குஜராத் தேர்தல் தோல்வி: தன் வாயால் கெட்ட காங்கிரஸ்! 

இரண்டு கட்டங்களாக நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி முகம் கண்டிருக்கும் வேளையில், தொடரும் காங்கிரஸின் தோல்வி கூர்ந்து ஆராயத் தக்க ஒன்றாக இருக்கிறது.
குஜராத் தேர்தல் தோல்வி: தன் வாயால் கெட்ட காங்கிரஸ்! 

சென்னை: இரண்டு கட்டங்களாக நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி முகம் கண்டிருக்கும் வேளையில், தொடரும் காங்கிரஸின் தோல்வி கூர்ந்து ஆராயத் தக்க ஒன்றாக இருக்கிறது.

தொடர்ந்து 22 வருடங்களாக குஜராத்தினை ஆட்சி செய்து வரும் பாஜகவானது இந்த தேர்தலில் தனியாக களம் கண்டது. காங்கிரஸ் கட்சியானது பலத்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேலுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டங்கள் குஜராத்தில் பெரும் சேதங்களை உண்டு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டபேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 89 தொகுதிகளுக்கு கடந்த 9–ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 66.75% வாக்குகள் பதிவானது. எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்ககான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானது.

தேர்தல் முடிவுக்கு சில நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அதிகாரபூர்வமாகத் தேர்தெடுக்கப்பட்டார் என்றாலும், இந்த தேர்தலானது பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவருக்குமான நேரடி போட்டியாக உருவகப்படுத்தப்பட்டது. அதற்கு ஏற்றவாறு பிரச்சாரத்திலும் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில் அனல் பறந்தது.  

முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடந்த தேர்தல் பிரசாரங்கள் மற்றும் மக்களின் மன நிலையினை வைத்து காங்கிரஸுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுதுதான் வாக்குப்பதிவுக்குப் பின்னர் காங்கிரசுக்கு பாதகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான மணிசங்கர் அய்யர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக   விமர்சித்துப் பேசியிருந்தார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை இழிவான மனிதர்; அவரைப் புறக்கணிக்க வேண்டும்' என்று தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  

இதுகுறித்து குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாபர் பகுதியில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், 'நான் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்குச் சென்றார். அங்கு அவர், பாகிஸ்தானியர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்த செய்திகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவிக் கிடக்கின்றன. அந்தச் சந்திப்பின்போது, அவர்களுக்கான பாதையில் இருந்து நான் அகற்றப்படாத வரையிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என்று பேசியுள்ளனர். என்னை பாதையில் இருந்து அகற்றும்படி பாகிஸ்தானியர்களிடம் மணிசங்கர் அய்யர் வலியுறுத்தியுள்ளார். என்னை ஒழிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கொடுப்பதற்கு மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்கு சென்றார்' என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.  .

மோடியின் இந்த நேரடிக் குற்றசாட்டு வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தி அவர்களை காங்கிரஸுக்கு எதிரான மனநிலைக்கு இட்டுச் சென்றது என்று கூறலாம். அத்துடன் மணிசங்கர் அய்யரின் கருத்துகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, தமது கருத்துகளுக்காக மணிசங்கர் அய்யர் வருத்தம் தெரிவித்தார். எனினும், காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.    

அத்துடன் பிரதமர் மோடி வாக்காளர்களின் இந்த மனமாற்றத்தை தக்க வைக்கும் பொருட்டு, தில்லியில் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் தளபதிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்றும், அவர்கள் அனைவரும் ஒன்று கூடி குஜராத் முதல்வராக சோனியா காந்தியின் செயலரான அஹமது படேலை கொண்டு வருவது பற்றி பேசினார்கள் என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டினார். அத்துடன் அந்த கூட்டத்தில் பங்கு கொண்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் விமர்சித்தார். தற்பொழுது வரை அது தொடர்ந்து ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.இருந்த போதிலும் அடிப்படை வாக்காளர்கள் மனதில் பாகிஸ்தான் தொடர்பான மோடியின் இந்த குற்றச்சாட்டு வலுவாக நிலைத்து விட்டது. இது தேர்தலிலும் எதிரொலித்தது என்பதை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த இடங்களின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில் காண முடிகிறது.      

