விவசாயம் சரியில்லாது போனால் எல்லாம் தவறாகப்போகும்!

அரசாங்கம் ஏன் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்படி செய்யக்கூடாது என்கிற விவசாய விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் சமீபத்திய அறிக்கைகள்,
விவசாயம் சரியில்லாது போனால் எல்லாம் தவறாகப்போகும்!

71-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கும் நிலையில், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவின் திட்டத்தை  அரசு ஏற்று மனமுவந்து செயல்படுத்தும் என்று நம்புவதாக தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவின் திட்ட இயக்குநர் திருச்செல்வம் கூறியுள்ளார்.

விவசாயம் சரியில்லாது போனால் எல்லாம் தவறாகப்போகும்; அரசாங்கம் ஏன் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்படி செய்யக்கூடாது என்கிற விவசாய விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் சமீபத்திய அறிக்கைகள், இந்திய விவசாயம் எவ்வித ஆபத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகின்றன. ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டங்களுக்கு மத்தியில்,  எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

* விவசாயச் சங்கங்களின் போராட்டங்கள், குறிப்பாக, திரு அய்யாக்கண்ணு தலைநகர் டெல்லியில் நடத்தும் போராட்டம்.

* திரையுலகப் பிரமுகர்களின் முன் எப்போதும் இல்லாத விவசாயிகளுக்காக ஆதரவு நிலை.

* ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கான கொள்கை வெளியீட்டில், விவசாயப் பிரச்னை முதல் இடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது.

* சமூக வலைத்தளங்களில் விவசாயிகள் நலன் காப்பதற்காக தனிப்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய ஆரம்பத்திருப்பது.

* நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள்.

போன்ற விஷயங்கள் ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றது. அது, விவசாயத்துக்கான தீர்வை இனிமேலும் தள்ளிப்போடவோ தவிர்க்கவோ முடியாது என்பதுதான்.

இதை அரசு புரிந்துகொண்டு செயல்படுமேயானால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம், அறுபது கோடி மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பணவீக்கம், விவசாயம் சார்ந்த பொருளாதாரமாக இருக்கும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும் விவசாயத்தின் தற்போதைய நிலையை மாற்றி, விவசாயம் நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டாக மாற்ற முடியும்.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் பதினைந்து ஆண்டுகால முயற்சியினால் உருவாக்கிய, சோதனை முறையில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட, அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் சிறப்பாக மதிப்பீடு செய்யப்பட்டு, பாராட்டுகளைப் பெற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, கிராம அளவில் செயல்படும்  விவசாயத் தீர்வினை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தக்கோரி (திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்யும் வரையிலான சேவைகள்) அரசாங்கத்திடம் திட்ட அறிக்கையை தாக்கல் செய்து தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து, Mision IT-Rural-ன் திட்ட இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில், கிராமம்தோறும் ஒரு விவசாயத் தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் அமைத்து (அரசாங்கம் மற்றும் தனியார் இணைந்து), இருவரை பணிக்கு அமர்த்திவிட்டால் போதும். நாங்கள் உருவாக்கியிருக்கும் தீர்வு, உற்பத்தி, தரம், உரிய விலை, விவசாயப் பணியின் கடினத்தன்மையை இலகுவாக்குதல் என்கிற நிலைகளில் செயல்பட்டு, விவசாயத்தை லாபகரமானதாக, விரும்பத்தக்கதாக (குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கும்) மாற்றிவிடும்.

* வறட்சி, புயல் போன்ற நிலையில், கிராம அளவிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுவதற்கு அடிப்படையாக இத்திட்டம் அமையும்.

* குறைந்தபட்ச விலை என்பது இந்த மாதிரியான கிராம அளவில் செயல்படும், தேவைக்கேற்ற உற்பத்தி செய்ய வழிவகுக்கும் கட்டமைப்பு செயல்படும்போது மட்டுமே சாத்தியமாகும்.

* தண்ணீர் இருந்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சரியான நிகர லாபம் கிடைக்கும்போதுதான், நதிகள் இணைப்பு போன்ற நீர் ஆதாரத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு உந்துதல் கிடைக்கும்.

* ஆண்டுக்குப் பதினைந்து லட்சம் கோடிகளுக்கு மேல் விவசாயத்துக்கு ஒதுக்கும் அரசு, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தேவையற்ற மானியங்கள், பயிர்க்கடன் தள்ளுபடிகள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் பெரும் இழப்புகளையும், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் மற்றும் பாதிப்புகளையும் தவிர்க்கமுடியும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்குத் தேவை ஒரு பஞ்சாயத்துக்குச் சுமார் ஒரு லட்சம் மட்டுமே. அரசு பங்குபெறும்போது, இது மேலும் குறையும்.

71-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கும் நிலையில், அரசு எங்கள் நாட்டுப்பற்று கொண்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து செயல்படுத்தும் என்று நம்புகிறோம் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com