ராதே அழகிய ராதே!

எல்லோருக்குமே, கிருஷ்ணா என்கிற பெயரைச் சொன்னால், ருக்மணி தாயாரோ,
ராதே அழகிய ராதே!

       
எல்லோருக்குமே, கிருஷ்ணா என்கிற பெயரைச் சொன்னால், ருக்மணி தாயாரோ, சத்யபாமா தாயாரோ நினைவிற்கு வருவதில்லை. ராதைதான் முதலில் மனக்கண்முன் தோன்றுவாள். ஆம். கண்ணன் என்றால் ராதை. ராதை என்றால் கண்ணன். அவர்களிடையே அப்படியொரு பிரிக்க முடியாத பந்தம். 

ராதையிடம் இருந்தது பிரேமை பக்தி. 

***

நந்தகோபர் ஆனவர், அவர் அவரின் பந்தங்கள் மற்றும் ஆயர் குழாமுடன் பிருந்தாவனம் வந்தடைந்தார். பெரிய பெரிய மலைகள்,  யமுனை நதியின் பிரவாகம், யாருக்குத்தான் அங்கு வசிக்கப் பிடிக்காமல் இருக்கும்? பிருந்தாவனம் வந்து சேர்ந்ததுமே, யமுனையை நோக்கித்தான் அனைவரும் கண்களும் லயித்தன. பிருந்தாவனத்திலிருந்து, சிறிது தூரத்தில், பர்ஸானா என்னும் கிராமத்தில், வ்ருஷபானு பாபா வசித்து வந்தார். அங்கு, அவர், ஆயர்குலத் தலைவனாக இருந்து வந்தார். 

பிருந்தாவனத்திற்கு வருகை தந்தால், தங்களின் இல்லத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்று வ்ருஷபானு வரவேற்புக் கொடுத்திருந்தாலும், எவருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்பதில் நந்தராய் கவனமாக இருந்தார். 

ஆனால் வ்ருஷபானுவா வாளாதிருப்பாரா? 

ஒரு பெரிய வண்டி நிறைய, கோகுலத்தில் இருந்து வந்திருந்த ஆநிரைகள் உட்பட அனைவருக்கும் தேவைப்படும் அத்தனை பொருட்களையுமல்லவா கொண்டுவந்து இறக்கி வைத்துவிட்டார். 

***

வ்ருஷபானு பாபா, கீர்த்திதா அன்னையின் பெண் சிசுவிற்கு பெயர் சூட்டு விழா ஏற்பாடாகி இருந்ததால், அவர்களின் அழைப்பை ஏற்று, நந்தராய் குடும்பம் பர்ஸானா சென்றனர். பிறக்கும் பொழுதே, நெற்றியில் அழகான சிகப்புப் பொட்டுடனும், நேர்வகிட்டில் சிந்தூரத்துடனும் ரூபவதியாகத் திகழ்ந்த குழந்தையை, முனிவர், கர்காச்சாரியார், தன் மடியினில் வைத்திருந்தார். 

பெயர் சூட்டும் விழா ஆரம்பிக்கும் வரை குழந்தையின் பாதங்களையே தரிசித்துக் கொண்டிருந்தார். அப்பொற்பாதத்தில், தாமரை, அங்குசம், கொடி, ஸ்வஸ்திக் ஆகிய சின்னங்களை அனைவருக்கும் காட்டினார். அந்த சிசுவின் இடது பாத அடையாளங்கள், நந்தகோபர் குமாரனின் வலது பாத அடையாளங்களோடு ஒத்துப் போவதாகக் கூறினார். அவர் கூறியதிலிருந்து, யசோதை மைந்தனுக்கு உரியவள் இவளாகத்தான் இருப்பாள் என்று வந்தவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆனால் பிறந்ததிலிருந்து குழந்தை கண் திறக்கவில்லை என்கிற குறை எல்லோரையும் வாட்டி வதைத்தது. 

முனிவர் அறியாத ரகசியம் கூட உண்டா என்ன? 

