மரம் வேண்டும் மனங்கள் வேண்டும்!

நிழலின் அருமை வெயிலில்  தெரியும் என்பார்கள். கட்டிடங்களின் காடுகளில் ஒரு நகர்வாசியாக
மரம் வேண்டும் மனங்கள் வேண்டும்!


நிழலின் அருமை வெயிலில்  தெரியும் என்பார்கள். கட்டிடங்களின் காடுகளில் ஒரு நகர்வாசியாக, வெயில் பொழுதுகளில் அலையும் போதுதான் மரங்களின் மகத்துவமும் புரிகின்றது.

நகரத்தின்  கானல்  நம்மையெல்லாம் நாம் பிறந்த கிராமங்களுக்கும், பால்ய கால நினைவுகளுக்கும் அழைத்துச் செல்லத்  தவறுவதில்லை. தாய்மடி  போல்  நம்மை எல்லாம்  ஏற்றுக் கொண்டு நம் விளையாட்டுகளை  மௌனத்துடன்  ரசித்தபடியிருந்த மரத்தடிகள், அம்மன் கோயில் பெருவெளியில் மோனத் தவத்தில்  ஆழ்ந்தபடியிருக்கும்  அந்தப்  பெரு விருட்சங்கள்  என  நினைவுகள் விரிந்து பின்னோக்கி சென்று கொண்டேயிருக்கும்.

மரத்தை இயற்கையின் வரம் என்பார்கள். ஆம் மழை, நதி, நிலவு, ஆகாயம்  போல் மரங்களும்  உலகுக்கு அழகு சேர்க்கின்றன. எத்தனை எத்தனை  வகையான மரங்கள்! நாணிக் கோணி நிற்கும் மரம். கருண்டு  திரண்டு கம்பீரத்துடன் நிற்கும் மரம். பச்சைத் தோகையை விரித்த படி  நிற்கும் மரம். ஒட்டடை  தட்டும் குச்சிகள் போல்  வானத்தை எட்ட முனையும் மரம். மஞ்சள் பூக்களுடன்  முகமெல்லாம் சிரிப்பாக வரவேற்கும் மரம், நறுமணம் பூசிக் காற்றில் பரவ விட்டு, தன்னை நோக்கி இழுக்கின்ற  மோகினியாய்  இரவுகளில்  இரவில் தோன்றும் மரம்.

இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு  ரகம்.

ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு தோற்றமும் ஒவ்வொரு குணாம்சமும் இருக்கும். பயணங்களின் போது எவ்வளவு மரங்களை நாம் கடந்து செல்கின்றோம். ஆயிரம் நட்ட தூண்கள் போல் தோன்றும் தென்னந்தோப்புகள் வழியே செல்லும்போது  அவற்றின்  பசுமை  நம்  மனதிலும் படர்ந்து விடுகின்றன.

உழைத்து முறுக்கேறிய  கருமையான உடலுடன்  உறுதியை  நமக்குப் போதித்து நிற்கின்றன விசிறி போன்ற  ஓலைகளுடன் பனைகள்.ஆல மரங்கள்  விழுதுகள் என்ற பெயரில் எத்தனை  பாம்புகளை  நிலம் நோக்கி இறக்குகின்றன.வேப்பமரங்கள்  தன் சருகுகளை ஓயாத் துயரத்துடன் நிலத்தில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன. புத்தர் பக்கத்தில் இல்லாத போதும்  எப்போதும்  அரசமரங்கள் மோனத் தவத்திலேயே  ஆழ்ந்து கிடக்கின்றன. கமுகுகள்  பாக்குகள் குலுங்கக்  காற்றுக்கு  வளைந்து நெளிந்து நடனமாடுகின்றன. ரகசியங்களைப் பதுக்கி வைத்திருக்கும்  பெருங்  குகை  போல்  நிழல்  வாகை  மரங்கள்    தோன்றுகின்றன.

மரங்களுக்கு வருடத்தின்  பெரும் பாகம்  துயரத்திலேயே  கழிகின்றது. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தன்  கணவனைக்  காத்து நிற்கும்  பெண்ணைப் போல,போருக்குச் சென்ற  தன் காதலன் திரும்பி  வரும்  புரவியின் குளம்போசைக்காகக் காதுகளைத் தீட்டிக்  கொண்டு நிற்கும்  மடந்தை போல  மரங்களும்  மழைக்காக  ஏங்கி நிற்கின்றன.

