ஒரு திரைப்படம் இரு விமரிசனங்கள்! 

சில்ரன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் போன்ற மகத்தான திரைப்படங்கள்
ஒரு திரைப்படம் இரு விமரிசனங்கள்! 

1) பரான் (Baran)  

சில்ரன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் போன்ற மகத்தான திரைப்படங்கள் இயக்கிய ஈரானிய இயக்குனரான மஜித் மஜிதியின் BARAN திரைப்படத்தை பார்த்தேன். ஆஃகான் அகதியான கதாநாயகிக்கும் ஈரான் இளைஞனுக்குமான மென்மையான காதலை மிகவும் கவித்துவமாக பேசுகிறது இப்படம். 

படத்தின் துவக்கத்தில் கதாநாயகியை ஆண்போல சித்தரிக்கிறார்கள். ஏனெனில், அகதிகளை பணிகளில் நியமிப்பதும், குறிப்பாக பெண்களை பணியில் அமர்த்துவதும் ஈரானில் சட்டவிரோதம் என்பதால், கதாநாயகி ஆண்போல உடையணிந்து பணிக்கு செல்கிறாள்.  அங்கு நாயகனும், அவளும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கிறாள். அவள் பெண் என்றும், குடும்ப வறுமையின் காரணமாக இத்தகைய கரடுமுரடான பணியை மனம் ஒவ்வாமல் செய்துக்கொண்டிருக்கிறாள் என்பதையும் உணர்ந்ததும், நாயகனின் அவள் மீதான கோபம் காதலாக மாறுகிறது.  அதன்பின், படம் நெடிகிலும் கதாநாயகி கடினமான வேலைகளை செய்யும்போது தொலைவில் கதாநாயகன் கண்களில் காதலை சுமந்துக்கொண்டு இயலாமையோடு அவளை வெறித்து பார்த்தபடி உருகும் காட்சிகள் மனதை பிசைகின்றன. 

இறுதிக்காட்சியில் தன் குடியுரிமையை விற்று அந்த பணத்தை அவளின் தந்தையிடம் தன் முதலாளி கொடுத்ததாக சொல்லிவிட்டு அவர்கள் தாங்கள் சொந்த ஊரான ஆஃகானுக்கு கிளம்பும்போது ஏக்கத்தோடு அவளையே பார்த்தபடி நிற்கையில் ஈரான் மண்ணில் தனக்காக விட்டுசென்ற அவளின் காலடி தடத்தை பார்த்து அவளின் காதலையும் , அவளின் சூழ்நிலைகளையும் உணர்ந்தவாக புன்னகைத்தபடி நிற்க படம் முடிவடைந்து திரை இருள்கிறது. 

இந்த படத்தில் கதாநாயகிக்கு ஒரு வசனம் கூட இல்லை , தன் சமூக நிலையால் வாழ்க்கையோடு போராட வேண்டிய நிர்பந்தத்தையும், அவன் மீதான தன் காதலையும் கண்களாலேயே உணர்த்திவிடுகிறாள். குறிப்பாக, இறுதிக் காட்சியில் அவளது காலடித் தடத்தை மழை அழிக்கும்போது பிண்ணனியில் வழியும் அஹ்மத் பெஜ்மரின் இசை மனதை கலங்கடிக்கிறது. அதேபோல, நாயகியை பெண் என்று உணரும் காட்சியும், அவள் பணியிலிருந்து விரட்டப்பட்டதும் அவளது நிழல் பதிந்த இடங்களை தொட்டு வருடி நெகிழும் காட்சிகளும் மனதுக்குள் பசுமையான நினைவுகளை கிளறச் செய்பவை. BARAN என்றால் ஈரானில் மழை என்று பொருள். பெரு மழையில் நனைந்த பரவசத்தை நிச்சயம் உணர முடிகிறது.

- ராம் முரளி

***

2) பரான் (மழை)

'தீயாய் தகிக்கும் பிரிவுத் துயரால்
புகைந்தெழுகிறது இதயத்தை
எரித்த அனல்காற்று!'

அகதியாய் வாழ்வது எத்தகைய துயரமானதொரு வாழ்க்கை என்பதை எவ்வளவு கேட்டறிந்தாலும் பார்த்திருந்தாலும் புரியாது, அகதியாய் வாழ்ந்தால் மட்டுமே உணர முடியும். இளைஞன் லத்தீஃபின் ஒருதலைக் காதலின் ஊடாக இரானில் வாழும் ஆஃப்கான் அகதிகளின் துயரை பதிவாக்கியிருக்கிறது மஜித் மஜிதியின் ‘பரான்’.

