உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசையா? இதோ அதற்கான 7 வழிகள்!

குழந்தைகளின் படிப்பு மட்டுமே பெற்றோரின் வாழ்க்கை லட்சியமாக மாறிவிட்ட காலகட்டம் இது.
உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசையா? இதோ அதற்கான 7 வழிகள்!

குழந்தைகளின் படிப்பு மட்டுமே பெற்றோரின் வாழ்க்கை லட்சியமாக மாறிவிட்ட காலகட்டம் இது. அவர்களைப் பள்ளியில் சேர்ப்பதுடன் நம்முடைய கடமை முடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு வகுப்பாக அவர்கள் உயர உயர அவர்களின் படிப்பில் நம்முடைய பங்களிப்பும் இணைந்திருந்தால், அவர்கள் கற்றலை சுமையாக நினைக்காமல் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விஷயமாக நினைப்பார்கள். படிப்பதிலும், பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் சில அழகான வழிமுறைகள் உள்ளன. இது என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து நான் கற்றவை. அவற்றுள் சில :

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்

வகுப்பில், டியூஷனில் அல்லது வீட்டில் உங்கள் குழந்தைகள் படிக்கும் போது அவர்களின் முழு கவனமும் அதில் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பள்ளியில் பிரச்னையில்லை. அவர்கள் மனதை வேறு விஷயங்களில் செலுத்தாமல், வீட்டு விஷயங்களை அல்லது நண்பர்களுடனான அரட்டைகளில் மனத்தை அலைபாயவிடாமல், அன்று வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களை நன்றாக்க கவனிக்க வேண்டும். அதில் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

டியூஷனில் அல்லது வீட்டில் அன்று நடத்திய பாடத்தை ஒரு தடவை படிக்க வேண்டும். அந்தப் பாடத்திலிருந்து எந்தக் கேள்வி எப்படி கேட்டாலும் பதில் தெரியும் அளவிற்கு மனத்தில் பதித்துக் கொள்வது நல்லது. வீட்டில் குழந்தைகள் படிக்கும்போது அந்த அறையில் அல்லது பக்கத்து அறையில் டிவி ஓடிக் கொண்டிருக்க கூடாது. அவர்கள் அருகே செல்ஃபோன் அல்லது அவர்கள் கவனத்தை மாற்றக் கூடிய எதையும் வைத்திருக்க வேண்டாம்.

வகுப்பு ஆசிரியரை சந்தித்துப் பேசுங்கள் 

ஒவ்வொரு பள்ளியிலும் பேரண்ட் டீச்சர் மீட்டிங் உண்டு. நிச்சயம் பெற்றோரில் ஒருவராவது இதில் கலந்து கொள்ள வேண்டும். உங்கள் மகள் அல்லது மகன் எந்த சப்ஜெக்டில் சற்று வீக்காக உள்ளார்கள் என்பது அவனது வகுப்பு டீச்சர்களுக்கு மட்டும்தான் தெரியும். சில சமயம் அறிவியலில் அவன் அதிக மார்க் எடுத்திருந்தாலும் வகுப்பில் வைக்கப்பட்டிருக்கும் டெஸ்டுகளில் குறைவாக எடுத்திருக்கலாம். அவனது ஒட்டுமொத்த அசெஸ்மெண்ட் என்பதை வகுப்பு டீச்சர்கள் மட்டுமே செய்திருப்பார்கள். அவர்களிடம் பேசி இதை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.

அந்த சப்ஜெக்ட்டில் சிறப்பு கவனம் செலுத்தி படிக்க வைத்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அதில் முன்னேறிவிடுவார்கள். இப்போது சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் வாட்ஸ் அப்பில் சில செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நேரில் சென்று ஆசிரியரை பார்க்க முடியாத சமயங்களில் இதுபோன்ற தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நேரில் பேசுவதுதான் நல்லது.

குழந்தைகள் விரும்பும் வகையில் சொல்லிக் கொடுங்கள்
 
பாடங்களை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் சொல்லித் தர வேண்டும். உங்கள் வசதிக்காக ஒரேடியாக ஒரே நாளில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவர்களைக் குழப்பிவிடக் கூடாது. உங்களுக்கு நேரம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் படிக்க கூப்பிடக் கூடாது.

போலவே குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் நிச்சயம் தயாராய் இருக்க வேண்டும். ஒருவிதமான ஒத்திசைவும் புரிந்துணர்வும் இதில் இருந்தால் குழந்தைகள் வேகமாக படித்து முடித்துவிடுவார்கள்.

அலுப்பும் சலிப்பும் வேண்டாம்

குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தல் என்பது நிச்சயம் ஒரு அழகான கலை. எனக்கே டயர்டாக இருக்குடா நாளைக்குப் படிக்கலாம் என்று ஒத்திப்போடக் கூடாது. தவிர இவ்வளவு பாடமா, இவ்வளவு கேள்விகளா எந்தக் காலத்துல இத்தனையும்  படிச்சு முடிக்கறது என்று நீங்களே மலைத்துப் போகக் கூடாது. இதுதான் சிலபஸ் என்றபோது வேறு வழியே கிடையாது. படித்தே தீர வேண்டும்.

