எது தார்கோவஸ்கியை, ஏனைய இயக்குனர்கள் நெருங்க இயலாதபடி தனித்துக் காட்டுகிறது?

ஒட்டுமொத்த திரைப்பட வரலாற்றிலும், தார்கோவஸ்கியை போல மனித ஆன்மா குறித்த
எது தார்கோவஸ்கியை, ஏனைய இயக்குனர்கள் நெருங்க இயலாதபடி தனித்துக் காட்டுகிறது?

நாம் இங்கு வாசற்படியில் இருக்கிறோம்.

இதுதான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.

இப்போது உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டும்

உங்களது மிக நேசத்திற்குரிய ஆசை நிறைவேறும்

ரொம்பவும் நேர்மையான ஆசை.

நீங்கள் துயரங்களின் மூலமாக அடைந்த ஆசை.

(STALKAR திரைப்படத்திலிருந்து...)

ஒட்டுமொத்த திரைப்பட வரலாற்றிலும், தார்கோவஸ்கியை போல மனித ஆன்மா குறித்த வியக்கத்தக்க நிலைப்பாட்டை தங்களின் திரைப்படங்களில் வெளிக் கொணர்ந்த இயக்குனர்கள் எவருமில்லை. இன்றைய திரைப்படங்கள், பாலியல் சூழ்ச்சியையும், அற்பத்தனமான கவர்ச்சியையும், மனித உணர்வுகளை மிகைப்படுத்தி காண்பிப்பதன் மூலமாகவும் சீர்குலைந்து மிகக் குறுகிய எல்லைக்குள்ளாகவே தேங்கி  நின்றிருக்கும் போது, தார்கோவஸ்கி தனித்த ஒருவராக, அதற்கு முற்றிலும் நேர்மாறான பாதையில் மனித ஆன்மாவின் தெய்வீக நிலையினை தனது திரைப்படங்களில் வெளிக்காட்டினார்.

எது தார்கோவஸ்கியை, ஏனைய இயக்குனர்கள் நெருங்க இயலாதபடி தனித்துக் காட்டுகிறதென்றால், மனிதன் ஒரு தெய்வீக ஆன்மா என்று அவரது அசைக்க முடியாத எண்ணம்தான். இது தார்கோவஸ்கியின் சுய நிலைப்பாடு என்று பலரும் நினைக்கக்கூடும். அத்தகைய நினைப்புதான் அவர்களின் சினிமா தோல்வியுறுவதற்கான 99% காரணம். மனிதனின் பாலியல், மனிதனின் பைசாசத்தன்மை மற்றும் மனிதனின் சமூக  பங்களிப்பு போன்ற விஷயங்களை தங்களின் திரைப்படங்களில் கையாளும் இயக்குனர்கள், திரைப்படங்களில் மனித ஆன்மாவை விசாரணைக்குள்ளாக்குவதை எளிதாகவும், வசதியாகவும் புறக்கணித்து விடுகிறார்கள். இன்றைய சினிமாக்களில் யாரேனும் எப்போதாவது மனிதனின் தெய்வீக ஆற்றலை தொடுகிறார்கள் என்றால், அது அவர்களின் படங்களில் சிறிய பங்களிப்பாக மட்டுமே பிரயோகப்படுத்தப்படுகிறது. மனிதனின் தோற்றத்திற்கான ஆதார கேள்வியினை அவர்கள் மறந்தும் தங்களது படங்களில் தொடுவதில்லை. ஆனால், தார்கோவஸ்கியின் அனைத்து திரைப்படங்களும் இதே கேள்வியினையே மீண்டும் மீண்டும் ஆராய்கின்றன. இன்னும் சொல்வதென்றால், அவரது மனத்தின் தூய்மை, அவரது திரைப்படங்களிலும் படிந்திருக்கிறது. அவரே சொல்வதைப்போல, அவரது கதாப்பாத்திரங்கள் அனைவருமே சுய விசாரணைக்கு ஆளாகிறார்கள்.