மரங்களுக்கும் நம் உயிருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. நம்முடைய வெளிமூச்சு, தாவரங்களின் உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு நமக்கு உள்மூச்சாகிறது. எனவே சுவாசத்தை  பாதுகாக்க மரங்களை பாதுகாக்கவேண்டிய தார்மீகக் கடமை நமக்குள்ளது.

மழை காலத்தில்  மரங்களுக்கெல்லாம் தாய்மையின் பூரிப்பு வந்து விடுகின்றது. சரியாகத் தலை  துவட்டாத  பெண்ணின்   கூந்தல்  நீர்  சொட்டுவது   போல்        அவற்றிலிருந்து  நீர்த் துளிகள்  விழுகின்றன. உடலெங்கும் பசிய  ஒளியேறி மின்னுகின்றன.

மரங்களிடமும்  துயரம் ததும்பும் கதைகள் உண்டு. என் தோழியின் வீட்டுக்குச் செச்ல்லும் வழியில், பிரதான சாலையின்  ஓரமாக வரும் ஒரு வளைவில் ஒரு  நெடிய மரம்  உண்டு. அந்த  மரத்தில் தூக்குப்போட்டு சிலர் இறந்துள்ளனர் என்று சொல்வார்கள். அவர்களின் துயர் மிகுந்த  இறுதிக் கணங்களைப் பார்த்த சாட்சி மரம் அது. இருளில்  அவ் வழியாக  செல்பவர்கள்  அவசரத்துடனும்,பதட்டத்துடனும்   கடந்து செல்வதாக சொல்வார்கள். வாகனங்கள்  சொல்லி வைத்தாற் போல்  அந்த இடத்தில்  இருள் வேளைகளில் பழுதடைவதாகவும், விபத்துக்குள்ளாவதாகவும் பல கதைகள்  உண்டு.  தனியாக இருட்டில்  சைக்கிளில் வந்தவர்கள்  அந்த  மரத்தின் திசையிலிருந்து அழுகையொலி  கேட்டதாகவும்  சொல்வார்கள்...

மரம்  பற்றிய இன்னொரு  நினைவும் உண்டு. என்னுடைய பாட்டி சொன்ன கதை இது. இலங்கையில் அப்போது அவர்கள் வசித்தார்களாம். அங்கு ஒரு  மூதாட்டி இருந்தார். ஊரின் எல்லைப்புறத்தில்  அவருடைய வீடு. வீட்டின் முன்னாள் ஓர் அரச  மரம்  இருந்தது. அந்த  அரசமரம் காரணமாக  அவளுடைய  இயற்பெயர்  மறக்கப்பட்டு 'அரசடி அம்மா' என்ற பெயரால் அழைக்கப்பட்டாள். அந்த ஊருக்கு மின்சார  விநியோகம்  வந்தாலும் வந்தது.  அப்போது  அந்தப்  பகுதியில் மண்ணில் வீழ்ந்த மரங்களுக்கு அளவில்லை. அரசடி  அம்மா தன் வாழ்வோடு பிணைந்த அரசமரத்தை இழந்ததும் அப்போதுதான். உறுதுணை ஒன்றை இழந்தது  போல்  அவள் திக் பிரமையுடன்  பல நாட்களைக் கழித்து ,ஒரு கட்டத்தில்  தன்  வீட்டை விற்று விட்டு  வெளியேறி  தன் பேத்தியின் வீட்டுக்குப்  போய் தஞ்சமடைந்து விட்டாள் என்று  சொன்னார்கள்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய முதல் தமிழ் ஞானி வள்லலார்.

மழையை உருவாக்குவதே மரங்கள் தான். சாயாவனம் என்ற மிக அற்புதமான புதினத்தை எழுதிய தமிழின் முக்கியமான படைப்பாளி சா.கந்தசாமி.