அப்படியே உங்களுக்கு சலிப்பாக இருந்தாலும், உங்கள் குழந்தைகள் முன் சலித்துக் கொள்ளக் கூடாது. அது ஒருவிதமான பாதுகாப்பில்லாத மனநிலையை அவர்களுக்குத் தந்துவிடலாம். நம்முடைய அம்மாவுக்கே இது கஷ்டமான காரியம் என்ற நினைப்பை அவர்களுக்குத் தரும். அந்த சலிப்பு பயமாக மாறி அவர்களுக்குள் படிந்துவிடும். எனவே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது நீங்கள்  உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளை எப்போதும்  படி படி என்று நிர்பந்திக்காதீர்கள். அவர்களுக்கான நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். படிக்கும் நேரத்தில் படித்தால் போதுமானது. தவிர, குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினாக நினைக்காதீர்கள். அது படிப்பின் மீது அவர்களுக்கு வெறுப்பை விளைவித்துவிடும். அறிஞர் பிளாட்டோ கூறியதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக் கொண்டு வரும்.

போட்டி மனப்பான்மையை வளர்க்காதீர்கள்

உங்கள் குழந்தையிடம் அக்காவைப் போல நீ படிக்கவில்லை, அல்லது தங்கையைப்  போல சுட்டி இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். குழந்தைகளுக்கு இடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கக் கூடாது. உன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் பார் எப்படி படிக்கறாங்க. டிராயிங், அபாகஸ், ம்யூஸிக்னு எல்லா க்ளாஸ் போறாங்க, படிக்கவும் செய்யறாங்க. அவங்களை மாதிரி மல்டி டாஸ்க் பண்ணனும் என்ற போதனைகள் எல்லாம் தேவையே இல்லை. குழந்தைகளை அதிகப்படியான பாரம் சுமக்க வைக்காதீர்கள்.

கடுமையான போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் உங்களுடைய குழந்தைகள் அவற்றை எல்லாம் எப்படி சமாளிக்கும் என்று தேவைக்கு அதிகமாக நீங்கள் கவலைப்படுவதை விடுங்கள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் போட்டி மனப்பான்மை என்பது இயல்பாகவே இருக்கும். எனவே அதை கொம்பு சீவும் வேலையைப் பார்க்காமல் அதை மட்டுப்படுத்த முயற்சிப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. காரணம் இத்தகைய போட்டி மனப்பான்மை அவர்களுக்குள் ஒருவித இயந்திரத்தன்மையை உருவாக்கிவிடும். இவ்வளவும் நான் ஒருவன் செய்ய வேண்டுமா என்ற ஒருவிதமான பாரம் அவர்களின் மனத்தில் குடிபுகுந்துவிடும். இந்தக் கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் எனவே நீங்கள் ஓவர் டோஸ் செய்ய வேண்டாம் என்பதுதான் இதன் அர்த்தம். 

உங்கள் குழந்தைகளின் முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுங்கள்

குழந்தைகளுக்கு இயற்கையாகவே விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் திறன் அதிகம் உண்டு. சொன்னதையே திருப்பி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இக்கால குழந்தைகள் புத்திசாலித்தனமும், சமயோசிதமும் கொண்டவர்கள். தங்களுடைய முன்னேற்றத்துக்காக நூலகம், இணையம் என்று தேடுகின்றார்கள் கற்கின்றார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக கேள்வி கேட்கின்றார்கள்.

நீங்கள் அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மாறாக நீ டைம் வேஸ்ட் செய்யறே, இதெல்லாம் இப்பத் தேவையா என்று சொல்லாதீர்கள். குழந்தைகளுக்கும் ஈகோ உண்டு. அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒருபோதும் முட்டுக் கட்டைப் போடாதீர்கள். தேவையில்லாத குத்தல் பேச்சுக்கள், கேலி, விமரிசனம் இவை எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும்.  

எக்ஸாம் ஃபீவர் வேண்டாமே!

பரீட்சை சமயத்தில் ஒட்டுமொத்தமாக எல்லா பாடங்களையும் படிப்பது சாத்தியமே இல்லை. அன்று படித்த பாடங்களை மீண்டும் ஒரு தடவை படிப்பதுதான் சிறந்தது.

படிக்காமல் விடுபட்ட பாடங்களைப் படிப்பதா அல்லது ஏற்கனவே படித்தவற்றை ரிவைஸ் செய்வதா என்ற குழப்பங்கள் இருக்கக் கூடாது. என்ன ஆனாலும் சரி என்று அன்றைய பாடங்களைப் படித்துவிட்டால் பரீட்சை சமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்க முடியும்.  

ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளத் தான் படிக்கிறாய். பாடம் கற்பது ஒரு நல்ல அனுபவம், எனவே விஷயங்களைத் தெரிந்து கொண்டு, அதைப் பற்றிய பகிர்வை அனுபவித்து எழுதத்தான் தேர்வுக்கு செல்கிறாய் என்று உங்கள் பிள்ளைகளிடம் பரீட்சை பற்றி பாசிட்டிவாகச் சொல்லுங்கள். அய்யோ எக்ஸாமா, இதை மறந்து தொலைச்சிடாதே, டைம் கீப் அப் பண்ணு, என்று அவர்களை போருக்கு அனுப்புவது போலப் நீங்களே பயமுறுத்திவிட்டீர்கள் என்றால் அவர்கள் அங்கு போனதும் படித்தவற்றை பதற்றத்திலேயே பாதி மறந்துவிடுவார்கள். 

கடைசியாய் ஒன்று. கற்றல் என்பது பரீட்சையுடன் நின்றுவிடுவது அல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு, வாழ்க்கை முழுவதும் கற்றலை ஒரு கலையாகவும், ஒரு அற்புத அனுபவமாகவும் எதிர்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு புரிய வைத்து விடுங்கள். அதன்பின் அவர்கள் ஆசிரியர்களாகவும் நீங்கள் மாணவராகவும் மாறும் அந்தத் தருணத்துக்காக காத்திருங்கள். அதுவே பெற்றோராக நமக்கு ஆகச் சிறந்த தருணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com