ஸ்டார் மேக்கர்! மறக்க முடியாத ஒரு திரை அனுபவம்!

சினிமா எனும் ஊடகத்தின் மீது தீராக் காதல் கொண்ட கலைஞன் கியுஸபே டொர்னடோர்
ஸ்டார் மேக்கர்! மறக்க முடியாத ஒரு திரை அனுபவம்!

சினிமா எனும் ஊடகத்தின் மீது தீராக் காதல் கொண்ட கலைஞன் கியுஸபே டொர்னடோர் (GIUSEPPE TORNATORE). அவரின் சினிமா பாரடிஸோ திரைப்பட ஆர்வலர்களால் மறக்க முடியாத திரைக்காவியம். ‘தி ஸ்டார் மேக்கர்’ அதனை தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் திரைப்படம். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1953-ல் இக்கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஜோ மொராலி என்பவன் சிசிலி நகரத்திற்குள் ஒரு பெரிய வேனில் அறிவிப்பு செய்தவாறு நுழைகிறான். ரோமில் உள்ள யூனிவர்சல் ஸ்டூடியோவில் புதிய திரைப்படத்திற்காக புதுமுகத் தேடலைத் தான் நடத்தவிருப்பதாகவும் அதிர்ஷ்டம் வேண்டுபவர்கள் ஸ்கீரின் டெஸ்ட் எடுக்கும் இடத்திற்கு 1500 லியருடன் வந்து சேருமாறும் பிட் நோட்டிஸ் மற்றும் ஒலிபெருக்கியில் செய்தியை பரப்புகிறான்.

அப்பாவி கிராம மக்களுக்கு இது புதுமையாக இருக்கிறது. எல்லாருக்கும் தாங்களும் திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என ஆசைப்படுகிறார்கள். கையில் 1500 லியர் வைத்திருந்தவர்கள் மாலையில் ஜோவின் கூடாரத்துக்குச் சென்று தங்களை ஸ்கீரின் டெஸ்ட் எடுக்குமாறு சொல்கிறார்கள். டாக்டர் மொராலி என அன்புடன் அழைத்து ஜோவை மரியாதையுடன் நடத்துகிறார்கள். சினிமாகாரனின் தோரணையுடன் அவன் ஒரு படி மேலே நின்று ஆட்களை அதட்டுவதும் பணம் இருப்பவர்களிடம் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுப்பதுமாக அவ்வூரில் சில நாட்கள் தங்குகிறான்.

ஜோ யாரைப் பார்த்த்தாலும், ‘கடவுளே. என்ன அற்புதமான முகம் உங்களுக்கு எனத் தொடங்கி அவரிடம் அகப்பட்ட பணத்தை வாங்கிக்கொண்டு ஸ்கீரின் டெஸ்டில் அவர்களுக்கு விருப்பமான டயலாக்கை பேசச் சொல்வான். அப்படி அவனிடம் வந்தவர்களில் ஆடு மேய்ப்பவன், டெய்லர் பெண், திருநங்கை, ராணுவ வீரன், திருடன், ஊமை என நம்பப்படுபவன், 112 வயது கிழவன், இளைஞன், இளம் பெண் ஆகியோர். எல்லாரையும் அவன் காமிரா கண் கொண்டு பார்க்கிறான். முதலில் ‘கான் வித் த விண்ட்’ எனும் திரைப்பட வசனத்தைப் பேசச் சொன்ன ஜோ அது அவனுக்கே சலிப்பாகிவிட எதை வேண்டுமானாலும் பேசுங்கள் ஆனால் சிறந்த முகபாவங்களை வெளிப்படுத்துங்கள் என்கிறான். ஆடு மேய்ப்பவன் நட்சத்திரங்கள் பற்றியும், டெய்லர் தன் இளமைப் பருவத்து வறுமைப் பற்றியும், திருநங்கை ஊரார் செய்யும் கேலியைப் பற்றியும், போர்வீரன் தன்னுடைய நாட்டைப் பற்றியும் தான் சந்தித்த போர் பற்றியும், திருடன் தன் வீரதீர சாகஸங்களைப் பற்றியும், பெருமையாக காமிரா முன் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு துளியை பெருமிதமாக அந்தக் காமிரா முன் அதீத முகபாவங்களுடன் காட்சிப்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலர் தங்களின் உள்ளார்ந்த விருப்பங்களையும், என்றும் தீராத சோகங்களையும், மறக்க முடியாத வலிகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒருவழியாக அவ்வூரிலிருந்து கிளம்பி பக்கத்து ஊருக்கு வருகிறான் ஜோ. அங்கு அவன் சந்திப்பது பீட்டா எனும் இளம் பெண்ணை. அவள் சர்ச்சில் வளர்ந்து வரும் சிறு பெண். கான்வெண்டைப் பெறுக்கி துடைத்து, அங்கேயே தங்கி தன் வாழ்வை கழித்துக் கொண்டிருப்பவளுக்கு ஜோவின் அறிவிப்பு பெரும் நம்பிக்கையை தருகிறது. எப்படியாவது சினிமாவில் நடித்து, வறுமையிலிருந்து தப்பித்து பெரும் பணக்காரியாகிவிட வேண்டும் எனக் கனவு காண்கிறாள். தன்னிடம் இருந்த 300 லியரை ஜோவிடம் தந்த போது அவளை அலட்சியப்படுத்தி துரத்தி விடுகிறான் ஜோ.

