பாகுபலி-2: ஒரு போஸ்ட் கார்டில் எழுதத் தக்க கதையை திரைப்பட வரலாற்றுப் புரட்சிகளில் ஒன்றாக்கிய திறமைக்கு ராயல் சல்யூட்!

பிரபாஸை ஒரு ராஜகுமாரனாக இதை விட அருமையாகச் சித்தரிக்க வேறு எந்த இயக்குனராலும் முடியாது. வெறுமே கிரீடம் சூடி, அரச உடைகளை அணிந்து அணி புனைந்து கொண்டவர்கள் எல்லோரும் ராஜாவாகி விட முடியாது.
பாகுபலி-2: ஒரு போஸ்ட் கார்டில் எழுதத் தக்க கதையை திரைப்பட வரலாற்றுப் புரட்சிகளில் ஒன்றாக்கிய திறமைக்கு ராயல் சல்யூட்!

பாகுபலி தி கன்குளூஸன்... படத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க வேண்டுமெனில் It's a magic between the Hero and the Director. அவ்வளவு தான். தமிழில் ஒரு சொல் வழக்குண்டு; திரைப்பட விமர்சனங்களில் பொதுவாக ஹீரோ, ஹீரோயினுக்கு நடுவுல இருக்கற கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா இருந்தது என்பார்கள். //நன்றாக இருந்தால் மட்டும்!!!// அப்படிச் சொல்வதென்றால் பாகுபலியைப் பொறுத்தவரை இயக்குனருக்கும், ஹீரோவுக்குமான கெமிஸ்ட்ரி பெர்ஃபெக்ட் ரகம்! பிரபாஸை ஒரு ராஜகுமாரனாக இதை விட அருமையாகச் சித்தரிக்க வேறு எந்த இயக்குனராலும் முடியாது. வெறுமே கிரீடம் சூடி, அரச உடைகளை அணிந்து அணி புனைந்து கொண்டவர்கள் எல்லோரும் ராஜாவாகி விட முடியாது. அதற்கென ஒரு உடல்மொழி வேண்டும். ஒரு மனிதனின் சர்வாங்கமும் ராஜனாகப் பொருந்தி நின்றால் மட்டுமே ரசிகர்கள் தங்கள் மனதில் வரித்த ராஜா வேடம் பூர்த்தி அடையும். பிரபாஸ் அதை வெகு திறமையாகப் பூர்த்தி செய்திருக்கிறார். ராஜமெளலியின் அதி சாகஸத் திரைக்கதை அந்த மாயாஜாலத்தை பழுதின்றி நிகழ்த்திக் காட்ட அருமையாகத் துணை செய்திருக்கிறது. இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்துக்காக பிரபாஸ் நான்கரை ஆண்டுகள் தனது சினிமா எதிர்காலத்தைப் பற்றித் துளியும் கவலையின்றி உழைத்தது வீணே அல்ல! இன்று பிரபாஸ் இந்தியாவின் எந்த மூலையில் இருக்கும் குக்கிராமத்துக்குச் சென்றாலும் கூட அவர் அங்கிருப்போரால் பாகுபலியாக அடையாளம் காணப்படுவார் என்றே நம்பலாம்.