உலகத்தின் முதல் புதுக் கவிதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற கவி தன்னுடைய கவிதை நூலுக்கு 'புல்லின் இதழ்கள்' என்று புனிதமான ஒரு பெயரை சூட்டினான். வால்ட் விட்மன் முதல் வள்ளலார் வரை புல்லை புகழ்கின்றார்கள். ஏனெனில் புல்லும் மரம் தான். புல் சிறிய மரம், மரம் வளர்ந்த புல்.

கவிஞர் வாலியின் அழகிய கவிதையொன்றின் வரிகள்

மரங்கள் எல்லாம் வந்து ஒரு நாள் கேட்டன

எங்களிலிருந்து இத்தனை சிலுவைகளை தயாரிக்கிறீர்களே

உங்களிலிருந்து ஏன் ஒரு புத்தன்

உதிக்கவில்லை என்று

மரம் காற்று என்று நகுலன் நெடுங்கவிதை ஒன்றினை எழுதியுள்ளார்.

சங்க இலக்கிய காட்சியொன்று. மரத்தின் அடியில் தலைவன் பிடியில் தலைவி. காதல் மீதூற தலைவன் தலைவியை முத்தமிட நெருங்க அவள் வெட்கத்தில் சிவந்து தன் அக்கா பார்க்கிறாள் எனச் சொல்லி தலைவனை நெருங்க விடவில்லை. யாருமில்லையே என தலைவன் உரைக்க தோழி சிறுவயதில் அவ்விடத்தில் தமக்கையுடன் விளையாடுகையில் ஒளித்து வைத்த விதைகள் முளைத்து மரமாகுகிறது. அக்கா திருமணமாகி பிரிந்து சென்றுவிட அவள் வைத்த மரத்தை அக்காவாகவே நினைத்து அன்பை வைத்துவிடுகிறாள் தலைவி. தலைவனிடம் நெருங்க முடியாமல் தவிக்கும் இக்காட்சி மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக முத்தத்தை தடுக்கும் வல்லமை அந்த மரத்துக்கு இருந்தது.

உயிர் குலம் தழைப்பதற்காக இயற்கை அளித்த வரமான மரத்தில் இன்று நாம் மனிதர்களை தூக்கிலிடுகின்ற அதனை தூக்கு மரம் என்கிறோம். நடை வண்டி, பல்லாங்குழி, ஊஞ்சல், காகிதம், கட்டில், கதவுகள். என நாம் பிறந்து வளரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மரம் இடையறாது நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மரத்துடனான நம் பயணம் இறுதி யாத்திரை வரை தொடரும் ஒன்றாகவே உள்ளது.

மரத்தை சிறப்பாகச் சொல்வதாக தேவாரப் பாடல் 'தாவாரச் சங்கம்மத்துள்' என்ற பொருள் பொதிந்த வரிகளைக் கொண்டது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாயப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றைத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமானே

