு!

தரமான சிகிச்சை என்பது எதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது? மருத்துவரின் திறன், மருத்த்துவ மனையில் கிடைக்கக் கூடிய தொழில்நுட்பம் மிகுந்த உபகரண வசதிகள். இவை எல்லாமும் செர்ந்து தான் தரமான சிகிச்சை என்பது மெய்ப்படுகிறது. இதில் நோயாளியின் ஒத்துழைப்பு மற்றும் மருத்துவரின் பொறுப்புணர்வு இரண்டையும் கூட காரணிகளாகச் சேர்த்துத் கொண்டால் தவறில்லை. இதில் எது ஒன்றில் குறை இருந்தாலும் பெறப்படும் சிகிச்சை தரமானதாக இருக்க வாய்ப்பில்லை.

இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறோம் எனில்; உலகம் முழுதும் உடல் எடை குறைப்புக்காக மருத்துவமனைகளுக்குச் சென்று ஒபிஸிட்டி சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி எடை குறைப்பு சிகிச்சை எடுத்துக் கொள்வோரில் கணிசமானோர் அதிருப்தியுடன் திரும்புவதும், தாம் சிகிச்சை எடுத்துக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் குறித்து அதிருப்தியுடன் ஊடகங்களில் பேட்டி அளிப்பதும் கூட பல சமயங்களில் நேர்ந்து விடுகிறது. அப்படி சமீபத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பவர் யார் தெரியுமா? 

அவர் எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது அப்துலாட்டி. உலகிலேயே மிக அதிகமான எடை கொண்ட பெண் என கருதப்படும் இமான் தனது எடை குறைப்பு சிகிச்சைக்காக தேர்ந்தெடுத்த நாடு இந்தியா. இந்தியாவில், மும்பையில் இருக்கும் சைஃபீ மருத்துவமனையில் கடந்த ஃபிப்ரவரி மாதம் இமான் அட்மிட் ஆனார். இங்கு பிரபல உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மருத்துவரான முஃபஸல் லக்டவாலாவின் மேற்பார்வையில் சுமார் 500 கிலோ எடையுடன் எடை குறைப்பு அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார் இமான். உலகின் அதிக எடை கொண்ட பெண் என்பதால் அவர் சிகிச்சைக்காக அட்மிட் ஆனது முதலே மருத்துவமனையின் பெயரும், இமானின் பெயரும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரும் இந்தியா மட்டுமல்ல உலகின் அனைத்து ஊடகங்களிலும் செய்தியானது.

சிகிச்சை எடுத்துக் கொண்ட இடைப்பட்ட நாட்களில் இமானின் உடல் எடை, அவர் விரும்பியபடி விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. இமான் தன்னால் இருக்கையில் அமர முடிய வேண்டும் என ஆசைப்பட்டார். அதிக எடை காரணமாக அவரால் இருக்கையில் அமர முடிந்ததில்லை. எப்போதும் படுத்துக் கொண்டே இருந்த நிலை மாறி தற்போது இமான் இருக்கையில் அமர்ந்து கொள்ளும் அளவுக்கு அவரது உடல் எடை எங்களது சிகிச்சையால் குறைந்திருக்கிறது எனவும், தற்போது இமான் சிகிச்சையை முடித்துக்கொண்டு அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இமானின் சகோதரி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவரின் சிகிச்சை முறைகளைக் குற்றம் சாட்டி ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ மூலம் அவர் தெரிவிக்க விரும்புவது; “உலகில் எங்குமே அற்புதமான உடல் எடை குறைப்பு என்றெல்லாம் எதுவுமில்லை. இவர்கள் சொல்வது அனைத்தும் பொய். என் சகோதரி உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டது முதல் அவருக்கு தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நரம்பியல் குறைபாடுகளில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். மார்ச்சில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு திடீர் திடீரென வலிப்பு நோய் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த குறைபாடுகளை எல்லாம் சரி செய்யாமல் இமானை எகிப்துக்கு திருப்பி அனுப்பி தனது தவறுகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறது மருத்துவமனை நிர்வாகம்”. என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் இமானின் சகோதரி. 

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மருத்துவர் லக்டவாலா; “அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இமான் என்னிடம் சிகிச்சைக்கு வரும் போது, இருக்கையில் உட்காரும் அளவுக்கு எனது உடல் எடை குறைய வேண்டும் என்றார். நான் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் சொன்னதை செய்து முடித்திருக்கிறேன். இமான் முன்பிருந்ததை விடவும் நன்றாகவே எடை குறைந்திருக்கிறார். ஆனால் தற்போது அவருக்கு வந்திருக்கும் பாதிப்புகளுக்கு காரணம் நரம்பியல் தொடர்பான பிரச்னைகளே. அது எனது மேற்பார்வையில் வராது. ஆகவே அவர்களது குற்றச்சாட்டை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. அதோடு இமானின் குடும்பத்தினர் எனது சிகிச்சை முறையையும், எனது மருத்துவமனையையும் குறை கூறி ஒரு வீடியோவை பொதுவெளியில் வெளியிட்டிருக்கின்றனர். எகிப்திய தூதரகம் வரை சென்றிருக்கிறது அந்த வீடியோ. எகிப்திலிருந்து இமான் சிகிச்சைக்காக இந்தியா வர யாரெல்லாம் உதவினார்களோ அவர்கள் அனைவருக்கும் இன்று இமான குடும்பத்தாரால் அவமானம் நேர்ந்திருக்கிறது. இவர்களது செயல் அவர்கள அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்” என்றார்.

