அதிகாரப் பங்கீட்டில் பன்னீர்செல்வமா, பழனிசாமியா?

அதிமுக அணிகள் இணைப்பால், அதிகாரப் பங்கீட்டில் பழனிசாமியா? - பன்னீர்செல்வமா? என்றும், அதிகாரப் பங்கீட்டில் யாருக்கு லாபம் என்கிற விவாதமும்...
அதிகாரப் பங்கீட்டில் பன்னீர்செல்வமா, பழனிசாமியா?

அதிமுக அணிகள் இணைப்பால் அதிகாரப் பங்கீட்டில் பழனிசாமியா, பன்னீர்செல்வமா? என்றும், அதிகாரப் பங்கீட்டில் யாருக்கு லாபம் என்கிற விவாதமும் தமிழக அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரபரப்பான பட்டிமன்றமே நடந்து வருகிறது.

தமிழக முதல்வராக திறம்படப் பணியாற்றி மாநிலத்துக்குப் பெருமை சேர்த்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது பன்னீர்செல்வம் கையில் முதல்வருக்கான அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 75 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா உயிரிழந்ததும் உடனடியாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

இதையடுத்து யாருடைய போதாதகாலம் என்று தெரியவில்லை. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை வர்தா புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் அவதிபட்டு வந்த நிலையில், வர்தா புயலின் வேகத்திலேயே தனது அமைச்சரவை சகாக்களுடன் சுழன்று சுழன்று பணியாற்றிய பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியான ஆதரவு பெருகியது.

இதனால், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சசிகலா தரப்பில் முதல்வர் பதவியை நோக்கி காய்நகர்த்தப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி முதல்வர் பதவிலிருந்து பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்துவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மவுனப் புரட்சி நடத்திவிட்டு, 9 எம்எல்ஏக்கள் மற்றும் சில எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் தனி அணி கண்டு, அதிமுக வரலாற்றில் இடம் பெற்றவர் ஓ.பன்னீச்செல்வம்.

பன்னீர்செல்வத்தின் மவுனப்புரட்சிக்கு பிறகு கவிழ இருந்த அதிமுக ஆட்சியை, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதன் மூலமும், கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்த நாடகக் காட்சிகள் மூலமும் காப்பாற்றிய பெருமை சசிகலாவைதான் சேரும் என்றாலும், பொதுமக்கள் மத்தியில் சசிகலா குடும்பத்தினர் மேல் உள்ள அவப்பெயர் காரணமாக, அந்தக் குடும்பம் ஒதுக்கியிருக்க வேண்டும் நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்றே கூறலாம்.  

ஆனால், முதல்வர் கனவில் மிதந்த சசிகலா, ஒரு சில நாட்களிலேயே காலமிட்ட கட்டளையால், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குப் போகும்போது தனது குடும்ப உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான டிடிவி தினகரனை அதிமுக துணைப்பொதுச்செயலராக அறிவித்துவிட்டும், ஜெயலிலலிதாவின் நினைவிடத்தில் தனது கரத்தை ஓங்கி, ஓங்கி அடித்து கோபக்கணையில் சபதமிட்டுச் சென்றார்.

இதையடுத்து, அதிகார வளையத்துக்குள் வரத்துடித்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவிக்கிறார். அடுத்து நடந்த வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர். மேற்கண்ட விவகாரத்தில் பழனிசாமி பெயரையும் இழுத்துவிட முயன்றதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார் எடப்பாடியார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து வெளியே வந்த தினகரன், தனது விருப்பம்போல் நிர்வாகிகளை நியமித்தது உள்ளிட்ட வேறு பல நெருக்கடிகள் காரணமாக, அந்த குடும்பத்தை அதிமுகவை விட்டு விரட்ட வேண்டும் என்றும், கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார் பழனிசாமி.

சசிகலா குடும்பத்தை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதற்காக மவுனமாக திட்டமிட்டு வந்த பழனிசாமி, தர்மயுத்தம் நடத்துவதாக கூறிவந்த பன்னீர்செல்வம் அணியை இணைப்பதற்கான தூது நடவடிக்கைகளை கையில் எடுக்கத் தொடங்கினார்.

