அப்புசாமியும் சீதாப்பாட்டியும் தங்களை எழுதிய பாக்கியம் ராமசாமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்!

அது ஒரு காலம். அப்போதெல்லாம் குமுதம், ஆனந்த விகடன், கல்கி, இதயம் பேசுகிறது
அப்புசாமியும் சீதாப்பாட்டியும் தங்களை எழுதிய பாக்கியம் ராமசாமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்!

அது ஒரு காலம். அப்போதெல்லாம் குமுதம், ஆனந்த விகடன், கல்கி, இதயம் பேசுகிறது போன்ற வார இதழ்களுக்காக காத்திருந்து அதில் வரும் சிறுகதை, கட்டுரைகளை வீட்டில் உள்ள அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு படித்துவிடுவோம். அதுவும் தலைமுறை தாண்டி அனைவரும் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களை ஒருசிலரால் மட்டுமே உருவாக்க முடியும். பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதிவந்த குமுதம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஜா.ரா.சுந்தரேசன் அவர்களின் எழுத்துக்கள் அத்தகைய மந்திரத்தன்மை வாய்ந்தவை.

அப்புசாமி சீதாப்பாட்டி என்ற கதாபாத்திரங்களை காலத்தில் செதுக்கியவர் ஜ.ரா.  பாக்கியம் ராமசாமி மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் மனத்தில் முதலில் தோன்றியவர்கள் ஜெயராஜின் கைவண்ணத்தில் உயிர் பெற்ற அப்புசாமியும் சீதாப்பாட்டியும் தான். இவர்கள் கற்பனை வண்ணத்திலும் கைவண்ணத்திலும் உயிர்த்தெழுந்தவர்கள் அந்த அதிசய பிறவிகள்.  'அப்புசாமியும் அற்புத விளக்கும்', 'அப்புசாமியும் 1001 இரவுகளும்', 'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்' ஆகியவை என்றும் மறக்க முடியாத பாக்கியம் ராமசாமியின் படைப்புக்கள் ஆகும். 

நகைச்சுவையை எழுத்தில் வடிப்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால் அதை அனாசயாமாகச் செய்தவர் பாக்கியம் ராமசாமி. கார்டூன்களாகட்டும், சிறுகதையாக இருக்கட்டும், நாவலாக இருந்தாலும் சரி, அவற்றின் வடிவம்தான் மாறுபடுமே தவிர, அப்புசாமி சீதா பாட்டியின் செய்யும் லூட்டிகளில் வித்யாசம் இருக்காது. மடிசார் கட்டிய மாடர்ன் லுக்கில் உள்ள சீதா பாட்டியை வெறுப்பேற்றுவதும், அவளிடம் வாங்கிக் கட்டுக் கொள்வதுமே அப்புசாமியின் பிரதான வேலை.

அடியே சீதே என்று அடிக்குரலில் கர்ஜித்து, சீதா பாட்டி பிரசன்னமாகிவிட்டால் படா பேஜார் உன்னோட என்று மெல்லிய குரலுடன் பம்முவதும் அப்புசாமி தாத்தாவின் ஸ்டைல். மெட்ராஸ் பாஷையில் பொளந்து கட்டுவார் அப்பு தாத்தா. எனக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில் தவறவிடாமல் படித்தது அப்புசாமி சீதாப்பாட்டியின் காமிக்ஸ்தான். சரளமான அவரது மொழிநடை, மனதை லேசாக்கும் நகைச்சுவை, சீதா பாட்டியின் வீரம், அப்புசாமி தாத்தாவை கண்டபடி திட்டினாலும் கடைசியில் பாசமாக மன்னித்துவிடும் பாங்கு என அக்கதைகள் படிக்க படிக்க வாசிப்பின் சுவை அதிகமாக கிடைக்கும். பல சமயம் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சம்பவங்களும் அக்கதைகளுக்குள் இருக்கும். என்னுடைய டைரியில் நான் இவர்களின் சாகஸங்களை சிலாகித்து எழுதியது இன்னும் நினைவில் உள்ளது.

நாஸ்டால்ஜியா வகையறாவில் அவரது சில சமீபத்திய கதைகளும் நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கின்றன.. ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வந்த ஜ.ராவுக்கு அதில் அக்கால ரசிகர்களுடன் சேர்ந்து இக்கால ரசிகர்களும் இணைந்துவிட்டார்கள். காரணம் அவரது நகைச்சுவை எழுத்து அத்தகைய சக்திவாய்ந்தது. அவர் இறப்பதற்கு 23 மணி நேரத்துக்கு முன்பும் ஒரு பதிவை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நினைவாக இந்தக் கட்டுரையை படித்து, பகிருந்தும் கொள்கிறேன்.

