விவசாயிகள் பிரச்னைக்கு நிச்சயத் தீர்வு! அரசுகள் மனது வைத்தால்...

உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பதன் பொருள் உணராத அரசு இருந்தென்ன பயன்.
விவசாயிகள் பிரச்னைக்கு நிச்சயத் தீர்வு! அரசுகள் மனது வைத்தால்...


உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

எவருடைய தூண்டுதலும், ஊக்கமும் இன்றி தானே உழன்று தனக்கும் பிறர்க்கும் உணவளித்து மகிழும் உழவர்கள் இன்று மதிப்புறாமல், மானம் அழிந்து இழிநிலைக்கு ஆளாகி தன் இன்னுயிர்
மாய்த்துக்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகத்தில் ஒருவேளையேனும் உண்ணாமல் இருப்பவர் உண்டா? உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பதன் பொருள் உணராத அரசு இருந்தென்ன பயன். ஊட்டுவோரை ஊக்கம் அளித்துப்
பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பதை உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே!

என்றார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். உலக இயக்கத்துக்கு அடிப்படையான தொழில் உழவே ஆகும். 65 சதவீத மக்கள் இத்தொழிலைத் தமது வாழ்வாதாரமாக மட்டும் கருதாமல், தமது அறமாகவும்
கருதுவதால்தான் நம் இந்திய தேசம் உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், உழவர்கள் தலை கவிழ்ந்து வாழ்கிறார்கள் என்பதற்கான காரணம் என்ன? வளரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும்
நிலையினும் உபரியாக உணவு உற்பத்தி செய்வோர் வறுமையில் சாவதேன்?

இந்திய விவசாயம் பருவகால சூதாட்டம், வேளாண்மை ஆக்கம் கருதி முதல் இழக்கும் செயல் இருந்தும், இன்னும் தொடர்ந்து இத்தொழிலைச் செய்வோரைப் பாதுகாக்க வழி தேடாதது ஏன். நீங்கள்
சிந்திக்க வேண்டாம், சிந்தித்து தீர்வளிப்போரின் கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

முதலில் பிரச்னைகளை ஆய்வோம் -

1. பருவகாலம் அறிதல்
2. எதிர்காலத் தேவை அறிதல்
3. தேவைக்கானத் உற்பத்தி செய்தல்
4. அறுவடைக்குப்பின் நேர்த்தி
5. மதிப்புக் கூட்டல்
6. சந்தைப்படுத்துதல்

இவற்றுக்கெல்லாம் அறிவியல்பூர்வமாக செய்தித் தொடர்புச் சாதனங்களின் பயன்பாட்டால் தீர்வுகாண முடியும் என்று வல்லுனர்கள் கொடுக்கும் திட்டங்களை பரீட்சார்த்தமாகச் செயல்படுத்தி
வெற்றிபெற்றதற்கான ஆதாரங்களை ஏற்று, மைய - மாநில அரசுகள் செயல்பட்டால், தீர்வு தானே வரும். செயல்படுத்துவோம்.

உழவன் தலைநிமிர்ந்து வாழவும், தாயகம் தனித்தன்மையுடன் விளங்கவும் செய்வோம்.

த. மணிமொழியன்,
தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம் (தஞ்சை மாவட்டம்)
(mmozhiyantnj@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com