ரஷ்யாவிற்கெதிராய் போர், தலிபான்களின் நெருக்கடி என இரானில் பதட்டமான சூழ்நிலையில் 2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்கிறது பரான் (BARON).

டெஹ்ரனில் ஒரு பகுதியில் மிகப் பெரிய கட்டிட வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் வேலை செய்ய இரானியர்களுக்கு மட்டுமே சட்டபூர்வமான அனுமதி உள்ளது. அப்பகுதியில் வாழும் ஆப்கான் அகதிகள் பணிபுரிய தடை, அவர்களுக்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே இங்கு மட்டுமல்ல எங்கும் வேலை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அடையாள அட்டை என்பது அவர்களைப் பொறுத்தவரை கொம்புத் தேன், தங்களின் தொலைந்து போன இயல்பு வாழ்க்கையை தேடிக் களைத்தவர்களுக்கு நகரத்தில் கிடைக்கும் இத்தகைய சிறு சிறு வேலைகளே உணவிற்கான வழி.

மெமர் என்பவர் அக்கட்டிடத்தின் காண்ட்ராக்டர். சட்டத்திற்கு புறம்பாக அவர் ஆப்கான் அகதிகளை சற்று குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு சேர்க்கிறார். அரசாங்கத்திலிருந்து சோதனை செய்ய ஆபிஸர்கள் வரும் சமயத்தில் ஆப்கான் பணியாளர்களை ஒளித்து வைத்து எப்படியோ சமாளித்து கட்டிடத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நெருக்கமான பணியாளனாய் இருப்பவன் லத்தீஃப். கட்டிட தொழிலாளிகளுக்கு டீ தயாரித்து விநியோகிப்பதும், அவர்களுக்கு சமைப்பது, கடைக்கு போய் வருவது எனச் சில்லறை வேலைகள் செய்து வருகிறான். ஒரு நாள் மளிகைக்கடைக்குப் போய்விட்டுத் திரும்புகையில் கட்டிடத் தொழிலாளி நஜாப் என்பவர் கீழே விழுந்து காலில் அடிபட்டுத் துடிதுடிக்கிறார். அனைவரும் சூழந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார். அவர் ஒரு ஆப்கான் அகதி என தெரிய வருகிறது.

சில நாள்கள் கழித்து நஜாப்பின் நண்பர் சுல்தான் ஒரு சிறுவனை மெமாரிடம் அழைத்து வருகிறார். நஜாபிற்கு கால் ஒடிந்ததும் அவரால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை, அவரின் மகனுக்கு எதாவது வேலை போட்டுத் தரும்படி சொல்லி அனுப்பியிருக்கிறார். மெலிந்த தேகத்துடன் சோகப் கப்பிய விழிகளுடன் இருக்கும் அவனைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கவே முதலில் மறுத்த மெமார் அவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார். லத்தீப் செய்து கொண்டிருந்த வேலையை இனி புதியவன் ரஹ்மத் செய்வான் என்றும் லத்தீப் கட்டிட வேலையை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கட்டும் என்கிறார். தன் லகுவான வேலையை வந்த நாளே பறித்துக் கொண்ட ரஹ்மத்தின் மீது வெறுப்படைகிறான் லத்தீப்.

லத்தீப் சிமெண்ட் மூட்டை தூக்கும் போதும் கடினமாக வேலை செய்யும்போதும் ரஹ்மத்தால்தான் இந்த நிலை என அவன் போகும் போதும் வரும் போதும் தொந்திரவு செய்கிறான். ரஹ்மத் கொடுக்கும் டீயும் தயாரித்த உணவும் தொழிலாளிகளுக்கு மிகவும் பிடித்துவிடவே அவனை பாராட்டுகிறார்கள். இதனால் மேலும் எரிச்சலுற்ற லத்தீப் ரஹ்மத்தின் பின் தொடர்கிறான். மீதம் இருக்கும் சப்பாத்திகளை ரஹ்மத் புறாக்களுக்கு பிய்த்துப் போட்டு அவை உண்ணும் அழகை ரசிப்பதைப் பார்க்கிறான். அவன் மனது ரஹ்மத்தின் செயலால் ஈர்க்கப்பட்டாலும் பிடிவாதமாய் வெறுப்பின் சாயலை ஒதுக்காமல் இருக்கிறான்.