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

சிறு வயது முதல் காலையில் கண் விழித்ததும் நான் ஓடும் இடம் எங்கள் வீட்டின் சிறு தோட்டத்துக்குத் தான். நிறைய பூச்செடிகளும் சில மரங்களும் கொண்ட தோட்டம் அது. அதில் நான் ஆசையாக வளர்த்துக் கொண்டிருந்த ரோஜா செடி, துளசி, தக்காளிச் செடி, செம்பருத்திச் செடி, கனகாம்பரம், டிசம்பர் செடிகளும் இருந்தன. அவற்றுக்கு நீரூற்ரும் போது ஏற்படும் மண் வாசனை இன்றளவும் நினைத்தால் என் பால்யம் ஈரமாக நினைவுக்கு வரும். நான் பெரும்பாலும் படிப்பது தோட்டத்தில் தான். கயிற்றில் ஊஞ்சல் கட்டி அதில் சிறு பலகையை அல்லது தலையணை வைத்து சலிக்கும் வரை வானம் தொட்டுவிட முயலும் வேகமான ஊஞ்சலாட்டங்கலை நினைத்தால் மனம் துள்ளுகிறது. மரத்தில் கட்டப்படும் ஊஞ்சல் ஒரு மென் கவிதை. அடுத்து என் தோட்டத்தில் எனக்குப் பிடித்தது அத்தி மரம். அப்போதெல்லாம் அதன் அருமை எனக்குத் தெரியாது. நெடுந்துயர்ந்த மரத்தின் அடியில் நிறைய அத்திப் பழங்கள் கொட்டிக் கிடக்கும். கால்களில் பட்டு நசுங்கி எரிச்சலைக் கிளப்பும். தோலை பிதுக்கி சிவப்பாக உட்தெரியும் அத்திப் பழத்தை சுவைப்போம். அதன் பின் வேப்ப மரம். அதன் கிளை மாடியின் வராண்டாவில் பட்டும் படாமல் இருக்கும். எக்கி அதைத் தொடுவது அந்த வயதில் ஒரு விளையாட்டு. வீட்டு கேட்டின் அருகே துவார பாலகர்கள் போல அசோகா மரம் இருக்கும். அதன் காய் ஆங்காங்கே விழுந்து கிடக்கும். அதன் மேல் பெரியதாக ஈர்ப்பு இல்லையென்றாலும் ஏதோ மனிதரைப் போல அது கண்ணுக்குத் தெரியாத தன் கரத்தால் என்னைக் காப்பது போலிருக்கும். சின்ன வயதில் எப்போதும் மரம் செடி கொடிகளுடன் தான் பொழுது. பல தடவை முள் குத்தி ரத்தம் வர ஆச்சி ஊக்கால் முள்ளை எடுக்கும் போதே திட்டுவாள். வீட்டுல உக்காந்து படி எதுக்குத் திரியணும் என்று. ஆனால் முள் வெளியேறியதும் வலி மறந்து என் கால்கள் ஓட்டம் பிடிப்பது சின்னஞ் சிறிய அழகிய மலர்களைக் கொண்ட இன்றலவும் நினைத்த்ப் பார்த்தால் என் பால்ய நாட்களின் சொர்க்கமாக இருந்தது அந்தத் தோட்டம்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எல்லாவற்றையும் இன்று இடித்து அபார்ட்மெண்ட் கட்டிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு அந்தத் தெருவுக்குள் செல்லவே என் மனம் விரும்புவதில்லை. சமீபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை வர்தா புயல் உருகுலைத்துச் சென்றது. ஆயிரக் கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.  அன்றைய தினம் நான் அலுவலகத்தில் இருந்தேன். தொலைக்காட்சியிலும், நேரிலும் காற்றில் ஆவேசமாக மரங்கள் ஆடிக் கொண்டு வேருடன் அப்படியே பூமியில் விழும் காட்சிகளைப் பார்த்து மனம் மிகவும் துயருற்றது. ஒரு மரம் வளர எத்தனை வருடங்கள் ஆகின்றன! ஆனால் இயற்கையின் சீற்றத்தாலும், மனிதர்களின் சுயநலத்தாலும் மரங்கள் ஆயிரக்கணக்கில் அழிகின்றன. அன்புக்கும், பிரியத்துக்கும்   மரமென்ன, விலங்கென்ன, பறவை என்ன, மனித உயிரென்ன? வெட்டப்பட்ட மரங்கள்தான் எவ்வளவு துயரம் தருபவை? அவற்றின் குறுக்கு வெட்டு முகத்திலிருந்து  வெளிப் படும்  அந்தப்  பிசின்  துளிகள்  கண்ணீரைப் போல் அல்லவா  தோன்றுகின்றன. அவை எதையோ சொல்லத் துடிப்பது போல் இல்லையா? கொடூரமான கணவனின் கைகளால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட  மனைவியின்  தொண்டைக்குள் சிக்கியிருந்த வார்த்தைகள் வெளியே  மெல்ல மெல்லக் கசிவது போல்  தென்படவில்லையா?

ஐ.நா சபை பத்து ஆண்டுகளுக்குள் 100 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளது. 125 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா, ஒருவர் ஒரு மரக்கன்று நட்டால் இதனை அடைவது மிக எளிதாகும் என்கிறார்கள். நாம் இந்த உலகை விட்டுப் பிரிவதற்கு முன், நாம் பிறந்தபோது எத்தனை மரங்கள் இருந்தனவோ, அத்தனை மரங்களேனும் இந்த உலகில் இருக்கும்படி வழி செய்துவிட்டே புறப்படவேண்டும் என ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் எடுத்துவிட்டேன்.

-உமா ஷக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com