அப்துல் கலாம் - ஒரு சரித்திர நாயகன்!

வரின் சிலைக்கு அருகில் வைக்கப்படும் புனித நூல்களைக் காட்டிலும் அதிக பலனை நாட்டுக்கும், நமது வருங்கால சந்ததியினருக்கும் அளிக்கும். 
அப்துல் கலாம் - ஒரு சரித்திர நாயகன்!

ஒரு அரசர். அவர் ஒரு நல்ல மனிதர். மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் திடீரென்று இறந்துபோனார். மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். இறந்துபோன அரசரின் நினைவாக அவருக்கு தங்கத்தால் ஆன ஒரு பெரிய சிலையை நிறுவினர். சிலையைச் சுற்றி அவரின் புகழ்பாடும்விதமாக பல கல்வெட்டுகளையும் வைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

நடப்பவற்றையெல்லாம் சொர்க்கத்தில் இருந்து அரசர் பார்த்துக்கொண்டிருந்தார். நேராக கடவுளிடம் சென்றார்.

‘கடவுளே! என் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பைப் பாருங்கள். அவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன். அவர்கள் நிறுவியிருக்கும் தங்கச் சிலையில் நிரந்தரமாகத் தங்க எனக்கு அனுமதி கொடுங்கள்' என்று கேட்டார் அரசர்.

அரசரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் கடவுள். தங்கச் சிலை இருக்கும் இடத்துக்கு இருவரும் வந்தனர். வைக்கப்பட்ட தங்கச் சிலையைப் பார்த்து வியந்துபோனார் கடவுள்.

‘கடவுளே! பார்த்தீர்களா மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை' என்று பெருமையோடு சொன்னார் அரசர்.
சிரித்தார் கடவுள். அரசர் தன் பேச்சை தொடர்ந்தார்.

‘கடவுளே! சிலையைச் சுற்றி என்னைப் பற்றி புகழ்ந்து பல கல்வெட்டுகளை மக்கள் வைத்துள்ளார்கள். வாருங்கள் படிக்கலாம்' என்று சொன்னார் அரசர்.

கடவுள் பின் தொடர்ந்து சென்றார்.

‘எனக்கு கடவுள் பக்தி அதிகம். அதைப் பாராட்டி இந்த நாட்டு பக்திமான்கள் வைத்திருக்கும் கல்வெட்டு இது' என்றவாறு 
முதல் கல்வெட்டை காட்டினார்.

கடவுள் படித்தார்.

‘நாத்திகர்களின் எதிரி இங்கு உறங்குகிறார்' என்று எழுதப்பட்டிருந்தது.

கடவுள் பேசினார்.

‘அரசரே! நீங்கள் என் மீது மிகுந்த பக்தி, அன்பு கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், எப்போது நீங்கள் நாத்திகர்களுக்கு எதிரியாக மாறினீர்கள்?' என்று கேட்டார் கடவுள்.

விழித்தார் அரசர். பிறகு ஒரு வழியாக சமாளித்தார்.

‘கடவுளே! நான் தங்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த பக்தர்கள் இப்படி எழுதியுள்ளார்கள். எல்லாம் ஆர்வக்கோளாறு' என்றார் அரசர்.

இருவரும் அடுத்த கல்வெட்டை படிக்க நகர்ந்தார்கள்.

‘கடவுளே! நான் விலங்குகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவன். இதைப் பாராட்டும்விதத்தில் இந்த நாட்டில் வசிக்கும் விலங்குகள் என்னைப் பாராட்டி கல்வெட்டு வைத்துள்ளன' என்றார் அரசர்.

கடவுள் இரண்டாவது கல்வெட்டை படித்தார்.

'மனிதர்களின் எதிரி இங்கே உறங்குகிறார்' என்று எழுதியிருந்தது.

கடவுள் சிரித்தார்.

‘கடவுளே தவறாக நினைக்க வேண்டாம். மனிதர்கள் மீது விலங்குகளுக்கு இருக்கும் வெறுப்பு மற்றும் நான் விலங்குகள் மீது கொண்ட அன்பை தவறாகப் புரிந்துகொண்டு, என்னை மனிதர்களின் எதிரியாக சித்தரித்துவிட்டார்கள்' என்றார் அரசர்.