ராஜமெளலியின் திரைப்படங்களைப் பொறுத்தவரை எனக்கொரு விசயம் ஆரம்பம் முதலே மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகிறது. மனிதர் தனது எல்லாத் திரைப்படங்களிலுமே தனது ஹீரோக்களுக்கு என்றே பிரத்யேகமான ஆயுதங்களைக் கற்பனை செய்து உருவாக்குகிறார். 120 ரூபாய் டிக்கெட் செலவு செய்து தியேட்டரில் வந்து உட்காருகிற ரசிகனை இது மாதிரியான பிரத்யேக முயற்சிகள் எல்லாம் தான் ஆச்சரியப்படுத்துகிறது. ராஜ மெளலியின் சிம்மாத்ரியில் ஹீரோ பரசுராமரின் கோடலி போன்ற ஏதோ ஒரு ஆயுதம் ஏந்தி நிற்கும் போஸ்டர்களைப் பார்த்திருக்கிறேன். அந்தப் படம் தமிழில் விஜயகாந்த் நடிக்க கஜேந்திராவானது. ஆயுதம் காண ரெஃபரன்ஸ் தேவைப்படுபவர்கள் தயவு செய்து சிம்மாத்ரி என்றே கூகுளில் தேடுங்கள். அப்புறம் கஜேந்திராவில் கோடலி ஏந்திய வயதான விஜயகாந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. விக்கிரமார்க்குடுவில் ஹீரோவின் ஆயுதம் சற்றேறக்குறைய சக்ராயுதம் போலவே தோற்றமளிக்கும் பிளம்பர் ரிஞ்ச், பாகுபலி- 1 ல் தானொரு ராஜகுமாரன் என்றறியாத நிலையில் சிவு மூங்கிலை உடைத்துத் தயாரிக்கும் மெல்லிய வில்லும், அம்பும், காளகேயர்களுடனான போரில் அமரேந்திர பாகுபலி தனது சொந்த முயற்சியில் கண்டடையும் வெடி மருந்து தடவப்பட்ட கூடாரத் துணி இவையெல்லாமும் கூட புதுமையான ஆயுதங்கள் தான். பல்லாள தேவனுக்காக வடிவமைக்கப்பட்ட சுழலும் சக்ராயுதம் பொருத்தப் பட்ட தேர், ஓடும் குதிரையில் ஏறி அமர்ந்து இரு ஈட்டிகளுடன் போரில் ஈடுபடும் காட்சிகள் இவை எல்லாமும் கூட தென்னிந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல மொத்த இந்திய ரசிகர்களுக்குமே புதுமையாகத் தான் இருந்திருக்கும் என அனுமானிக்கிறேன். 

படத்தின் போர்க் காட்சிகள்:

பாகுபலி- 1 ஐப் போலவே 2 ஆம் பாகத்திலும் போர்க்காட்சிகளை விவரிக்க சொற்களே கிடையாது. அவை காணக் காணத் திகட்டாத காட்சி இன்பம். போர்க்காட்சிகளில் முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்குமான ஒரே ஒரு வித்யாசம் என்னவெனில் காளகேயர்களுடனான போர் சமவெளியில் நடப்பதாகக் காட்டப்படும், அதே குந்தளத்தில் நடக்கும் போர் மலை மீதுள்ள ஒரு சிற்றரசில் நடைபெறும் குறும் போர். இரண்டு விதமான போருக்கு நடுவில் இருக்கும் வித்யாசத்தை படத்தை ஊன்றிக் கவனிப்பவர்கள் தவற விடவே முடியாது. குந்தளத்துப் போரில் எதிரிகளைத் தாக்கி அடக்க காளைகளின் கொம்புகளை பந்தங்களாக்கி போரில் ஈடுபடச் செய்வதல்லாம் அபார கற்பனை வளம். 

இதுமட்டுமல்ல இறுதியில் பல்லாள தேவனுக்கும், மகேந்திர பாகுபலிக்குமான போரில் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டதும் அகழியைத் தாண்ட பாகுபலி பின்பற்றும் நூதனம் பார்க்கும் எவரையும் சபாஷ் என விசிலடிக்கத் தூண்டக் கூடும். முதற்பாகத்தில் கேடயங்களை வைத்து கோட்டைக் கவச முகப்பு உருவாக்கும் உத்தியைப் பின்பற்றினார்கள் எனில் அதற்கு சற்றும் சளைக்காமல் இரண்டாம் பாகத்தில் அகழி தாண்டி வீரர்களை கோட்டைக்குள் அனுப்ப பனைமரத்தையும், கேடயங்களையும், வீரர்களையுமே ஆயுதங்களாகப் பயன்படுத்தி இதில் ஒரு உத்தியைப் பின்பற்றி இருக்கிறார்கள். அதன் அருமையை உணர வேண்டுமானால் வாசிப்பது போதாது. நீங்கள் படத்தை திரையில் கண்டே தான் தீர வேண்டும். உங்கள் வீட்டு வரவேறபறையில் இருக்கும் ஸ்மார்ட் டி.வி யில் அல்ல 90 MM     ஸ்க்ரீனில் பாகுபலியைக் காண்பதே பாகுபலிக்கு நாம் செய்யக் கூடிய உகந்த நீதியாக இருக்க முடியும். 

