இந்தப் புகைப்படங்களை எல்லாம் எடுத்தது இவரா? இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஓமாயி! (படங்கள்) 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவர்கள் ஒரு ஆங்கிலேய பெண்ணிற்கு சிகரெட் பற்ற வைப்பதைப் போன்ற புகைப்படத்தை நம்மில் பலரும் பார்த்து இருப்போம். இதை எடுத்தவர் ஒரு பெண் என்பதை அறிவீர்களா?
இந்தப் புகைப்படங்களை எல்லாம் எடுத்தது இவரா? இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஓமாயி! (படங்கள்) 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவர்கள் ஒரு ஆங்கிலேய பெண்ணிற்கு சிகரெட் பற்ற வைப்பதைப் போன்ற புகைப்படத்தை நம்மில் பலரும் பார்த்து இருப்போம். இன்றும் நேருவை விமர்சனத்திற்குள் ஆக்கும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஒரு பெண் என்பதை அறிவீர்களா? 

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞரான ஓமாயி வியாரவாலாவின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றியும் அவர் எடுத்த சில புகைப்படங்களில் மறைந்திருக்கும் வரலாற்றைப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். இவரது 104-வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் இன்றைய இந்தியாவிற்கான கூகுள் டூடுலில் இவரை இடம் பெற செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

1913-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்த இவர் தன்னுடைய கணவன் மானெக்‌ஷா ஜம்செட்ஜி வியாரவாலாவிடம் புகைப்படம் எடுப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார். பின் 1930-களில் இருந்து பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுப்பதையே தன்னுடைய வேலையாக மாற்றிக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே இருந்த இந்தத் துறையில் இவர் எடுத்த பல தனித்துவமான புகைப்படங்கள் இவருடைய பெருமையை பேசியது. கேண்டிட் ஷாட்ஸ் (Candid Shots) என சொல்லப் படும் புகைப்படங்களை எடுப்பதில் இவர் வல்லவராம். ஓமாயி கேமரா மட்டும் எப்படி இப்படிச் சரியான நேரத்தில் புகைப்படத்தை எடுக்கிறது என்று மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துமாம் இவருடைய புகைப்படங்கள்.

ஆங்கிலேயரிடம் அடிமை பட்டு கிடந்த இந்தியா, இந்தியாவின் சுதந்திரம், அண்டை நாட்டுத் தலைவர்களின் வருகை, சுதந்திர இந்தியாவின் பதவியேற்பு நிகழ்ச்சிகள், நேரு, காந்தி போன்ற தலைவர்களின் இறப்பு என 1930-1970 வரையிலான எந்தச் சரித்திர நிகழ்வைப் பற்றி நீங்கள் அரிய முயற்சித்தாலும் அதில் ஓமாயி எடுத்த புகைப்படம் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதிலும் அடுத்து நான் காட்ட போகும் சில புகைப்படங்களைப் பார்த்துவிட்டு நீங்களே “அட! இந்தப் புகைப்படத்தை எடுத்தது இவர்தானா?” என்று அசந்து போவீர்கள்.

1. இந்தியாவில் இருக்கும் ரூபின் அருங்காட்சியகத்தில் ‘புகைப்படங்கள் எடுக்கத் தடைசெய்யப்பட்டுள்ள பகுதி’ என்கிற எச்சரிகை பலகையின் பக்கத்தில் நேரு நிற்பதைப் போன்ற புகைப்படத்தை இவர் எடுத்தார். இந்தப் புகைப்படம் பார்ப்பவர்களின் முகத்தில் நிச்சயம் புன்சிரிப்பை உண்டாக்கும்.

2. 1940-களில் மும்பையில் இருக்கும் விக்டோரியன் சாலை முனையமாக இருந்த இப்போதைய சத்திரபதி சிவாஜி சாலை.

3. பேரன்களான ராஜிவ், மற்றும் சஞ்சய் காந்தியுடன் நேரு நின்று உரையாடுவதைப் போன்ற புகைப்படம்.

4. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஜான் கென்னடியின் மனைவி ஜாக்லின் கென்னடி 1962-ல் இந்தியாவிற்குச் சுற்று பயணம் வந்த போது யானை குட்டி ஊர்வசிக்கு உணவு வழங்கும் புகைப்படம்.

5. ஆங்கிலேய அதிகாரி மௌண்ட் பேட்டனின் மனைவி எட்வீனா மௌண்ட் பேட்டனுடன் ஆகஸ்ட் 16, 1947-ல் செங்கோட்டையில் நேரு நிற்பது போன்ற புகைப்படம்.

