ஆர்.கே. நகர் இடைத் தேர்தலும் மரத்தடி நண்பர்களும்! 

ஆர்.கே நகர் தேர்தல் களைகட்டத் துவங்கியுள்ளது. முக்கியச் செய்திகளுக்கும், பிரச்னைகளுக்கும் இனி பஞ்சமிருக்காது. தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்கு திருவிழா. தங்கள் பலத்தை சோதித்துப்பார்க்க உதவும் உரைகல்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலும் மரத்தடி நண்பர்களும்! 


ஆர்.கே நகர் தேர்தல் களைகட்டத் துவங்கியுள்ளது. முக்கியச் செய்திகளுக்கும், பிரச்னைகளுக்கும் இனி பஞ்சமிருக்காது. தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்கு திருவிழா. தங்கள் பலத்தை சோதித்துப்பார்க்க உதவும் உரைகல். இதில் உரசிப்பார்த்து தாங்களிடமிருப்பது தங்கம்தான் என்று உறுதிப்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. உரசிப்பார்த்தால் உண்மை வெளிப்பட்டுவிடும் என்று தங்கமுலாம் பூச்சை பத்திரப்படுத்தி கொள்பவர்களும் உண்டு. தாங்கள் வைத்திருப்பது ஒரு கண்ணாடிக் கல் என்று தெரிந்தும் அதை அடுத்தவரின் தங்கத்தின் மீது ஒட்டி, வைரங்களாக ஜொலிப்பவர்களும் உண்டு.

தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் காங்கிரஸ் தனது ஆதரவை திமுகவிற்கு தெரிவித்தது. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஏனென்றால் அது கூட்டணிக்கட்சி. ஆனால்,  வைகோ, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் என்று மற்றவர்களும் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது சற்று யோசிக்க வைக்கிறது.

ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு கிராமம். அதன் எல்லையில் இரண்டு குளங்கள் இருந்தன. குளங்களுக்கிடையே ஒரு மரத்தடி. அங்கு எப்போதும் நான்கு நண்பர்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு குளங்களுக்குமிடையே எப்போதுமே போட்டியும் பொறாமையும் உண்டு.

ஒரு நாள், குளத்தில் குளிப்பதற்காக கிராமத்து மக்கள் வந்தனர். மரத்தடியில் அமர்ந்திருந்த ஒருவன் அவர்களிடம் பேசினான்.

‘மக்களே! இந்த முதல் குளத்தில் குளிக்காதீர்கள். ஏனென்றால் இந்தக் குளத்தை வெட்டியவன் ஒரு கொடியவன். இதில் குளித்தால், அவனுடைய வில்லத்தனம் உங்களுக்கும் வரும். அதனால் இரண்டாவது குளத்தில் குளியுங்கள்', என்றான் முதல் நண்பன்.

இரண்டாவது நண்பன் பேசினான்.
‘மக்களே! முதல் குளத்தை ஒரு பிசாசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆகையால் இதில் குளிக்காதீர்கள். இரண்டாவது குளத்தில் குளியுங்கள்', என்றான் அவன்.

மூன்றாவது நண்பன் பேசினான்.
‘மக்களே! இந்தக் குளத்தில் முதலை ஒன்று வசிக்கின்றது. குளிப்பவர்களை அது தின்று விடுகிறது. அதனால், இரண்டாவது குளத்தில் குளியுங்கள்', என்றான் அவன்.

நான்காவது நண்பன் பேசினான்.
‘மக்களே! இரண்டாவது குளத்தின் நீரில் அதிசய மூலிகைகள் இருக்கின்றன. அந்தக் குளத்தில் குளிப்பதால் தீராத வியாதிகளும் குணமடையும்', என்று சொன்னான்.

மக்கள் தலையசைத்துவிட்டு நகர்ந்தனர். இரண்டாவது குளத்திற்கு மகிழ்ச்சி. நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள். மக்கள் வழக்கம் போல் குளத்தில் குளிக்க வந்தனர். மீண்டும் மரத்தடி நண்பர்கள் அவர்களை சந்தித்தனர்.

‘மக்களே! முதல் குளத்தை வெட்டியவன் மிகவும் நல்லவன். அது இப்போதுதான் தெரிந்தது. ஆகையால், முதல் குளத்தில் குளியுங்கள். இரண்டாம் குளத்தை புறக்கணியுங்கள்', என்றான் முதலாம் நண்பன்.