காட்சிகளைப் பற்றி இத்தனை புகழும் போது நடுவில் ஒரு வார்த்தை படத்தின் கதையைப் பற்றியும் சொல்லி விடுவது உத்தமம். அப்புறம் நீங்கள் கதை எங்கே என்று தேடத் துவங்கினால் அது பாட்டியிடமிருந்து திருடி காக்கா தின்ன முயன்று நரிக்கு பறி கொடுத்து ஏமாந்த அரதப் பழசான வடை என்பதை எளிதாகப் புரிந்து கொண்டவர்கள் ஆகி விடுவீர்கள். ஆம்... பாகுபலியைப் பொறுத்தவரை கதையில் புதுமை என்ற ஒன்றெல்லாம் எதுவுமே இல்லை. இது ஒரு ராஜா காலத்திய படம். அதை மட்டுமே ராஜா மெளலி உறுதியாகப் பற்றிக் கொண்டார். ஒரு ராஜா எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும். நமக்குத் தெரிந்து நமது ராஜாகாலக் கதைகள் காலம் காலமாக நமக்கு எப்படிச் சொல்லப்பட்டு வந்தனவோ... அதை துளியும் பிசகாமல் ராஜமெளலியும் சொல்லி இருக்கிறார். அவ்வளவே.

கதை:

ஒரு நல்ல அரசன் என்பவன் தனது பிரஜைகளுக்குத் தந்தையாக இருப்பான். அப்படிக் கருதப்படுவான். எதிரி அவனை ஏமாற்றினாலும் மக்கள் அவன் பக்கமே நிற்பார்கள். சமயம் வரும் போது அவனை ஆட்சி பீடத்தில் அமர்த்த வருடங்கள் பல தாண்டியும் காத்துக் கிடப்பார்கள். இடையில் அரசனாகப் பட்டவன் தாய் மீது பாசம் கொண்டவனாக இருக்கலாம், தன் மனதுக்கு உகந்த பெண்ணை காதலிக்கலாம், வாரிசுகளை உருவாக்கலாம். ஆனால் எல்லாவற்றும் நடுவில் எந்த நேரத்திலும் போரிடத் தயங்காதிருக்க வேண்டும். முகர்ந்து பாராமலே ஆபத்துகளின் திசைகளை அடையாளம் காணும் பெருந்திறன் கொண்டவனாக அவன் அமைய வேண்டும். பாகுபலி அப்படித்தான் இருக்கிறான். 

வசனம்:

இந்தப் படத்தில் இன்னொரு பெரிய நிம்மதி, வசனங்கள்... அந்தக் கால அரச படங்களைப் போல பத்தி, பத்தியாக வசனங்களைக் கொடுத்து ஜவ்வாக இழுக்காமல் இரண்டொரு வாக்கியங்களுக்கு மேல் இந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரமும் பேசுவதில்லை. ஆனாலும் இந்த ரத்தினச் சுருக்கமான வசனங்கள் பல இடங்களில் படத்துக்கு துணை செய்தாலும், வெகு சில இடங்களில் இது போதாதோ! எனும் உணர்வையும் எழுப்பின. இந்தப் படத்தின் வசனத்தைப் பொறுத்தவரை இது ஒரு முரண்!

கொரியோகிராபி:

கொரியோகிராபி என்று எடுத்துக் கொண்டால் பாகுபலி ஒன்றில் ‘மனோகரி’ பாடலில் கொரியோகிராபி வெகு பிரமாதமாக இருக்கும். ராஜமெளலியின் முந்தைய படங்களில் ஒன்றான மக தீராவின் ஆசை ஆசை ஆசை மகதீரனைத் தொட பாடலுக்கு நம்ம ஊர் சிவசங்கர் மாஸ்டர் தான் கொரியோகிராபி. அந்தப் பாடலின் கொரியோகிராபிக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மனோகரி பாடலுக்கும் அப்படி ஏதாவது விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பு எனக்கிருந்தது. அத்தனை அருமையான கொரியோகிராபி அது. ஆனால் பாகுபலி- 2 வில் அப்படியான ஆளை அசத்தும் பிரமிக்கத் தக்க கொரியோகிராபி என எதுவுமிருந்ததாகத் தோன்றவில்லை. மோசமென்றும் சொல்ல முடியாது அதற்காக அசரடிக்கவும் இல்லை.

காஸ்டியூம்:

காஸ்டியூம் டிசைனிங் எடுத்துக் கொண்டால் ரமா ராஜமெளலியே ஒத்துக் கொண்டபடி இது அமர்சித்ர கதா ஸ்டைல். இதில் ஹீரோ, ஹீரோயின், பிரதான கதாபாத்திரங்களுக்கான உடைகள் எல்லாம் அபாரமான வடிவமைப்புகள். சிவகாமி தேவியின் உடையலங்காரத்தில் இருக்கும் மெஜஸ்டிக் லுக் அந்தப் பாத்திரத்துக்கான நியாயம். 