மூன்றாவது கல்வெட்டை நோக்கி இருவரும் நகர்ந்தனர்.

‘கடவுளே! ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்திருக்கிறேன். இதைப் பாரட்டி இந்தக் கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது' என்றார் அரசர்.

கடவுள் படித்தார்.

‘நாங்கள் ஏழையாகாததால் எங்களுக்கு உதவாதவர் இங்கு உறங்குகிறார்' என்று எழுதியிருந்தது.

எந்த விளக்கமும் சொல்லவில்லை. அமைதியானார் அரசர். நான்காவது கல்வெட்டை நோக்கி நகர்ந்தார்கள்.

‘கடவுளே! ஏழைகள் மீது மிகுந்த அன்புகொண்டவன் நான். இதைப் பாராட்டி வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுதான் இது' என்றார் அரசர்.

கடவுள் படித்தார்.

‘பணக்காரர்களின் எதிரி இங்கே உறங்குகிறார். இப்படிக்கு, பரம ஏழைகள்' என்று எழுதியிருந்தது.

ஆடிப்போனார் அரசர்.

‘கடவுளே! நான் பல நல்ல காரியங்களை மக்களுக்காக செய்தேன். ஆனால், மக்கள் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா அல்லது வேண்டுமென்று தவறாகப் புரிந்துகொண்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எது எப்படியோ என்னுடைய செயல்களுக்குத் தவறான காரணங்கள் கற்பிக்கப்பட்டுவிட்டன.

ஒரு விஷயத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடமும், வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொள்பவர்களிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்களுக்கு செய்த சேவை, கடலில் கரைத்த பெருங்காயத்தைப் போன்றது. சில மாதங்களுக்கு முன் இவர்களை விட்டுப் பிரிந்தததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், அது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். இந்த தங்கச் சிலையில் என் ஆன்மா தங்காது. என்னைப் பொறுத்தவரை இந்தச் சிலை பறவைகளின் கழிவறை மட்டுமே. வாருங்கள் சொர்க்கத்துக்கே திரும்பலாம்' என்று கடவுளோடு புறப்பட்டார் அரசர்.

இந்தக் கதை மரியாதைக்குரிய அப்துல் கலாம் நினைவிடத்தில் நடந்த சம்பவத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

அப்துல் கலாம் கையில் வீணையுடன் அமர்ந்திருப்பது போன்றும், பக்கத்தில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை இருப்பதுபோன்றும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு பிரிவினர் பிரச்னையாகக் கிளப்ப, தேசிய அளவில் ஊடகங்கள் இந்த விஷயத்தை மெல்லத் தொடங்கின. வெறும் வாயை மெல்ல வேண்டாமென்று அரசியல் கட்சிகள் தங்கள் பங்குக்குக் கருத்துகளை அவலாகத் திணிக்கின்றனர்.

அப்துல் கலாம் அவர்கள் இந்துக்களின் ஆதரவாளர் என்று பி.ஜே.பி.யைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் சொல்லும்போது மனம் வேதனைப்பட்டது. எந்த அடிப்படையில் இத்தகைய கருத்தை அவர் தெரிவித்தார் என்பது புரியவில்லை. இந்தக் குழப்பங்களுக்கு இடையில், அப்துல் கலாமின் அண்ணன் பேரன், சிலைக்கு பக்கத்தில் புனித நூல்களான பைபிளையும், திருக்குரானையும் வைத்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, நூல்கள் அகற்றப்பட்டன.

இதற்கிடையில், பகவத் கீதைக்கு மாற்றாக திருக்குறளை அங்கு வைக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. இது அவர்களுக்கு திருக்குறளின் மீதிருக்கும் மதிப்பைவிட பகவத் கீதையின் மீதிருக்கும் வெறுப்பை மட்டுமே காட்டுகிறது.