பொழுதுபோக சந்தா கட்டுங்கள் - பாக்கியம் ராமசாமி

பொழுது போகவில்லையென்றால் ஏதாவது ஒரு பத்திரிகைக்கு ஒரு ஆறு மாத சந்தா கட்ட நினைத்தால் போதும்.

அந்தப் பத்திரிகையின் ஸ்திரத் தன்மை பற்றி நமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்பதற்கு நாலு நாள். மேற்படி பத்திரிகையை யார் வாங்குகிறார்கள் என்று தேடல் நாலு நாள். பத்திரிகையைக் கண்டுபிடித்ததும் சந்தா விவரம் அதில் எங்காவது போட்டிருக்கிறதா என்பதை தேடுவதற்கு நாலு நாள்.

சந்தா விவரம் எல்லா இதழ்களிலும் போடப்படமாட்டாது, பிரதி மாசம் முதல் வாரம் பிரசுரிக்கப்படும் இதழில் மட்டுமே காணப்படும் என்ற விவரம் தெரியவரும். அடுத்த சில நாட்கள் பழைய பத்திரிகைக் கடைகளுக்குச் சென்று மேற்படி பத்திரிகையின் மாதமுதல் இதழ் கிடைக்குமா என்று தேடச் சரியாக இருக்கும். பத்து நாட்கள் கழித்து டெலிபோன் மூலம் அந்தப் பத்திரிகைக்கே போன் செய்து அவர்கள் தந்த இலாகா நம்பர்களுக்கெல்லாம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட செக்‌ஷனின் பொறுப்பாளருடன் பேச இயலாமல் (அவர் பெரும்பாலும் காஃபி சாப்பிட போயிருப்பார், அல்லது லீவு போட்டிருப்பார்.) பொறுமை காத்தல்.

மேலும் பல நாள் கழித்து அவர் நமக்குக் கிடைப்பார். வருட சந்தா எவ்வளவு? ஆறு மாத சந்தா எவ்வளவு? மூன்று மாத சந்தா உண்டா? சந்தாவை மணி ஆர்டரில் அனுப்பலாமா? என்பன போன்ற சந்தேகங்களை அவரிடம் கேட்டு விடையை தெரிந்துகொள்ள இரண்டு மூன்று நாளாகும். ஏனெனில் அவர் பேசும்போதே லயன் கட்டாகிவிடும் அல்லது நமது பேச்சு வேறு இலாகாவுக்குப் போய் அங்குள்ளவர்களை குழப்பி அடிக்கும். நாம் திரும்பி வருவதற்குள் சந்தா இலாகாக்காரர் காப்பி சாப்பிட போய்விடுவார் அல்லது ஆபீஸ் முடிந்து விடும். மறுநாள் லீவாயிருக்கும். சில சமயம் அவரது லீவும் விழாக்களின் லீவுமாகத் தொடர் லீவாக அமைந்துவிடும்.

புதிய திங்கட் கிழமையில் சந்தாவுக்கான தொகையை ஒரு செக்கில் எழுதி அனுப்பப்படுகிறது. செக்கு கிடைத்ததா என்று அறியும் முயற்சியில் பல நாட்கள் செலவாகும்.

அந்த செக்கை உண்மையில் அந்த ஆபீசுக்கு அனுப்பியிருக்கக் கூடாது. கதை கட்டுரை போன்றவை மட்டுமே அந்த ஆபீசுக்கு அனுப்பவேண்டும். மற்றவற்றை வேறு இடத்துக்குத்தான் அனுப்பவேண்டும் என்ற உண்மை தெரியவருகிறது. அவர்களே அந்தக் காரியத்தைச் செய்யலாமே என்றால் அப்படியெல்லாம் வழக்கமில்லை என்பார்கள்.

ஆகவே மறுபடியும் அந்த ஆபீசுக்கு நேரில் போய் நமது செக்கை திரும்பப் பெற்று வர இரண்டு மூன்று நாள் ஆகிவிடும்.

இப்போது மனைவி ஒரு ஜோதிடப் பத்திரிகை காட்டுகிறாள். அதில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பொருள் நஷ்டமும், மன உளைச்சலும் இந்த வாரம் சற்றுக் கடுமையாக இருக்கும். பரிகாரமாக காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள காட்டாமணத்தூரிலுள்ள கலியமூர்த்தி சன்னதிக்குச் சென்று நெய் விளக்கு 24 நாள் ஏற்றி வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே சந்தா கட்டும் விஷயம் 24 நாட்கள் தள்ளிப் போடப்படுகிறது. இருபத்தைந்தாவது நாள் சந்தா கட்டுதல் பேச்சு துளிர்விடுகிறது. இந்தத் தடவை மேற்படி பத்திரிகை ஆபீசுக்குப் போனபோது அது வேறு எங்கோ மாற்றப்பட்டுவிட்டது என்று தெரியவந்தது. கேஷாக பணம் எடுத்துக்கொண்டு நேரில் சென்று கட்டியே கட்டியாகிவிட்டது. முன்பே கட்டாதது தவறு என்று மனைவி கோபப்பட்டு, சந்தா சண்டை, விவாகரத்து அளவுக்கு தகராறு முற்றி சந்தாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் விஷயத்தை அத்தோடு முடித்துக் கொண்டால் நம்ம பொழுது எப்படிப் போகும்? ஆகவே மேற்படி பத்திரிகையை சந்தா செலுத்தாமல் வரவழைப்பது எப்படி என்று பல நாட்கள் யோசிக்கவேண்டும்.

