செய்வினை, பில்லி, சூனியம், மாந்திரீகத்தை நம்புகிறவர்கள் கவனத்துக்கு...

தங்களது வெற்றி, தோல்விகளுக்கும், கஷ்ட, நஷ்டங்களுக்கும் தங்களது செயல்பாடுகள் மட்டுமே தான் காரணமாக அமைய முடியுமென்ற தெளிவு இருப்பவர்கள் மாந்த்ரீகத்தை நம்ப கூடாது தானே?!
செய்வினை, பில்லி, சூனியம், மாந்திரீகத்தை நம்புகிறவர்கள் கவனத்துக்கு...

என் அம்மா மற்றும் பாட்டிக்கு இதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. வீட்டில் யாருக்காவது தீராத உடல்நலக் கோளாறு என்றாலோ அல்லது கடனுக்காக நகைகளையோ, சொத்துக்களையோ விற்க வேண்டிய சூழல் வந்தாலோ உடனடியாகப் பாட்டிக்கு ஞாபகம் வரக்கூடியது இந்த செய்வினை எனும் மாந்திரீகம் தான். குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்... அதனால் தான் குடும்பம் இப்படி கஷ்டத்தில் இருக்கிறது என்பார். அப்புறம் வேண்டாதவர்கள், எங்களை வதைக்கவென்றே வைத்த செய்வினையை எடுக்க இவர்களுக்குத் தெரிந்த வகையில் பூஜை, புனஸ்காரம் மூலமாகப் பரிகாரம் செய்வதற்கு ஆளைத் தேடிக் கண்டடைந்து அதைச் செய்து முடித்தால் தான் நிம்மதியாவார்கள். உடல்நலக் கோளாறு மற்றும் குடும்பக் கோளாறுகளுக்கான காரணங்கள் வேறாக இருந்து அவை நாளடைவில் சரியானாலும் கூட தங்களது பரிகார பூஜைகளால் தான் சரியானது என்றும் எண்ணிக் கொள்வார்கள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், கிராமங்களில் இப்போதும் படிப்பறிவில்லாதோர் மட்டுமல்ல படித்த பெண்களிடையிலும் கூட இந்த நம்பிக்கைகள் எல்லாம் இருந்து வருகின்றன என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை மாந்திரீகம் அல்லது பிளாக் மேஜிக் என்றால் அது கோட்டயம் புஷ்பநாத் நாவல்களைப் படித்ததினால் அறிமுகமான த்ரில்லானதொரு அனுபவம் மட்டுமே. மலையாளத்தில் மாந்த்ரீகக் கதைகளை எழுதுவதில் வல்லவர் கோட்டயம் புஷ்பநாத். அவரது பிரசித்தி பெற்ற நாவல்கள் அனைத்தையுமே நான் வாசித்திருக்கிறேன். கல்லூரிக் காலத்தில், தேர்வுக்குப் படிக்கவென்று விடுமுறை விட்டால், பொது நூலகத்திலிருந்து அவரது நாவல்களை மாற்றி, மாற்றி எடுத்து வந்து படித்துவிட்டு இரவில் பாத்ரூம் போகக் கூட பயந்து போய் பீதியாகி ஜூரம் கண்டு கடைசியில் விடுமுறை தீர்ந்தும் காய்ச்சல் தீராமல் தேர்வெழுத கல்லூரி சென்ற அனுபவமெல்லாம் கூட உண்டு. அவரது நாவல்களில் வரும் யட்ஷிணிகள் அத்தனை அச்சமூட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்... இப்போதுமிருக்கிறார்கள். யட்ஷிணிகளை மந்திரங்களால் கட்டிச் செயலற்றுப் போகச் செய்ய கண்டுபிடிக்கப்பட்டது தான் மாந்த்ரீகம் எனும் பிளாக் மேஜிக் என்று நினைத்துக் கொள்வேன் அப்போது.

அப்புறம் ஆபாவாணன் தயாரிப்பில் பிளாக் மேஜிக்கை மையமாக வைத்து ‘கருப்பு ரோஜா’ என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தால் எழுத்தாளர் இந்துமதி நஷ்டப்பட்டது தான் மிச்சம். படத்தில் பிளாக் மேஜிக் தரும் த்ரில்லிங்கை எதிர்பார்த்து படம் பார்க்கப் போனவர்களுக்கு காதுகளும், கண்களும் மட்டுமல்ல புத்தி கூடப் புண்ணாகிப் போனது தான் மிச்சம். படம் பிளாக் மேஜிக் என்ற பெயரில் ரசிகர்களை மொண்ணை ரம்பத்தால் பதம் பார்த்திருந்தது. 

