தெரிந்தே செய்த தவறுக்கு பிராயசித்தம் உண்டா?

தீமை என்பதற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். இதுவரை எந்த தவறும் செய்ததே
தெரிந்தே செய்த தவறுக்கு பிராயசித்தம் உண்டா?

தீமை என்பதற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். இதுவரை எந்த தவறும் செய்ததே இல்லை என்று சொல்பவர் மிகவும் அபூர்வம். சில சமயம் தெரிந்தே செய்யும் தவறுகள் குற்றவுணர்வுகளாகி மனத்துக்குள் முள்ளாய் கீறிக் கொண்டிருக்கும். மற்றவர்களுக்குத் தெரியாவிட்டாலும் அவரவர் மனசாட்சிக்கு அது தெரியும் ஆகையால் தூக்கம் கெட்டு பல இரவுகள் துயரம் கொள்வார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ சில சமயம் மற்றவர்கள் மீது தேவையில்லாமல் பழி சுமத்துவதற்கு நாம் காரணாகி, அது அவர்களுக்கு பெரும் தீவினையாக முடிந்துவிட்டால் நம்மால் நம் மனத்தை எளிதில் சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. செய்த அத்தகைய தவறுக்கான பிராயசித்தம் என்ன என்று மகான் ஒருவர் வழியொன்றைச் சொல்கிறார் :

வயதும் ஞானமும் நிறைந்த மகான் ஒருவரிடம் வந்தான் ஒரு வழிப்போக்கன், 'சுவாமி! நான் என் நண்பன் மீது வீண் பழி சுமத்திவிட்டேன். அப்போது கோபத்தில் அவ்வாறு செய்துவிட்டேன். ஆனால் என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த இந்த தவறுக்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் சுவாமி’ என்றான்.

அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த மகான், ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று ஆவலுடன் கேட்டான். 

அவர் சிறிது நேரம் அவனையே மறுபடியும் உற்றுப் பார்த்து லேசான புன்முறுவலுடன், 'நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா' என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்தவன், 'என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவை எல்லாம் பறந்து போயிருக்குமே!’ என்றான். 

'இப்போது புரிகிறதா மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காற்றில் பறந்துவிட்ட காகிதத் துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது’ என்றார்.

அவன் முகம் வாடிவிட்டது. செய்த தவறுக்கு எவ்வகையிலேனும் பிராயசித்தம் தேட வேண்டும் என்று வருத்தமுற்று, ‘வேறு வழியே இல்லையா சுவாமி. இப்போது நான் என்ன செய்வேன்’ என்று கலங்கினான்.

'கவலைப்படாதே! நீ இப்போது மனப்பூர்வமாக வருந்துகிறாய். இதே மனநிலையில் உன் நண்பனிடம் மன்னிப்புக் கேள். அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை. மன்னிப்பு கோருவது மனம் வருந்துவது நீ செய்யத் தக்க செயல். அடுத்து இறைவனிடம் மன்னிப்பு கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கண்ணீர் விட்டுக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டால் ஓரளவுக்கு உனக்கு மன சாந்தி கிடைக்கும். இந்த உலகில் மன்னிப்பே கிடையாத தவறுகள் கூட மன்னிக்கப்பட்டிருக்கின்றன. எனவே மனம் தளராதே. இனியாவது நல்லதையே எண்ணி நன்மையே செய்’ என்று ஆசி கூறு அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com