முற்றிலும் விபரீத டாஸ்க்குகள்... பெற்றோர்களே உஷார்! உங்கள் வீட்டிலும் புளூ வேல் வரும் முன் காக்க சில ஆலோசனைகள்!

‘புளூ வேல் சேலஞ்ச்சில் ஒருமுறை சிக்கி விட்டால் அதன் பிறகு அதிலிருந்து நீங்களே நினைத்தாலும் மீள்வது கடினம். இது விளையாட்டல்ல, விபரீதம்!’
முற்றிலும் விபரீத டாஸ்க்குகள்... பெற்றோர்களே உஷார்! உங்கள் வீட்டிலும் புளூ வேல் வரும் முன் காக்க சில ஆலோசனைகள்!

தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில புளூ வேல் சம்பவங்கள் வாட்ஸ் அப்பில் உலா வந்த போதிலும்... அதிகாரப்பூர்வ புளூ வேல் மரணங்களாக அவை பதிவு செய்யப்படவில்லை. இன்று முதன் முறையாக மதுரையில் ஒரு மரணம் புளூ வேல் விளையாட்டால் நேர்ந்ததாகப் பதிவாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ்  எனும் கல்லூரி மாணவர். புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி துக்குக் கயிற்றில் தொங்கித் தனக்குத் தானே மரணத்தைத் தேடிக் கொண்டவராகி இருக்கிறார்.

தூக்கில் தொங்கிய மாணவர் விக்னேஷ், மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு மாணவர். விக்னேஷ் மரணத்தின் பின், அவரைப் பற்றிப் பேசிய அவரது நண்பர்கள், விக்னேஷ் கல்லூரியில் இருக்கும் போதும் சதா சர்வ காலமும் தனது அலைபேசியில் இந்த விளையாட்டில் தான் ஈடுபட்டிருந்தார் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை மும்பையில் ஒன்று, உத்திரப்பிரதேஷத்தில் ஒன்று, கேரளாவில் ஒன்று என மூன்று  ‘புளூ வேல்’ மரணங்கள் பதிவாகி இருந்தன. தற்போது மதுரை சம்பவத்தையும் சேர்த்து புளூ வேல் மரணங்கள் 4 ஆகியிருக்கின்றன. 

ரஷ்யாவில் தோன்றிய இந்த ‘புளூ வேல்’ விளையாட்டு அங்கிருந்து உலகம் முழுதும் பரவி இதுவரை சில நூறு உயிர்களை பலி கொண்டுள்ளது. அந்தச் சில நூறு உயிர்களில் அத்தனை பேரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே! முதலில் கணினியில் ‘குழு சாட் ரூமில்’ துவங்கும் இந்த விளையாட்டு, நாட்பட அதில் மூழ்கியிருப்பவரை மூளைச்சலைவை செய்து சதா சர்வ காலமும்  தனிச் சாட் ரூமில் இந்த விளையாட்டின் ஞாபகத்திலேயே அமிழ்த்தி விடுகிறது. தனிமையில் இருக்கும் மாணவர்களிடம் புளூ வேல் டாஸ்குகள் என்ற பெயரில் விபரீத கட்டளைகளைப் பிறப்பித்து அதை அந்த மாணவர்களை எப்பாடு பட்டாவது நிறைவேற்றச் செய்து...கடைசியாக மரணத்தில் தள்ளுவது தான் இந்த விளையாட்டின் கான்செப்ட்.

தற்போது மதுரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவரான ‘விக்னேஷ்’ தனது இடக்கரத்தில், புளூ வேர்ல் படத்தை செதுக்கி அதனடியில் ‘Blue whale' என ஆங்கிலத்தில் எழுதி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, விக்னேஷ், தற்கொலை குறிப்பாக எழுதி இருந்த கடிதம் ஒன்றும் தற்போது காவல்துறை வசம் உள்ளது. அவர்... அந்தக் கடிதத்தில், ‘புளூ வேல் சேலஞ்ச்சில் ஒருமுறை சிக்கி விட்டால் அதன் பிறகு அதிலிருந்து நீங்களே நினைத்தாலும் மீள்வது கடினம். இது விளையாட்டல்ல, விபரீதம்!’ என்று குறிப்பிட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறி வைத்து பல உயிர்களை மரணத்தில் தள்ளக் கூடிய இந்த கொடிய இணைய விளையாட்டை பல மாநிலங்கள் தடை செய்துள்ளன. அதுமட்டுமல்ல புளூ வேர்ல் விளையாட்டில் தங்களது குழந்தைகள் ஈடுபட்டிருக்கிறார்களா? எனப் பெற்றோர் தீவிரமாகக் கண்காணித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை தற்போது நிலவி வருவதால், காவல்துறை அதிகாரிகள், பெற்றோர்களிடமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாளச் சொல்லி அறிவுறுத்தி வருகிறார்கள். 

