தேவி... புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்!

நம்மிடையே வீட்டு வேலைக்கென்று வருகின்ற பல பெண்களின் கதையும் இதுவாகத்தான் இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கு நாம் செய்ய வேண்டுவது என்ன?! டாஸ்மாக்கை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினால் தான் இவர்களுக்கெல்லாம்
தேவி... புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்!

“மீள் உறக்கங்களுக்கு
தயாராகி நிற்கும் ஓராசிரியர் பள்ளிகள்;
மத்தியானச் சோற்றுக்கு மாணவப் போர்வையில்
காலை முதல் காத்திருக்கும் பசித்த கோழிக் குஞ்சுகள் ;
பருந்துப் பார்வையில் 
எங்கேனும் தட்டுப்படத்தான் செய்கின்றன
இன்றும் கூட;
விலையில்லா அரிசி பாலீஸ் போடப்பட்டு
மறுபடி மளிகைக் கடைச் சாக்குகளில்
ஏழைகள் வாங்க இயலா விலையில்
உலை கொதித்தடங்கும்
நீர்க்குமிழிகளாய்;
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உரக்கக் கத்துகிறது காலமயக்கங்களின்றி
"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை "
மான் ஆடி... மயில் ஆடி 
குடும்பத்துடன் குழந்தை குட்டிகள் ஆடி
குட்டையில் வீழ்ந்த இனமான தமிழ்ச் சமுதாயம்.
அடுத்தென்ன?!
கேஸ் அடுப்பாம்!
அலைபேசியாம்!
தெருமுக்குகள் தோறும் இலவச இணைய வசதியாம்!
வாங்க விற்க என்னை அணுகுங்கள்
அறிவிப்பு பலகை தொங்காத குறை;
இங்கிட்டு வாங்கி
அங்கிட்டு வித்துருவோம்ல
எல்லோரும் வியாபார காந்தங்களே!
அன்றியும்;
பணம்
பத்திரிகை
சேனல்
அதிகாரம்
இவை போதும் அரசமைக்க.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 
மக்குப் பிரதிநிதிகள் ஆளும்
மக்களாட்சி... இது மக்களாட்சி
வாழ்க குடிமக்கள் ,
யார் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?!
டாஸ்மாக் இருக்கும் வரை
தடையின்றி தாக சாந்தி,
எடுக்கலாம் எப்போதும் வாந்தி
மற்றதெல்லாம் வெறும் காராபூந்தி.”


வீட்டு வேலைக்கென்று தேவி என்ற பெண் என் வீட்டுக்கு கடந்த ஒரு வருடமாய் வந்து போகிறாள், வேலை சுத்தமாக இருக்கும், கையும் படு சுத்தம், அளவான பேச்சு. மொத்தத்தில் நல்லவள், இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு எங்கள் பகுதியில் தான் அவளும் வசிக்கிறாள். கணவர் ஒரு மருத்துவரிடம் டிரைவர் ஆக வேலையில் இருப்பதாகக் கூறியதுண்டு. விடிகாலையில் முறைவாசல் செய்வதில் தொடங்கும் அவளது வேலை நேரம், என் வீடு உட்பட இன்னும் நான்கைந்து வீடுகளில் முடிய எப்படியும் பிற்பகல் மூன்று மணி ஆகி விடும். இந்த வேலைகளைச் செய்வதால் அவளுக்கு கிடைக்கும் மாத சம்பளம் ஆறாயிரம், அவளது கணவருக்கு எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம். ஆனால் அவர் அதை அப்படியே வீட்டுக்குத் தருவதில்லை, தினமும் டாஸ்மாக் போகா விட்டால் அந்த மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்குமென்பாள் தேவி, அப்படிக் கரைத்தது போக மிஞ்சும் சொற்ப பணம் மகன்களின் அரசுப் பள்ளி கட்டணம் கட்டக் கூட போதவில்லை என்று தேவி பலமுறை சொல்வதுண்டு, கணவரிடம் எதிர்த்து வாதாடியதில், ஒரு முறை அந்த மனிதன்... இவளது இடுப்பில் எட்டி உதைக்க, பாவம் இவள் மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அழுது வீங்கிப் போன முகத்தோடு வேலைக்கு வந்தாள்.

இவள் மட்டும் அல்ல சென்ற வருடம் என் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்து திடீரெனப் பாதியாண்டில் காணாமல் போன புவனாவுக்கும் இதே தான் பிரச்சினை, புவனாவின் கணவன் குடிக்க காசு கேட்டு அவளை அடிப்பதாக அவள் ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் ஒருநாள்... ஒரு வாரம் லீவெடுத்து, வலது பக்க காதறுந்து மறுநாள் வேலைக்கு வரும் வரை, குடிக்க காசில்லை என்று மனைவியின் காதில் இருந்த கம்மலை அந்த ஆள் பிடுங்கிய வேகத்தில் அறுந்த காது அது.

ஒரு தேவி...ஒரு புவனாவின் கதை மட்டும் தானா இது!

இலவசங்களால் இவர்களின் துயரம் குறைந்ததாய் காணோம்.

நம்மிடையே வீட்டு வேலைக்கென்று வருகின்ற பல பெண்களின் கதையும் இதுவாகத்தான் இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கு நாம் செய்ய வேண்டுவது என்ன?!

டாஸ்மாக்கை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினால் தான் இவர்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கக்கூடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com