பில்டர் காஃபி!

ஒரு அரசன். அவனுக்கு வாரிசுகள் இல்லை. தனக்குப் பின் ராஜ்ஜியத்தை யார் ஆள்வார்கள் என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. உடனே அரசவையை கூட்டினான். தன்னுடைய பயத்தை தெரிவித்தான்.
பில்டர் காஃபி!

‘அரசே! வாரிசு இல்லாமல் அரசன் இறந்தால், பட்டத்து யானையிடம் மாலையை கொடுத்து, அது யார் கழுத்தில் அணிவிக்கிறதோ அவரையே அரசராக தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். யானை தெய்வத்தன்மை வாய்ந்தது. அதன் முடிவு மிகச்சரியாக இருக்கும்', என்றார் மந்திரி.

‘நல்லது. ஆனால் நான் இறந்த பிறகு இந்த நடைமுறை சரியாக நடக்கிறதா என்பதை என்னால் கண்காணிக்க முடியாது. ஆகையால், நான் உயிருடன் இருக்கும் போதே யானையிடம் மாலையை கொடுங்கள். அது புதிய அரசரை தேர்ந்தெடுக்கட்டும்', என்றான் அரசன்.

அடுத்த நாள் யானை புதிய அரசரை தேர்ந்தெடுக்க புறப்பட்டது. வழி நெடுக மக்கள் நின்று யானை தனக்கு மாலையிடாதா என்று காத்திருந்தனர். அரசரும் மாறுவேடத்தில் கூட்டத்தில் இணைந்து நிலைமையை கண்காணித்தார்.

சட்டென்று கூட்டத்தில் இருந்த ஒருவரின் கழுத்தில் மாலையிட்டது யானை. புதிய அரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவனைப் பற்றிய முழுவிவரங்களையும் அரசன் தெரிந்து கொண்டான். பிறகு மக்களிடம் பேசினான்.

‘மக்களே! தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவன் ஒரு குடிகாரன். ஒரு குடிகாரன் கைகளில் இந்த நாட்டை ஒப்படைக்க மாட்டேன். அதனால், யானையிடம் மீண்டும் மாலையை கொடுங்கள்', என்றான் அரசன்.

‘அரசே! நான் தற்போது குடிப்பதில்லை. திருந்திவிட்டேன்', என்றான் அவன்.

‘முன்பு நீ குடிகாரனாக இருந்தாய். இப்போது மாறிவிட்டாய். இந்த நிலையிலிருந்து மாறி மீண்டும் குடிகாரனாக மாறமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?' என்று கேட்டான் அரசன்.

பதிலேதும் சொல்ல முடியாமல் விழித்தான். மீண்டும் யானையிடம் மாலை கொடுக்கப்பட்டது. புதிய அரசனைத் தேடி புறப்பட்டது.

மற்றொருவன் கழுத்தில் யானை மாலையிட்டது. அரசன் மக்களிடம் பேசினான்.

‘இவன் ஒரு பெண் பித்தன். தற்போது திருந்தி ஒழுக்கமாக இருந்தாலும், மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. இவனும் வேண்டாம்', என்றான் அரசன்.

மீண்டும் யானை புறப்பட்டது. இம்முறை ஒரு நாத்திகனை தேர்ந்தெடுத்தது.

‘இவன் ஒரு நாத்திகன். கடவுள் இல்லை என்ற கொள்கையில் தவறில்லை. ஆனால் ஆத்திகர்களை அசிங்கப்படுத்துவதையே இவன் குறிக்கோளாக கொண்டுள்ளான். அதுமட்டுமல்ல, நமது நாட்டில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆத்திகர்கள். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, அது நம்மை வழி நடத்துகிறது, கண்காணிக்கிறது என்ற எண்ணமில்லாதவன் இவன். அடுத்தவன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாதவன். அப்படிப்பட்டவன் நமக்கு தேவையில்லை', என்றான் அரசன்.

மீண்டும் யானை புறப்பட்டது. மீண்டும் ஒருவரை தேர்ந்தெடுத்தது.

‘இவன் ஒரு திருடன். பரம்பரைத் திருடன். தற்போது நல்லவனைப் போல தெரிந்தாலும், திருட்டு குணம் இவனது ரத்தத்தில் ஓடுகிறது. ஆகையால் இவனும் வேண்டாம்', என்றான் அரசன்.

இப்படியே பலரை தேர்ந்தெடுத்தது யானை. ஒவ்வொருவரிடமும் ஒரு குறையை கண்டுபிடித்தான் அரசன். களைப்படைந்த யானை சுருண்டு விழுந்தது. கூடியிருந்த மக்களிடம் பேசினான் அரசன்.

