82 வயதில் ஆப் ஒன்றினை உருவாக்கி ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் பாட்டி!  

சாதனை செய்வதற்கு வயது ஒருபோதும் தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஒரு பெண்.
82 வயதில் ஆப் ஒன்றினை உருவாக்கி ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் பாட்டி!  

சாதனை செய்வதற்கு வயது ஒருபோதும் தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஒரு பெண். ஆம் அவர் வயது 82. ஜப்பானைச் சேர்ந்த மஸாகோ வகாமியா (Masako Wakamiya) என்ற 82 வயது மூதாட்டி, ‘உலகின் மூத்த ஐபோன் ஆப் டெவலப்பர்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

டோக்கியோவை அடுத்துள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் வகாமியா. குக்கிராமத்திலிருந்து ஆப்பிள் நிறுவனம் வரையிலான அவரது பயணம் அசாத்தியமானது. மேலும் அவர் ஐபோன் செயலிகள் உருவாக்க முடிவெடுத்த நோக்கமும் உன்னதமானது. மூத்த குடிமக்கள் அதிகமுள்ள ஜப்பானில் வயோதிகர்களுக்கான ஆப்கள் அதிகமில்லை, தொழில்நுட்ப விஷயங்களில் மூத்த குடிமக்களுக்கு போதிய கவனம் தரப்படவில்லை என்ற கோபம் வகாமியாவுக்கு இருந்து வந்தது. பல்வேறு தருணங்களில் முதியோர்களுக்கான பிரத்யேக செயலிகள் ஆப் டெவலப் செய்பவர்கள் உருவாக்கித் தர வேண்டும் என்று வகாமியாவின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆப் டெவலப்பர்களின் தொடர் அலட்சியம் வகாமியாவின் கோபத்தை அதிகரித்ததுடன், அதென்ன அவ்வளவு பெரிய விஷயமா நாமே அதை செய்து முடித்துவிடலாம் என்ற உந்துதலையும் அளித்துள்ளது. 

1990-ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டார் வகாமியா. சமீபத்தில் இணையதளத்தின் உதவியுடன் ஆப்களுக்கு கோடிங் எழுதுவது எப்படி என்றும் கற்றுத் தேர்ந்தார்.  அதன் பின் அவரே ஹினாடன் என்ற பெயரில் ஒரு ஆப்பை உருவாக்க முடிவு செய்தும் அதற்கான வடிவமைப்புப் பணிகளைத் தொடங்கினார். விடாமுயற்சியாலும், ஆர்வத்தாலும் அந்தச் செயலியை விரைவில் முடித்து விட்டார் வகாமியா.

ஐபோனில் இயங்கும் அந்தச் செயலியை அவர் அறிமுகப்படுத்தியவுடன் ஜப்பானில் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கின் கவனத்தை அச்செயலி ஈர்க்கவே, உலகம் முழுவதிலிருந்தும் ஆப்பிள் டெவலப்பர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு, வாகாமியா அழைக்கப்பட்டார். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட வகாமியா உலகின் மூத்த ஆப் டெவலப்பர் என்ற பெருமையை அடைந்தார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வகாமியா வடிவமைத்த ஹினாடன் முதியோர்களுக்கான ஒரு பிரத்யேக செயலியாகும். ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஹினாமட்சூரி என்ற பாரம்பரியம் மிக்க பொம்மைத் திருவிழாவை அடிப்படையாக வைத்து அந்தச் செயலியை வகாமியா உருவாக்கியுள்ளார். பொம்மை விழாவான ஹினாமாட்சூரியில் ஜப்பானின் பேரரசர், அவரது குடும்பத்தினர் மற்றும் விருந்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார பொம்மைகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்படும். ஹினாடான் 'அல்லது' பொம்மை மாடி' என்ற வகாமியாவின் இந்தச் செயலியில், பயனர்கள் பொம்மைகளை அதற்கேற்ற சரியான நிலைகளில் வைக்க வேண்டும். கேட்பதற்கு எளிமையாக இருப்பது போலத் தோன்றும் இந்த ஆப் கேம், உண்மையில் சிக்கலானது. நினைவுத் திறன் நன்றாக இருந்தால் தான் விளையாட முடியும். மூத்த குடிமக்களின் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் ஹினாடன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் வகாமியா.

தன் கண்டுப்பிடிப்பு குறித்து பேசிய மஸாகோ வகாமியா 'இளையவர்களுடன் போட்டியிட்டு விளையாடும் போது, என் போன்ற வயோதிகர்கள் எளிதில் தோற்றுவிடுவோம். முதுமையின் காரணமாக எங்களுடைய கைகளில் நடுக்கம் ஏற்பட்டு விரல்கள் அத்தனை வேகமாக ஒத்துழைக்காது. எனவே தான் மூத்த குடிமக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ஐபோன் ஆப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஹினாடனை பிரத்யேகமாக முதியோர்களுக்கெனவே உருவாக்கினேன். இப்படிப்பட்ட செயலிகள் மிகவும் குறைவு’ என்று கூறினார்.

தற்போது ஜப்பானிய மொழியில் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்தச் செயலி இதுவரை 42,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் கோடிக்கணக்கான தரவிறக்கங்கள் கொண்ட மற்ற செயலிகளின் மத்தியில் நாற்பத்தியிரண்டு ஆயிரம் என்பது குறைந்த எண்ணிக்கைதான் என்றாலும் வகாமியாவின் இந்தச் செயலி உலகப் புகழ்பெற்றுவிட்டது. பயனர்கள் உற்சாகமாக இந்த ஆப்பைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். விரைவில் இந்த ஆப்பை ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் 2018 மார்ச் மாத பொம்மைத் திருவிழாவிற்கு முன்னால் கொண்டு வரப்போவதாக வகாமியா கூறியுள்ளார்.

அறுபது வயதுக்கு மேல் இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில் என்று முதியோர்கள் விரக்தியடைந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருக்கலாம். புதியதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதன் மூலம் உங்களை நீங்கள் மீட்டெடுத்துக் கொள்ள முடியும் என்கிறார் வகாமியா. மேலும் அவர் கூறுகையில் ‘உங்களுக்கு வயதாகி விட்டால், நிறைய இழப்புகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். உங்கள் வேலை, உங்கள் கணவன், உங்கள் தலைமுடி, உங்களுடைய கண்பார்வை உள்ளிட்ட பலப் பல இழப்புகளைச் சந்திக்க நேரும். ஆனால், புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினால் உங்கள் வாழ்க்கையில் உற்சாகம் திரும்பக் கிடைக்கும், அது வாழ்தலுக்கான உந்துசக்தியாக அமையும்’ என்றார் மஸாகோ வகாமியா. இனிமேல் குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லுகையில் நிலாவில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லாமல், நிலாவில் பாட்டி ஆப் ஒன்றினை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். சரிதானே?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com