அவருடைய ஸ்டால்கர் (STALKER) திரைப்படத்தில், இப்பிரச்னை மிகவும் தீவிரமாக அலசப்பட்டிருக்கிறது. அப்படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே அறம் சார்ந்த சுய ஆராய்வுக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரமும், அவர்களுக்கே உரித்தான சிக்கல்களை ஆராய்ந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மனிதத்தன்மையை தங்களுள் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமென்பதே பொது விதியாக இருக்கிறது. ஸ்டால்கர் படத்தில் வரும் கதாப்பாத்திரம் தனக்குள்ளாக ஒலிக்கும் குரலை பின்தொடர்வதன் மூலமாக சரியான முடிவை நோக்கி நகர முடியாமல் குழப்பமுறும் அனைத்து மனிதர்களின் பொதுத்தன்மையையும், உள் பேச்சுக்களை கேளாது தம் உலக ஆசைகளை பின் தொடர்ந்து செல்லும் மனிதர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை அழகுற செதுக்கிக் கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறது. ஸ்டால்கரின் செய்கைகள் அப்படத்தின் ஏனைய கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமில்லாது, பார்வையாளர்களிடமும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. அவனிடம் வாழ்தலுக்கான எவ்வித அவசரமும் இல்லை. தன்னையே வாட்டிக் கொள்ளும் போதும், கொள்ளையில் ஈடுபடும்போதும் அவன் சுய எச்சரிக்கையுடன், தனது ஒவ்வொரு செய்கைகளுக்கும் சரியான அறிகுறிகளை ஆராய்ந்த பிறகுமே அச்செயல்களில் ஈடுபட துவங்குகிறான். அதோடு, புறவய உலகை  எவ்விதத்திலும் தொந்தரவுக்குள்ளாக்க விரும்பாத அவன், தனக்குள்ளாக ஒலிக்கும் குரலை அதிகம் நம்புகிறான். எது அவனை தொடர்ச்சியாக அலைக்கழிக்கிறது?, ஏன் அவன் எதனையும் கூர்மையாக அலசியபின் அவ்விஷயத்தை புரிந்து கொள்கிறான்? இதுதான் ஒரு படைப்பாளி நம்முடன் வாழ்க்கை குறித்த உரையாடும் பகுதி. இதுதான் தார்கோவஸ்கியின் தனித்துவமான திரைமொழி. வாழ்க்கையை துல்லியமாக கவனிப்பதன் மூலமாக கடவுளின் குரலை கேட்கவியலும் என்பதை தார்கோவஸ்கி முழுமையாக நம்புகிறார்.

தார்கோவஸ்கியிடம் மேலும் சில தனித்தன்மையிலான பண்புகள் இருக்கின்றன. ஒரு திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாது, உயரிய மனிதராகவும் அவரை அடையாளம் காட்டும் பண்புகள் மற்றும், ஏனைய திரைப்பட இயக்குனர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், ‘நாம் பங்கு கொள்கின்ற கலை வடிவமானது, நம்மிடம் அதீத பொறுப்புணர்ச்சியை கோருகின்றது. ஏனைய கலைகளை விடவும் சினிமா மக்கள் கொண்டுள்ள ஒழுக்க நெறிகளையும், அவனது ஆன்மிக அனுசரணையையும் நேரிடையாக சிதைக்கிறது’. (தார்கோவஸ்கி தனது “Sculpting in Time” புத்தகத்தில்). ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது சொற்கள், கேட்கும் திறனிழந்த செவிடனின் காதில் சொல்லப்பட்டதைப் போலாகிவிட்டது. ஆனால், அவர் அதற்காக மற்ற எவர் மீதும் வேதனைப்படாது, தானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு எழுதுகிறார்,

‘நாம் நம் நிலையிலிருந்து வழுவி விலகிச் செல்வது மிகவும் எளிதானது. ஆனால், சந்தர்ப்பவாத நோக்கங்களை மனதில் ஏந்திக்கொண்டு அவற்றை நமது படைப்புகளில் உயர்த்திப்பிடிப்பது முற்றிலும் எளிதானதன்று. தூய்மையான தெய்வீக அம்சங்களை பிறப்பிக்க வைப்பது மிகமிக கடினமானது.’

