தொழிலாளியின் பார்வையில் பட்ஜெட் 2017

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதற்கேற்ப இந்த ஆண்டின்
தொழிலாளியின் பார்வையில் பட்ஜெட் 2017

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதற்கேற்ப இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக 31 ஜனவரியன்று பாராளுமன்றம் முன்பாக சமா்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கை சில விபரங்களை முன்வைக்கிறது.  துவக்கத்திலேயே வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் சட்ட ரீதியான சம்பளப் பிடித்தங்கள் குறைய வேண்டும், ஆட்குறைப்பு என்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.  தற்போதைய பிஜேபி அரசு அமைந்த நாளிலிருந்தே தொழிலாளர் நலச் சட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும், திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து வருகிறது.

தொழிற்தாவாச் சட்டம் 1947ன் விதிகளுக்கிணங்க 100 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்ற நிலை வரின் அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.  அதை தவிர்ப்பதற்காகத்தான் ஒப்பந்தப் பணியாளர்கள் என்பது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று கவலை கொள்வதுபோல் முதலைக் கண்ணீர் விடுகிறது அந்த ஆய்வறிக்கை.

1989 முதல் 2010 வரையிலான வருடங்களில்  உற்பத்தி சார்ந்த 10.5 கோடி பணியிடங்களில் 35 சதவீதம் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களிலான பணிகளாகவும், மற்றவை முறைசாரா பணிகளாகவும் அவை பெரும்பாலும் ஒப்பந்த பணிகளாலேயே மேற்கொள்ளப்படுகிறது.

புலம் பெயரும் தொழிலாளர்கள்

மேலும் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டங்கள் விட்டு மாவட்டம் புலம் பெயரும் கூலித் தொழிலாளர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது.  இதுவும் எந்தவித பணி பாதுகாப்போ, சட்டப் பாதுகாப்போ இல்லாத ஒப்பந்த பணிகளாகவே இருக்கிறது.  இது குறித்து மத்திய மாநில அரசுகள் பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை.  மாறாக அவரவர் சார்ந்த மாநிலங்களில் விவசாயங்கள் அழிந்து போய், வேலை வாய்ப்பு கொடுக்க இயலாத நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.

இத்தகைய பொருளாதார ஆய்வறிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசின் 2017-18ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  பெரும்பாலும் இத்தகைய நிதி நிலை அறிக்கைகள் வெளியானவுடன் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய அம்சங்கள் என எவற்றிற்கெல்லாம் வரி அதிகரித்துள்ளது. எவற்றிற்கெல்லாம் வரிச் சலுகை தரப்பட்டுள்ளது, வேலை வாய்ப்பு செய்திகள், நலிந்தோருக்கான உதவிகள், விவசாய மேம்பாடு, தனிநபர் வருமான வரியில் மாறுபாடு உள்ளதா இல்லையா என்ற விபரங்களோடு அடுத்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி இலக்கு என்பது போன்ற விபரங்கள் முன்னிறுத்தப்படும்.

தனிநபர் வருமான வரி

ஆனால் தனிநபர் வருமான வரி என்பதைப் பொறுத்தமட்டில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி இராது, முறைப்படுத்தப்பட்ட பிடித்தங்கள் என்பதில் சிறிது உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு இதுவரை 10 சதவிகித வரி என்றிருந்தது அடுத்த நிதியாண்டிலிருந்து 5 சதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒருபுறம் இது பெரிய சலுகை போல தோன்றினாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழு ஊதியங்கள் அமுலாக்கப்பட்டு, மாநில அரசுகளிலும் தொடர உள்ள சூழலில் இது பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது எனலாம்.  தவிர தனிநபர் வருமான வரியில் சிறிது சலுகை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, செஸ் (உபரி வரி) என்ற பெயரில் பல்வேறு கொள்முதல்களுக்கு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகும் வருங்காலம்

ஒரு மணியோசை பொருளாதார ஆய்வறிக்கை என்பது போல, மற்றொரு மணியோசையாக சில நாட்களுக்கு முன்பாக கூடிய அமைச்சரவை உயர்மட்டக் குழு 15,000 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதிப் பிடித்தம் கட்டாயம் இல்லை எனவும், 15,000ற்கு ஊதியம் பெறுபவர்களுக்கு வ.வை.நிதி பங்குத் தொகையை குறைவாக பிடித்தம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தது.  இது தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே ஆதார சேமிப்பின் மீது விழுந்த அடி என்பதுடன், நிர்வாகப் பங்கு செலவினம் குறையும் என்ற ஆதாயம் முதலாளிகளுக்கு கிடைத்துள்ளது.

விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது போல் அலங்கார வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளது.  ஆனால் அவற்றில் பெரும்பாலும் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது சார்ந்தே இருக்கிறது.  மாறாக விவசாயிகள் எதிர்பார்ப்பது அவர்களின் விளைச்சலை முறையாக அரசு கொள்முதல் செய்து, மதிப்பீடு கூட்டி, முறையாக காத்து விநியோகிக்க வேண்டும் என்பதோடு, உற்பத்திக்கான நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்பதோடு, இயற்கை சீற்றங்கள், இயற்கை பொய்த்துப் போவது போன்ற காலங்களில் முறையான இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்பதுதான் அவர்களுக்கான உடனடி தேவை.  ஆனால் அதற்கான பெரிய ஒதுக்கீடு எதுவும் சொல்லப்படவில்லை.

ஊரக வேலை வாய்ப்பு 100 நாள் திட்டம்

நிலையான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு பதிலாக மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாத திட்டத்திற்கு கடந்த ஆண்டின் ஒதுக்கீடான 37,000 கோடியிலிருந்து 11,000 கோடி அதிகரித்து 48,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல. கடந்த ஆண்டு பிரதான் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்த தொகை உரிமை கோரல்களை ஈடுகட்ட போதவில்லை என நவம்பரில் தாக்கல் செய்யப் பட்ட கூடுதல் (உப) நிதி ஒதுக்கீடு என 9,500 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு அதாவது 47,500 கோடி என்பதிலிருந்து 500 கோடி மட்டுமே தற்போது அதிகரிக்கப் பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம்.

தொடரும் வரி ஏய்ப்புகளும், கார்ப்பரேட் சலுகைகளும்

13.14 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 5.97 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே வருமான வரி கணக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்கிறார் நிதி அமைச்சர்.  அதே சமயம் மறுபுறம் வராத வருவாய் (fore gone revenue) என்கிற வகையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சலுகை வெளியில் வராத செய்தியாக நிதி நிலை அறிக்கையினுள்ளே இருக்கும்.  வரா வருவாய் என்பது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளானதால், கடந்த நிதி நிலை அறிக்கையிலிருந்து அதன் பெயர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகைகளினால் (revenue impact on incentives / concessions to Corporate Sectors) நிதி வருவாயில் ஏற்படும் தாக்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

கார்ப்பரேட் வருமான வரி, ஆய்த்தீர்வை, சுங்கத் தீர்வை ஆகியவற்றில் வரா வருவாய் (கோடிகளில்)

 ஆண்டு       சலுகை           உயர்வு சதவீதம்

2005-06   -  2,29,108

2006-07   -  2,73,447

2007-08   -  3,03,260

2008-09   -  4,20,946

2009-10   -  4,37,290     90%

2010-11   -  4,22,879

2011-12   -  5,07,358

2012-13   -  5,32,699

2013-14   -  5,32,509     132%

2014-15   -    83,492     (இதில் தீர்வைகள் சேரவில்லை)

ஆக இதுவரை அரசிற்கு வராவருவாய் 37 லட்சத்தி 42 ஆயிரம் கோடி.

இந்த பத்தாண்டுகளில் வரா வருவாயை வசூல் செய்தால் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு ஊரக வேலை வாய்ப்பை கொடுக்க இயலும்.  கார்ப்பரேட் வரித் தள்ளுபடியில்தான் அபரிமிதமான வளர்ச்சி என்ற இலக்கை எட்டியுள்ளது.  எந்த அரசு மாறினாலும் இந்த சலுகைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

எனவே இந்த நிதி நிலை அறிக்கையானது 5 மாநில தேர்தல்கள் மற்றும் நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் விவசாய தற்கொலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வார்த்தை ஜாலங்களால் காண்பிக்கப்பட்ட வாண வேடிக்கைகள் மட்டுமே.  யதார்த்தத்தில் ஊரக மற்றும் விவசாய் முன்னேற்றம் எப்படி நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- எஸ்.சம்பத்

அரசு போக்குவரத்து, மாநில தொழிற்சங்க நிர்வாகி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com