எனவே ஆரம்பத்தில் ஓரளவு காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது என்று கருதத்தக்க வாக்காளர்களின் மனநிலையினை, மணிசங்கர் அய்யரின் தரம் தாழ்ந்த விமர்சனம் பாஜவுக்கு சாதகமாக்கும் வேலையினைச் செய்தது எனலாம். தொடர்ந்து காங்கிரஸ் மீது மோடி ஏவிய ஆயுதங்களை திறம்படச் சமாளிக்கும் வல்லமை காங்கிரஸின் முதன்மையான பிரசார நாயகரான ராகுலிடம் இல்லை என்றே கூறலாம்.

போதாக்குறைக்கு காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சும் இதற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது. உதாரணமாக மோடியின் விமர்சனத்திற்கு எதிர்வினையாக, 'எனது கருத்துகளின் காரணமாக, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவைத் சந்திக்க நேரிடும்பட்சத்தில், கட்சியால் அளிக்கப்படும் எத்தகைய தண்டனையை ஏற்கவும் தயாராக உள்ளேன். காங்கிரஸ் கட்சி இல்லையெனில், இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே கிடையாது' என்று மணிசங்கர் அய்யர் ஊடகங்களிடம் பேசினார்.

இவை எல்லாம் ஒரு பக்கம் என்றால் காங்கிரஸுக்கு பெரிதும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படேல் சமூகத்தினரின் வாக்குகளும் இந்தப் பின்னடைவில் இருந்து அக்கட்சியினை காப்பற்றவில்லை. முன்னதாக ஹர்திக் படேலின் அமைப்பிலிருந்த சிலர் அங்கிருந்து விலகி பாஜகவில் இனைந்தனர். அத்துடன் பாஜகவுடன் அவர் ரகசியமாக கூட்டணி தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தார் என்று வெளியான தகவல்களும் அவருக்கு உதவுதாக இல்லை. முக்கியமாக தனக்கு பணம் கொடுப்பதாக பாஜக தரப்பில் பேரம் பேசினார்கள் என்ற ஹர்திக்கின் குற்றச்சாட்டினை வாக்காளர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை எனலாம்.

திங்கள் அன்று காலை வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகத் துவங்கிய தருணத்தில் காங்கிரஸ் முன்னிலை என்று தகவல்கள் வரத் துவங்கியது. அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொண்டாட்ட மனநிலை ஆரம்பமானது. ஆனால் அது சிறிய அளவு நேரமே நீடித்தது. பின்னர் முடிவுகள் அனைத்துமே பாஜவுக்கு சாதகமாக மாறி விட்டது.

சுருக்கமாக மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. மீதமுள்ளவற்றில் 70 தொகுதிகளுக்கு மேலாக காங்கிரசும், இதர தொகுதிகளில் சுயேட்சைகள் உள்ளிட்டோரும் முன்னிலையில் இருக்கின்றனர்.

இந்த வெற்றியின் ஊடாக பாஜக கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது. ஊடகங்களில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக பெருவாரியான வெற்றியினைப் பெரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அக்கட்சித் தலைவர் அமித் ஷாவும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் 150 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தார்.

ஆனால் கணிப்புகளுக்கு மாறாக இத்தேர்தல் முடிவு கொஞ்சம் குறைவான இடங்களையே அக்கட்சிக்குப் பெற்றுத் தர வாய்ப்புள்ளது. 2012-ஆம் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது. இம்முறை பாஜக தான் விரும்பிய 150-க்கு குறைவாகவும், காங்கிரஸ் கடந்த முறையை விட சில இடங்கள் கூடுதலாகவும் பெற அதிகமான வாய்ப்புள்ளது. 

எப்படி இருந்தாலும் 1995-இல் தவற விட்ட குஜராத்தின் அரியணை காங்கிரசின் கையிலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விலகி நிற்கப் போவது மட்டும் உறுதியாகி விட்டது. தவளை தன் வாயால் கெட்ட கதைதான்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com