உலகின் மிகப் பெரிய விலங்கு எதுவென்று தெரியுமா?

நீங்கள் எல்லோரும் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருப்பீர்கள் இல்லையா? அங்கு என்னென்ன பார்த்தீர்கள்?
உலகின் மிகப் பெரிய விலங்கு எதுவென்று தெரியுமா?

நீங்கள் எல்லோரும் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருப்பீர்கள் இல்லையா? அங்கு என்னென்ன பார்த்தீர்கள்? நடப்பன, ஊர்வன, பறப்பன மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாவற்றையும் பார்த்திருப்பீர்கள். அங்கு பார்த்த விலங்குகளில் நீங்கள் பார்த்த பெரிய விலங்கு எது என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? நீங்கள் மட்டுமல்ல,  எல்லோருமே ,  'யானை’  என்றுதான் பதில் கூறுவார்கள். 

ஆனால், உண்மை என்னவென்றால், இந்த பூமி கிரகத்தில் இருக்கும் மிகப் பெரிய விலங்கினம் நீலத் திமிங்கலம் தான். அவைகளைப் பற்றி திமிங்கல வகைகளில் பார்ப்போம்.  

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நீர் வாழ் ஜந்துவாக திமிங்கலம் இருந்தாலும், அது மீன் இனத்தைச் சார்ந்தது அல்ல. 

வினோதமான இந்த விலங்கினைப்  பற்றி தெரிந்து கொள்ளலாமா? 

சுமார் ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, திமிங்கலங்கள், சிங்கம் போன்ற உடல் அமைப்புடன்    நான்கு கால் பிராணிகளாகத்தான் இருந்தனவாம். முப்பத்து ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீளமான மீன் அமைப்புடன் நான்கு கால்களுடன் இருந்தனவாம். சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் திமிங்கலங்கள், அவைகளுக்குண்டான,  தற்பொழுதுள்ள   உடலமைப்பைப் பெற்றனவாம். 

திமிங்கலங்கள், மனிதனைப்போல் வெப்ப ரத்தப் பிராணிகள். சீரான வெப்பத்தினைக் கொண்டவைகள். இவைகள் எல்லாமே, ஒரே மாதிரி 'B' குரூப் ரத்த வகையைச் சேர்ந்தவை. 

திமிங்கலங்கள் பல வகைப்படுகின்றன. அவை இரண்டு மீட்டர் முதல் முப்பத்து இரண்டு மீட்டர்  வரை நீளத்தைக் கொண்டவை.

டால்ஃபின், பொர்பாயிஸ் ஆகியவை, திமிங்கல வகையைச் சேர்ந்த பாலூட்டிகள். 

திமிங்கலங்களின் கர்ப்ப காலம் பத்து முதல் பதினாறு மாதங்கள் ஆகும். இந்தக் காலமானது திமிங்கலங்களின் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. 

நீருக்கடியிலேயே பிரசவித்து, நீருக்கடியிலேயே பாலூட்டவும் செய்கின்றன. தாய் திமிங்கலம் பிரசவித்த உடன், தன்னுடைய சேயை, நீரின் மேல்தளம் வரை தள்ளிக்கொண்டு வருகிறது. ஏனென்றால், தன் சேய்க்கு, சுவாசிக்க பிராண வாயு தேவை என்பதை அறிந்து அவ்வாறு செய்கிறது.

மனிதனைப் போலவே நுரையீரல் கொண்டதால், நீரின் மேற்பரப்பிற்கு வந்து, பிராணவாயுவை உள்ளிழுத்துக் கொண்டு, மீண்டும் நீருக்குள் சென்று விடும். மேற்பரப்பிற்கு வரும் திமிங்கலங்கள், பிராணவாயுவை தேக்கிக் கொண்டு, ஒரு மணி நேரம் வரை கூட (வகைகளைப் பொறுத்தது)  மூச்சு விடாமல் நீருக்கடியில் இருக்க முடியும். . 

திமிங்கலங்களுக்கு பாடத் தெரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புதுமையான விஷயம் தான். அவை நீருக்கடியில் ஒலியை எழுப்பி, தன் கூட்டாளிகளுடன் பேசிக்கொள்ளும் திறமையைக் கொண்டவைகளாம். பாட்டு, பேச்சு என்பது அவைகளுக்குண்டான தனி மொழி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இவைகள் எழுப்பும் ஒலியானது, நூற்று நாற்பது டெசிபலைக் கொண்டதாம். இந்த ஒலி நீருக்கடியிலேயே பல நூறு கிலோ மீட்டர்கள் தொலைவு வரை கடந்து போகும் சக்தி பெற்றதாம். 

திமிங்கலங்களின் மூக்கானது, உடலின்  அதாவது தலையின்  மேல் பகுதியில் இருக்கிறது. அதன் வழியாக நீர் பீய்ச்சி அடிப்பது போன்ற காட்சிகளை ஃபோட்டோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். எதனால் அப்படி உண்டாகிறது? 

அவை மிகவும் அழுத்தமான வேகத்தோடு காற்றை வெளியேற்றுவதால் (சுவாசிப்பதால்), காற்று,    நீருடன் சேர்ந்து அவ்வாறு காட்சி அளிக்கிறது . 

திமிங்கலங்களில்,  'ஸ்பெர்ம்'  எனப்படும் வகை திமிங்கலத்திற்கு பற்கள் உண்டு. இவைகளின் ஆயுட்காலம் எழுபது வருடங்கள் என்றும் அறியப்படுகிறது. 

உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு, ' ப்ளூ வேல்'  எனப்படும் நீலத் திமிங்கலம் ஆகும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் நூற்று இருபது ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. இவைகளுக்கு பற்கள் கிடையாது. ஆனால் பற்களுக்குப் பதிலாக மேலிருந்து கீழாக பிரஷ் போன்ற அமைப்பு காணப்படும். இவைகளின் நீளம் சுமார் முப்பத்து இரண்டு மீட்டர்கள் ஆகும். 

திமிங்கலங்களின் தோலானது மிகவும் கடினமானது. 'ப்ளப்பர்' என்று சொல்லப்படும் ஒரு வகை கொழுப்பு, தோலின் கீழ் பாகத்தில் இருப்பதால், இவைகளால், வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அதனாலேயே, வட துருவம், தென் துருவம் போன்ற அதிகமான குளிர் பிரதேசங்களிலும் சமாளிக்க முடிகிறது. 

வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால், அபூர்வமான இவ்விலங்குகள் சமீபமாக அழிந்து வருகின்றன. காரணம், மனிதன் உணவுக்காகவும், ப்ளப்பர் என்னும் கொழுப்புச் சத்துக்காகவும் திமிங்கலங்களை அழித்து வருகிறான். ப்ளப்பர் கொழுப்பானது, சோப்பு, மெழுகுவர்த்தி செய்ய உபயோகப்படுத்தப் படுகிறது. 

ஆனால் IWC ( International Whaling Commission)  அமைப்பானது,  1946 ஆம் வருடம்   திமிங்கலங்களை  அழிப்பதற்கு தடை விதித்து, அமுல் படுத்தியது. ஆகையால் திமிங்கல வேட்டை குறைந்திருப்பதாக நாம் சந்தோஷப்படுவோம். 

என்ன வாசகர்களே, ஒரு அபூர்வமான விலங்கினத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவா? 

இனிமேல், யாராவது, உலகிலேயே பெரிய விலங்கினம் எது? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?  'ப்ளூ வேல்'  என்று  சரியாகச் சொல்வீர்கள் தானே? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com