பழநி முருகனின் பரவச தரிசனமும் திகட்டாத பஞ்சாமிர்தமும்!

ஒவ்வொரு வருடமும் பழநிக்கு சென்று முருகனை தரிசிப்பது எங்கள் குடும்ப வழக்கம்.
பழநி முருகனின் பரவச தரிசனமும் திகட்டாத பஞ்சாமிர்தமும்!

ஒவ்வொரு வருடமும் பழநிக்கு சென்று முருகனை தரிசிப்பது எங்கள் குடும்ப வழக்கம். என் மனத்துக்கு உகந்தவர் சிவபெருமான் என்றாலும் வேலனை சக்தியின் மறு வடிவமான குழந்தை முருகனை தரிசிப்பது மனத்துக்கு சொல்லொண்ணா மகிழ்வைத் தரும். ஆடி மாதம் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயிலில் முன் பதிவு செய்துவிடுவோம். சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் ரயிலில் பழநிக்கு செல்வோம். ஏதேனும் காரணங்களால் முன்பதிவு செய்ய முடியாவிட்டால் பேருந்தில், அல்லது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் காரிலும் சென்றுவிடுவது வழக்கம். இந்த முறை ரயில் பயணம். இரவு சரியாக 9.40 ரயில்
புறப்பட்ட ரயில் காலை 7.40-க்கு பழநிக்கு வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து 472 கி.மீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 114 கி.மீ. தூரத்திலும், திருச்சியிலிருந்து 156 கி.மீ தூரத்திலும், கொடைக்கானலிலிருந்து 64 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழநி.

பழநி அடிவாரத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன, அவை வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை ஆகியவை. சரவணப் பொய்கையில் இலவசமாக குளித்து கிளம்பலாம் அல்லது வசதிக்கேற்ப அறையெடுத்து தங்கி இறை தரிசனம் செய்யலாம். கண்பத் க்ராண்ட், அருணாசலா இன், பீக்காக் இன், ஹோட்டல் சுபம் போன்ற தனியார் தங்கும் வசதிகள் உண்டு. முன் கூட்டியே பதிவு செய்துவிட்டு வருவது நலம். கோயில் யாத்ரீகர்கள் ஐந்து தங்குமிட வசதிகள் உள்ளது. அவை தண்டபாணி நிலையம், கார்த்திகேயன் விடுதி, கோஷல விடுதி, குடிசைகள் மற்றும் வேலவன் விடுதி ஆகியவை. தலைமை அலுவலகம் தேவஸ்தானத்தைத் தொடர்பு கொண்டு அறையை முன் பதிவு செய்து கொள்ளலாம் (+91-4545 242236)

நாங்கள் குளித்து முடித்து முதலில் அடிவாரத்தில் இருக்கும் குழந்தை வேலாதயுதனை தரிசித்தோம். கோபமாக, மயில் மேல் அமர்ந்த குழந்தைக் கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறான் சின்னக் குழந்தை வேலாயுதன் சாமி. கண்குளிர அவனை தரிசித்துவிட்டு  மலையடிவாரத்தை அடைந்தோம். 

எந்தப் பாதையில் செல்ல வேண்டும்?

பழநி மலைக்கோயிலை அடைய படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை என  நான்கு பாதைகள் உண்டு. முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வர, திருமஞ்சனப் பாதை மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பழநி மலையில் மொத்தம் 697 படிகள் தான்! யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனுடைய காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறுவார்களாம்.

இங்குள்ள பிற கோயில்கள் ஆவினன்குடி கோயில், பெருவுடையார் பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளி அம்மன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன. பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபங்கள் உள்ளன. கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன.
 
