ஊடகவியலாளர் ‘ஓப்ரா வின்ஃபிரே’வின் மனதை உருக்கும் வாழ்க்கை போராட்டம்! (வீடியோ)

உலகின் பணக்கார ஆப்ரிக்கா அமெரிக்க பெண்மணியாகவும், உலகிலேயே அதிக செல்வாக்குடைய ஊடகவியலாளராகவும் கருதப்படும் ஓப்ரா வின்ஃபிரேவின் வாழ்க்கை போராட்டமும் அவர் படைத்த சாதனைகளும் இந்தக் காணொளி  கூறுகிறது.
ஊடகவியலாளர் ‘ஓப்ரா வின்ஃபிரே’வின் மனதை உருக்கும் வாழ்க்கை போராட்டம்! (வீடியோ)

இணையத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண் எந்த அளவு வலிமையானவளாக இருக்க வேண்டும்? வாழ்வில் எவ்வளவு பெரிய துயரம் வந்தாலும் அவற்றுடன் போராடி எப்படி வாழ்க்கையில் வெற்றியடைவது என்பதை வெறும் 1:40 நிமிடங்களில் ஒரு அழுத்தமான உண்மை கதையின் வாயிலாகப் பதிய வைத்துள்ளது. 

உலகின் பணக்கார ஆப்ரிக்கா அமெரிக்க பெண்மணியாகவும், உலகிலேயே அதிக செல்வாக்குடைய ஊடகவியலாளராகவும் கருதப்படும் ஓப்ரா வின்ஃபிரே அவர்களின் வாழ்க்கை போராட்டமும் அதன் பிறகு அவர் படைத்த சாதனைகளுமே இந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது. 

அதில் சொல்லப்பட்டுள்ள கதையாவது:

ஒரு பெண் குழந்தை தனது 9-ம் வயது முதலே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறாள். தனது உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது நண்பர்களாலேயே பாலியில் துன்புறுத்தலுக்கும் உள்ளாகிறாள். இவர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்கத் தனது 13 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி இந்த உலகத்தைத் தனியே சந்திக்கத் துணிகிறாள்.

ஒரே வருடத்தில் அதாவது 14 வயதிலேயே கற்பமாகி முழுவதுமாக வளர்ச்சியடையாத பலவீனமான குழந்தை ஒன்றையும் பெற்றெடுக்கிறாள், ஆனால் பலவீனமாக இருந்த காரணத்தால் அந்தக் குழந்தையும் இறந்துவிடுகிறது. இவருக்கு இருந்த ஒரு தங்கையையும் இவரது தாயால் தத்துக் கொடுக்கப் படுகிறாள் மற்றும் சகோதரன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைகிறான். 

குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக இவரது பள்ளி படிப்பைக் கூட தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், சிறு வயதிலேயே சிறந்த மேடை பேச்சாளராக விளங்கியதால் அதன் வாயிலாக உதவித்தொகை பெற்று தனது படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போதும் வானொலியில் பணிபுரிந்தாலும் இவரது கனவு என்னவோ தொலைக்காட்சி நிருபர் ஆக வேண்டும் என்பதே. அயராத முயற்சியினால் அந்தக் கனவையும் எட்டிப் பிடித்தார். 

ஆனால், இவருடைய செய்திகள் அதிக உணர்ச்சிப் பூர்வமாக இருப்பதாகக் கூறப்பட்டு சிறிது காலத்திலேயே பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு 1986-ல் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியின் துணை தொகுப்பாளராகப் பணி புரிந்தார். அதைத் தொடர்ந்து பல பட்டிமன்ற பேச்சாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பின்னுக்கு தள்ளி மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளின் பட்டியலில் முன்னிலை வகித்தது.

அவர்தான் ஓப்ரா வின்ஃபிரே.  அவருடைய இன்றைச் சொத்து மதிப்பு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மிகப்பெரிய பணக்கார ஆப்ரிக்கா அமெரிக்க பெண்மணி இவர்தான். அதுமட்டுமின்றி உலகிலேயே அதிக செல்வாக்குடைய ஊடகவியலாளரும் இவர்தான். 

ஓப்ரா 40 மில்லியன் டாலர்கள் மதிப்பில் பள்ளி கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் மிகவும் ஏழ்மையில் வாடும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெற்று வருகிறார்கள். நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோடிக் கணக்கில் பணத்தை இவர் தானமாக வழங்கி வருகிறார்.

இவரின் வாழ்க்கையை ஒரு பாடமாக பார்த்தால் அதில் வாழ்க்கையின் பல கசப்பான உண்மைகள் மறைந்துள்ளன. எவ்வளவுதான் சோதனைகள் வந்தாலும் அவற்றைப் பார்த்து சோர்ந்து விடாமல் அவற்றை எல்லாம் படிக்கட்டுகளாக மாற்றி வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருந்தால் நாளை உங்களையும் இந்த உலகம் அண்ணாந்து பார்த்துப் போற்றும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com