‘மக்களே! நேற்றுதான் உற்றுப் பார்த்தேன்! முதல் குளத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒரு தேவதை. பிசாசு அல்ல. ஆகையால் முதலாவது குளத்தில் குளியுங்கள்', என்றான் இரண்டாம் நண்பன்.

‘மக்களே! நானும் நேற்றுதான் பார்த்தேன்! முதல் குளத்தில் மிதந்து கொண்டிருப்பது ஒரு தேங்காய். அது முதலை அல்ல. ஆகையால் நீங்கள் தைரியமாக முதல் குளத்தில் குளியுங்கள்', என்றான் மூன்றாம் நண்பன்.

‘மக்களே! இரண்டாம் குளத்தில் இருப்பது மூலிகைகள் அல்ல. அவை வெங்காயத் தாமரை. அந்த நீரில் குளித்தால், எல்லா தொற்று நோய்களும் வரும். ஆகையால், முதல் குளத்தில் குளியுங்கள்', என்றான் நான்காம் நண்பன்.

தற்போது முதல் குளத்திற்கு மகிழ்ச்சி. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு வழிப்போக்கர். அங்கிருந்த சாதுவிடம் சென்றார்.

‘ஐயா! நேற்றுவரை முதல் குளம் மோசம், இரண்டாவது குளம் சிறப்பானது அதில் குளியுங்கள்', என்றார்கள். இன்று, இரண்டாவது குளம் மோசம். முதல் குளம் சிறப்பானது அதில் குளியுங்கள்', என்கிறார்கள். இங்கு என்ன நடக்கிறது?' என்று கேட்டார் அந்த வழிப்போக்கர்.

சாது பேசினார்.

‘ஐயா வழிப்போக்கரே! ஒரு விஷயத்தை கவனித்தீர்களா! முதலில் அவர்கள் இரண்டாவது குளத்தின் அன்பைப் பெருவதற்காக, முதல் குளத்தை குறை சொன்னார்கள். அடுத்து முதல் குளத்தின் அன்பைப் பெற இரண்டாவது குளத்தை குறை சொன்னார்கள். இப்படி செய்வதால் அவர்களுக்கு எத்தகைய ஆதாயம் கிடைக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

‘ஆஹா, இவர்கள் நம்மைப் பற்றி பெருமையாக பேசுகிறார்களே! இவர்களுடன் நிரந்தர நட்பு வைத்துக் கொள்வோம்', என்று அந்த இரண்டு குளங்களும் நினைப்பதில்லை.

இப்படி குறையுள்ள குளங்களுக்கு பதில் எந்த குறையும் இல்லாத மூன்றாவதாக ஒரு நல்ல குளத்தை வெட்டி அதை மக்களுக்கு கொடுப்போம்', என்றும் இவர்கள் என்றுமே நினைப்பதில்லை.

இவர்கள் சொன்ன விஷயங்களில் வரும் ‘கொடியவன், நல்லவன், பிசாசு, தேவதை, மூலிகை, வெங்காயத் தாமரை, தேங்காய், முதலை ஆகியவை இவர்களின் செயல்களுக்கு பயன்படும் கருவிகள். இது குளிப்பவர்களுக்கும் தெரியும். ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தெரியும்.

இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்! இப்போது இரண்டாக காட்சியளிக்கும் குளங்கள் ஒரு காலத்தில் ஒரே குளமாக இருந்தது. இரண்டு கிராமத்திற்கிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு பின்னர் இரண்டு குளங்களாக பிரிக்கப்பட்டது. ஆகையால், இந்த இரண்டு குளத்திற்குமிடையே பெரிய வித்தியாசங்களை புத்திசாலிகள் காண்பதில்லை. எது வசதி என்பதை குளிப்பவர்களே முடிவு செய்வார்கள். இது குளங்களுக்கும் தெரியும், மரத்தடி நண்பர்களுக்கும் தெரியும். ஆனால், உன்னைப் போன்ற வழிப்போக்கர்களுக்கு இது புரியாது.

மற்றொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? மரத்தடி நண்பர்கள் தங்கள் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்கள் இருப்பதையே மற்றவர்கள் மறந்துவிடுவார்கள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
 

‘தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய அரசின் முன் மெளனம் காத்து வருகிறது அதிமுக அரசு. நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை காக்க வேண்டிய கடமை உள்ளது. இதனால் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வருகிற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்', என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் வைகோ.