இணைப்புக்காக பன்னீர்செல்வம் தரப்பில், ஜெயலலிதா மறைவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்,  கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்க வேண்டும் என இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

பழனிசாமி தரப்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கான வாய்ப்பு இல்லை என பேச்சுவார்த்தையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தை பேரத்தில் படியாத பன்னீர்செல்வம், கடந்த இரு மாதங்களாக நடந்திவந்த பேரம் குறித்து புன்னகையையே பதிலாக அளித்துவந்த பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் பயணம் செய்து அதிமுக தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்து வந்தார். திடீரென பழனிசாமி அரசின் குறைகளை பொதுமக்களிடம் கொண்டுசெல்ல திட்டமிட்டு, போராட்டத்திற்கான தேதிகளையும் வெளியிட்டார்.

இந்நிலையில், பழனிசாமிக்கு தினகரனின் அதிகார குடைச்சல் ஆரம்பமானது. அதாவது, அதிமுக தலைமை அலுவலகம் செல்வோம்; அதிமுகவை இணைக்க ஆகஸ்ட் 14 முதல் சுற்றுப்பயணம்; எம்எல்ஏக்களுக்கு கட்சியில் பணி என குடைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து, பன்னீர் அணியை இணைப்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக முடிக்கிவிட்டார் பழனிசாமி.

அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும்; ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த வியாழக்கிழமை (ஆக 17) அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து தர்மயுத்தத்தை இதற்கு மேலும் நீடிக்க, விரும்பாத, முடியாத நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதுடன், தில்லியில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, இணைப்புக்கான பேரத்தில் படிந்துபோனது பன்னீர்செல்வம் அணி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆட்சி கவிழும் சூழல் இல்லை என்பது இன்னொரு முக்கியக் காரணம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனி அணியாக செயல்பட பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிப்பதற்கான நிதி இல்லை என்ற கலக்கம். அணி ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும், நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட ஆட்டமே (பன்னீர் அணி எம்எல்ஏ ஒருவர் பழனிசாமி அணிக்கு தாவினார்) இன்னொரு காரணம் என்று காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

பேரம் படிந்து இணைப்புக்கு இன்று வருகிறார், நாளை வருகிறார் என தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவந்த பன்னீர் அணியினர், கட்சியிலிருந்து சசசிகலா குடும்பத்தினரை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வேண்டும் என்று கோரியதாலும், கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள பதவிகளை பிரிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டதாலும் இணைவதில் சிக்கல் நீடித்தது.

இதனிடையே திருவாரூர் சென்ற முதல்வர் பழனிசாமி, எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை. நேற்றும் இன்றும் நாளையும் நமதே என்று தெரிவித்தார்.

பழனிசாமி அணியினரால் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போன்றோரின் தடையை மீறி இணையும் முடிவுக்கு பன்னீர் வந்தார். அதுவும் 3 முறை முதல்வராக இருந்தவர், துணை முதல்வர் என்ற பதவி பேரத்திற்கு ஒப்புக்கொண்டார். இதில் சிறப்பும் சிரிப்பும் என்னவென்றால், பழனிசாமி அணிக்கு பன்னீர் திரும்பி வந்தால், தனது நிதி அமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளேன் என்று ஜெயக்குமார் அறிவிக்க, அதற்கு யார், யாருக்கு பதவியை விட்டு தருவது? என்றும் ஜெயக்குமாருக்கு எவ்வளவு அகங்காரம்? ஆணவம்? என திண்டுக்கல்லில் நடந்த தர்மயுத்தப் பேராட்டத்தில் கொந்தளித்தார் பன்னீர்செல்வம். இப்போது ஜெயக்குமார் விட்டுத்தருவதாக கூறிய நிதித்துறை, சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு, வீட்டு வசதித்துறை போன்ற துறைகளை வாயை மூடி பெற்றுக்கொண்டு துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அத்துடன், அதிமுக வழிகாட்டும் குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு டம்மியான தமிழ் வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது. பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி, அதிமுக அமைச்சரவையில் சுகாதாரம்த் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த செம்மலைக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