அதற்குப் பிறகும் பல திரைப்படங்கள் பிளாக் மேஜிக்கை ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்டு வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அம்மன், அருந்ததி, பஞ்சமுகி, அரண்மனை, முனி பார்ட்-2, காஞ்சனா- 2, திரைப்படங்களில் எல்லாம் மாந்த்ரீகத்தை, பக்தியுடனும், பேய் பயத்துடனும் கலந்து காக்டெய்ல் ஆக்கி சரியான பதத்தில் கொடுத்ததால் அதற்கு மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தாலும்; அந்தப் படங்களால் சமூகத்துக்கு ஆகப் போவது என்ன? என்பது குறித்துப் பெரிதாக எந்த விவாதமும் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால் மக்கள் அவ்வகைப் படங்களைக் காண மிகவும் விரும்புகிறார்களா? என்றால்?! சற்றேறக்குறைய ஆம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் சரியான திட்டமிடலோடு, பெர்ஃபெக்ட்டாக எடுக்கப்படும் திகில் படங்கள் மற்றும் பிளாக் மேஜிக்கை மையமாக வைத்து வெளிவரும் படங்கள் பெறக்கூடிய பிரமாண்ட வெற்றிகள் அதைத் தான் காட்டுகின்றன.

தாத்தா சொல்வார்.... ஊருக்கு மின்சாரம் வந்த பிறகு பேய்கள் குறைந்து விட்டன, அதோடு பேயோட்டும் பூசாரிகளுக்கும் பிழைப்பு போச்சு! என்று. ஆனால் பேய் படங்கள் பெறும் வெற்றிகளைக் காணும் போது மின்சாரத்துக்கு பேயோட்டும் சக்தி இல்லை...பேய்கள் சினிமாக்கள் வாயிலாக அந்த மின்சாரத்தையும் கூட ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அட வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படங்கள் தானே என்று அவற்றைக் கூட விட்டுத்தள்ளி விடலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தில் சில பிரிவினர் அடிக்கடி கூட்டம் போட்டுக்கொண்டு இழிந்த ஆவிகளை விரட்டி அடிக்கிறோம் பேர்வழியென்று  மேடையில் நின்று கொண்டு மூச்சு விடாமல் பேசுவார்கள், அதைக் காண்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படும் வகையில் அழுது, பிழிந்து கதறித் தீர்ப்பார்கள் பாருங்கள்... அந்தக் கொடுமையைத் தான் காணச் சகிப்பதில்லை. திரைப்படங்களை விட்டுத்தள்ளி விடலாம். இப்போது பேயோட்டுதல், ஆவியோடு பேசுதல், 

நேற்றைய பத்திரிகைச் செய்திகளில் ஒன்று;

அஸ்ஸாமைச் சார்ந்த பழங்குடித் தம்பதியினரை, மாந்த்ரீகம் செய்பவர்கள் என்று கருதி மொத்த கிராம மக்களும் சேர்ந்து சந்தேகப்பட்டு அவர்களை அடி என்றால் அடி... சாவடி அடித்திருக்கிறார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட கிராம மக்களில் 31 பேரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களில் 17 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படியொரு அசம்பாவிதம் அஸ்ஸாமின் டின்சுகியா மாவட்டத்தின் ஹச்சாரா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆதிவாசி தம்பதியினரான திலீப் கிஷன், மற்றும் அவரது மனைவி சிபராத்ரி கர்மாகர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கைதுக்குப் பின் காவல்துறை உயரதிகாரிகள் வெளியிட்ட செய்திகளில் இருந்து தெரிந்து கொண்ட வகையில், நடந்தது இது தான்;

55 வயதாகும் திலீப் கிஷன், தேயிலை எஸ்டேட் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட கிஷன் தற்போது தன் மனைவியுடன் அந்தக் கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கு கிஷன் தன்னைத் தானே ஒரு மந்திரவாதி என்று பறைசாற்றிக் கொண்டு, அங்கு வசித்து வந்த மக்களைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். இதனால் கடுப்பான மக்கள், பொறுத்தது வரை பொறுத்து விட்டு நிலமை முற்றியதும் தம்பதிகளைப் போட்டு அடித்து துவைத்து விட்டனர். இது தொடர்பான காவல்துறை விசாரணையின் போது, கிராம மக்களில் சிலரது வாக்குமூலத்தின் படி; ஊரில் சிலருக்கு வயிற்றுப் போக்கு, தீராத தலைவலி, பல்வலி என்று ஒன்று மாற்றி ஒன்று வந்து அவஸ்தைப் பட்டுள்ளனர். அப்போதெல்லாம் அவர்களைப் பார்த்து கிஷன் “இதெல்லாம் மந்திரவாதியான தன்னை மதிக்காததால் வந்த வினை” என்று மிரட்டியிருக்கிறார். இதைக் கிராம மக்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. கிஷன் மீதான உச்சபட்சக் கோபத்தின் வெளிப்பாடு தான் அவர் மீதான கடுமையான தாக்குதல் முயற்சி. இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்கள் உண்மையில் மாந்த்ரீகத்தை வெறுக்கிறார்கள். வெறுப்பின் காரணம் அதன் மீதான அதீத பயம் மற்றும் மூடநம்பிக்கை.