தற்போது புனித நூல்கள் விவாதப் பொருளாகிவிட்டன. பகவத் கீதை இப்படி ஒரு பிரச்னையை கிளப்பும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உள்நோக்கத்துடன் கீதை அங்கு வைக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது. அப்படிச் செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அது  கலாம் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்புடையதுமல்ல. ஆனால், தற்போது போட்டிக்கு மற்ற புனித நூல்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போட்டியல்ல. அரசியல்வாதிகளின் பதவி வெறிக்கு இந்தப் போட்டி துணைபுரியக் கூடாது.
 

எந்தப் பிரச்னையை கிளப்பினால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கலாம், எந்த விஷயத்தை பெரிதுபடுத்தினால், அது நமக்கு ஓட்டாக மாறும் என்று கணக்குப்போடும் அரசியல் சகுனிகளின் செயல்பாடுகள், ஒரு தலைவரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. மனித நேயமும், அன்பும் புனித நூல்களின் மூலமாக நாம் கற்றுக்கொண்டதைவிட, அப்துல் கலாமிடம் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

தன்னுடைய நினைவிடத்தில் பகவத் கீதையை வையுங்கள் என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டாரா? அல்லது குரான், பைபிள் போன்ற புனித நூல்களை என் அருகில் வைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாரா?

எந்த ஒரு புனிதநூலும் அவருக்கு புகழை சேர்க்காது. புனித நூல்களை வைப்பதும், பிறகு அகற்றுவதும் அந்தப் புனித நூல்களுக்கு எந்தக் கலங்கத்தையும் ஏற்படுத்தாது. அவரவர் மனதில் அவரவர் சார்ந்த மத புனித நூல்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை விட அப்துல் கலாம் அவர்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். இதை யாரும் மறந்துவிட வேண்டாம். 

தான் பதவியில் இருந்தபோது தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த யாரையும் அருகில் நெருங்கவிடாதவர். இன்று அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பைபிளையும், குரானையும் அவரின் சிலைக்கு அருகில் வைத்தார் என்ற செய்தியை படித்தோம். அவருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? பகவத் கீதையை ஏன் வைத்தீர்கள் என்று கேட்கும் உரிமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குப் பதில் சொல்லும் கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், பைபிளையோ, குரானையோ இவராக அங்கு வைப்பதற்கு யார் பொறுப்பேற்பது? இந்தப் பிரச்னை மக்கள் மன்றத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறிவிட்டது.

அப்துல் கலாமின் ஆன்மா நிச்சயமாக இத்தகைய சம்பவங்களுக்காக வருத்தப்படும். கலாமின் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, தங்களது கருத்துகளை எந்தப் பிரச்னைகளும் ஏற்படுத்தாதவாறு தெரிவிக்க வேண்டும். 

இரண்டாவது முறை அப்துல் கலாம் அவர்கள் குடியரசு தலைவராக நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு பேச்சு எழுந்தபோது, அவருக்கு ஆதரவைத் தெரிவிக்காதவர்கள்கூட, இப்போது பிரச்னை என்றவுடன் மூக்கை நுழைக்கிறார்கள். எல்லோரும் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  அப்துல் கலாம் எந்த மதத்துக்கோ, ஜாதிக்கோ, கட்சிக்கோ, ஏன் ஒரு குடும்பத்துக்கோகூட தனிப்பட்ட முறையில் சொந்தமானவரல்ல. அவர் ஒரு தேசியத் தலைவர். ஆகையால், இந்தப் பிரச்னையை பூதாகரமாக்கி யாரும் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்.

அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அவரின் சிந்தனையில் உதித்த கனவு இந்தியா உருவாகப் பாடுபடுவோம். அப்படியில்லையென்றால்கூட பரவாயில்லை. அவர் பலமுறை நம்மிடம் கேட்டுக்கொண்டபடி, கண்ணில் தெரியும் காலி இடங்களிலெல்லாம் மரக் கன்றுகளையாவது நடுவோம். இது அவரின் சிலைக்கு அருகில் வைக்கப்படும் புனித நூல்களைக் காட்டிலும் அதிக பலனை நாட்டுக்கும், நமது வருங்கால சந்ததியினருக்கும் அளிக்கும். 

அப்துல் கலாம் ஒரு சரித்திர நாயகன். அவரை சர்ச்சை நாயகனாக்க முயலாதீர்கள்.

அன்புடன் 

சாது ஸ்ரீராம்
(saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com