‘தன்னையே சுய ஆய்வுக்கு உட்படுத்திதான் தனது உடலுக்கும் ஆன்மாவுக்கும் உண்மையாக இருக்க வேண்டுமென்பதை ஒருவரும் விரும்புவதோ, ஏற்பதோ இல்லை’

‘மனிதனின் செயல்பாடுகளையும், அவனது லட்சியங்களையும் இணைக்கும் சங்கிலி சிதைந்துவிட்டது. இத்தகைய துயரமான சிதைவால், மனிதன் இன்றைய நவீன உலகில் தனது சுய கட்டுப்பாடுகளை முற்றிலுமாக இழந்து வருகிறான். இதனால் தனது விதியினை திருத்தி எழுதும் உரிமை தனக்கில்லை என்று நம்பிக்கையற்று தவறாக எண்ணுகிறான்’

‘இந்த உலகத்தின் சம நிலையற்றத்தன்மையை, சீர் தூக்கும் காரணிகள் எதுவும் உண்டு என்றால், அது மனிதனின் சுய பொறுப்புணர்ச்சி மட்டுமே என்று தீர்மானமாக நம்புகிறேன்’

தார்கோவஸ்கியின் திரைப்படங்களை, மிகச் சிறிய அளவில் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும், அவராலேயே எழுதப்பட்ட ‘Sculpting in Time’ புத்தகம்தான், அவரது திரைப்படங்களை மிகச்சிறப்பாக ஆராயும் புத்தகம். நமது ஆன்மாவின் புனிதத்தை மீட்டு கொண்டு வரும் அவரது திரைப்படங்கள், ஒவ்வொரு பார்வையாளருக்கும் பிரத்யேக தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன. சமயங்களில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவமளிக்காது, எல்லையற்ற ஆன்மிகத்தன்மைக்குள் நம்மை அழைத்துச் சென்றிருக்கின்றன. கிட்டத்தட்ட நமது குடும்ப உறவுகளை நினைத்து துயருரும் நாஸ்டால்ஜிக் நிலைக்கு, அவரது திரைப்படங்கள் நமக்களிக்கும் அனுபவத்தை ஒப்பிடலாம். டார்கொவ்ஸ்கியின் திரைப்படமான நாஸ்டால்ஜியா ஆங்கில மொழி அர்த்தத்தில் பொருள் கொள்ளப்படவில்லை. சொந்த நிலத்திலிருந்து பிரிந்து வாடும் சோகத்தை பொருள்படுத்தும் ரஷ்ய மொழி அர்த்தத்திலேயே அதனை தார்கோவஸ்கி வைத்துள்ளார். 

இத்தைகைய நாஸ்டால்ஜியா நிலையை தார்கோவஸ்கியின் தந்தையான கவிஞர் அர்சென்னி டார்கொவ்ஸ்கி (Arseniy Tarkovsky) ஒரு கவிதையில் பதிவு செய்துள்ளார்.

இப்போது கோடை கடந்துவிட்டது,

முன்பொருபோதும் அது இல்லாதது போலவே.

இப்போது சூரியனில் வெப்பம் சூழ்ந்துள்ளது.

ஆனால், இது போதாது.

இருந்திருக்க வேண்டியவை அனைத்தும்,

ஒரு ஐந்து முனை இலைப்போல

என் கைகளில் விழுந்தது,

ஆனால், இது போதாது.

தீமையோ நன்மையோ

முழுமையும் மறைந்துவிட்டது,

வெண்ணிற ஒளி அனைத்தையும் எரித்துவிட்டது.

ஆனால், இது போதாது.

வாழ்க்கை தனது சிறகினுள் எனக்கு அடைக்கலம் தந்தது,

அரவணைத்து பாதுகாத்தது,

நிச்சயமாக நானொரு அதிர்ஷ்டசாலி

ஆனால், இது போதாது.

ஒரு சிறிய இலை கூட உதிர்ந்துவிடவில்லை,

ஒரு கிளையும் முறிந்துவிடவில்லை.

கண்ணாடியின் தூய்மையைப்போல நாள் சுத்தமாக இருந்தது,

ஆனால், இது போதாது.