காஸ்டிங்:

மகிழ்மதியின் ஈடு இணையற்ற ராஜதந்திரி ராஜமாதா சிவகாமி தேவி. அவளது கருணையில் உயிர் கொள்கிறான் அமரேந்திர பாகுபலி. மகாபாரதம் போலவே ஊனமான மூத்த சகோதரனை விலக்கி ஆரோக்கியமான இளையவருக்கு பட்டம் கட்டப்படுவதால் ஆரம்பம் முதலே சினத்தில் மூழ்கித் தவிக்கும் பெரிய தந்தையார் பிங்கல தேவர். இதில் பிங்கல தேவர் கதாபாத்திரம் சகுனி, திருதராஷ்டிரன் இருவரது கதாபாத்திரங்களையும் இணைத்து ஒருவரே என உருவாக்கப்பட்டுள்ள விதம் அருமை. கூடவே அரியாசனத்தின் அடிமையாக ராஜ விசுவாசியான கட்டப்பா. கட்டப்பா கதாபாத்திரம் எனக்குப் பல விதங்களில் விதுரரையும், பீஷ்மரையும் ஒரு சேர ஞாபகப் படுத்துகிறது. படம் பார்த்த மற்ற எவருக்கும் இப்படித் தோன்றியதோ என்னவோ. ஆனால் ராஜ விசுவாசியாக அவர் பல்லாள தேவன், பிங்கல தேவன் கூட்டணியைப் பொறுத்துப் போவது கெட்டவனே ஆனாலும் ராஜ விசுவாசியாக துரியோதனன் பக்கம் நிற்கும் பீஷ்மரை நினைவூட்டுகிறது. முதல் பாகத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க நடமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவந்திகாவுக்கு இந்தப் பாகத்தில் வேலையே இல்லை. ஆனால் அனுஷ்காவுக்கு இரண்டாம் பாகத்தில் மிக அருமையான வேடம். அம்மா அனுஷ்காவை விட யுவராணி அனுஷ்கா தான் அப்படியே மனதில் பச்சக் என ஒட்டிக் கொள்கிறார். அழகு அனுஷ்கா வயதான கதாபாத்திரத்தை விட யுவராணியாக வரும் போது கதைக்கு மேலும் வலிமை கூட்டுகிறார். அதைத் தாண்டி அனுஷ்காவின் பாத்திரப் படைப்பில் புதுமை என எதுவுமில்லை. வீர, தீர, பராக்கிரமம் நிறைந்த மகாப்பெரிய மகிழ்மதி தேசத்தின் யுவராஜனான அமரேந்திர பாகுபலியின் மனதை ஒரு சிற்றரசின் யுவராணி கவர வேண்டுமெனில் அவளுக்குள் உறைந்திருக்க வேண்டிய அத்துணை பராக்கிரமங்களும், சண்ட, பிரசண்டங்களும் நிறைந்த துணிவு மிக்க இளவரசியாக அனுஷ்கா கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இனி தென்னிந்திய நடிகைகளில் மகாராணி வேடம் ஏற்கத் தகுந்த ஹீரோயின் எவர் எனக்கேட்டால் யார் வேண்டுமானாலும் தயங்காமல் அனுஷ்காவைக் கை காட்டலாம்.

இசை:

ஒரு ஊரில் ஒரு ராஜா’ பாடல் வெறுமனே ஆடியோவாகக் கேட்கும் போது எழுப்பாத மாயக் கனவுகளை எல்லாம் அதே பாடல் திரையில் காட்சியாக விரிந்து ஒலிக்கும் போது ஓங்கிக் குட்டி எழுப்புகிறது. அது காட்சிகளின் வழியாக கதை சொல்லி மயக்கும் ராஜமெளலி பிராண்ட் பாடல். குந்தளத்திலிருந்து மகிழ்மதிக்குச் செல்லும் நீர்வழிப் பயணத்தில்... மிதக்கும் நதியிலிருந்து வானுக்குத் தாவும் அன்னப் பட்சியிலேறி, படம் பார்க்கும் நாமும் பாகுபலியோடும், தேவசேனாவோடும் மேகப் பொதிகளில் மிதந்தவாறு இந்தப் பாடலோடு எடையற்றுப் பறக்கலாம். காட்சிகளற்று ஒலிக்கும் போது அது உயிரற்ற வெறும் பாடலே. பாகுபலியைப் பொறுத்தவரை எல்லாப் பாடல்களுமே காட்சிகளுக்காக எழுதப்பட்டவை. பாடல்களுக்காக காட்சிகள் என்பதே இதில் கிடையாது. எம்.எம். கீரவாணியின் இசை ராஜமெளலியின் காட்சி அமைப்புகளால் மட்டுமே உச்சம் தொடுகிறது எனில் அது நிஜம். ஏனெனில் படத்தின் ஆடியோ ரிலீஸ் சமயத்தில் இந்தப் பாடல்கள் பெரிதாக எந்த விதமான ஈர்ப்புகளையும் எழுப்பியிருக்கவில்லை. ஆனால் அதே திரையில் காட்சிகள் விரிய, விரிய அதன் பிரமாண்டத்தோடு ஒன்றிக் காணும் போது இசை மாயாஜாலம் செய்கிறது.  பலே, பலே, பலே பாகுபலி பாடலும் அப்படியே. இப்படியெல்லாம் அழகான காட்சிகளை கற்பனை செய்ய ராஜமெளலிக்கு என்று தனியாக மூளை எக்ஸ்ட்ராவாக வேலை செய்கிறதோ என்னவோ?! 

