மங்கலம் பல தரும் மகாசிவராத்திரி!

பாரதத் திருநாட்டில் 1008 சிவாலயங்கள் இருந்ததாகவும், அத்தலங்கள் நால்வரால்
மங்கலம் பல தரும் மகாசிவராத்திரி!

பாரதத் திருநாட்டில் 1008 சிவாலயங்கள் இருந்ததாகவும், அத்தலங்கள் நால்வரால் பாடல் பெற்றதாகவும் ஐதீகம்! மகா சிவராத்திரி ஸ்தலங்களான திருக்கோகர்ணம், திருப்பருவதம், திருக்காளத்தி, திருவைகாவூர் என்ற நான்கு தலங்களும் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அவற்றில் தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பான மகாசிவராத்திரி தலம் திருவைகாவூர். 

அமைவிடம்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது திருவைகாவூர். சுவாமிநாத சுவாமி குடிகொண்ட மலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் வில்வ வனேஸ்வரர், இறைவியின் திருநாமம் சர்வ ஜனரட்சகி அம்பாள். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தலங்களில் இது 48 ஆவது தலமாகும். திருஞானசம்பந்தர் பெருமானால் பதிகம் பாடப்பெற்ற பெருமை உடையது. அப்பர் சுவாமி சேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் இடம்பெற்ற திருத்தலம். அருணகிரியாரும் இத்தல முருகனை அழகுபட திருப்புகழில் பாடியுள்ளார். வள்ளலார் ராமலிங்க அடிகளும் திருவருட்பாவில் இத்தல சிறப்பை குறிப்பிட்டுள்ளார்.

தலம் தோன்றிய விதம்: புராண காலத்தில் ஒரு சமயம் சிவபெருமான் உமையம்மையுடன் ஆகாய மார்க்கத்தில் எழுந்தருளியபோது மிகவும் வளமாகவும், செழிப்புடனும் இருப்பதைக் கண்டு ஆர்வத்துடன் அவ்விடத்தை அடைந்தனர். இறைசக்திகள் வருகைபுரிந்த அத்தலமே கொள்ளிடத்தின் தென்கரையில் அமைந்த திருவைகாவூர். பூமிதேவி வழிபட்டதால் இத்தலத்திற்கு பூமிபுரம் என்ற பெயரும் உண்டு. 

வேதங்கள் வழிபட்ட தலம்: பேரூழி என்னும் பெருமழைக் காலத்தில் உலகம் அழிந்து பின்பு மீண்டும் தோன்றுவது நியதி. அப்படிப்பட்ட பிரளய காலத்திலும் நான்கு வேதங்களும் அழியாமல் இருக்க விரும்பி சிவபெருமானை வணங்கி வேண்டின. ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துச் சங்கமமாய் உள்ள ஈசன், அந்த வேதங்களை வில்வ மரங்களாக திருவைகாவூர் தலத்தில் இருந்து தவம் புரிந்து அழியாமல் இருக்க அருளினார். அது முதற்கொண்டு இத்தலத்திற்கு வில்வாரண்யம் என்ற பெயரும், இத்தல இறைவனுக்கு வில்வ வனேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

வேடன் பெற்ற மோட்சம்: முன் ஒரு காலத்தில் தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கி வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆலயத்தை சுற்றி பெரும் காடாக இருந்தது. அந்த காட்டில் ஒரு வேடன் குடும்பம் வசித்து வந்தது. தன் குடும்பத்தினரின் உணவுக்காக வேட்டைக்கு சென்றான். பகல் முழுவதும் பசியுடன் அலைந்தும் அவனது வேட்டையில் விலங்கு எதுவும் அகப்படவில்லை. இருட்டும் நேரத்தில் ஒரு மானைக் கண்டான். அதைத் துரத்தினான்.