எப்படியாவது ஸ்கீரின் டெஸ்ட் செய்து தன் திறமையை நிரூபிக்க ஆசைப்பட்டு அவ்வூரின் மேயரிடம் செல்கிறாள் பீட்டா. இளம் பெண் அதுவும் பேரழகி அவள் மீது அந்த கிழவனுக்கு மோகம் ஏற்படுகிறது. 1500 லியர் அவள் கேட்டபோது தன் முன் உடையின்றி நின்றால் தருவேன் என்கிறான். உடனடியாக பணம் கிடைப்பதற்கு வேறு வழியில்லாத பீட்டா முதலில் பணத்தை தா என்கிறாள். பணத்தை வாங்கிக் கொண்டு அவன் சொன்னது போல் செய்ததும் கிழவனுக்கு ஆசை தலைக்கு ஏறுகிறது. அவளை பக்கத்தில் இழுக்க முயற்சிக்கையில் கோபம் கொண்ட பீட்டா அவனைத் திட்டி அங்கிருந்து வெளியேறுகிறாள். நேராக ஜோவிடம் வந்து ஸ்கீரின் டெஸ்ட் செய்யுமாறு சொல்கிறாள். காலையில் உன்னிடம் பணம் இல்லையே இப்போது எப்படிக் கிடைத்தது என ஜோ கேட்டதும் ஒருவன் உடலைக் காட்டினால் பணம் தருவேன் என்றான் அதுதான் காட்டிவிட்டு பணம் கொண்டு வந்தேன் என அப்பாவியாக சொல்கிறாள். பேரெழில் முகத்தில் படிந்திருக்கும் சோகத்தை காமிராவில் பதிவு செய்துகொண்டே வேறு என்ன செய்தான் என ஜோ கேட்டான். கிழவன் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவன் ஆனால் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன், என்கிறாள்.

அவளுடைய நீளமான முடியை முன்னே எடுத்துவிட்டு புருவங்களை திருத்தம் செய்த ஜோ அவளின் அசாதாரண அழகை புகழ்கிறான். உனக்கு யார் இருக்கிறார்கள் எனக் கேட்டான், யாருமில்லை, தான் ஒரு அனாதை, சர்ச்சில் தரை துடைத்து வாழும் தன்னை பலர் இப்படிச் செய்யச் சொல்வார்கள். அவசர பணத் தேவைக்கு அப்படி செய்துவிடுவேன், ஆனால் அதற்கு மேல் வேறு எந்த தவறும் செய்ததில்லை என்கிறாள். பேச்சை மாற்றிய ஜோ அவள் திரைப்படங்கள் பார்த்திருக்கிறாளா, அப்படியானால் எத்தகைய படங்கள் பிடிக்கும் எனக் கேட்கிறான். சிரித்தபடி சில படங்கள் பார்த்திருப்பதாகவும், தனக்கு காதல் படங்கள்தான் மிகவும் பிடிக்கும், அதிலும் முத்தக் காட்சிகளும் சந்தோஷ முடிவுகளும் கொண்ட படங்கள் மிகவும் பிடிக்கும் என்கிறாள். சிரித்தபடி கேமாராவை மூடிய ஜோ அவளிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து ரோமிலிருந்து செய்தி வரும் என்கிறான். நம்ப முடியாமல் விழிக்கும் அவளிடம் நீ பேரழகி, திறமை வேறு இருக்கிறது, நிச்சயம் திரும்பி வந்து உன்னை அழைத்துப் போகிறேன் என வாக்களித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

பீட்டா அவனுடைய வேனுக்குள் ஒளிந்து கொள்கிறாள். ஓரிடத்தில் வேன் நின்றதும் அவள் பின்னே ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்த ஜோ அவளை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்புவிடுகிறான். அவளின் அப்பாவித்தனமும் கள்ளமில்லா அன்பும் லேசாக அவனை அசைக்கிறது. ஆனால் நாடோடியான அவன் வாழ்க்கையில் மென் உணர்வுகளுக்கு இடமில்லை. அவள் சர்ச்சிற்கு திரும்பிப் போன போது சினிமாக்காரனோடு ஓடிப்போய்விட்டாய் புனிதமான இந்த இடத்தில் இனி உனக்கு இடமில்லை என மதர் சுப்பிரியர் சொல்லிவிடுகிறார். தன்னுடைய உடமைகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு ஜோவை தேடிச் செல்கிறாள். இதற்கிடையில் ஜோவை பணக்காரி போல் வேடமிட்ட ஒரு பெண்ணும் அவள் கணவனும் ஏமாற்றி அவனுடைய வேனையும் ஸ்கீரின் டெஸ்ட் செய்து வாங்கியிருந்த பணத்தையும் கொண்ட பெட்டியையும் திருடிச் சென்றுவிடுகிறார்கள்.