மற்றொரு நாள் ரஹ்மத்தின் அறைக்குள் திரைச்சீலையின் நிழல் வடிவமாக வித்யாசமான காட்சியொன்றைக் காண்கிறான் லத்தின். தன் நீளமான கூந்தலை வாரிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணொருத்தியின் நிழல் அது, தான் இதுநாள் வரை வெறுத்துக் கொண்டிருப்பது சிறுவன் ஒரு பெண் என்பதை அறிகிறான். மேலும் அவளை பின் தொடர்கையில் அவளின் சோகத்திற்குப் பின் இருக்கும் வாழ்வியல் சிக்கல்களும், ஏழைக் குடும்பத்தின் சம்பாதிக்கக் கூடிய நிலையில் இருப்பவள் அவள் ஒருத்தி மட்டுமே என்பதை அறிந்து மிகவும் மனம் வருந்துகிறான். அவளைக் காணாமல் கண்ட நொடியிலிருந்து அவள்மீது தீராக் காதலில் வீழ்கிறான் லத்தீப்.

செக்கிங் ஆபிஸர்கள் திடீரென்று வந்துவிடவே ஆப்கான் பணியாட்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள். விடுபட்ட ரஹ்மத்தை ஒரு ஆபிஸர் கண்டுபிடித்து துரத்த அவள் பயந்தோடுகிறாள். இதைக் கண்ட லத்தீப் தானும் விரைவாக அவர்கள் பின் ஓடி, அந்த ஆபிஸரிடம் தன் நேசத்திற்குரியவள் சிக்கிவிடாமல் இருக்க சண்டை போட்டு மாட்டிக் கொள்கிறான். அவள் கலங்கிய விழிகளுடன் தப்பியோடுகிறாள். அதிகாரி அவனை இழுத்துப் போகவே மெமோர் பாடுபட்டு அவனை திரும்ப அழைத்துவருகிறார். லத்திப் மெமோரின் கிராமத்து நண்பரின் மகன். நன்றாகப் பார்த்துக் கொள்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறார். மெமோர் இதுவரை வாக்குத் தவறியதில்லை. லத்தீப் இளம் வயதினன் மனம் போன போக்கில் செலவழித்துவிடுவான் என அவனின் சம்பளத்தை முழுதாக கொடுக்காமல் அவ்வப்போது அவனுக்குத் தேவையானவற்றை மட்டும் தந்து மீதி பணத்தை அவரே பத்திரப்படுத்தியுள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிட வேலை மீண்டும் துவங்குகிறது. ரஹ்மத் இல்லாத இடத்தில் தனிமையாக உணர்கிறான் லத்தீப். மாடிக்குச் சென்று அவள் உணவிட்ட புறாக்களைப் பார்த்து ரசிக்கிறான். அவனால் எவ்வித வேலையிலும் ஈடுபடமுடியவில்லை. அவன் கண்ணில், கருத்தில் இதயத்தில் அவன் ஆவியில் ஒருத்தியாய் கலந்துவிட்ட ரஹ்மத்தைப் பிரிந்து இனி ஒரு நொடி கூட வாழ இயலாது எனும் நிலைக்கு வந்துவிட்டப் பின், ஆப்கான் அகதிகள் வாழும் இடத்திற்குச் சென்று அவளைத் தேடி அலைகிறான்.

அதிர்ஷ்டவசமாக அவன் நஜாப்பின் நண்பர் சுல்தானைச் சந்திக்கிறான். அவரிடம் ரஹ்மத்தைப் பற்றி விசாரிக்கிறான். அவள் இருக்கும் இடத்தை அறிந்து புறநகர்ப் பகுதியான அவ்விடத்தில் மறைந்து நின்று ரஹ்மத்தை கவனிக்கிறான். ரஹ்மத்தின் நிஜப் பெயர் பரான். பரான் என்றாள் மழை. தன் மழைப்பெண் கடினமான வேலை செய்வதைப் பார்த்து மனம் உருகி கண்கலங்குகிறான். அவர்கள் அப்படி கஷ்டப்பட்டால்தான் கால் வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும் என்பதை உணர்ந்து மனம் நொந்துப் போகிறான்.