படத்தின் முத்திரைக் காட்சிகளென நான் நினைப்பவை:

முகுந்தா... பாடலின் இறுதியில் பாகுபலி பிருந்தாவனக் கண்ணனாக மரக்கிளையில் உறங்கும் காட்சி. இதெல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லை. ஆனால் VFX ல் கலக்கி இருக்கிறார்கள் இந்தக் காட்சிக்கான பிரயத்தனத்தில்.

இரு அம்புகளை ஒரு சேர நாணேற்ற முயலும் தேவசேனாவுக்கு இரண்டல்ல மூன்று அம்புகளை ஒரு சேர நாணேற்ற அமரேந்திர பாகுபலி கற்றுத் தரும் போர்த் தருணம் ஏ கிளாஸ். இந்த டெக்னிக்குகளை எல்லாம் ஜெயமோகனின் வெண்முரசில் ஏகலைவன் கதையில் படித்திருந்தாலும் அது ராஜமெளலி படத்தில் காட்சியாக விரியும் அற்புதத்தை சொற்களால் விளக்கவே முடியாது.

எதிரிகள் நெருங்கி முற்றுகையிடப்பட்டு விட்ட ஆபத்தான தருணத்தில் குந்தள யுவராஜன் குமார வர்மாவுக்கு அமரேந்திர பாகுபலி ஓரிரு வார்த்தைகளில் நம்பிக்கையூட்டி விட்டு தோளில் மாட்டிய அம்பறாத் தூளியுடன் அரண்மனை பலகணி முற்றத்திலிருந்து குதித்தோடி இருளில் மறையும் காட்சி.

இவை மட்டுமல்ல இவை போலவே ரசிகர்களைத் திணறடிக்கும் இன்னும் பல காட்சிகளை உள்ளடக்கியது பாகுபலி-2. இது முழுக்க முழுக்கவே கதையை நம்பி எடுக்கப்பட்ட படமே இல்லை. அது காட்சிகளை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்பதை  படம் பார்க்கும் அனைவராலுமே உணர முடியும். 

கலை:

ஆகவே கதையின் மிகப்பெரிய வலு என்னவோ ஃப்ரேம், ஃப்ரேமாக கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகள், காட்சிகள் மேலும் காட்சிகள் மட்டுமே. படம் தொடங்கிய நொடி முதலே இந்தக் காட்சிகளுக்கான ரேஸிங் தொடங்கி விடுகிறது. அதற்குத் தோதாக படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். ஹீரோவுக்கான ஓபனிங் சீனில் பிரமாண்டத் தேரை இழுத்துக் கொண்டு ஓடி வரும் பாகுபலி, மதம் கொண்ட யானையை அடக்கி அதன் துதிக்கையில் ஏந்தப்பட்ட வில்லில் எரி ஈட்டி கொண்டு நாணேற்றும் பாகுபலி எனக் காட்சிகளின் மாய வசீகரத்தில் சிக்கும் நம்மை மேலும் மேலுமென ஆழத்துக்கு இழுத்துச் செல்கிறது படத்தின் அழகழகான அரங்க வடிவமைப்புகள், மகிழ்மதியின் எல்லையில் மிகப்பிரமாண்டமாய் நிற்கும் கல் யானை. நதியில் மிதக்கும் அன்னப் பட்சிப் படகு, பட்டாபிஷேகம் செய்ய நிர்மாணிக்கப்பட்ட கற்குதிரைகள் இழுக்கும் தேர் போன்ற பீடம், குந்தளர்களின் எழில் கொஞ்சும் அரண்மனை நிலா முற்றம். மகிஷ்மதி அரண்மனை என ஒவ்வொன்றுமே பிரமாண்டம் மட்டுமல்ல கண்ணுக்குத் திகட்டாத விருந்து. 