கண்ணனுக்கு கடைக்கண்ணால் ஒரு ஜாடை காட்டினார். தந்தையின் மடியில் இருந்த மாயவன், முட்டிக்காலால் தவழ்ந்து சென்றான். தொட்டிலைப் பிடித்துக்கொண்டு, அதில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்தான். அவ்வளவுதான். அன்றலர்ந்த தாமரை போன்று இரு நயனங்களையும் அகல விரித்தது, குழந்தை.  கர்காச்சாரியார் உரத்த குரலில் கூறினார்,  'பாத்ரபத மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியன்று பிறந்திருக்கும் இக்குழந்தைக்கு ராதிகா என்று பெயர் சூட்டுகிறேன்' என்றார். 

ராதே ராதே என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. 

வ்ருஷபானு, நந்தராய் இருவருமே அவரவர் விருப்பத்திற்கு ஆயர்குல மக்களுக்கு பரிசுகளை வழங்கி தங்கள் சந்தோஷத்தினை வெளிப்படுத்தினார்கள். 

***

பன்னிரெண்டாம் நூற்றாண்டில், ஜெயதேவர், ராதா என்னும் பெண் சக்தியை மிக அழகாக, அவருடைய கீத கோவிந்தம் என்னும் நூலில் விவரித்துள்ளார்.  

ராதிகாவின் இதரப் பெயர்கள் 

ராதிகா – இது மிகவும் பொதுவான சிறப்புப் பெயர் என்பதுடன், கிருஷ்ணரைப் பற்றிய அவரின் இறைவழிபாடு ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 
காந்தாவரி – கைதேர்ந்த பாடகர்
கோவிந்த-நந்தினி – இவர் கோவிந்த (கிருஷ்ண)னிற்கு மன நிறைவைத் தருகிறார்
கோவிந்த-மோஹினி – இவர் கோவிந்தனைக் கலக்கமடையச் செய்கிறார்.
கோவிந்த-சர்வாசவா – இவர் கோவிந்தனிற்கு மிகவும் முக்கியமானவரும், அல்லது அனைத்துமாவார்.
சர்வ-காந்த ஷிரோமனி – கிருஷ்ணரின் அனைத்து மனைவிகளின் மகுட அணிகலனாகும்.
கிருஷ்ணமயி – இவர் கிருஷ்ணனை உள்ளும், புறமுமாகப் பார்ப்பவர். 
ஆராதனா – ராதாராணி பெயரின் ஆதாரமாவார் அத்துடன், கிருஷ்ணனை வழிபடுவதில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறது.
சர்வ-லட்சுமி – அனைத்து நற்பேறுள்ள பெண் தெய்வங்களின் புராதனமான மூலாதாரமாகும்
பிருந்தாவனேஷ்வரி – பிருந்தாவனத்தின் அரசி
கோகுலா-தருணி – இவரே கோகுல இறை வழிபாட்டின் அனைத்து இளம் பெண்களாவார்.
ராதாராணி – அரசி ராதா
ராதாகிருஷ்ணா – கிருஷ்ணர் அவரே ராதாவின் வடிவத்தில் (ராதா உடனான கிருஷ்ண வழிபாடு.) 
ஸ்வாமினிஜி – கிருஷ்ணரின் நண்பர்.
வ்ருஷபானு நந்தினி —வ்ருஷபானு பாபாவின் புதல்வி.

ராதாஷ்டமி நன்னாளில், ஸ்ரீ கிருஷ்ணரின் முதன்மையான பக்தையான ஸ்ரீ ராதாவின் பாதம் பணிவோம். 

ஸ்ரீ கிருஷ்ணரின் அருட்கடாட்சத்திற்கு பாத்திரமாவோம். 

ராதா காயத்ரி 

ஓம் ரிஷபா அனுஜாயயை வித்மஹி 
கிருஷ்ணா ப்ரியாயை தீமஹி 
தன்னோ ராதா ப்ரசோதயாத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com