  • ள்ளி அல்லது கல்லூரிப் பருவத்திலிருக்கும் மாணவர்கள், தங்களது கணினியில் இணைய வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் எனில் வழக்கத்தை மீறி இணையத்தில் அதிக நேரம் செலவிட்டால் பெற்றோர் கண்டிப்பாக அவர்களைக் கண்காணிப்பில் வைத்து தகுந்த அறிவுரைகளை அளித்தாக வேண்டும். 
  • மேலும் டீன் பருவத்திலிருக்கும் அடலஸண்ட் மாணவர்களை நண்பர்களைப் போல கையாண்டு பெற்றோர் அவர்களது ஆழ் மனத் தனிமை உணர்வை அகற்ற வேண்டும். 
  • குடும்பத்துடனருடன் கல கலப்பாகப் பேசிப் பழகும் இயல்புடைய மாணவர்களோ, இளைஞர்களோ இம்மாதிரி இணைய விளையாட்டுகளில் பலியாகும் வாய்ப்புகள் குறைவு!

என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விபரீதமான புளூ வேல் விளையாட்டின் டாஸ்க்குகள் அல்லது சேலஞ்சுகள் எப்படிப்பட்டவை தெரியுமா?

இந்த விளையாட்டில் அடியெடுத்து வைப்பவர்கள் என்னென்ன செய்வார்கள் என சுமார் 50 டாஸ்குகள் புளூ வேல் விளையாட்டுப் பொறுப்பாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளது. அதை வாசிக்கும் போதே நமக்கு கண்களை இருட்டிக் கொண்டு வருகின்றது. இத்தனை மோசமாக மூளைச் சலவை செய்ய முடியுமா என்ற பயத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது அந்த சேலஞ்சுகள் ஒவ்வொன்றும். நீங்களே வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் அந்த டாஸ்குகளின் அபத்தத்தை... 

  1. f57 ரேஸரால் உங்களது கரத்தை கீறிக்கொண்டு அதைப் புகைப்படமெடுத்து புளூ வேல் நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
  2. அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து புளூ வேல் விளையாட்டுப் பொறுப்பாளர் உங்களுக்கு அனுப்பக் கூடிய திகில் மற்றும் மனோதத்துவ ரீதியாக உளச்சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய திரைப்படங்களைத் தனியாக அமர்ந்து காண வேண்டும்.
  3. உங்கள் கை நரம்புகளைச் சரியாக மூன்று இடங்களில் வெட்டிக் கொண்டு (ஆழமாக அல்ல) அதைப் புகைப்படமெடுத்து விளையாட்டுப் பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
  4. புளூ வேல் என்று சொல்லப்படக் கூடிய நீலத்திமிங்கலத்தின் படத்தை ஒரு காகிதத்தில் வரைந்து அதையும் புகைப்படமெடுத்து  பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
  5. நீங்கள் ஒரு புளூ வேலாகத் தயார் என்றால் உங்கள் காலில் YES என்ற ஆங்கில வார்த்தையை பிளேடால் செதுக்கிப் புகைப்படமெடுத்து பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும். தயார் இல்லையென்றால் உங்களை நீங்களே தண்டித்துக் கொள்ளும் விதமாக பலமுறை உங்களது உடலில் பிளேடால் கீறிக்கொள்ள வேண்டும்.
  6.  ரகசிய கோட் வேர்ட் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும்.
  7.  f40 ரேஸரால் கையை வெட்டிக் கொண்டு புகைப்படமெடுத்து அனுப்ப வேண்டும்.
  8. உங்களது  நிலைத்தகவல் //’i am a whale'// என்பதாக மாற வேண்டும்.
  9. உங்களது பயத்தை உள்ளது உள்ளபடி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.
  10. அதிகாலை 4.20 மணிக்கெல்லாம் எழுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு மிக உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
  11. உங்களது கையில் புளூ வேல் படத்தை ரேஸர் மூலம் செதுக்கி அதைப் புகைப்படமெடுத்து விளையாட்டுப் பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
  12. ஒரு நாள் முழுதும் மன உளைச்சல் தரக்கூடிய திகில் திரைப்படங்களாகப் பார்க்க வேண்டும்.
  13. விளையாட்டுப் பொறுப்பாளர் உங்களுக்கு அனுப்பும் இசையை மட்டுமே கேட்க வேண்டும்.
  14. உங்கள் உதட்டைக் கிழித்துக் கொள்ள வேண்டும்.
  15. உங்கள் கைகளைக் குண்டூசியால் பலமுறை குத்திக் கொள்ள வேண்டும்.
  16. உங்களை நீங்களே மிகக் கடினமாகக் காயப்படுத்திக் கொண்டு தனக்குத் தானே சோகமாகிக் கொள்ள வேண்டும்.
  17. மிக உயரமான இடத்தைத் தேடிக் கண்டடைந்து, அதன் விளிம்பில் ஏறி நின்று பயத்துடனே சில மணி நேரங்கள் அங்கு செலவிட வேண்டும்.
  18. பாலத்துக்குச் சென்று அதன் விளிம்பில் நிற்க வேண்டும்
  19. கிரேனில் ஏற வேண்டும்...அல்லது ஏறுவதற்காவது முயற்சிக்க வேண்டும்.
  20. மேற்கண்ட டாஸ்குகளை எல்லாம் முடித்ததும்  இந்த ரவுண்டில், விளையாட்டுப் பொறுப்பாளர் உங்களது நம்பகத் தன்மையைச் சோதிப்பார்.
  21. ஸ்கைப்பில் இப்போது புளூ வேலுடன் உரையாட வேண்டும் (உங்களுடன் புளூ வேலாக உரையாடுபவர் உங்களைப் போன்றே இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் மற்றொருவராகவோ அல்லது விளையாட்டுப் பொறுப்பாளராகவோ இருக்கலாம்)
  22. கூரையின் மிக உயரமான விளிம்பிற்கு ஏறிச் சென்று அங்கு உங்களது கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு அமர வேண்டும்.
  23. மீண்டும் ஒரு ரகசிய கோட் வேர்ட் டாஸ்கை நீங்கள் நிறைவு செய்ய வேண்டும்.
  24. மீண்டும் ஒரு ரகசிய டாஸ்க்.
  25. இப்போது நீங்கள் புளூ வேலை நேரில் சந்திக்க வேண்டும்.
  26. விளையாட்டுப் பொறுப்பாளர் உங்களது மரணத் தேதியைக் கூறுவார். எந்த மறுப்பும் இல்லாமல் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  27. அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து கால் போன போக்கில் நடந்து கண்ணில் படும் ரயிலில் ஏறிப் பயணிக்க வேண்டும்.
  28. ஒரு நாள் முழுதும் யாருடனும் பேசாமல் கழிக்க வேண்டும்.
  29. நீங்களும் ஒரு புளூ வேல் தான் என்று சபதமெடுத்துக் கொள்ள வேண்டும்.
  30. 30- 49 இந்த நாளிலிருந்து தினமும் நீங்கள் அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். நாள் முழுதும் தொடர்ந்து மன உளைச்சல் தரும் திகில் படங்களைத் தனியாக அமர்ந்து பார்க்க வேண்டும், விளையாட்டுப் பொறுப்பாளர் அனுப்பும் இசையைக் கேட்க வேண்டும். புளூ வேலிடம் உரையாட வேண்டும். தினமும் உங்களது உடலில் ஏதாவது ஒரு இடத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
  31. 50. இது தான் கடைசி... இந்த நாளில் உயரமான கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து உங்களது வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும்.