ஸ்பெக்டிரம் ஊழல் விவகாரத்தில் திமுகவையும், திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தவர் வைகோ. அதோடு மட்டுமின்றி இலங்கையில் 175000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழினத்தை அழித்தது திமுகவும், காங்கிரஸும் என்றெல்லாம் பட்டியலிட்டவர். கிட்டத்தட்ட இதே விஷயங்களை அறைத்துத்தள்ளியது கம்யூனிஸ்டுகள். அன்றைய தேர்தலில், இது திமுகவின் தோல்விக்கு பெரும் பங்கு வகித்தது. இந்த நிகழ்வு ஒரு உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அரசியல் கட்சிகளே உங்களிடம் சில கேள்விகள்:
ஒருவருடன் நட்பு கொள்வதற்கு அவருடைய நல்ல குணங்களும், செயல்களும் காரணமாக இருக்கலாம். அப்படியில்லாமல், ஒருவருடைய தவறை சுட்டிக்காட்டி மற்றொருவருடன் இணைந்து கொள்வது சந்தர்ப்பவாதம். இத்தகைய சந்தர்ப்பவாதங்கள் ஒரு ஆரோக்கியமான அரசியல் சூழலை ஏற்படுத்தாது.

ஒரு கட்சியின் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள். தேர்தல் வேளையில், அவர்களுடன் இணையும் போது, சுமத்திய குற்றத்தின் நிலையை மக்களுக்கு என்றாவது விளக்கியிருக்கிறீர்களா?

‘நான் தவறாக அவர்கள் மீது குற்றம் சாட்டிவிட்டேன்', என்று என்றாவது தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறீர்களா?

‘ஒரு முறை அவர்களின் தோல்விக்கு காரணமாகிவிட்டோம், அது போதும். அவர்கள் செய்த தவற்றை பற்றி இனி பேச வேண்டாம்', என்று நினைப்பது சரியா?

‘வசதிக்கேற்ப ஒருவரை உத்தமராகவும் சித்தரிக்கலாம், திருடனாகவும் சித்தரிக்கலாம். மக்கள் அதை அப்படியே நம்பிவிடுவார்கள்', என்று நினைத்தால் ஏமாறப்போவது நீங்கள் தான். இத்தகைய அணுகுமுறை உங்களை மரத்தடி நண்பர்களாகவே வைத்திருக்கும். அரசியலில் அடுத்த நிலைக்கு உங்களை கொண்டு சேர்க்காது.

அரசியல் கட்சிகளே! குற்றச்சாட்டுகளை அடுத்தவர் மீது சுமத்தும் போது அதிக கவனம் செலுத்துங்கள். ஒரு வம்சத்தையே குற்றவாளிகளாக்கும் அளவுக்கு குற்றங்களை அடுக்கிவிட்டு, பிறகு அவர்களுடனே இணைவது எந்த விதத்தில் நியாயம்?' முன்னர் நாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் தவறு. அவர்கள் நல்லவர்கள். அவர்கள் மீது குற்றஞ்சாட்டியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்', என்ற ஒரு நற்சான்றிதழை முதலில் வழங்குங்கள். பிறகு அவர்களுடன் இணையுங்கள். அப்படியில்லாமல் இணைவது குற்றத்தோடு கூட்டணி சேர்வதற்குச் சமம். அதற்காக நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை வேண்டுமானால் மகிழ்விக்கலாம், மக்கள் அதை ஏற்பதில்லை.
 

வழக்கம் போல இந்த தேர்தல் திருவிழாவிலும் தேமுதிக, பாமக, தமாக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. யாருக்கும் தங்கள் ஆதரவையும் அளிக்கவில்லை. தேர்தல் திருவிழாவிலே கலந்துகொள்ளாத கட்சிகளே! தேர்தலில் பங்கேற்காமல் உங்கள் பலத்தை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? வீட்டில் உட்கார்ந்துகொண்டு அறிக்கையை விடுவது மட்டும் அரசியலல்ல. போட்டியிடாமல் இருப்பதே பலம் என்று நீங்கள் கருதினால், உங்கள் பலத்திற்கு எந்தக் காலத்திலும் சேதம் ஏற்படாது. நீங்கள் என்றுமே பலசாலிதான். ஜொலிக்கட்டும் உங்கள் தங்கமுலாம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com