படத்தின் திருஷ்டி பொட்டு:

ராஜா மாதா சிவகாமி தேவியின் பாத்திரப் படைப்பை  இரண்டாம் பாகத்தில் இப்படி ஏனோ தானோ வென படைத்திருக்கத் தேவையில்லை. மதி நுட்பம்மிக்க ராஜமாதா தனது நயவஞ்சகக் கணவனைக் நம்புவது கொஞ்சமும் ஒத்துக் கொள்ளும் படியாக இல்லை. அவள் ஆராய்ந்திருந்தால் கதை பின்னே வளராமல் தேங்கி நிற்க வேண்டியது தான் என்று நினைத்தார்களோ என்னவோ இயக்குனர் தரப்பில் ராஜாமாதாவை இந்த முறை அவர்கள் கம்பீரமாகக் காட்டினார்களே தவிர புத்திசாலியாகக் காட்ட முற்படவில்லை. அவளுக்கு இந்த முறை தான் பெற்ற மகனான பல்லாள தேவனின் மீது கொண்ட ஆழ்ந்த பாசம் கண்களை மறைக்கவே திரைக்கதையில் முதல் பொத்தல் விழுகிறது.

கட்டப்பா பாகுபலியைக் கொன்றது தான் முதல் பாகத்தில் மெகா டிவிஸ்ட்... ஆனால் இந்த மூன்றாண்டுகளுக்கு குறையாத காத்திருப்பை கொலைக்கான காரணம் பூர்த்தி செய்யவில்லை என்பது மெய். கட்டப்பாவுக்கு அரியாசனத்தில் இருப்பவர்கள் இடும் ஆணை தான் பிரதானம். தனிப்பட்ட உணர்வுகளோ, யோசித்துச் செயலாற்றும் சிந்தனையோ தேவைப்படாத பாத்திரப் படைப்பு அது எனத் தீர்மானித்து விட்டார்கள் போலும்.

அடுத்து பாகுபலியை விட வீரத்தில் சற்றும் குறையாதவனாக முதல் பாகத்தில் காட்டப்படும் பல்லாள தேவன்  இறந்து விட்ட அமரேந்திர பாகுபலியை கோடாலியால் சதக் சதக் என கொத்தித் தள்ளுவதெல்லாம் அந்தப் பாத்திரத்துக்கான நியாயமே இல்லை. பல்லா முதற்பாகத்தில் பெற்ற முக்கியத்துவத்தை இரண்டாம் பாகத்தில் பெறவில்லை. இறுதிப் போர்க்காட்சியில் மட்டுமே பல்லாவைக் கொஞ்சம் ரசிக்க முடிகிறது. 

பாடல்களுக்காக காட்சிகள் தாண்டியும் கீரவாணி  கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். காட்சிகள் இன்றி வெறுமே பாடல்களை மட்டும் ரசிக்க முடியவில்லை.

காஸ்டியூமில் போதும் என்றும், போதாது என்றும் தோன்றும் படியான ஒரு மனநிலையே நிலவியது. அந்தப்புறத்துப் பெண்களுக்கு ராஜாக்கள் காலத்தில் இத்தனை மடிப்புகள் வைத்து தைக்கப்பட்ட பஃப் கை ஜாக்கெட்டுகளும், தாவணிகளும் கொஞ்சம் ஒட்டாமல் உறுத்துகிறார் போலுள்ளது. பிரதான கதாபாத்திரங்களின் உடைகளைப் பற்றி வாயே திறக்கத் தேவையில்லை... தேர்வுகள் கன கச்சிதம்.

இன்னும் சொல்வதற்கு ஒன்றே ஒன்றுண்டு...

.

.

.

ஆம்...

படத்தை நீங்கள் வெள்ளித்திரையில் மட்டுமே காண முயலுங்கள். முடிந்த வரை அருமையான திரையரங்குகளின் அபாரமான ஸ்க்ரீன்களில். அது தரும் விஸுவல் டிரீட்டுக்கு ஈடு இணையே இல்லை. அதுவே இப்படத்தின் பிரமாண்ட வெற்றி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com