6. 1956-ல் திபேத்திய பௌத்த மத தலைவரான தலாய் லாமா இந்தியாவிற்கு நட்பு ரீதியாக வருகை தந்த போது மேடையில் தலாய் லாமா, நேரு, சீனாவின் ஜூ இன் லை ஆகியோர் இருப்பது போன்ற புகைப்படம்.

7. ஜனவரி 26, 1950-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி புகைப்படம்.

8. 1947-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, லார்ட் மௌண்ட் பேட்டன் மற்றும் அவரது மனைவி எட்வீனா மௌண்ட் பேட்டன் இருப்பது போன்ற புகைப்படம்.

9. பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக 1948-ல் பிர்லா இல்லத்தில் காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம்.

10. அமெரிக்காவின் கறுப்பின உரிமை மீட்பு போராளியான மார்டின் லூதர் கிங் மற்றும் அவரது மனைவி காரேட்டா ஸ்காட் கிங் 1959-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த போது அப்போதைய இந்திய பிரதமர் நேருவைச் சந்தித்த புகைப்படம்.

11. 1956-ல் தலாய் லாமாவின் இந்திய சுற்று பயணத்தின் போது அவர் குதிரையில் மலை பிரதேசத்திற்கு தனக்குப் பின்னால் சிக்கிம் நாட்டு மக்கள் அணிவகுத்து வரச் செல்வதை போன்ற புகைப்படம்.

12. 1950-ம் ஆண்டு குழந்தைகள் விளையாடும் ராட்டினத்தில் அவர்களுடன் நேரு அவர்களும் உட்கார்ந்து சுற்றுவதை போன்ற புகைப்படம்.

13. 1948-ம் ஆண்டு ராஜகோபாலச்சாரி அவர்கள் தந்த விருந்தில் நேருவுடன் அவருடைய மந்திரி சபை மந்திரிகளும் கலந்து கொண்டு உணவு உட்கொள்ளும் புகைப்படம்.

14. காங்கிரஸ் கழகத்தின் உறுப்பினர்களிடம் 1947-ம் ஆண்டு காந்தி உரையாற்றுவது போன்ற புகைப்படம்.

15. 1950-ம் ஆண்டு அமைதியின் அடையாளமாக வெள்ளை புறாவை நேரு வானில் பறக்க விடுவதைப் போன்ற புகைப்படம்.

16. தில்லி செங்கோட்டையில் 1947-ம் ஆண்டு முதல் முதலாக மூவண்ண தேசியக் கொடி ஏற்றிய போது எடுத்த புகைப்படம்.

17. ஆகஸ்ட் மாதம் 1947-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் செல்வதற்கு முன்பு இந்தியாவில் தந்த கடைசி பத்திரிகையாளர் பேட்டி.

18. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் பதவியேற்கக் குதிரை வண்டியில் செல்லும் புகைப்படம்.

19. ஜூன் மாதம் 1948-ம் ஆண்டு இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன்பு ராஷ்திரபதி பவனில் லார்ட் மௌண்ட் பேட்டன் வணக்கம் தெரிவிக்கும் புகைப்படம்.

20. தேசியக் கொடி போர்த்திய ஜவஹர்லால் நேருவின் உடலை அவரது மகள் இந்திரா காந்தி கவலையுடன் பார்ப்பதைப் போன்ற புகைப்படம்.

இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த பல புகைப்படங்களை எடுத்த ஓமாயி 1970-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போதும் புகைப்பட துறையின் உச்சியில் இருந்த அவர் தனது ஓய்வுக்குக் கூறிய காரணமாவது “இனி மேல் இந்தத் துறையில் இருப்பதில் பயனில்லை. புகைப்படக் கலைஞரான எங்களுக்கு எனத் தனி விதி முறைகளும், ஆடை முறைகளும் இருந்தது. ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நாங்கள் நடத்தினோம். ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை, இளைய புகைப்படக் கலைஞர்களின் முழு கவனமும் புகைப்படங்களை வைத்து எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதிலேயே உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக நான் இருக்க விரும்பவில்லை.”

நீண்ட காலம் இவரைக் கௌரவிக்காமல் இருந்த இந்திய அரசு 2010-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்ம விபூஷன் விருதை வழங்கியது. புகைப்பட துறையில் பெண்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உண்டாக்கிய இவர் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 98-ம் வயதில் உயிர் இழந்தார். அவர் மறைந்தாலும் பொக்கிஷங்களாய் அவர் விட்டுச் சென்ற பல புகைப்படங்கள் என்றும் அவரது புகழை பேசிக்கொண்டே இருக்கும்.

நன்றி - புகைப்படங்கள்: Alkazi Collection of Photography

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com