மான் பயந்து ஓடி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. முனிவர் மானுக்கு அபயமளித்தார். அதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரைத் தாக்க ஆயத்தமானான். முனிவர் இறைவனை வேண்ட இறைவன் புலி உருக்கொண்டு வேடனைத் துரத்த பயம் கொண்ட வேடன் ஆலய பிரகாரத்தில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் வேடன் இறங்கட்டும் என்று மரத்தடியிலேயே காத்திருந்தது. புலி போகட்டும் என்று காத்திருந்த வேடனுக்கு பசியும், பயமும் வாட்ட, புலிக்கு அஞ்சிய வேடன் தான் ஏறி இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட அது புலி உருவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தது. 

விதிப்படி அன்று இரவு வேடனின் ஆயுள் முடியவேண்டும். எனவே யமன் வேடனின் உயிரைப் பறிக்க ஆலயத்தினுள் நுழைந்தார். 

சற்றே அலட்சியமாக இருந்த நந்திதேவர் யமனைக் கவனிக்கவில்லை. அன்றைய தினம் மகாசிவராத்திரி நாள். உண்ணாமல், உறங்காமல் இரவு நான்கு காலமும் இருந்த வேடன் அறியாமல் அவன் கிள்ளிப்போட்ட வில்வ இலைகளால் அவனுக்கு மகா சிவபூஜை செய்த பலன் கிடைத்தது. அதனால் வேடனை சிவபெருமான் தன் அடியாராக ஏற்றுக்கொண்டார். 

எனவே வேடனை கொல்ல வந்த யமனை தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோலுடன் தோன்றி வெளியே விரட்டினார். அதன்பின் விழித்துக்கொண்ட நந்தி தேவர் வாசற்படி நோக்கி ஓடி வந்த யமனை தன் சுவாசத்தால் கட்டி நிறுத்திவிட்டார்.

சிவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக யமன் சிவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் யமனை மன்னித்தருளினார். அதன்பின் யமன் தன் பெயரில் கோயில் எதிரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதில் மூழ்கி இறைவனை வழிபட்டு விடுபட்டார். நந்திதேவர் இத்தலத்தில் வாசற்படி நோக்கி திரும்பியுள்ளார். இத்தலம் யம பயம் போக்கும் தலமாக விளங்கி வருகிறது. பக்தர்கள் சஷ்டியப்பூர்த்தி, சதாப்தி போன்ற நிறைவான விழாக்களை இத்தலத்திற்கு வந்து கொண்டாடி மகிழ்கின்றனர். 

மகவருளீஸ்வரர்: முன்னொரு காலத்தில் ஒரு சிவராத்திரி அன்று ஒரு குடும்பத்தினர் இத்தல இறைவனை வழிபட வந்தனர். திருடன் ஒருவன் அவர்களின் குழந்தையை கொன்று நகையைத் திருடிச் சென்றுவிட்டான். உன்னை வழிபட வந்த எங்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று தம்பதிகள் இறைவன் முன் கண்கலங்கி கதறினர். இறைவன் அக்குழந்தையை உயிர்ப்பித்து தந்து அவர்களை வாழ்த்தியருளினார். இதனால் இத்தல இறைவனுக்கு மகவருளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. குழந்தை இல்லாத தம்பதிகள் இத்தல இறைவனை வேண்டி வணங்குவதால் மழலைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். 

இவ்வாலயத்தில் 24.02.2017 வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரியன்று இரவு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. மறுநாள் 25.12.2017 அன்று காலை சிவபெருமானின் வீதி உலாவும்; 26.02.2017 அன்று மதியம் பஞ்சமூர்த்திகள் எம குளத்தில் தீர்த்தவாரியும்;  இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

ஆலயம் செல்ல: கும்பகோணத்திலிருந்து பேருந்து எண்கள்: 12, 30, 57, 69 மற்றும் பாபநாசத்திலிருந்து மினி பஸ் வசதி உள்ளது.

தொடர்புக்கு: 85087 34723/ 94436 61248.- டி.கோவிந்தராஜூ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com