மக்கள் தொகையின் பெருக்கத்தால், மனிதர்கள் தமக்குள் ஒளிவிடும் தூய்மையான வெளிச்சத்தை தொழுதிடும் எண்ணத்தை முற்றாக துறந்து விட்டார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. டார்கொவ்ஸ்கி இதனை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார், ‘திரையரங்கில் கூடுகின்ற எண்பது சதவிகித மக்கள், தாங்கள் அங்கு குழுமியிருப்பது வெற்று கேளிக்கை அனுபவத்திற்காக மட்டுமே என்று எப்படி நினைக்கத் துவங்கி விட்டார்கள் என்று புரியவில்லை. இந்த எண்பது சதவிகித பார்வையாளர்களை முற்றாக புறக்கணித்தால் மட்டுமே நம்மால் நம் திரைப்படங்களின் மூலமாக பார்வையாளர்களிடம் நமது உரையாடலை துவங்க முடியும்’ எனினும், தார்கோவஸ்கி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பார்வையாளர்களை தமது சுயம் சார்ந்த ஆராய்வுக்கு உட்படுத்த தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார். இச் செயல்பாட்டை தமது கடமையாகவே நினைத்திருந்த தார்கோவஸ்கி தமது பார்வையாளர்களிடத்தில், அவர்களது மனத்தின் அடிநிலையில் தோற்றுவிக்கும் தூய்மையை அவர்களே அதனை அறிந்திராதபோதும் தூண்டிவிடுவது தமது நோக்கமென்றே நினைத்திருந்தார்.

தார்கோவஸ்கியின் திரைப்படங்களால், தமது ஆன்மாவின் புனிதத்தை உணர்ந்த சிலர் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்:

‘இவானின் குழந்தைப் பருவம் (Ivan’s Childhood) திரைப்படத்தில், இரு சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வருகின்ற ஆப்பிள் வண்டிக்கூட நாங்கள் இழந்துவிட்ட சிறு பிராயத்தின் வெகுளித்தன்மையை மீண்டும் நினைக்கச் செய்கிறது’

‘MIRROR திரைப்படத்தில் தார்கோவஸ்கி தனது பெற்றோரின் இளம் பருவத்தை சித்தரித்து, அவர்கள் இருவரும் புல்வெளியில் சாய்ந்தவாறு தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை பற்றி உரையாடும் காட்சி ஒன்றை வைத்திருப்பார். அதில், கணவன் தனது மனைவியிடம் கேட்பான், ‘உனக்கு ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது பெண் குழந்தை வேண்டுமா?’. அதற்கு அவள் பதிலேதும் கூறாமல் சில நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு, கேமராவிடமிருந்து விலகி புற உலகைப் பார்த்தபடி நிற்பாள். படைப்பியக்கத்தின் மர்மத்தை உணர்ந்தவளாக அவளது கண்கள் மேய்ந்தபடி இருக்கும். தார்கோவஸ்கி உடனடியாக காட்சியை மாற்றி மரமொன்றின் இலைகளை காற்று உரசிச் செல்லும் காட்சியை வைத்திருப்பார். பின்னணியில் ஜே.எஸ். பேச்சின் புகழ்பெற்ற ‘புனித ஜானின் பேரார்வம்’ இசைத்துணுக்கு ஒலித்தபடியே இருக்கும். ‘இறைவா! இறைவா! நிகரற்றவனே! உமது ஆசியும் மகிமையும் என்றென்றைக்கும் நிலைத்திருக்குமாக...’ என்ற வரிகள் அதீத உணர்ச்சி பெருக்குடன் கோரஸாக பாடப்படும். மனிதனின் உலக வருகையை இத்தனை வீரியமாகவும் புனிதத்துவமாக வேறு எங்கும் எவரும் சித்தரித்தது கிடையாது’

அல்லது SOLARIS திரைப்படத்தில், நாயகனும் நாயகியும் மிதக்கும் போது, பின்னணியில் ஜீரோ கிராவிட்டி குறித்த விவரணைகள் ஆகட்டும் (தார்கோவஸ்கி இத்தகைய இலகுத்தன்மைதான் காதலை திரைப்படங்களில் சித்தரிப்பதற்கான மிகச் சரியான முறை என்று குறிப்பிடுகிறார்)’

தார்கோவஸ்கி சமயங்களில் சில தவறான முடிவுகளையும் எடுத்திருக்கிறார். தன் சுய வாழ்வில் பல்வேறு அனுபவங்களை பெருகிக் கொள்வதன் மூலமாக, அத்தகைய அனுபவங்களை தனது திரைப்படங்களில் பிரதிபலிப்பதுக் குறித்து தார்கோவஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘இறுதியில், பார்வையாளர்கள்தான் வெற்றி கொள்கிறார்கள், ஒவ்வொரு கலைஞனும் தோல்வியுறும்போது’ என்கிறார். பெரும் கலைஞர்கள் அனைவரும் தமது வாழ்வில் எண்ணற்றவைகளை இழக்க வேண்டியுள்ளது என்பது ஒரு வழக்கமாகவே பின்பற்றப்படுகிறது. இந்த இழப்பு நிலை ஒருவித புதிரான வழிமுறையில் பல கலைஞர்களையும் வந்தடைந்து விடுகிறது.