‘மக்களே! ஒழுக்கம், நேர்மை ஆகியவை ஒரு மனிதனுக்கு மிக அவசியம். அத்தகைய குணங்களையுடைய ஒருவன் தான் எந்த சூழலிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அப்படிப்பட்ட ஒருவன் உங்களுக்கு அரசனாக வரவேண்டும். அதற்காகத்தான் இவர்களை நிராகரித்தேன்', என்றான் அரசன்.

அப்போது கூட்டத்தில் இருந்த சாது பேசினார்.

‘அரசே! யானை பலருக்கு மாலையிட்டது. அவர்களுக்கு அரசனாகும் தகுதியிருந்தாலும், அவர்களின் குணங்களின் அடிப்படையில் அவர்களை நிராகரித்தீர்கள். நல்ல விஷயம் தான். ஆனால், மாறு வேடத்தில் கூட்டத்தில் நின்றிருந்த உங்களுக்கு யானை மாலையிடவில்லையே! அது ஏன்', என்று கேட்டார் அவர்.

முறைத்தான் அரசன். மீண்டும் சாது பேசினார்.

‘நீங்கள் உயிருடன் இருக்கும் போது மற்றொரு அரசன் தேவையில்லை என்று யானை நினைத்திருந்தால், அது வேறு யாருக்கும் மாலை அணிவித்திருக்காது. ஆனால், அது அப்படிச் செய்யாமல் புதிய அரசரை தேர்ந்தெடுக்கும் செயலைத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் அது உங்களை நிராகரித்துவிட்டது என்று அர்த்தமா? அப்படியில்லை. மக்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதனால் இது நாள்வரை நீங்கள் செய்த எல்லா தவறுகளையும் ஏற்றுக் கொண்டனர். அதை நியாயப்படுத்தினர். இது சரியான நடவடிக்கை அல்ல. தனக்கு பிடித்தமானவர்களை தலைவனாக ஏற்றுக் கொண்டு அவர்களின் தவறுகளை நியாயப்படுத்துவதை விட, நியாயமான, ஒழுக்கமான ஒருவரை தலைவனாக தேர்ந்தெடுத்து அவரை தங்களுக்கு பிடித்தமானவராக ஏற்றுக் கொள்ளும் மன நிலையை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை மக்களுக்கு யானை வழங்கியிருக்கிறது. அதனால் தான் அது உங்களுக்கு மாலையிடவில்லை', என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் சாது.

சுருண்டு விழுந்த யானை எழுந்து நின்றதா?' என்பது நமக்குத் தேவையில்லை. இருண்டு கிடந்த மக்களின் மனத்தில் இது நிச்சயமாக ஒரு வெளிச்சத்தை கொண்டுவந்திருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

‘அவர் தலைமையை ஏற்போம், இவர் தலைமையை ஏற்போம், அவர் அரசியலுக்கு வரவேண்டும், இவர் அரசியலுக்கு வரவேண்டும். ‘அவர் என்கிட்ட சொல்லிட்டார். கண்டிப்பா அரசியலுக்கு வருவார்', என்று பல முழக்கங்களை கேட்க முடிகிறது.

ஏன் இப்படி ஒரு நிலைமை தமிழகத்திற்கு வந்திருக்கிறது என்ற கேள்வியை நம்மிடையே கேட்பது அவசியம். ஒரு தலைவர் மறைந்துவிட்டார், மற்றொரு தலைவர் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வில் இருக்கிறார். ‘இதுதான் தருணம் வெற்றிடங்களை நிரப்பிவிடலாம்', என்று சிலர் உசுப்பேற்றி விடுகிறார்கள்.

‘நாற்பது ஆண்டுகளாக என்னை ஆதரித்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அதற்காக அரசியலுக்கு வருகிறேன்', என்று ஒரு நடிகர் சொன்னதாக ஒரு கருத்து உலவிக் கொண்டிருக்கிறது.

'ஊழலை ஒழிப்பேன்', என்று சொல்லி களமிறங்கியிருக்கிறார் மற்றொரு நடிகர். சமீபத்தில் இவர் குறிப்பிட்ட ஊழல் ‘சத்துணவு முட்டையில்'. அதுவும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில். இத்தகைய முறைகேடுகளைச் சொல்ல இவரைப் போன்ற ஒரு பெரிய நடிகர் தேவையில்லை. இவர் முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கிறார் என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கையில், சத்துணவு முட்டையை குறை கூறி இந்த அவ்வை சண்முகி சத்துணவு பணியாளர் பணியை குறிவைப்பதைப் போன்ற எண்ணத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது.