இதற்கிடையில் இமானின் சகோதரி சிமா வெளியிட்ட வீடியோ பதிவில்; இவ்விதம் கூறுகிறார், இந்த மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தங்களது நோயாளிகளைப் பற்றி எந்த வித அக்கறையுமில்லை. எடை குறைப்பு சிகிச்சையில் தாங்களே சிறந்தவர்கள் என வெளிச்சமிட்டுக் காட்டும் செயற்கைத் தனமே இவர்களிடம் மிகுந்திருக்கிறது. ஆனால் அவர்களது பெருமைகளுக்குத் தக்கவாறு இமான் 240- 260 கிலோ வரை எடை குறைந்து விடவில்லை. நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள், கடந்த முறை அறுவை சிகிச்சை செய்த நாளில் இருந்து இமான் இப்படி படுத்த படுக்கையாகவே தான் இருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட கடுமையான மருந்துகளால் மூளையின் செயல்திறன் பாதிப்படைந்து இன்று ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இமான் உடல் எடை எதிர்பார்த்த அளவை விட நன்றாகவே குறைந்து விட்டது. அவர் ஊர் திரும்பலாம் என்றெல்லாம் சொல்லி டாக்டர் முஃபஸல் லக்டவாலா எங்களை ஏமாற்றி விட்டார். அவர் ஒரு பொய்யர். இமானின் உடல்நிலை தற்போது மிகுந்த ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் தப்பித்து விட நினைக்கிறது மருத்துவமனை நிர்வாகம். உலகின் அதிக எடை கொண்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறோம் என்று பெருமை தட்டிக் கொள்ளவே இந்த மருத்துவமனை இமானுக்கு எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளதே தவிர உண்மையில் நோயாளியின் நலனுக்காக அல்ல! இவர்களது அறுவை சிகிச்சைகளால் விளைந்த பல்வேறு பக்க விளைவுகளால் தற்போது இமான் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறார்.

மார்ச் மாத அறுவை சிகிச்சைக்குப் பின் இமானுக்கு சி.டி ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்த போது; அந்த வசதிகள் எல்லாம் இந்த மருத்துவமனையில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். அது மட்டுமல்ல டாய்லட் வசதி கூட இந்த மருத்துவமனையில் இல்லை. இவர்களை நம்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்த நோயாளிகளை இவர்கள் நடத்தும் விதம் மிக மோசமானது. இவர்கள் பொறுப்பற்றவர்கள் என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் இமானின் சகோதரி சிமா.

இந்த விசயத்தைப் பொறுத்தவரை இரு நாடுகள் சம்பந்தப் பட்டுள்ளன. எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு எடை குறைப்பு அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார் இமான். சிகிச்சையில் மருத்துவருக்கும், நோயாளிக்கும் என்ன விதமான உடன்படிக்கைகள் இருந்தாலும் கூட அதன் முடிவு என்பது நோயாளியின் நலன் என்பதாகவே இருக்கக் கூடும். இமான் விசயத்தில் மருத்துவர் லக்டவாலாவின் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை.

எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் செய்யும் போது நரம்பியல் குறைபாடுகள் வரும் என ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணருக்குத் தெரியாமலா இருக்கும்? அப்படியானால் அந்த மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகள் இருக்க வேண்டுமே! நோயாளியின் உடல் நிலையைப் பொறுத்து தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமே தவிர, அவரது விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை செய்தேன். அவர் இருக்கையில் உட்கார வேண்டும் என்றார். அதை பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை நாற்காலியில் உட்காரும் வகையில் எடை குறைப்பு செய்து விட்டேன் என்று கூறுவதெல்லாம் ஒரு பொறுப்பான மருத்துவர் கூறக் கூடிய பதிலாகத் தெரியவில்லை.

முற்றிலுமாக மருத்துவரை மட்டுமே குறை சொல்வதற்கில்லை, சிடி ஸ்கேன் வசதி கூட அந்த மருத்துவமனையில் இல்லை என்றால் நாடு தாண்டி இங்கு சிகிச்சைக்காக வந்தவர்களின் நம்பிக்கையை என்னவென்று சொல்ல? அவர்கள் முன்பே தாங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகும் மருத்துவமனை குறித்தும், அதன் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் அறிந்து கொண்டு இங்கே வந்திருக்க வேண்டாமா? இப்போது பாதி சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனை குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் இத்தனை குறை கூறத் தெரிந்தவர்கள் முன்பே அதைச் சோதித்த பின் இங்கே சிகிச்சைக்கு வருவது தானே முறை?! இவர்கள் இருவரில் குறை இரு தரப்பிலும் தான் இருப்பதாகத் தெரிகிறது. எது எப்படியாயினும் இந்தியாவுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக வந்திருக்கும் இமான், தனது பக்க விளைவுக் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டு நலமுடன் நாடு திரும்புவார் என்று நம்புவோமாக!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com