ஆட்சி, கட்சி அதிகார வளையத்திற்கு வரத்துடித்த பன்னீருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய இடம் கிடைக்காமலேயே இணைந்துள்ளார். இதில், எங்கே? எப்படி? பேரம் நடந்தது. எந்த பேரத்திற்கு பன்னீர்செல்வம் படிந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

தர்மயுத்தத்தின் இரு கோரிக்கைகளும் நிறைவேறாத சூழலில், சேர்ந்தே ஆக வேண்டிய ஒரு இக்கட்டான கட்டாயத்தில் பன்னீர் அணி பழனிசாமி அணியுடன் இணைந்தது என்பதுதான் நிஜம்.

ஏன் என்றால் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான நீதி விசாரணையை பன்னீர் தரப்பு ஏற்கிறதா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அணி தொடங்கிய நாள் முதல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பேரத்தை ஏற்காத பன்னீர், இப்போது ஏற்க வேண்டிய அளவுக்கு ஏதோ நெருக்கடிதான் காரணம்.

இந்த நேரத்தில், தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கும், மற்றவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். வரும் ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய உச்சங்களை எட்டும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனைத்து ஆதரவு மற்றும் உதவியையும் வழங்கும் என்று மோடி தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சசிகலா குடுமபத்தினரால் அரசியல் களத்துக்கு வந்த பன்னீர். பின்னர் அவர்களாலேயே விரட்டப்பட்டதால், கிட்டத்தட்ட 7 மாதங்களாக அந்த குடும்பத்தையே அதிமுகவின் கட்சியில் இருந்து துரத்திவிட்டு அதிகார வளையத்திற்கு வருவதற்கான அத்தனை திட்டங்களையும் தீட்டி, இன்று துணை முதல்வர் அதிகாரத்தில் அமரவைக்கப்பட்டுள்ளார் என்றால், அது பன்னீர்செல்வத்துக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து துரத்திய பங்கில் பழனிசாமியின் பங்கையே அதிமுக வரலாறு பேசும்.

பன்னீர்செல்வத்தை முதல்வர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அதுவும் 3 முறை. இதில் ஒரு முறை சசிகலாவால் முதல்வர் என்ற அதிகார இருக்கையில் அமர்ந்தவர் பன்னீர்செல்வம். இப்போது துணை முதல்வர் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஏற்றமாக இருக்குமா? அல்லது இழப்பாக இருக்குமா? என்றால், அது இழப்பாகவே இருக்கும் என்று பெரும்பாலான தொண்டர்கள், அரசியல் நோக்கர்களின் எண்ண வெளிப்படாக உள்ளது.

எது எப்படியோ, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை விரட்டுவதற்காக சிரமம் எடுத்துக்கொண்ட விவகாரத்திலும், தூக்கிவிட்டவரையே ஒழித்துவிட்டவர்கள் என்கிற விமர்சனத்தில் பன்னீர்செல்வத்தைவிட பழனிசாமியின் உயரமே அதிகம் என்பது நிதர்சன உண்மை எனலாம்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக நடத்தப்பட்ட இணைப்பா அல்லது சசிகலா குடும்பத்தை ஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்திலிருந்து விரட்டுவதற்காக நடத்தப்பட்ட இணைப்பா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீர்செல்வத்தையும், பதவி ஆசையில் துடிக்கும் பழனிசாமியையும் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்பார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எப்படி இருப்பினும், ஒரே அறைக்குள் நுழைந்துள்ள இரண்டு கத்திகளும் சித்து விளையாட்டை அரங்கேற்றாமலும், ஆட்சியையும் கட்சியையும் குழப்பமில்லாமலும் சற்றே நெகிழ்வான போக்கையும் கடைப்பிடித்து இன்பத்தை காண எடப்பாடியார் தயாராவரா, அவருக்கு பன்னீர்செல்வம் ஒத்துழைப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com