இத்தனைக்கும் கிஷனைத் தாக்கிய கிராமத்தார் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு மாந்த்ரீகத்தின் மீது நிறையவே நம்பிக்கை இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையால் தான் கிஷனின் மிரட்டலுக்குப் பயந்திருக்கிறார்கள். பயத்தின் உச்சகட்டத்தில் தங்களையும், தங்களது கிராமத்தையும் தற்காத்துக் கொள்ளவே அவரைத் தாக்கி இருக்கிறார்கள். அஸ்ஸாமில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல... பல முறை இப்படித்தான் நடந்திருக்கிறது. காரணம் அங்கே கிராமப்புறங்களில் கல்வியறிவு பெற்ற மக்களின் விழுக்காடு குறைவு.

அஸ்ஸாமை விடுங்கள்... இன்றளவும் அரசின் விழிப்புணர்வு திட்டங்கள் சகலமும் அங்கிருக்கும் பெரும்பாலான கிராமங்களைச் சென்றடந்திருக்கவே இல்லை என அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களே கூறுகின்றன. மிகவும் பின் தங்கிய கிராமங்கள் நிறைந்த வடகிழக்கு மாநிலம் அது. அங்கிருப்பவர்கள் கல்வியறிவற்று மூடநம்பிக்கையால் இப்படிச் செய்து விடுவது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் இங்கே நன்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இருக்கும் நம் தமிழ்நாட்டின் நிலைமையும் கூட இந்த மாந்த்ரீகம், செய்வினை, பில்லி, சூனிய விவகாரங்களில் அப்படி ஒன்றும் திருப்திகரமானதாக இல்லை.

வருடத்திற்கு குறைந்தது பத்துப் பதினைந்து முறையாவது தமிழ்நாட்டின் எங்காவது ஒரு மூலையில் சில குழந்தைகளோ அல்லது மனிதர்களோ நரபலிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதான செய்திகளை நாம் பத்திரிகைகளில் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நரபலிகள் மட்டுமல்ல, ஜாதகத்தைக் காரணம் காட்டி வயதான பணக்காரருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளும், இளம்பெண்களும் தான் எத்தனை, எத்தனை பேர்?! பேயோட்டுகிறோம், தீய சக்திகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் ஊடுருவி பெண்களை மானபங்கப் படுத்தும் பூசாரிகள் எத்தனை பேர்? ஆன்மீகம் என்று போர்டு மாட்டிக் கொண்டு மாந்த்ரீகம் மற்றும் செய்வினை பயம் காட்டுபவர்கள் எத்தனை பேர்? பூர்வ ஜென்ம ரகசியத்தைக் கண்டுணர்ந்து சொல்கிறோம் என்று நம் புத்தியை மழுங்கடிப்பவர்கள் எத்தனைபேர்? தொழில் போட்டியாளர்களை செயலிழக்கச் செய்யவும், அரசியல் எதிரிகளை பலமிழக்கச் செய்யவும் செய்யப்படும் பரிகாரங்கள் மற்றும் யாகங்கள் தான் எத்தனை? எத்தனை? கடைசியில் இவற்றையெல்லாம் நடத்தித் தருகிறவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனது தான் மிச்சம். 

மக்களுக்கு இந்த விஷயத்தில் மட்டும் ஏனில்லாமல் போனது சுய தெளிவும், தன்னம்பிக்கையும்?! தங்களது வெற்றி, தோல்விகளுக்கும், கஷ்ட, நஷ்டங்களுக்கும் தங்களது செயல்பாடுகள் மட்டுமே தான் காரணமாக அமைய முடியுமென்ற தெளிவு இருப்பவர்கள் மாந்த்ரீகத்தை நம்ப கூடாது தானே?! எத்தனை கல்வியறிவு இருந்தும், எந்த விஷயத்தையும் பகுத்தறியக் கூடிய ஞானவான்களாக நம் மக்கள்  இருந்த போதும்; காலம், காலமாக நமக்குள் விதைக்கப் பட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க இன்னும் பல  தலைவர்கள் வந்தாலும் போதாது நமக்கு! 

அந்த வகையில் இந்தியர்களைப் பொறுத்தவரை இந்த மாந்த்ரீக விவகாரம், மக்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்ததொரு விஷயமாகவே கருதப்படுகிறது. காரணம் மெத்தப்படித்தவர்கள் ஆனாலும், படிப்பறிவற்றவர்களானாலும் நம் மக்களின் அறியாமைக் கண்களை யாராலுமே முழுவதுமாகத் திறக்க  முடியவில்லை என்பதால் மட்டுமே! 

அதற்கான வெளிப்படையான அறிகுறிகள் தான் பேய் மற்றும் அமானுஷ்ய த்ரில்லர் படங்களுக்கான பிரமாண்ட வெற்றிகள்!

Image courtesy: google.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com