ரோப் காரைத் தவிர்த்து, படிகளில் ஏறிச் சென்றால் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி அடிவாரத்தில் உள்ள பாத விநாயகரை வணங்கிய பின்னர், சற்று மேலே இருக்கும் இடும்பனை வணங்கலாம். சிவ கிரி-சக்தி கிரியைக் தூரத்தில் தென்படும் பச்சைப் பசும் வயல் வெளிகளைக் கண்டு களித்தபடி சுமை தெரியாமல் மலையேறிவிடலாம். குழந்தைகளுடன் முருகனைப் பற்றிய கதைகளைக் கூறியபடி மலை அழகை, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி படிக்கட்டுப் பாதையில்  ஏறத் தொடங்கினோம். கழிப்பறை வசதி படிக்கட்டு ஏறுகையில் ஆங்காங்கே காண முடிந்தது. 

முருகனுக்கு உரிய கடம்ப மலர்கள் மலைவெளியில் பூத்துக் கிடந்தது. பல்வேறு மூலிகையில் நறுமணம் அவ்வெளியை நிறைத்து நாசியையும் நிறைத்தது. நுரையீரலுக்குக் கிடைத்த சுத்தமான காற்றால் மகிழ்ச்சியுடன் நடை போட்டோம். கோயிலைக் கட்டியது யார் என்று மகன் கேட்க கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சேர மன்னன் சேரமான் பெருமாள் என்றேன்.

தண்டாயுதபாணியின் அழகு பேரழகு!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது திருத்தலம்- ‘திருஆவினன்குடி’எனப் போற்றப்படும் பழநி. வயல்களைக் குறிக்கும் சொல் பழனம். பழனங்கள் சூழ இருப்பதால் இத்திருத்தலம் பழநி என வழங்கப்பட்டது. வையாபுரி என்றும் பழநிக்கு மற்றொரு பெயரும் உண்டு. மலையடிவாரத்தில் உள்ள மயில் மண்டபத்திலிருந்து படியேற வேண்டும். அங்குள்ள பிள்ளையாரை வணங்கினோம். ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது. 

பழனியில் முருகனுக்கு செய்யப்படும் அலங்காரங்கள் அதிகாலை விஸ்வரூப அலங்காரம் ஒன்று. அடுத்து ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம், அந்தண அலங்காரம் என்று அலங்கரித்த முருகனையே கண்டு வாருங்கள்!

பழனியாண்டவர் கைகளில் வேல் இல்லை! தண்டம் என்னும் கம்பு மட்டுமே! அனைவரும் நினைப்பது போல தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. உற்றுப் பார்த்தால் அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம். காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள். காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். மாலை ராஜ அலங்காரம். இரவு முதிய வடிவம். காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும். இங்குள்ள பிரம்மன் சிலை வில் அம்புடன் வேடுவ வடிவத்தில் காணப்படுவது சிறப்பு.

மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சை சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று என்றார்கள். ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம்.  இதுவரை பல முறை பழநிக்குச் சென்றுள்ளேன். பழநி மலைப் பற்றியும் கோவிலைப் பற்றியும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தகவல் கிடைக்கும். முருகனை வெகு அருகில் முதல் வரிசையில் நின்று சிறப்பு தரிசனம் காணும் வாய்ப்பு இம்முறை கிடைத்தது நான் பெற்ற பேறு. கண் குளிர தண்டாயுதபாணியின் சன்னிதியில் ஒரு மணி நேரம் ஆசை தீர தரிசித்து, அபிஷேங்கங்களைக் கண்டு, தீப ஆராதனையில் முருகனின் திருவுருவத்தைப் பார்த்துப் பார்த்து மனம் உருகி நின்றேன். மனத்துக்குள் கந்தர் அனுபூதி பதிகம் ஓடிக் கொண்டிருந்தது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
 

போகர் எனும் சித்தர்!

தண்டாயுதபாணியை கண்குளிர அகம் மகிழ தரிசித்துவிட்டு கோபுர தரிசனம் செய்தோம். அதன் பின் போகர் சன்னிதிக்குச் சென்றோம். பழநிக்கு வரும் ஒவ்வொரு முறையும் கோவிலுக்குள் இருக்கும் போகர் குகைக்குச் செல்வோம். ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சன்னதி உள்ளது. அதில் அவர் வழிபட்ட புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. காலங்கி நாதரின் சீடர் போகர்!  பிற்காலத்தில் ஏற்படப் போகும் நோய்களுக்கும் பிணிகளுக்கும் மலிந்துவிடும் என்றார் காலங்கி நாதர்.