தார்கோவஸ்கி, பிரஸனன் போன்ற மிகப்பெரும் கலைஞர்கள்கூட இத்தகைய துறவு இழப்புகளை தோற்றுவிக்கின்ற மாய ச்சுழலை எதிர்க்க முடிந்ததில்லை. ஆனால், யதார்த்தம் தார்கோவஸ்கி மேற்குறிப்பிட்டுள்ள கூற்றுக்கு மிகவும் எதிரிடையானது. எப்போதும் கலைஞனே அதிகம் வரம் பெற்றவனும், அதிக பயனடைந்தவனும் ஆவான். ஏனெனில், தனது திரைப்படங்களில் அவன் வெளிக் கொண்டு வருகின்ற ஆன்ம சுத்திகரிப்பு முழுவதும் அவனிலிருந்து பிறக்கின்றது. பார்வையாளர்கள் அவர்களுடைய சுய அனுபவத்தின் மூலமாகவே திரைப்படங்களில் நுகரவும், அதன் மூலமாக தனது சுயத்தை விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமாகவும் மட்டுமே பயனடைகிறார்கள். ஆனால், கலைஞன் அத்தகைய அனுபவங்களை உருவாக்குகின்றவன். அத்தனைக்கும் உரியவன். ஒருபோதும் கடவுள் தன்னை சிதைத்துக் கொண்டு கலைக்கென செயல்படுகின்றவனை கை விட்டுவிட்டு, பார்வையாளனாக திரையரங்குகளில் கூடி கலைஞனின் உருவாக்கத்தினால் நுகரப்பட்டு, தம் சுயத்தை மதிப்பீட்டு பார்க்கிறவனை உயர்த்தி விடுவதில்லை. கடவுளின் இத்தகைய நேர்மையான தீர்ப்பு, மற்றவர் செய்த பாவங்களுக்காக தன்னை மாய்த்துக் கொள்ள எந்த அப்பாவிகளையும் அனுமதிப்பதில்லை என்பதற்கு நிகரானது.

கடவுளிடம் சென்று, ‘நீ இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் நடந்துக்கொள்ள வேண்டுமென்று’ அலெக்சாண்டர் SACRIFICE திரைப்படத்தில் விவாதம் செய்வதைப்போல ஒருவரும் செயல்பட முடியாது. மனிதத் தத்துவம் குறித்து இப்போது வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை விடவும், மிகவும் வலிமையான பல கேள்விகள் இன்னும் எழுப்பப்படாமலேயே உள்ளது. அவசரமான தெளிவில்லாத ஒரேயொரு செயல் மட்டும் போதாது. முழுமையான புதுமையான வாழும் முறை நமக்கு தேவையாய் இருக்கிறது. சராசரியான மனிதனிலிருந்து, தெய்வீக நிலையை நோக்கி நகரும் ஒரு முழுமையான மாற்றம் தேவைபடுகிறது.

