காத்திருக்கிறோம் ஜெயலலிதா!- முக்தா சீனிவாசனின் பழைய கட்டுரை

காத்திருக்கிறோம் ஜெயலலிதா!- முக்தா சீனிவாசனின் பழைய கட்டுரை

அவர்கள் அரசியலுக்குச் சென்றிருந்தால் மந்திரிகள் ஆகியிருக்க முடியும். வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியிருக்க முடியும்.அந்த மூன்று நடிகைகளும் முறையே- செளகார் ஜானகி, லட்சுமி, ஜெயலலிதா!

அனுபவங்கள்+ அபிப்ராயங்கள்

சினிமாத்துறையில் 100 க்கு 90 பேர் அந்தத் தொழிலைத் தவிர வேறு எதற்குமே தகுதியற்றவர்கள். அவர்களால் சினிமாவைத் தவிர வேறு எங்கும் குப்பை கொட்ட முடியாது.
இதற்கு அபூர்வமாகச் சில விதிவிலக்குகள் உண்டு.
தமிழ்த்திரைப்பட நடிகைகள் மூவர் அந்த விதிவிலக்குக்கு யோக்கியதை உள்ளவர்கள்.
அவர்கள் அரசியலுக்குச் சென்றிருந்தால் மந்திரிகள் ஆகியிருக்க முடியும். வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியிருக்க முடியும்.
அந்த மூன்று நடிகைகளும் முறையே- செளகார் ஜானகி, லட்சுமி, ஜெயலலிதா!
என் படம் சூரியகாந்தி முடிந்து சென்சாராகி விட்டது. படத்தைப் போட்டுப் பார்த்தா அவர் ஒரு பாடல் காட்சியை முழுவதும் உடனே ரீ டேக் எடுக்க வேண்டுமென விரும்பினார். அதில் தன் நடிப்பு தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறினார். நேரம் இல்லாத சூழ்நிலையிலும் நான் அதை ஒப்புக்கொண்டு செய்தேன். மிகப் பிரமாதமாக நடித்துக் காட்டினார். “மேரே தில்ரூபா” என்கிற பாட்டு ஹிட் ஆனது.

அந்தப் பாடலுக்கான யூடியூப் விடியோ இணைப்பு...

எனக்கு ஒருநாள் அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. உடனே, “என்னம்மா செளக்யமாயிருக்கியா?” என்று கேட்டேன். தான் எழுதி ஒரு மாத இதழ் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அதை உடனே வாங்கிப் படித்து விட்டு அபிப்ராயம் கூற வேண்டும் என்றார். அந்த நாவலை வாங்கிப் படித்தேன். நன்றாகவே இருந்தது. பாராட்டிப் ஃபோன் செய்தேன். நன்றீ கூறிய அவர் அந்த நாவல் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். மிகப் பிரபலமாக இன்று நாவல்கள், தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு ஆசிரியை ஜெயலலிதாவின் தோழி. அவரிடம் தான் இப்படி ஒரு நாவலை எழுதப் போவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். 
அதற்கு அந்த ஆசிரியை, “எல்.கே.ஜி, ய்.கே.ஜி படிக்காம ஒன்னாம் கிளாஸிலே ஒரு குழந்தையைப் போட்டா அது படிக்கத் திணறும். ஸைபர் மார்க்குத் தான் வாங்கும். அது மாதிரி நீயும் சின்னச் சின்னதா ஒரு பக்க கட்டுரை, கதை எழுதி ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு நாவல் எழுத வா” என்றாராம். “அஸூயயைப் பாருங்கள்” என்றார் ஜெயலலிதா... இன்று ஜெயலலிதா பல பத்திரிகைகளில் எழுதிகிறார். சிறப்பாகவே இருக்கிறது.
கூட்டங்களில் ஆங்கிலத்தில் ஜெயலலிதா பேசுவதைக் கேட்பது ஒரு உயர்ந்த ரசிக்கத்தக்க அனுபவம். எனக்குக் கூட ஒரு சந்தேகம். எழுதி மனப்பாடம் செய்து வந்து ஒப்பித்து விடுகிறாரோ என்று. பின்பு ஒரு முறை விசாரித்த போது, பாயிண்டுகளை மட்டும் மனதில் முன்பே வரிசைப்படுத்திக் கொண்டு விடுவேன் என்றார்.
தன் கீழ் பணிபுரியும் உதவியாளர்களிடம் ஆதரவு காட்ட வேண்டிய போது ஆதரவைக் காட்டி, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதையும் நான் பார்த்து, “ நீ நல்ல நிர்வாகி” என்று பாராட்டிய நிகழ்ச்சி பல உண்டு.
தாய் சந்தியா மரணத்திற்குப் பிறகு அவருக்குப் பல இன்னல்கள் வந்தன.
தொழிலையும் செய்து கொண்டு வீட்டையும் கவனித்துக் கொள்ள முடியாமல் திணறினார்.
பலர் அவரை ஏமாற்றினார்கள்.
உறவினர்களால் உபத்திரவம்.
நெருக்கடி உந்த உந்த சினிமாத்துறை மீதே வெறுப்பு ஏற்பட்டது அவருக்கு.
இந்த நிலையில் ஒரு முறை நானும் அவருக்கும் எனக்கும் நெருங்கின நண்பர் ஒருவரும் அவரைச் சந்தித்தோம். (பிரபல பத்திரிகை ஆசிரியர் அந்த நண்பர்... அவருக்கும் எனக்கும் ஜெயலலிதா மீது பரிவு அதிகம்) நடிப்பை விடாதே என்று வலியுறுத்தினோம்... அவர் சரி என்றார்... உடனே சிவாஜியை வைத்து ஜெயலலிதாவை ஜோடியாக்கி ஒரு படம் எடுக்க நான் முனைந்தேன். இரண்டே நாளில் ஜெயலலிதா என் நண்பரை டெலிஃபோனில் அழைத்து தான் இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் நடிக்க இயலாது. முக்தாவிடம் முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்றார். அதற்குப் பிறகு சுஜாதாவை ‘புக்’ செய்து படமெடுத்தேன். அது தான் அந்தமான் காதலி!
சில எதிர்பார்ப்புகள்
சில ஏமாற்றங்கள்
மீண்டும் நடிக்க வந்தார் ஜெயலலிதா... அது ஒரு நல்ல படம் தான். ஆயினும் சூழ்நிலைகள் அந்தப் படத்தை சிறப்பாக ஓட அனுமதிக்கவில்லை.
அவர் சமீபத்தில் அமைத்திருக்கும் நாட்டிய நாடகம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்கிறார்கள். மகிழ்ச்சி.
நன்றாக இளைத்து பார்ப்பதற்கு வெகு அழகாக இருப்பதாகச் சொன்னார்கள்.
மீண்டும் ஜெயலலிதா நிச்சயம் நடிப்பார் என்று நம்புவோம்.
உள்ளே இயல்பாகவே இருக்கும் திறமை ஒரு மனிதனை விட்டு என்றும் ஓடியது கிடையாது.
ஜெயலலிதாவை வரவேற்போம்.

தினமணி கதிர்- 13.02.81 ல் வெளிவந்த கட்டுரை இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com