ஆணாகப் பிறந்த பெண்ணுக்கும், பெண்ணாகப் பிறந்த ஆணுக்கும் திருமணம்!

இவர்கள் இருவரும் பாலினம் மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்த  நிலையில்  இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. 
ஆணாகப் பிறந்த பெண்ணுக்கும், பெண்ணாகப் பிறந்த ஆணுக்கும் திருமணம்!

பிறப்பளவில் பெண்ணாகப் பிறந்தவர் 46 வயதான ஆரவ் அப்புக்குட்டன், அதே போல் ஆணாகப் பிறந்தவர் 22 வயதான சுகன்யா கிருஷ்ணா. இவர்கள் இருவரும் பாலினம் மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்த  நிலையில்  இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. 

இருவரும் பல வருடங்களாக தங்களது மனப்போக்கிற்கு எதிர்மறையான உடலுக்குள் சிக்கி தவித்து வந்ததாகவும், அதிலிருந்து விடுபட்டு தாங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்து மும்பை வந்ததாகவும் கூறுகிறார்கள். “எங்கள் இருவருக்கும் குழந்தை பருவம் அவ்வளவு இனிதாகவும், எளிமையாகவும் இல்லை, நினைத்த வாழ்க்கையை வாழ முடியாமலும், கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தவித்தோம்” என்று தங்களது மனக் குமுறல்களை பதிவு செய்துள்ளனர்.  

“நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழ்ந்து கவனித்தோம், எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம், அப்போது எங்களையும் அறியாமல் இருவருக்கும் இடையில் காதல் வளர்ந்து விட்டது,” என்றார் ஆரவ் அப்புக்குட்டன். “தற்போது அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்காகக் காத்திருக்கிறோம், சட்டப்பூர்வமான திருமணத்திற்குப் பிறகு சுகன்யாவுடன் எனது முழு வாழ்க்கையையும் செலவிட நான் விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுகன்யா கூறுகையில் “இன்றைய சூழலிலும் திருநங்கைகள் எண்ணற்ற அவமானங்களையும், துயரங்களையும் சந்தித்து வருகிறோம், இந்நிலையில் நாங்கள் திருமணம் செய்துகொண்டால் அதைவிட அதிகமான வாழ்க்கைப் போராட்டங்களுக்கு தயாராக வேண்டும். எங்கள் பிள்ளைகளை இந்தச்  சமுதாயம் எப்படி நடத்தும் என்பதை எண்ணித்தான் நான் கவலைப்படுகிறேன், விரைவாகச் சமுதாய சீர்திருத்தம் ஏற்பட்டு எங்களைப் போன்றோரும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று நம்புகிறேன்.”  

இந்தத் தம்பதியினர் இந்து மத முறையிலான ஒரு பாரம்பரிய திருமணத்திற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

“நாங்கள் ஒரு முழுமையான குடும்பமாக நிச்சயம் இருப்போம் என்று நம்புகிறோம், எங்களைப் போன்றோர் பலர் வாழ்வின் விளிம்புகளில் கைவிடப்பட்ட நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருப்போம்” என்று இருவரும் கூறியுள்ளனர்.

திருமண பந்தத்தில் இணையும் ஒரு ஆணும் பெண்ணும் வருகின்ற கருத்து வேறுபாடுகளைக் கலைந்து, இருவரது குறைகளையும் பூர்த்தி செய்வதற்கான மனப்பக்குவத்தை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் இவர்கள் இருவரும் ஆணுக்கான வீரத்தையும், பெண்ணுக்கான ஈரத்தையும்  பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com