தார்கோவஸ்கி தமது மரணப் படுக்கையில் குறிப்பிட்ட (அவரது மனைவியின் கூற்றின்படி) இறுதி சொற்களில் ஒன்று ‘ஒரு புதிய பாதையில் பயணிப்பதற்கான நேரம் வந்துவிட்டது’. தார்கோவஸ்கியின் இந்த கூற்று லெவ் தல்ஸ்தோயின் ‘தேடுங்கள்.. எப்போதும் தேடிச் செல்லுங்கள்..’ என்று சொற்றொடரை நினைவுப்படுத்துகிறது. இத்தகைய அணுகுமுறை, எதனையும் விரைந்து முன்னெடுத்து செல்ல வழிவகை செய்துவிடுகிறது. இத்தகைய உண்மையின் மீதான புனிதத்தை நாட, எது ஒரு மனிதனை உந்தித் தள்ளுகிறது என்றால், அவனுள் எப்போதும் அணையாமல் கனன்று கொண்டிருக்கும் ஏக்க உணர்வே. ஸ்டாலின் தொழில் கூடத்தில் உயிர் விட்ட ரஷ்ய தத்துவாசிரியர் பவெல் ஃப்ளோரன்ஸ்கி இந்த ஏக்க நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘உண்மை என்று ஒன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், உண்மை என்று ஒன்றில்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது என்று என் உள்ளுணர்வு தொடர்ந்து எனக்கு உணர்த்தியபடியே இருக்கிறது. அதோடு, உண்மை இருக்குமெனில், அதுவே எனது எல்லாமும். என் வாழ்வதன் நோக்கம், எனது பலம், எனது நன்மை, எனது வாழ்க்கை மற்றும் என் பிரியங்களும். ஒருவேளை உலகில் உண்மை நிலைத்திருக்கவில்லை என்றாலும், நான் அதனை நேசிக்கிறேன். நேசித்தாலே உலகில் நிலைத்திருக்கும் அனைத்திலும் மிகச்சிறந்த உணர்வு. அதனால், உண்மையும் உலகில் நிறைந்திருப்பதாக நினைத்தே அதனை நேசித்து வருகிறேன். ஒருவேளை, உண்மை இல்லாவிட்டாலும், எனது ஆன்மா, எனது எண்ணங்கள், எனது கனவுகள் யாவற்றின் மூலமாகவும் உண்மையை நிலைத்திருக்க செய்வேன். தூய பரிசுத்தமான மெய்மையை தக்க வைத்துக் கொள்ள எதையும் துறக்கவும் நான் தயாராக இருக்கிறேன். எனது கேள்விகளும், குழப்பங்களும் மெய்மையை சுற்றியே இருக்கும்’

நாம் அனைத்தையும் அலசிவிட்டதாகவே கருதுகிறேன். எனினும், இன்னும் ஒன்று மீதமிருக்கிறது. அதுவொரு காட்சித் துண்டு கூட இல்லை. அது சப்தத்தை பற்றியது. Stalker திரைப்படத்தில் வெகு தொலைவிலிருந்து கேட்கும், ரயிலின் ஹாரன் சத்தமே அது. நாம் நமது பழக்கப்பட்ட மதிப்பில்லாத வாழ்க்கையை கைவிட்டு, புதிய பாதை ஒன்றில் பயணிப்பதன் மூலமாக நமக்குள் இருக்கும் புனிதத்துவத்தை மீட்டெடுக்க அழைக்கும் அந்த ரயில் சத்தம். ‘மனிதன் நடைமுறைப்படுத்தப்பட்ட மிக சராசரியான வாழ்க்கையை நகர்த்தி சென்றிட படைக்கப்படவில்லை. அவன் தனது உள்ளுணர்வுகளுக்கு செவி சாய்க்க வேண்டும். உள்ளுணர்வை பகுத்தறிய வேண்டும். இதன் மூலம் படைப்பியக்கத்தின் முக்கிய அங்கமாக, அர்த்தமுள்ள பிணைப்பை மனிதன் ஏற்படுத்த முடியும்’

ஏனெனில், தார்கோவஸ்கியால் ஐம்புலன்களையும், உலகின் மொத்த நுகர்வு பொருளையும் பிணைந்து தனக்குள் ஏற்றிக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அவற்றை தொடர்ந்து தனக்குள் தக்க வைத்துக்கொள்ளவும், அதனை அனுபவிக்கவும் முடிகிறது. கூடுதலாக, அவர் தனக்குள் ஏற்றிக் கொண்டுள்ள மொத்த அறிவாற்றலையும் ஒரு கருவியாக பயன்படுத்தி, நம்மை வழி நடத்திச் செல்கிறார்.

அறிவாற்றல்தான் உலகத்தின் மிகப்பெரிய செல்வமாகும். உலகில் நமது வாழ்க்கையை திசைமாற்றி நெறிப்படுத்த அறிவாற்றலால் மட்டும் முடியும். மனித மனதின் அடியாழத்தில் புதைந்துள்ள புனிதத் தன்மையிலிருந்து மேலெழும் உணர்வெழுச்சியே அறிவாற்றலை பக்குவமாக கையாளும் கருவியாகும். அறிவாற்றல் என்பது நமது புற உடலமைப்பின் மூலமாக வெளிப்படுத்தக்கூடியது என்றால் உள்ளுணர்வில் தோற்றுவிக்கும் கருத்து சிதறல்கள் நமது ஆன்மாவிலிருந்தே பிறக்கின்றன.