லத்தீப் தான் சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் சுலதானிடம் தந்து எப்படியாவது நஜாபிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறான். ஆனால் சுல்தான் ஒரு மோசமான சூழ்நிலைக் காரணமாக அப்பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானுக்குச் சென்றுவிடுகிறார், நஜாப் யாரோ கொடுத்த இப்பணம் எனக்கெதற்கு என மறுத்துவிட்டார் என்பதால் தான் தன் மனைவியின் கண் ஆப்ரேஷனுக்கு அப்பணத்தை உபயோகப்படுத்துவதாக சொல்லி, எப்பாடுபட்டாவது இக்கடனை திருப்பித் தந்துவிடுவேன் மன்னித்துவிடு என்ற கடித்தை வாசித்து லத்தீப் துயர் அடைகிறான். எப்படியோ மற்றொரு நல்ல மனிதருக்குத் தன் பணம் உதவியதே என மனம் தேறி மெமோரிடம் சண்டை போட்டு அழுது புலம்பி தன் சம்பளப் பணத்தை வாங்கி மெமோர் உங்கள் கால் உடைந்ததற்கு கொடுத்த நஷ்ட ஈடு இது என்று பொய் சொல்லி நஜாப்பிடம் அத்தொகையை தருகிறான் லத்தீப். தனக்கு சேராத பணத்தை ஒருபோதும் தொடாத நேர்மையாளர் நஜாப்பிடம் பின் எப்படி தன் பணத்தைக் கொடுப்பது.

பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அக்குடும்பம் ஆப்கானுக்கே கிளம்புகிறது. தன் பிரிய காதலி தன்னை விட்டு ஒரேடியாகப் பிரியப் போகிறாள் என்பதை அறிந்து லத்தீப் உயிர் வாடுகிறான். ஆனால் அவனிடம் காதலைச் சொல்வதற்கு ஒரு வார்த்தையும் இல்லை, அவன் இதயம் முழுக்கவும் காதல் நிரம்பி வழிந்தாலும் ஒருபோதும் அவனால் அதை வார்த்தைகளால் இடம் பெயர்க்க முடிந்ததில்லை. அவளை நேருக்கு நேர் சந்தித்தது ஒரு சில நொடிகளேயாயினும் அவள் முகம் அவன் மனத்திரையில் நீங்கா ஓவியமாய் பதிந்து விட்டது. அவன் கண்களின் அவளுக்கான பரிவும் காதலும் கண்ணீரும் எப்போதும் மிதந்து கொண்டேயிருந்தது.

மறைமுகமாக அவன் செய்த அனைத்து உதவிகள் பற்றி யாருக்குமே தெரியாது, பரானுக்கும் கூட. அவள் போகும் தினத்தன்று வழியனுப்ப லத்தீப் படபடக்கும் இதயத்துடன் ஒத்தாசைக்கு வருகிறான். எல்லாரும் வண்டியில் ஏறிவிட்டார்கள். பரான் கையில் வைத்திருக்கும் சாமான்களுடன் மழைப்பாதையில் நடந்து வரும் போது கைதவறி கூடையை கீழே போடுகிறாள். அதிலிருந்து காய் கனிகள் சிதறி விழுகிறது. பொறுமையாக பரானும் லத்தீப்பும் அதை குனிந்து பொறுக்கி கூடையில் மறுபடி போடுகிறார்கள். கூடையைச் எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறிப் போய்விடுகிறாள் பரான். மென்சோகத்துடன் அவள் ஷு தடம் பதிந்த இடத்தில் மழை நீர் நிறைவதை பார்க்கிறான் லத்தீப். கவிதையாக நிறைவடைகிறது படம்.

நிறைவேறாத ஆசைகள், வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் எத்தனை எத்தனை எல்லோர் வாழ்விலும்? நாடோடியாக சுற்றித் திரிந்த லத்தீப்பை காதல் எனும் உணர்வு மனித நேயனாக்குகிறது. வாழ்வின் அழகான ஒரு பகுதியை நம் கண்முன் நிறுத்துகிறது இத்திரைப்படம். எளிமையான கதைதான் இப்படத்தின் சிறப்பு. காதல் உணர்வு என்பது எல்லாரும் விரும்பத்தக்க உணரக் கூடிய மென் உணர்வு. இக்கதையின் எதார்த்தமும் அழகியலும் அவ்வப்போது பெய்யும் மழையும் இதையே பிரதானப்படுத்தினாலும் மனித நேயமும் மற்றவர்கள் துயரைக் கண்டு உதவுத் துடிக்கும் மனத்தையும் அழகாக காட்சி படுத்துகிறது. சிறு மழையும், சாரலும், பெரும் தூறலுமாய் இப்படம் நெடுகிலும் மழை ஒரு பாத்திரமாய் நம் மனதையும் கண்களையும் மனதை நனைக்கிறது.

- உமா பார்வதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com