இந்தக் குளிரை எல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயா அம்மா?

பருவம் என்பது இயற்கையின் பெரும் கொடை. இறைவன் மிகப் பெரியவன் என உணர்த்தும்
இந்தக் குளிரை எல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயா அம்மா?

1952-ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்க கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். கடும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், 'எங்கே உன் அமெரிக்கப் புருஷன்?' என ஏளனமாய் விரட்டி விட்டனர்.

பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அந்தப் பெண் அந்த ஊரை நோக்கி நகரத் துவங்கினாள். முடியவில்லை பிரசவ நேரம். ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவளுக்குப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தன்னந்தனியனாய்ப் பெற்றெடுத்த அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பனி பொழிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மறு நாள் காலையில் அந்த வழியாக மிஷனரிகள் வந்தபோது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர். குரல் வந்த திசையில் சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறைந்து போன நிலையில் இறந்து கிடந்த தாயின் கரங்களில் ஒரு ஆண் குழந்தை. குழந்தை காப்பாற்றப்பட்டான். பையன் காப்பகத்தில் வளர்ந்தான். தனது பத்தாவது வயதில் அவனிடம் அந்த உண்மையை காப்பகத்தினர் சொன்னார்கள்.

அதற்கு அடுத்தநாள் காலையில் படுக்கையில் அந்தப் பையனைக் காணவில்லை. அவனை அவர்கள் தேடினார்கள். அதே பாலத்தின் அடியில் அவனைக் கண்டார்கள். கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அந்தப் பையன் அழுது கொண்டே 'இந்தக் குளிரை எல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயா அம்மா’ என நடுங்கிக் கொண்டே அழுதான். பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

தாயின் அன்பு அளவிட முடியாதது. அந்தத் தாய் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என சொன்ன இயேசுவின் அன்பு அனைத்திலும் உயர்ந்தது. இதே போன்ற நிராகரிப்பு, இதே போன்ற குளிர், ஒரு தாயின் தவிப்பு, ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு, எல்லாம் நாம் அறிந்தது தானே!

கிறிஸ்மஸ் விழாவை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் அன்பு எனலாம். மனிதகுலத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு !

கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா. அன்பைப் பகிர்தல் மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் விழா. அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கெவின் கோல்மென் எனும் பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூளையில் புற்று நோய். கடந்த அக்டோபர் மாதம் அவனைச் சோதித்த டாக்டர்கள் அவன் இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றார்கள்.

பெற்றோர் மௌனமாய்க் கதறினார்கள். பையனோ, தனக்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும், அதற்காகவே காத்திருக்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னான். ஊரில் உள்ள மக்கள் அதை கேள்விப்பட்டார்கள். எல்லோரும் ஒன்று பட்டார்கள். பையனுடைய ஆசையை நிறைவேற்ற ஒட்டு மொத்த ஊருமே ஒன்று சேர்ந்தது. அக்டோபர் மாதத்திலேயே ஊரை முழுதும் அலங்கரித்து, பஜனை பாடல்கள் பாடி, கிறிஸ்மஸ் மரங்கள் வைத்து, கிறிஸ்மஸ் தாத்தாவை வரவைத்து ஒரு நிஜ கிறிஸ்மஸ் சீசனையே உருவாக்கி விட்டார்கள்.

பையனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகள் கூறி, கேரல் பாடல்கள் பாட அவன் மகிழ்ந்தான். பெற்றோர் நெகிழ்ந்தனர். தனது பையனின் ஆசையை நிறைவேற்ற ஊரே ஓன்று திரண்டதில் கண்ணீர் விட்டனர். அந்தப் பையன் நிம்மதியாய் உணர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின் கடந்த மாதம் அந்தப் பையன் இறந்தான். அன்பின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தவனாக. கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா என்பதன் செயல் வடிவம் அங்கே நிகழ்ந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இயேசு பிறக்கும் அனுபவம் எழ வேண்டும், அதுவே உண்மையான கிறிஸ்மஸ். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கட்டாயமான ஆன்மீக நிகழ்வல்ல. பைபிளில் எங்கும் இயேசுவின் பிறந்த நாள் பற்றிய குறிப்பு இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடிய வரலாறு இல்லை. இயேசுவின் அன்னை மரியாள் அந்த பிறந்த தினத்தைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியதாகவும் குறிப்புகள் இல்லை. இயேசு அதை நமக்கு ஒரு கடமையாகத் தரவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, இயேசு பிறப்பு விழாவை ஒரு கட்டாயத்துக்காகக் கொண்டாடாமல் இயேசுவின் அன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு இனிய அனுபவமாகக் கொண்டாடுவதே சாலச் சிறந்தது. 

- சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com