அறிவாற்றல் என்பது மூளையில் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்றுதான் எனும் போதிலும், அதன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துவது நமது உடல்தான் என்றாலும், அனைத்துமே உலகினையே சாரும். இந்த கருத்துருவானது காலம் மற்றும் இடத்தைச் சார்ந்தே உருவாக்கப்படுகிறது. அறிவாற்றல் நமது உடலை விட மிகவும் நுட்பமானதுதான் என்றாலும், அதனால் ஒருபோதும் காலம் மற்றும் இடத்திற்கு அப்பாற்பட்டு இயங்க முடியாது. அதனால் அறிவாற்றல் முழுவதும் உலகவயப்பட்டதே.

ஆனால், நமது உள்ளுணர்வின் கருத்துக்கள் எவற்றின் மூலமாகவும் கட்டுப்படுத்த இயலாதது. உள்ளுணர்வு காலம் மற்றும் இடங்களுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில், உள்ளுணர்வு மனித மனங்களில் தோற்றுவிக்கும் புனிதத்திலிருந்து மேலெழுகிறது.

இதனால், மனிதனால் வெகு எளிதாகவே ஐம்புலன்களோடு தமது உள்ளுணர்வின் வழியாகவே தொடர்படுத்திக் கொண்டு ஆன்மிக பாதையில் நெருக்கமாக பயணிக்க முடியும். அதோடு, மனிதன் தனது வாழ்வையும் அன்றாட பணிகளையும் உலகில் நிரம்பியுள்ள திடப் பொருள்களின் மத்தியிலேயே வாழவும் முடியும். மனிதன் இவ்வழியில்தான் வாழவும் உணரவும் விதிக்கப்பட்டுள்ளான்.

மனிதன் மட்டுமே தூய்மையான வெளிச்சம் பெருகிய புனித பாதைக்கும், உலகில் நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் வலிமையான புதிதான தொடர்பினை ஏற்படுத்த முடியும். மனிதனிடம் உள்ள பேராற்றலின் மூலமாக மட்டுமே இவ்விருவேறு உலகினையும் உருக்கி ஒன்றாக உருமாற்ற முடியும். தூய்மையான ஒளி பெருகும் வாழ்க்கைக்கும், உலகில் வழக்கமாக கொல்லப்பட்டுள்ள வாழ்வுக்குமான இணைப்பாக மனிதனே இருக்கிறான். ஆனால், மனிதன் இதனை உணர்வதில்லை. அவன் இவ்விரு வாழ்க்கை முறைக்கும் இடையில் நிலவும் இடைவெளியை மேலும் மேலும் பெருக்குவதிலேயே முனைப்பாக செயல்படுகின்றான். இத்தகைய செயல்பாடே மனிதனை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது!

மனிதனின் இத்தகைய பேராற்றல், அவனை இந்த உலகத்தின் அரசனாக வாழ விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த முழு உலகமும் முழுக்க முழுக்க அவனை சார்ந்தே இயங்குகின்றது. அதன் வீழ்ச்சியையும், எழுச்சியையும் மனிதனே நிர்ணயம் செய்கின்றான். இயற்கையின் பேரொளியும் மனித வாழ்வும் எவ்வாறு பிணைந்து தூய்மையை  கடைப்பிடிக்கின்றன என்பதைப் பொறுத்தது அது.

ஆனால், மனிதன் எளிதாக, இவ்விரண்டுக்கும் இடையிலான தொடர்பை அறுத்து விடுகிறான். உயிர் தொடர்ந்து செயல்பட ரத்த ஓட்டம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ அது போலத்தான், இயற்கையின் கூறுகள் மனித வாழ்வினில் ஆதிக்கம் செலுத்துவது. இதனை மனிதன் புறக்கணிக்கும்போது, குழப்பமும், துயரமும் பெருகி இறுதியில் மனிதன் சிதைவுக்குள்ளாகிறான்.

இத்தகைய சிதைவுக்கு முழுமுதற் காரணம், மனிதன் தனக்குள் பெருக்கி வைத்துள்ள அறிவாற்றலை ஒரு கருவியாக பயன்படுத்தாமல், தன்னை முழுமையாக அறிவாற்றலுக்கு ஒப்புவித்துவிட்டு, அனைத்தின் மீதும் அதனை செலுத்திப் பார்ப்பதால்தான். இதன்மூலம், மனிதன் அறிவாற்றலுக்கு அடிமையாகிவிடுகிறான். நுகர்வின் மூலமாக பெற்ற ஜடத்தன்மையிலான அறிவை மட்டுமே நம்பிக்கொண்டு, தன்னை அறிவில் சிறந்தவன் என்று பிதற்றி பெருமைப் பட்டுக்கொள்கிறான்.

