நிலமா? குளமா? வில்லிவாக்கம் 'தாதன்குப்பம்'குளத்தை சொந்தம் கொண்டாடும் காவல்நிலையம்

வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கும் தாதன்குப்பம் குளம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை காவல்நிலையம் ஒன்று சொந்தம் கொண்டாடுவது கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.
நிலமா? குளமா? வில்லிவாக்கம் 'தாதன்குப்பம்'குளத்தை சொந்தம் கொண்டாடும் காவல்நிலையம்


சென்னை: வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கும் தாதன்குப்பம் குளம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை காவல்நிலையம் ஒன்று சொந்தம் கொண்டாடுவது கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

வில்லிவாக்கத்தின் பஜனைக்கோயில் தெருவுக்குள் நுழைந்தாலே, இந்த தாதன்குப்பம் குளத்தைப் பார்க்கலாம். அவ்வளவு ஏன், வில்லிவாக்கமே போகாதவர்கள் கூட, கூகுள் மேப்ஸில் இந்த குளத்தை எளிதாக தேடிக் கண்டுபிடித்து விடலாம்.

மிகவும் தெளிந்த நீரைக் கொண்ட இந்த குளத்தின் ஆழம் 10 அடி அளவுக்கு இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஏராளமான இளைஞர்களும் இதில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும். இந்த குளம் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டும் வருகிறது.

அதே சமயம், குளத்துக்கு அருகே ஒரு அறிவிப்புப் பலகைக் காணப்படுகிறது. அதாவது இந்த இடம் வி4 ராஜமங்கலம் காவல்நிலையத்துக்கு சொந்தமான இடம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குளம் எப்படி காவல்நிலையத்துக்கு சொந்தமான இடமாக உள்ளது? இது அங்கிருக்கும் பலரது கேள்வியும் கூட.

இது குறித்து நமது எக்ஸ்பிரஸ் குழு விசாரித்ததில் தெரிய வந்திருக்கும் தகவல் இதுதான். அதாவது, ராஜமங்கலம் காவல்நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம்தான் இந்த குளம் என்பது பதிலாகக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், அரசியல் பின்னணி கொண்ட 4 சகோதரர்கள், இந்த குளம் இருக்கும் இடம் தங்களது பரம்பரை சொத்து என்று சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

குளத்தின் அனைத்துப் பக்கங்களிலும், கட்டடங்களும், வீடுகளும் குளத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், மழை காலங்களில், குளத்து நீர் சுற்றியிருக்கும் தெருக்களையும் சூழ்ந்து கொண்டு தனது பரப்பை அவ்வப்போது அடையாளம் காட்டிவிடுகிறது.

அதே சமயம், அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களும், இந்த குளம் காரணமாகவே தங்களது நிலத்தடி நீர் மட்டம் எப்போதும் உயர்ந்தே காணப்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

ஆனால், மறைந்து போன நீர் ஆதாரங்களில் பட்டியலில் இந்த குளத்தையும் சேர்க்க அரசியல் பிரபலங்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதில் காவல்துறையும், இந்த குளத்தை தங்கள் இடம் என்று கூறி வருகிறது. 

காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் கண்காணிப்புப் பொறியாளர் கூறுகையில், ராஜமங்கலம் காவல்நிலையத்தை புதிதாகக் கட்ட இடம் கேட்ட போது, மாவட்ட ஆட்சியர் மூலமாக இந்த குளம் இருக்கும் பகுதிதான் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

மேலும், இந்த இடத்தை சொந்தம் கொண்டாடி ஒரு சிலர் வழக்குத் தொடர்ந்திருப்பதால், காவல்நிலையம் கட்ட நாங்கள் வேறு இடத்தைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதே சமயம், இந்த குளம் இருக்கும் நிலம், 1823ஆம் ஆண்டு வரை எங்களது பரம்பறை சொத்தாக இருந்தது. இதனை எங்கள் தாத்தா, 1960ம் ஆண்டு வரை கிராமத் தலைவராக இருந்தவர், மக்களின் பயன்பாட்டுக்காக குளம் வெட்ட வழங்கினார் என்கிறார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 4 சகோதரர்களில் ஒருவரான இளங்கோ.

மேலும், இந்த இடம் எங்களுக்குக் கிடைத்தால், நாங்கள் 4 பேரும் சமமாகப் பிரித்து இதில் வீடுகளைக் கட்டிக் கொள்வோம் என்கிறார்.

இது குளமா அல்லது நிலமா? வருவாய்த் துறை என்ன சொல்கிறது

இது குறித்து கொரட்டூரில் உள்ள கிராம நிர்வாகத் துறையை அணுகிய போது, இந்த இடம் கிராம நத்தம் என்று பதிவாகியுள்ளது. இதில் எந்த நீர்நிலையும் இருப்பதாக பதிவாகவில்லை. அதே சமயம் யாருக்கும் சொந்தம் என்றும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த இடத்தில் அனுமதி பெற்று கட்டடப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று விளக்கம் அளிக்கிறார்.

இது குறித்து அம்பத்தூர் வருவாய்ப் பிரிவு அதிகாரி அரவிந்தனை அணுகிய போது, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com