வீட்டுக்குத் தினசரி செய்தித் தாளைப் போடுபவரிடம் சொன்னால் சலாம் போட்டுக் கொண்டு வீட்டில் கொண்டு வந்து சப்ளை செய்வானே என்று மனைவி கூறுவாள். எந்தப் பேப்பர்காரன் நாம் விரும்பும் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையைப் போடக்கூடியவன் என்பதை அறிய முயற்சி செய்வோம்.

அவனைக் கண்டுபிடிக்க ஒரு பத்து நாள் செலவிடலாம். நமது குடியிருப்பில் நூற்று பன்னிரண்டு வீடு இருக்குமாதலால், பலவித பத்திரிகைகள் போட, பலவித குழந்தைகள், பையன்கள், வாலிபர்கள், கிழவர்கள் வருவார்கள். குறிப்பிட்ட பத்திரிகை சப்ளை செய்வதாக ஒருத்தர் ஒப்புக் கொண்டாயிற்று. ஆனால் அவர் அடுத்த ஒரு வாரம் ஆளே காணோம்.

அந்த ஆள் யார், பெயர் என்ன, முதலாளியிடம் புகார் கொடுக்க வேண்டுமென்று கொஞ்ச நாள் தள்ளலாம். அவனே கிடைக்காவிட்டாலும் அவன் மாதிரி யாராவது தென்பட்டாலும் அவனை ஓடி ஓடிப் போய்க் கூப்பிட்டு நாம் விரும்பிய பத்திரிகையின் பெயர் அங்க அடையாளம் எல்லாவற்றையும் சொன்னால் அந்தப் பையன் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு "அது நான் இல்லைங்க" என்று நழுவி விடுவான்.

இப்படியாக நாம் விரும்பிய பத்திரிகைக்கு சந்தா கட்ட முடியாமலே போனாலும் நமது பொழுது அருமையாகக் கழிய சந்தா கட்டும் காரியம் சகாயம் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இதுவரை அவர் எழுத்துக்களை படிக்காதவர்களும் எப்படிப்பட்ட எழுத்து இது என்று வியக்க வைக்கிறது அல்லவா? அதுதான் ஜ.ரா.சுவின் எழுத்து ஜாலம். என்னைப் போன்று பலரது பால்யகால வாசிப்பு ஆர்வத்தை தொடக்கி வைத்த எழுத்துலக ஜாம்பாவனாகிய பாக்கியம் ராமசாமியின் மறைவு அவரது வாசகர்களுக்கு பேரிழப்பு. 

அவரது இறுதிச் சடங்கு இன்று (8.12.2017) இரண்டு மணிக்கு முடிவடைந்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். விளக்கிச் சொல்ல முடியாத ஒருவித மனபாரம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. நான் ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தும், அவர் வேலை செய்த அதே  நிறுவனத்தில் பணிபுரிந்தும், இதுவரை நேரில் சென்று அவரைப் பார்க்காமல் இருந்துவிட்டேனே என்ற ஆதங்கம் எழுந்தது. அதற்கான காரணத்தை யோசித்தபோது, அந்த எழுத்தாளரையும் தாண்டி அவரின் படைப்பான அப்புசாமியும் சீதாப்பாட்டியும் உயிர்ப்புடன் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களை பிரதானப்படுத்திய பாக்கியம் ராமசாமி என்ற அற்புத எழுத்தாளர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது இளமை மாறாத எழுத்துக்கள் என்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை.

என்னைப் பொருத்தவரையில் உலகில் கடைசி மனிதர் உள்ள வரை கதைகள் இருக்கும். அந்தக் கடைசி மனிதன் தமிழ் தெரிந்தவனாக இருந்தால் நிச்சயம் அவனுக்கு அப்புசாமியும் சீதாப்பாட்டியும் தெரிந்திருக்கும். அப்படி அவனுக்குத் தெரியவில்லையென்றால் அப்புசாமியே நேரடியாக வந்து தன்னைப் பற்றிச் சொல்லிவிடுவார். காரணம் அற்புதங்களில் நம்பிக்கை வைத்தால்தான் அடுத்ததாக ஒரு உலகம் தோன்றும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com