இவ்வளவு பேசியும் எழுதியும் போராடியும் இனமானம் ஏற்படவில்லை என்றால் நான் என்ன தலைவன்?

கடவுள் பெயரால் உருவான சமயங்களும்தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறை மறுப்பாளாராக இருந்தார். 
இவ்வளவு பேசியும் எழுதியும் போராடியும் இனமானம் ஏற்படவில்லை என்றால் நான் என்ன தலைவன்?

'நான் எழுத்தாளன் அல்ல. பேச்சாளன் அல்ல. கருத்தாளன். எனக்கு மனித அபிமானம் தவிர வேறு எந்த அபிமானமும் இல்லை. எல்லாரையும் ஆதரித்திருக்கிறேன். எல்லாரையும் எதிர்த்திருக்கிறேன். எனக்காக அல்ல. பொதுநலனுக்காக.

எனக்கு பதவி ஆசை இல்லை. 29 பதவிகளை ராஜினாமா செய்தவன் நான். எல்லா பதவியும் நான் மென்று துப்பிய எச்சில்கள்.

என்ன செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும். சாதி ஒழிப்பே எனது முதலும் கடைசியுமான தொண்டு.

பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது.

பொதுவாழ்க்கை என்பது நக்கித் தின்பதாக மாறிவிட்டது. இங்கு இருப்பது ஜனநாயகம் அல்ல. பணநாயகம். பணத்துக்கும் பதவிக்கும் நக்கிப் பிழைப்பவர்களே அரசியல் தலைவர்களாகி விட்டார்கள். இவ்வளவு பேசியும் எழுதியும் போராடியும் இனமானம் ஏற்படவில்லை என்றால் நான் என்ன தலைவன்? '

டிசம்பர் 24 அந்த நாயகன் நடமாட்டத்தை நிறுத்திய நாள்.

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி நாயக்கர், (E.V.Ramasamy) செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். 

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும்தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறை மறுப்பாளாராக இருந்தார். 

இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் 'புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி' என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.

பெரியாரின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற அவர், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட இராமசாமி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

நன்றி : விக்கிப்பீடியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com