அழுது புலம்பியபடி பஸ்ஸில் அவர்களைத் தேடிச் செல்கிறான் ஜோ. பீட்டா அவனுடைய வண்டி என நினைத்து அதனை கைக்காட்டி நிறுத்துகையில் வேறு யாரோ அதில் இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு போலிஸீடம் சொல்லி அவனுக்கு வண்டியை மீட்டுத் தருகிறாள். போலீஸ் ஜோவிடம் உன் காதலியால்தான் களவு போன உன் உடமை கிடைத்தது எனவும் திகைத்த ஜோ யாரவள் என திரும்பிப் பார்த்ததும் ஒடோடி வந்து பீட்டா அவனை இறுக அணைத்துக் கொள்கிறாள். அங்கிருந்து புறப்பட்டு போனதும் அவளிடம் மறுபடியும் ஊருக்குப் போகச் சொல்கிறான் ஜோ. அவள் பிடிவாதமாக மறுக்கவே அவளை வற்புறுத்துகிறான். அவள் அழுது கொண்டே அவனுக்காக தான் பட்ட கஷ்டங்களைச் சொல்கிறாள்.

வண்டியை திருடர்களிடம் மீட்குப்போது தான் பட்ட அடிகளைச் சொல்லி அழுகிறாள். எல்லாம் அவனுக்காக என்கிறாள். ஏன் எனக்காக இப்படி அலைக்கழிகிறாய் என அவன் கேட்டபோது அவனை மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறாள். அவள் அன்பில் உருகிக் கரைந்து அக்கணத்திலிருந்து அவனும் அவள் மீது காதல் கொள்கிறான். தெளிந்த அவ்விரவின் வானத்தின் கீழ் அவர்களின் நெருக்கத்தைக் காண வெட்கப்பட்ட நட்சத்திரங்கள் மறைந்துகொள்கிறது. அதன் பின் அவனுடன் அவன் வேலையில் உதவியாளராக பொறுப்பேற்று அவனுடனே ஊர் ஊராகச் செல்கிறாள் பீட்டா. 

சினிமா மோகம் என்பது உலகம் முழுவதும் அனைத்துப் பிரிவு மக்களிடமும் இருக்கிறது. ஜோவின் அறிவிப்புக்களுக்கு எல்லா இடங்களிலும் பலத்த வரவேற்பு கிடைக்கிறது. ஒரு நாள் அவனை போலீஸ் சுற்றி வளைத்தது. முன்பு அவன் படம்பிடித்த அதிகாரி அவனை அடிக்கிறார். என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்வதற்கு முன் அவன் கைகளில் விலங்கிடப்படுகிறது. அவனுடைய படப்பெட்டியும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டு அவனை போலீஸ் வேனில் ஏற்றுகிறார்கள். பீட்டா கதறி அழுகிறாள், அவனை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுகிறாள். ஊர் ஊராக ஸ்கீரின் டெஸ்ட் எடுத்து ஸ்டார் மேக்கர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஜோ மொராலி உண்மையில் சினிமாவில் கடைநிலை ஊழியன் கூட கிடையாது. அவனுக்கும் யூனிவர்செல் நிறுவனத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது, அவன் ஏமாற்றுப் பேர்வழி எனத் தெரிந்து போலீஸ் அவனை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள்.

நீங்கள் கூடத்தானே என்னிடம் ஏமாந்தீர்கள் என அந்த அதிகாரியைப் பார்த்துக் கேட்கையில் அவர் வெறுப்புடன் ஆமாம் நானும் உன் ஆசை வார்த்தைக்கு பலியானவன் தான். 'எத்தனைப் பேர் உன்னிடம் தன் கனவுகளை தங்களின் எதிர்ப்பார்ப்புகளை, நம்பிக்கையை வைத்தார்கள் ஆனால் நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த அப்பாவிகளிடம் பணத்தை பறித்துக்கொண்டு உன்னை நம்பிய அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டாய் மொராலி' என்கிறார். அவனை ஜீப்பில் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கையில் அவன் தப்பிக்க முயல்கையில் போலீஸ் அவனை அடித்துத் துவைக்கிறார்கள். இதைப் பார்த்த பீட்டா அவனுக்காக கதறி அழுகிறார்கள். அவனை விட்டுவிடும்படி அவர்களிடம் மன்றாடுகிறாள். அவளைப் புறம் தள்ளிய காவலர்கள் அவனைக் கீழே தள்ளி காலால் மிதிக்கிறார்கள். முதலில் மருத்துவமனைக்கும், அதன் பின் சிறைக்கு அனுப்பப்படுகிறான் ஜோ.