இவர்கள் இத்தனை காலமாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த போது இந்த அரசியல் ரிப் வேன் விங்கிள்கள் (Rip Van Winkle) எங்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள்? பல மாமாங்கங்களாக ஊழலில் ஊறிப்போயிருக்கும் தமிழகத்தை இவர்கள் ஓய்வு பெறும் காலத்தில்தான் காப்பாற்ற வேண்டும் என்று காத்திருந்தீர்களா?

Eutrophication Effect' என்ற பதத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குளம் குட்டை ஆகிய இடங்களில் தேங்கியிருக்கும் நல்ல நீரில் வெங்காயத் தாமரை போன்ற செடிகள் மிதப்பதை பார்க்கலாம். முதலில் சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக குளம் முழுவதும் ஆக்கிரமித்து பச்சை போர்வையை போர்த்தியது போல காணப்படும். சிறிது நாட்களில் இவை முற்றிலுமாக அழிந்து, காய்ந்து மிதப்பதையும் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் ‘யூட்ரோபிகேஷன் விளைவு'. தனக்கு கிடைத்த இடத்தை முழுவதுமாக அபகரித்து, உயிரினங்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனையும் சேர்த்து அழித்து, பிறகு தானே அழிக்கிறது. இதனால் தண்ணீர் இருளடைந்து போகிறது. சுருக்கமாக சொன்னால், அந்த தாவரங்களின் அசுர வளர்ச்சியே அதன் அழிவிற்கு காரணமாகிவிடுகிறது. அப்படி ஒரு ‘யூட்ரோபிகேஷன் விளைவு' தமிழக அரசியலுக்கு தற்போது வந்திருக்கிறது. இதற்கு அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்று யாரும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள அசுர அரசியல்வாதிகள் தானும் அழிந்து அரசியல் சூழலையும் அழித்து வருகின்றனர். இதை மோசமான சூழல் என்று நினைக்க வேண்டாம். மாசு இல்லாத சுத்தமான அரசியல் களத்திற்கு தமிழகம் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இனியாவது நமக்கு பிடித்த தலைவர்களின் செயல்களுக்கு கண்மூடித்தனமாக நியாயம் கற்பிக்கும் பழக்கத்தை கைவிடுவோம்.

மரியாதைக்குறிய நடிகர்களே! ஊடகங்கள் உங்களை உயர்த்திப் பிடிக்கலாம், அது உங்களின் உண்மையான உயரமல்ல. அடுத்த பரபரப்பான செய்தி வரும் போது, அவை உங்களை தரையில் இறக்கி விட்டுவிடும். ஒருவேளை, மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை ஓட்டாக மாற்றி உங்களை வெற்றி பெறச் செய்யலாம், ஆட்சியிலும் அமர வைக்கலாம். அனால், மக்கள் முந்தைய ஆட்சியாளர்களால் சந்தித்த அதே பிரச்னைகளை மீண்டும் சந்திக்க நேரிடும். ஆகையால், நீங்கள் மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஒரு நல்ல தலைவர் மக்கள் முன் முளைத்தெழுவதற்கு உதவி செய்யுங்கள். அதைவிடுத்து புதிய குழப்பங்களை மக்களின் மீது திணிக்காதீர்கள்.

‘நடிகர்களே, திடீர் தலைவர்களே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். யானை நமக்கு மாலையிடும், மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று கனவு காணவேண்டாம். அவர்கள் அரசனின் நியாயத்தையும் ஏற்பார்கள், சாதுவின் கருத்தையும் ஏற்பார்கள். அதே நேரத்தில் யானையின் முடிவையும் நிராகரிப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘அவர்களுக்குத் தேவை ஒழுக்கமான, நேர்மையான, அடுத்தவரின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த நாத்திகத்தனம் இல்லாத ஒரு யோக்ய சிகாமணி. அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கும் வரை குறுகியகால இன்ஸ்டன்ட் தலைவர் அவர்களுக்குத் தேவையில்லை.

தேடுவோம், காத்திருப்போம், காலம் நிச்சயமாக ஒரு நல்ல தலைவரை நமக்கு அளிக்கும். எங்களுக்குத் தேவை தரமான பில்டர் காபி. அவசரகதி இன்ஸ்டன்ட் காபி அல்ல.

- அன்புடன் சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com