இப்படி, தன்னை அறிவாற்றலுக்கு முழுமையாக ஒப்புவித்துவிடுகிற மனிதன், அவர் சேகரித்து வைத்துள்ள செய்தித் துணுக்குகளுடனேயே பிணைந்து விடுவதன் மூலமாக, காலம் மற்றும் இடம் சார்ந்த கருத்துருக்களை மீறி அவனால், எதையுமே தெளிவுற சிந்திக்க இயலாது. இது அறிவாற்றல் என்றும் நம்பும் ஒன்றினுள் தன்னை அடைத்துக் கொண்டு சுருங்கி போவதான செயல் மட்டுமே.

இதனால், புற உலகோடு தொடர்பேற்படுத்திக்கொள்வது மிகமிக அவசியமாகிறது. வாழ்க்கைக்கான ஆதாரமான கடவுள் காலம் மற்றும் இடம் சார்ந்து மட்டுமல்ல, அதற்கும் உயரமான இடத்தில் இருக்கிறார். ஐம்புலன்களையும் கடந்து புனிதமான இடத்தில் வசிக்கிறார். ஐம்புலன்கள் அனைத்தும் இணைந்து பூமியிலிருந்து நாளும் வளர்ந்துக் கொண்டேயிருக்கும் சுவறொன்றை கட்டி எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அறிவாற்றல் என்று நாம் நம்பும் ஒன்று, இந்த தொடர்பினை எளிதாக புறக்கணித்து அதனை உடைத்து, பரிசுத்த தெய்வீக நிலையை அடைய முரண்பட்டு மறுக்கிறது.

அறிவு நிரம்பிய மரத்திலிருந்து, எடுத்துண்பது அறிவாற்றலை விளைவிப்பதன்றி வேறில்லை. ஆனால், தம்மை பெரும் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு இயற்கையாய் பிணைந்துள்ள தொடர்பை அறுத்தெறிவது மனிதனை சிதைவுக்கு மட்டுமே இழுத்துச் செல்லும்.

இவையெல்லாம் நம்மை எங்கு இழுத்துச் செல்லும்? இவ்வாறு செய்திகளை நுகர்ந்து, அறிவை தட்டையாக மூளையில் தேக்கி வைத்துக் கொண்டு வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒருங்கிணைந்து, உலகில் பொய், பேராசை, கொள்ளை, ஒழுக்கக்கேடான செயல்கள், ஒடுங்கும் மனப்பான்மை போன்றவற்றை தோற்றுவித்து எவையெல்லாம் இயல்புக்கு முரணானதோ அதனையெல்லாம் செயல்படுத்தி இறுதியாக, மனிதகுலத்தை சிதைத்து நிர்மூலமாக்கிவிடும்.

படைப்பியக்க விதியை ஒருபோதும் நம்மால் தவிர்க்க இயலாது. வானில் வெடித்து சிதறும் இடிமுழக்கம் சிதைவை உண்டாக்கினாலும், இறுதியில் தூய்மையை பரப்பி விடுகிறது. அதன்பின், படைப்பியக்கத்தில் தாம் செய்ய வேண்டிய கடமையினை, மனிதன் செய்ய துவங்கிவிடுவான். மனிதன் தனது உள்ளுணர்வை பகுத்தறிவதன் மூலமாக, தமது அடி மனதில் தேங்கியிருக்கும் புனிதத்துவத்தை மீட்டெடுத்து நடப்பு உலகத்துக்கு தெய்வீக ஆற்றலை வழங்குவான். இறுதியில், தமது அறிவாற்றலையும், சுய அனுபவத்தையும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவன் மூலம் இயல்பு வாழ்க்கையில் நிலவும் அனைத்து இருட்டுக்களையும் விலகச்செய்து ஆன்மிகத்தன்மையை உலக மக்களிடத்தில் தோற்றுவிக்க வழிவகுப்பான்.  

(Abd – ru- shin எழுதிய IN THE LIGHT OF TRUTH எனும் புத்தகத்திலிருந்து MAN IN CREATION எனும் பகுதி)  

தமிழில்: ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com