இரண்டு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளி உலகைப் பார்க்கிறான் ஜோ. அவன் தேடும் ஒரே உயிர் பீட்டா. அவள் ஊருக்குச் சென்று அவள் இருப்பிடம் பற்றி விசாரிக்க, யாருக்கும் அவள் எங்கே சென்றாள் எனத் தெரியவில்லை. அவன் அந்த ஊரைவிட்டுப் போனபின் அவளையும் காணவில்லை என்றார்கள். மேலும் அவனால் ஏமாற்றப்பட்ட அந்த ஊர்மக்கள் அவனை ஒரு பூச்சியைப் போல் பார்க்கிறார்கள். ஒரே ஒரு ஹோட்டல்காரன் மட்டும் அவனுக்கு உணவளித்து உபசரிக்கிறான். பீட்டா மனநலக் காப்பகத்தில் இருக்கிறாள் எனும் தகவலை அறிந்து அங்கே விரைகிறான்.

நீளமான கூந்தல் கத்திரிக்கப்பட்டு அலங்கோலமாக இருக்கும் தன் காதலியைப் பார்த்து மன வேதனை அடைகிறான் ஜோ. அவள் திரும்ப திரும்ப தன் ஜோ இறந்துவிட்டான் என புலம்புகிறாள். அவனும் அவளும் வசதியாக பெரிய மாளிகையில் இருப்பதாகவும் அங்கு நீச்சல் குளம் இருக்கிறது என்றும் மன பிறழ்வு பெற்ற நிலையில் உளறுகிறாள் பீட்டா. அவளின் நிலையைப் பார்த்து கலங்கிய ஜோ, அவளிடம் மென்மையாக, 'ஜோ நீ நினைக்கும் அளவிற்கு நல்லவனில்லை, அந்த ஜோ நீ சொல்வது போல் இறந்துவிட்டான், நான் அவனின் நண்பன், சாகும் போது ஜோ உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்ளச் சொன்னான். நல்ல வேலை கிடைத்து கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன்' என அவளிடம் சொல்கிறான். அவனை உணர்ச்சியின்றி பார்த்த பீட்டா நன்றி சொல்கிறாள்.

கனத்த இதயத்துடன் அங்கிருந்து தன்னுடைய வேனில் கிளம்பிச் செல்கிறான். முடிவற்ற சாலையில் அவனுடைய புதுப்பயணம் துவங்குகிறது அவனுடைய மனத்திரையில் முன்பு ஸ்கீரின் டெஸ்ட் செய்தவர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் அதில் பொதிந்திருந்த வலியும் வேதனையும் காட்சியாக விரிகிறது. படம் நிறைவடைகிறது.

எதையாவது இழந்த பின் தான் அதன் அருமை தெரிகிறது. காதல் எனும் அற்புதமான உணர்வு ஏமாற்றிப் பிழைக்கும் ஜோவைத் திருந்தச் செய்கிறது. ஆனால் அதற்கு விலையாக அவன் காதலியை அவளின் கள்ளமில்லா சிரிப்பை இழக்கிறான். தான் செய்து வந்த இழி செயலை நினைத்து வருந்துகிறான். நம்பிக்கையின் துளி இன்னும் மிச்சமிருக்க வாழ்வைத் தேடிச் செல்கிறான்.

கேள்விகள் அதிகமின்றி மக்கள் ஏமாறும் ஒரே இடம் சினிமா மோகம், அதை கையில் எடுத்துக்கொண்டு தன் சாமர்த்தியமான பேச்சால் கதை நாயகன் நடத்தும் நாடகங்கள், இறுதியில் தான் வெட்டிய குழியில் தானே விழுந்து விடுகையில் மெளனமாக அதை ஏற்றுக் கொண்டு தண்டனை அனுபவிக்கையில், எல்லாம் இந்த வயிற்றுப் பாட்டுக்காகத்தானே என பரிதாபப்படத் தோன்றுகிறது. மனடத்தைக் கனக்கச் செய்யும் முடிவாக இருப்பினும் வாழ்வியலுக்காக ஒரு மனிதன் எப்படியெல்லாம் கரணம் அடிக்கிறான், எளிமையான ஒரு பெண்ணின் நேசம் அவனில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com