தன் குருவின் வாக்கின்படி மருந்து தயாரிக்க பாஷாணம் என்னும் ஒன்பது விஷங்களை மருந்தாகக் கலந்து, தன் சீடர் புலிப்பாணி உதவியுடன் பழனியாண்டவர் சிலையை வடித்தார் போகர். பாஷாண உருவத்தின் மேல் அளவாக தீர்த்தமாட்டப்படும் பாலில், மருந்துப் படிமங்கள் படிந்து, நோய் தீர்க்கும் என்பது போகரின் மருத்துவக் கணக்கு. இன்றளவும் பல ஆய்வுகள் செய்த பின்னர் கூட, முருகப்பெருமானின் மூலக் கூற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. போகர் நிர்விகல்ப சமாதி அமைந்த தலமும் இதுவே என்ற தகவலை மகனுக்குச் சொன்னேன். 

அடுத்து நாங்கள் எடுத்து வந்த பொருட்களை வைத்து மாவிளக்கு தயார் செய்து கொடி மரத்தின் அருகே பூஜை செய்து மாவிளக்கு ஏற்றி வணங்கி வழிபட்டோம். கொடிமரத்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு சிறிது நேரம் அமர்ந்தோம். அதன் பின் பிரசாதங்கள் வாங்கினோம்.

பழனி என்றால் முதலில் எது? பஞ்சாமிர்தமா? முருகனா?

நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பஞ்சாமிர்தம் வாங்கினேன். பெட் ஜாரில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தின் விலை ரூ.35/- அதுவே டின்னில் அடைத்து விற்கப்படுகிறது அதன் விலை ரூ.40/-. சிறிய விருப்பாச்சி என்னும் வாழைப்பழங்களால் செய்வதே பஞ்சாமிர்தம் என்றார் என்னுடைய அத்தை. நீர்ப்பதம் குறைவாக உள்ள வாழை தான் அதிக நாள் கெடாமல் தாங்கும்.

சர்க்கரை, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் போட்டுத் தயாரிப்பார்கள். இதன் ருசிக்கு ஈடு இணையில்லை. உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது. பஞ்சாமிர்த மணத்தை நுகர்ந்தபடி பழநி மலையில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி மகனிடம் சொன்னேன். அவை ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் என்றதும் எல்லா தீர்த்தமும் வேண்டும் என்றான். 

எப்போதெல்லாம் பழநிக்குச் செல்லலாம்?

பழநிக்கு பாத யாத்திரையாக வேண்டுதலுடன் பலர் செல்வார்கள். இங்கு பங்குனி உத்திரம்தான் பிரசித்தி பெற்றது. எங்குத் திரும்பினாலும் காவடி எடுத்த பக்தர்கள் அலையெனத் திரண்டு முருகனை தரிசிக்க வருகிறார்கள். அதை அடுத்துதான் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி என் மற்ற திருவிழாக்கள். 

உணவு

தினமும் பழநியில் அன்னதானம் சிறப்புற நடைபெறுகிறது. பழநி திருஆவினன்குடி கோயில் மற்றும் கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விரதம் இருந்து பழநி மலை ஏறிவிட்டு நாங்கள் படி இறங்கினோம். மலையடிவாரத்தில் கெளரி நாராயணா என்ற ஹோட்டலில் மதிய உணவையும், மாலை சிற்றுண்டியை சரவணா எனும் ஹோட்டலிலும் சாப்பிட்டுவிட்டு சரியாக 6.15 மணிக்கு சென்னைக்கு ரயில் ஏறினோம். இரண்டு நாள் பயணம் சற்று அலுப்பாக இருந்தாலும் மனம் முழுவதும் முருகனின் திருவுருவம் நிறைந்திருந்தது. இதோ என்னுடன் மயில் ஒன்று கனவிலும் நினைவிலும் உடன் வந்தபடியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com