மேலே உள்ள பட்டியலின் அறிகுறி உங்களது குழந்தைகளிடத்தில் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்தாலும் சரி, பெற்றோர்களே தயவு செய்து அவர்களைக் கண்காணித்து விளையாட்டில் துவக்க டாஸ்குகளிலேயே அவர்களை இனம் கண்டு மீட்கும் வழிகளை முடுக்கி விடத் தயங்காதீர்கள். ஏனெனில் இந்த விளையாட்டின் விபரீதம் ரஷ்யாவிலிருந்து தமிழகம் வரை வந்ததைப் போல ஒவ்வொருவரு வீட்டுள்ளும் நுழைய அதிக நேரமாகாது. அலைபேசி அல்லது கணினியில் இணைய வசதிகளைப் பயன்படுத்தும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் இவ்விஷயத்தைக் கையாள வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களது பிள்ளைகள் புளூ வேலாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக அதை ஒத்துக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பது துர்லபம்.

எனவே பெற்றோர்களின் புதுத் தலைவலியாக மாறியுள்ள இந்த விபரீத புளூ வேல் விளையாட்டில் நமது குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்களான நம் செய்ய வேண்டியது அவர்கள் மீதான தொடர் கண்காணிப்பு மற்றும் நீடித்த அன்பும் அனுசரணையும் மட்டுமே! அதை மட்டுமே தொடர்ந்து வழங்கி வந்தாலும் போதும் இளம் தலைமுறையினரை இந்த விபரீதத்தில் இருந்து நாளடைவில் முற்றிலும் மீட்டு விடலாம்.

குறிப்பு: தற்போது ரஷ்யாவில் இருந்து கொண்டு இந்த புளூ வேல் விளையாட்டை இயக்கிக் கொண்டிருந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளரும், இந்த ஆன்லைன் விளையாட்டை உருவாக்கியவருமான நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக காட்சி ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நபர் விளையாட்டின் டாஸ்குகளை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை கொன்று விடுவதாக மிரட்டிய செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது. இம்மாதிரியான சைக்கோத்தனமான விளையாட்டுகளையும், அதை உருவாக்கியம் மனிதர்களையும் முளையிலேயே கிள்ளி எறியத்தான் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com